Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

நகர்ப்புறம்? நகர்ப்புரம்? எது சரி?; முதல்வர் விழாவில் தமிழுக்கு வந்த சோதனை!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டிச. 11ம் தேதி, சேலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, 31 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அன்றைய தினமே, சேலம் மாவட்டத்தில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட உள்ள 1242 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் அறிவித்து, மாங்கனி மாவட்ட மக்களை திக்குமுக்காடச் செய்தார்.

 

அதே விழாவில்,
மாநில அளவில் 300 கோடி ரூபாயில்
நமக்கு நாமே திட்டத்தையும்,
100 கோடி ரூபாயில் நகர்ப்புற
வேலைவாய்ப்புத் திட்டத்தையும்
தொடங்கி வைத்தார்.

தாரை தப்பட்டை,
நாட்டுப்புறக் கலைகள் என
முதல்வருக்கு மிக பிரம்மாண்டமான
வரவேற்பும் களைகட்டின.
நடந்த வரை எல்லாமே சிறப்புதான்
என்றாலும், விழா மேடையில்
வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி குறித்த
விளம்பர பலகையில் இடம் பெற்றிருந்த
பிழையான ஒரு சொல், தமிழார்வலர்களின்
மனதை நோகச்செய்திருந்தது.

 

‘நகர்ப்புற’ வேலைவாய்ப்புத் திட்டம்
என்பதை, ‘நகர்ப்புர’ வேலைவாய்ப்புத் திட்டம் என்று,
சேலம் மாவட்ட நிர்வாகம் பிழையான
பதாகையை வைத்திருந்தது.
நகர்ப்புறம் என்பதுதான் சரியான சொல்லாகும்.
இதுதான் பன்னெடுங்காலமாக
மரபில் இருந்து வருகிறது.
ஆனால், ஏதோ ‘மணப்புரம் பைனான்ஸ்’
நிறுவனத்தை நினைவில் வைத்து
எழுதியதுபோல் ‘நகர்ப்புரம்’ என்று
குறிப்பிட்டு இருந்தனர்.

 

நகர்ப்புறம், கிராமப்புறம், நாட்டுப்புறம்
ஆகிய சொற்களில் வல்லின ‘ற’கர எழுத்துதான்
இடம் பெற வேண்டும். அதாவது,
நகர்ப்புறம் என்றால், நகரமும் அதை சார்ந்த
புறமும் இணைந்த முழுமைதான்.
புறம் என்றால் இடம், பின்னால், வெளியே,
முதுகு, போர், புறங்கூறல் என பல
பொருள்கள் உண்டு.

 

நகர்ப்புறம் என்பதை
புறநகர் என்றும் சொல்லலாம்.
இலக்கண நெறிக்குப் பொருந்தாததாக
இருப்பினும், காலங்காலமாக மக்கள் வழங்கி,
இலக்கணம் உடையதுபோல்
ஏற்றுக்கொள்ளப்பட்ட சொற்களை
இலக்கணப் போலி எனலாம்.
அந்த அடிப்படையில் நகர்ப்புறம் என்ற
சரியான சொல்லை, இலக்கண நெறிக்குப்
புறம்பாக ‘புறநகர்’ என்று கூறினாலும்
தவறில்லை என்கிறார்கள்
மொழி ஆய்வாளர்கள்.

அதேநேரம்,
சேலத்தில் நடந்த அரசு விழாவில்
குறிப்பிட்டிருந்தது போல ‘நகர்ப்புறம்’
என்பதை ‘நகர்ப்புரம்’ என்று எழுதினால்
அதற்குப் பொருளே இல்லை.
நகர்ப்புறம் என்பதை புறநகர் என்று
இலக்கணப் போலியாக சொல்வதுபோல,
‘நகர்ப்புரம்’ என்ற சொல்லை ‘புரநகர்’
என்று சொல்ல முடியுமா? இயலாதுதானே?
அதற்குப் பொருளும் இல்லை.

 

திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட
பின்னர் சில துறைகளின் பெயர்கள்
மாற்றி அமைக்கப்பட்டன. அதன்படி,
குடிசை மாற்று வாரியத்தின் பெயர்,
தமிழ்நாடு ‘நகர்ப்புற’ வாழ்விட மேம்பாட்டு
வாரியம் என மாற்றப்பட்டது.

 

கூகுள் தேடுபொறியும் கூட,
‘அர்பன் டெவலப்மென்ட்’ என்ற
ஆங்கிலச் சொல்லை, ‘நகர்ப்புற மேம்பாடு’
என்றுதான் மொழி பெயர்க்கிறது.

 

இப்போதும் கூட தமிழக அரசின்
இணையத்தளத்தில், ‘நகர்ப்புற’ வேலைவாய்ப்புத்
திட்டம் என்றுதான் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நகர்ப்புறம் என்ற சொல்லில் வல்லின ‘ற’ இடம்
பெறுவதுதான் மிகச்சரியானதும் கூட.

 

ஆனால் ஏனோ, டிச. 11ம் தேதி
நடந்த விழா குறித்து, தமிழ்நாடு செய்தி
மக்கள் தொடர்புத்துறை இயக்குநரகம்
ட்விட்டர் தளத்தில், நகர்ப்புற வேலைவாய்ப்புத்
திட்டம் என்று சரியாக தலைப்பில் சொல்லிவிட்டு,
சேலம் விழா குறித்த குறிப்புகளில் ‘நகர்ப்புர’
என்று மீண்டும் பிழையாகவே
குறிப்பிட்டு இருந்தார்.

 

ஊரின் பெயர்கள், இடப்பெயர், பெயர்ச்சொல்லாக வரும் இடங்களில் எல்லாம் இடையின ‘ர’கர எழுத்து வரும். அதாவது, ராசிபுரம், சுப்ரமணியபுரம், கிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், பத்நாபபுரம், ராமாபுரம், ராயபுரம், தாராபுரம், ராமநாதபுரம் என ஊர்ப்பெயர்களில் எல்லாம் புரம் என்பதில் இடையின ‘ர’ எழுத்து வழங்கப்பட்டு வருவதை காண முடியும்.

 

பொதுவாக, வீட்டுக்கு வெளியில்தான் கொல்லைபுறம் இருக்கும். இருக்க வேண்டும். இப்போதெல்லாம் படுக்கை அறைக்குள்ளேயே ‘அட்டாச்டு’ என்ற பெயரில் கொல்லைப்புறத்தைக் கட்டி விடுகின்றனர். படுக்கை அறைக்குள் இணைந்த பகுதியாக இருந்தாலும்கூட, மலஜலம் கழிக்கும் அந்த இடம் ‘கொல்லைப்புறம்’ என்றே எழுதப்பட வேண்டும். வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் கூட அது, ‘புறம்’தான். இடப்பெயரை, புரம் என்று சுட்டலாம் என்று சொன்னீர்களே என்று கேட்கக் கூடாது. ‘கொல்லைப்புறம்’ என்பது இங்கே இடக்கரடக்கல் ஆகிவிடுகிறது.

 

தலைவனும், தலைவியும் கூடும் ரகசிய இடம் என்பதால்தான் அதை, ‘அந்தப்புரம்’ என்கிறோம். இங்கே புரம் என்பதே சரி. அந்தப்புரத்தில் நடந்ததை, புறத்தில் பேசுதல் என்பது நாகரீகம் ஆகாது.

 

தமிழ் மொழிக்கென,
தமிழ் வளர்ச்சித்துறை என தனித்துறையை
தொடங்கியது, மொழி அரசியலில் இன்றளவும்
தீர்க்கமாக செயல்படுவது திமுக தனக்கென
தடத்தை அழுத்தமாக பதித்துள்ள நிலையில்,
முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே
‘நகர்ப்புரம்’ என்று பிழைபட எழுதி,
தமிழை ‘புறம் போகச்’ செய்திருந்தது
தமிழ் மொழி ஆர்வலர்களை வருத்தம்
அடையச் செய்திருந்தது.

இத்தனைக்கும் டிச. 11ம் தேதி விழாவில்,
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை,
பதிவு செய்யப்பட்ட கருவிகள் மூலம்
இசைக்காமல், சேலம் மாவட்ட இசைப்பள்ளி
மாணவிகள் மூலம் நேரடியாகப் பாட வைத்து,
அரசின் உத்தரவை முதல்வரே முதலில்
நடைமுறைக்கும் கொண்டு வந்து
அசத்தி இருந்தார்.

 

இவை எல்லாம் எப்படி கவனம் ஈர்த்ததோ,
அதேபோல பிழையான நகர்ப்புரம் என்ற
சொல்லும் பலரின் கண்களையும் உறுத்தியது.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்,
பள்ளிக்கல்வித்துறையில் நீண்டகால
அனுபவம் மிக்கவர். மட்டுமின்றி,
மொழி ஆர்வலரும் கூட. அவரும்
நகர்ப்புறம் என்ற சொல் நகர்ப்புரம்
என்று பிழைபட இருந்ததை எப்படி
கவனிக்காமல் போனார்
என்பதும் கேள்விக்குரியது.

 

இது தொடர்பாக
செய்தி மக்கள்தொடர்புத் துறை அலுவலர்
ஒருவரிடம் கேட்டபோது,
”முதல்வர் வருகையையொட்டி
அச்சிடப்பட்ட அழைப்பிதழ், விளம்பர பதாகைகளில்
முதலில் நகர்ப்புறம் என்றுதான் அச்சிட்டிருந்தோம்.
பின்னர், தமிழ்வளர்ச்சித்துறையில் உள்ள ஒருவர்
நகர்ப்புறம் என்பது தவறான சொல் என்றும்,
‘நகர்ப்புரம்’ என்பதுதான் சரியானது என்றும்
சொன்னதால் அவ்வாறு அச்சிட நேர்ந்தது.
மேலும், கடந்த 2.11.2021ம் தேதி
வெளியிடப்பட்ட அரசாணை எண். 96ல்,
‘நகர்ப்புர’ வேலைவாய்ப்புத் திட்டம் என்றே
குறிப்பிடப்பட்டு இருந்தது,” என்றார்.

 

எனினும்,
தமிழ் அகரமுதலி நகர்ப்புறம் என
வல்லின றகர எழுத்துடன்
எழுதுவதுதான் சரி என வரையறுக்கிறது.
தமிழ்ப்பேராசிரியர்களோ, நகர்ப்புறம்
என்பதை ‘நகர்ப்புரம்’ என்று இடையின ‘ரகர’
எழுத்துடன் எழுதுவது முற்றிலும் பிழை
என்றே குறிப்பிடுகின்றனர்.

 

‘தமிழ் வாழ்க’ என்பது முழக்கமாக மட்டுமின்றி, ஆக்கப்பூர்வமான செயலாகவும் இருக்க வேண்டும் என்பதே தமிழார்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

– பேனாக்காரன்

Leave a Reply