Friday, May 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வறுமை இருளில் இருந்து மீண்ட 20 ஆயிரம் குடும்பங்கள்! அமைதி புரட்சியில் சேலம் களஞ்சியம் பெண்கள்!!

சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆன பின்பும்கூட இந்தியாவைப் பீடித்திருக்கும் ஏழ்மையின் பிடியில் இருந்து நம்மால் இன்னும் முற்றாக மீள இயலவில்லை. ஆனால் வறுமை ஒழிப்புத் திட்டங்களை உருவாக்குவதில் ஒவ்வொரு அரசும், முனைப்பு காட்டுகிறதே தவிர, செயலாக்கம் என்று வரும்போது நுட்பமாக பார்க்கத் தவறி விடுகிறது. அதுதான், இந்த நீடித்தத் துயரத்திற்குக் காரணம்.

 

வறுமையை ஒழிப்பதில் வருவாய் உருவாக்கத்தின் மையக் கருத்தை மறைந்த பிரதமர் இந்திராகாந்தி மட்டுமே முழுமையாக விளங்கிக் கொண்டார். அவர் காலத்தில் இருந்துதான் ஏழ்மை ஒழிப்புக்கான பணிகள் புது வேகம் எடுக்கத் தொடங்கின. அதாவது, 1980களில். பானர்ஜி என்பவர், ‘ஏழைகளின் பொருளாதாரம்’ பற்றிய தனது நூலில், வறுமை ஒழிப்பில் நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளை பேசாமல் பிரச்னைகளை மட்டுமே பேசுவது மேம்பாட்டுக்கு உதவாது,’ என்கிறார்.

சேலத்தில் செயல்பட்டு வரும் களஞ்சியம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கோ, அவற்றை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் ஏஸ் பவுண்டேஷன் அறக்கட்டளைக்கோ பொருளியல் அறிஞர் பானர்ஜியை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதேநேரம், அவருடைய கூற்றை முழுமையாக உள்வாங்கிக் கொண்டவர்கள். அதனால்தான், அரசால் சாதிக்க முடியாததை, 70 ஆயிரம் பெண்கள் ஒன்று சேர்ந்து சாதித்திருக்கின்றனர்.

 

சேலம் மாவட்டத்தில், களஞ்சியம் மகளிர் குழுக்களின் தொடர்ந்த செயல்பாடுகளால் இன்றைக்கு 20 ஆயிரம் குடும்பங்கள் வறுமையின் கொடிய பிடியில் இருந்து முற்றாக மீட்டெடுக்கப்பட்டு உள்ளன. முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும் களஞ்சியம், வறுமை ஒழிப்பில் பெரும் அமைதிப் புரட்சியை நிகழ்த்தி இருக்கின்றன.

 

சேலம், ஏஸ் பவுண்டேஷன் அறக்கட்டளையின் முதலாம் ஆண்டு விழா, அதன் அலுவலகத்தில் பிப். 9, 2020 அன்று நடந்தது. அறக்கட்டளையின் முதன்மை ஆலோசகர் சீனிவாசன் தலைமையில் விழா நடந்தது. மற்றொரு ஆலோசகர் ராஜன், தற்காலத்தில் களஞ்சியம் கு-ழுக்கள் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் பற்றியும், சட்டப்பூர்வமாக அவற்றை கையாளும் முறைகள் பற்றியும் பேசினார். சேலம் மண்டல நிர்வாகி சிவராணி தனது கருத்துரையில், சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் 20 ஆயிரம் களஞ்சியம் குடும்பங்களை வறுமையின் கோரப்பிடியில் இருந்து மீட்டெடுத்து இருப்பதாக ஒரு தகவலைச் சொன்னார்.

 

”வறுமை ஒழிப்பில் மத்திய,
மாநில அரசுகளின் திட்டங்களே
நீர்த்துப் போகும்போது சாமானியப்
பெண்களால் வறுமை ஒழிப்பு
எப்படி சாத்தியமாச்சு?”
என்று கேட்டோம்.

 

”நீங்கள் சொல்வது சரிதான்.
ஆனால், எதிலும் நுட்பமான
அவதானிப்பு அவசியம்.
ஒரு நீண்ட சங்கிலித் தொடரில்
எந்த கண்ணிகளும் அறுபடாமல்
இருப்பது முக்கியம்.
ஒருவேளை அறுபட்டால், அதை
உடனடியாக சரி செய்துவிட
வேண்டும். அப்படியான நிலையை
உருவாக்கிவிட்டாலே எந்த ஒரு
திட்டமும் வெற்றி பெறும்.
நாங்களும் ஒரே இரவிலோ,
ஒரே ஆண்டிலோ எந்தக் குடும்பத்தின்
வறுமையையும் போக்கிடவில்லை.
அது சாத்தியமும் இல்லை.
மாவட்டம் முழுவதும் தற்போது
எங்களுடன் 5400 களஞ்சியம்
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம்
70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள்
இணைந்திருக்கிறார்கள். அவர்களில்
20 ஆயிரம் குடும்பங்களை
வறுமையில் இருந்து
மீட்டெடுத்திருக்கிறோம்.

வெளிப்படையாகச் சொல்வதெனில்,
இதில் எங்களுடைய தனித்துவமான
யோசனை என்று பெருமைப்பட்டுக்
கொள்ள எதுவும் இல்லை.
எல்லாமே காந்தியடிகள் சொன்னதுதான்.
கிராம பொருளாதாரத்தை மீட்பதும்
எங்கள் அமைப்பின் முதன்மை
இலக்கு. அதற்கு, ஊரகப் பகுதிகளில்
உள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பை
உருவாக்க வேண்டும். அது,
சுயதொழிலாகவும் இருக்கலாம்.
ஏற்கனவே செய்து வந்த தொழிலை
மேம்படுத்துவதாகவும் இருக்கலாம்.

 

அப்படியெனில் அவர்களுக்கு
முதலீடு ஒரு பெரும் தடையாக
இருக்கும். முதலீட்டுக்காக
கந்துவட்டிக்கு கடன் வாங்கினால்
பெரும் சுமையில் சிக்கிக் கொள்வார்கள்.
ஆக, அவர்கள் சொந்தமாக சேமித்துதான்
முதலீட்டை உருவாக்க வேண்டும்.
அதைத்தான் சாத்தியப்படுத்தினோம்.
ஒவ்வொரு களஞ்சியம் குழுவிலும்,
உறுப்பினர்கள் மாத சேமிப்பாக
200 முதல் 300 ரூபாய் வரை
செலுத்தி வருகிறார்கள். அதாவது,
அன்றாட சேமிப்புக்காக அவர்கள்
தனியே எடுத்து வைக்கு தொகை
ஒரு காபியின் விலையைக்
காட்டிலும் குறைவு. குழுவின்
மொத்த சேமிப்பைப் போல
மூன்று மடங்கு தொகை அவர்களுக்கு
வங்கிகள் மூலம் கடனுதவியாக
கிடைக்கிறது. அதைக் கொண்டுதான்
களஞ்சியம் பெண்கள் சுயதொழில்
தொடங்கி நடத்தி வருகின்றனர்.

 

வீட்டில் சிறியதாக உணவகம்,
விசைத்தறிக்கூடம், கைத்தறி பட்டறை
இப்படி எது அவர்களுக்கு தெரியுமோ
அதைச் செய்து பொருளீட்டுகிறார்கள்.
ருசியான கைப்பக்குவம் இருக்கும்
பெண்கள் பலகாரங்கள், இனிப்புகள்
தயாரித்து விற்பதன் மூலம்
அன்றாடம் 500 முதல் 1000 ரூபாய்
வரை லாபமீட்டுகிறார்கள்.
ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி,
வீராணம், வீமனூர் சுற்றுவட்டாரங்களில்
பல பெண்கள் எங்கள் பரிந்துரையின்பேரில்
முத்ரா திட்டத்தில் 5 லட்சம் ரூபாய்
வரை வங்கிக் கடனுதவி பெற்று,
விசைத்தறிக் கூடங்களை
நிறுவியிருக்கிறார்கள். பல பெண்கள்
வீட்டிலேயே வெள்ளி பட்டறை
வைக்கவும் கடன் பெற்றிருக்கிறார்கள்.
பால் மாடுகள், கால்நடைகள்
வளர்ப்பிலும் பலர் ஆர்வத்துடன்
செயல்படுகிறார்கள். இப்படிச்
சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்தளவுக்கு பட்டியல் பெரிசு,”
என்கிறார் சிவராணி.

 

மேலும் அவர் கூறுகையில்,
”மகளிர் சுய உதவிக்குழுக்கள்
உள்ளிட்ட அனைத்து வகை
தொண்டு நிறுவனங்களுக்கும்
மேலாண்மைப் பயிற்சி,
திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை
எங்களது ஏஸ் பவுண்டேஷன்
அறக்கட்டளை வழங்கி வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி
தனியார் நிறுவனங்களின்
சமூக பொறுப்புத் திட்டங்களின் கீழ்
நிதியுதவி பெற்று தொண்டு
நிறுவனங்கள் வாயிலாக வறுமை
ஒழிப்புத் திட்டங்கள், மரக்கன்று
நடுதல், தனிநபர் கழிப்பறைகள்
கட்டுதல், மது ஒழிப்பு உள்ளிட்ட
சமூக மேம்பாட்டுப் பணிகளையும்
செய்து வருகிறோம்.

 

ஏஸ் பவுண்டேஷன் அறக்கட்டளையைக் கூட, 4130 களஞ்சியம் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 52 ஆயிரம் பெண்கள் ஒன்று சேர்ந்துதான் உருவாக்கினர். அறக்கட்டளை தொடங்கி ஒரு வருஷம்தான் ஆச்சு என்றாலும், களஞ்சியம் குழுக்களுடன் 20 ஆண்டுக்கும் மேலாக இணைந்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களின் சிறப்பான சேவை மற்றும் சீரிய முயற்சிகளால், ஒரே ஆண்டில் 8000 களஞ்சியம் மகளிர் குழுக்கள் இணைந்திருக்கின்றன. இதன் மூலம், தற்போது லட்சம் குடும்பத் தலைவிகளைக் கொண்ட பெரும் அறக்கட்டளையாக உருவெடுத்திருக்கிறோம்.

களஞ்சியம் குழுக்களின் வெற்றிப் பயணத்தில் இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் அளப்பரியது. கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கும்போது, என்ன காரணத்திற்காக கடன் தேவை என்பதை மனுவில் குறிப்பிட வேண்டும். பெரும்பாலும், தங்கள் பிள்ளைகளின் படிப்புச்செலவு, ஏதேனும் சுய தொழில் தொடங்க அல்லது மருத்துவச் செலவுகளுக்காக கடன் கேட்பவர்கள்தான் அதிகம். என்ன நோக்கத்துக்காக கடனுதவி பெற்றார்களோ அது நிறைவேறுகிறதா என்பதையும் உன்னிப்பாக கவனிக்கிறோம்,” என்றும் சொன்னார் சிவராணி.

 

வறுமையில் இருந்து மீண்ட குடும்பத்தலைவிகளை தேர்வு செய்து, ‘புதிய வானம்’ என்ற பெயரில் நூலாக தொகுத்தும் வெளியிட்டு வருகின்றனர். இதுவரை இரண்டு தொகுப்புகள் வெளியிட்டு உள்ளனர்.

 

கடந்த 20 ஆண்டுகளில் களஞ்சியம் கு-ழுக்களுக்கு 1200 கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுத் தந்துள்ளனர் என கேட்கும் எவருக்கும் அவரை அறியாமலே புருவங்கள் வியப்பில் விரிவடையக்கூடும். சிறுகக்கட்டி பெருக வாழ் என்பதுபோல், களஞ்சியம் பெண்கள் சிறுகச்சிறுக சேர்த்த சேமிப்பு மட்டும் தற்போது வரை 80 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. இத்தொகை எல்லாமே, வங்கிகளில் அந்தந்த களஞ்சியம் குழுக்களின் பெயரிலேயே டெபாசிட் ஆக உள்ளதால், எவர் ஒருவரும் ஒற்றை ரூபாய்கூட மோசடி செய்துவிட முடியாது. நம்ம ஊர் பெண்களின் இத்தகைய சேமிப்புப் பழக்கம் இருக்கும் வரை எந்த பொருளாதார மந்தநிலையிலும், நம் பொருளாதாரம் வீழ்ந்து விடாது என நம்பலாம்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறாவது பதம் பார்க்க வேண்டும் அல்லவா? சேலத்தை அடுத்த புத்தூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த செட்டியாரம்மா என்கிற ஜெயந்தி (50) என்பவரை சந்தித்துப் பேசினோம். பண்ணாரியம்மன் களஞ்சியம் குழுவின் மூத்த உறுப்பினர்.

 

”எனக்குப் பூர்வீகம் சத்தியமங்கலம்.
பஞ்சம் பிழைக்கத்தான் சேலத்துக்கு
வந்தோம். வீட்டுக்காரருக்கு
குடிப்பழக்கம் இருந்தது.
எங்க ஊரில் என்னையும்,
இரண்டு குழந்தைகளையும்
விசைத்தறி பட்டறை முதலாளி
ஒருவரிடம் 3500 ரூபாய்க்கு
அடமானம் வெச்சிட்டு,
அந்தப்பணத்தையும் குடிச்சி
அழிச்சிட்டாரு. எங்களை
நிர்க்கதியாக விட்டுட்டு
சத்தியமங்கலத்துல இருந்து
சேலத்துக்கு ஓடிவந்துட்டாரு.

 

ரெண்டு குழந்தைகளோட
ஒரு மூட்டையில
மாத்துத்துணிகளோட
இந்த ஊருக்கு வந்தேன்.
புத்தூர் அக்ரஹாரத்துல
இப்போது குடியிருக்கிற இந்த
வீட்டுக்கு 70 ரூபாய் வாடகைக்கு
குடிவந்தேன். களஞ்சியத்துல
கடன் வாங்கிதான் படிப்படியாக
சொந்தமாக பட்டுச்சேலை
கைத்தறி போட்டோம்.
ஆரணி பட்டு, கோயம்புத்தூர்
பட்டுசேலைகளை நெய்துட்டு
வர்றோம்.

 

கடனை ஒழுங்காக கட்டிக்கிட்டு
வருபவர்களுக்கு கேட்டபோதெல்லாம்
களஞ்சியத்தில் கடன் கிடைக்கும்.
அப்படியே வாடகைக்கு வந்த இந்த
வீட்டையும், இத்துடன் சேர்ந்த
நிலத்தையும் சொந்தமாக விலைக்கு
வாங்கினேன். இப்போது நானும்
பத்து கைத்தறி நெசவாளர்களுக்கு
வேலை கொடுக்கிறேன்.
ஒண்டிக்கிறதுக்கு வீடு கூட
இல்லாமல் வந்த எனக்கு
சொந்த வீடு, சொந்தத் தொழில்,
வருமானம் என எல்லாமே
எனக்கு களஞ்சியத்தால்தான்
கிடைத்தது,” என்கிறார் ஜெயந்தி.

 

சேலம் களஞ்சியம்,
வறுமை ஒழிப்பில் இருந்து
மட்டுமின்றி, பல பெண்களின்
கணவன்மார்களை மதுவின்
பிடியில் இருந்தும் வெற்றிகரமாக
மீட்டெடுத்திருக்கிறது என்றும்
சொன்னார் சிவராணி.

 

– பேனாக்காரன்