சேலத்தில் கொல்லப்பட்ட மசாஜ் அழகியுடன் தொடர்பில் இருந்ததாக மூன்று எஸ்ஐக்கள் உள்ளிட்ட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக உளவுப்பிரிவு உதவி கமிஷனர், 2 பெண் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் மாநகர காவல்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் குமாரசாமிப்பட்டியைச்
சேர்ந்தவர் நடேசன். அதிமுக பிரமுகர்.
இவருக்குச் சொந்தமான அபார்ட்மெண்டில்
வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்
தேஜ் மண்டல். 26 வயதான இவர்,
சேலம் சங்கர் நகர், பள்ளப்பட்டி ஆகிய இடங்களில்
‘தேஜாஸ் ஸ்பா’ என்ற பெயரில்
மசாஜ் செண்டர்களை நடத்தி வந்தார்.
தான் தங்கியிருந்த அடுக்குமாடி
குடியிருப்பில், பக்கத்திலேயே இன்னொரு
அறை எடுத்து, அதில் தன்னிடம்
வேலை செய்து வந்த ரிஷி, நிஷி, ஷீலா ஆகிய
3 பெண்களையும், லப்லு என்ற ஆணையும்
தங்க வைத்திருந்தார். தேஜ் மண்டல் உள்பட
இவர்கள் ஐவருமே வங்கதேசத்தைச்
சேர்ந்தவர்கள்.
கடந்த அக். 15ம் தேதி,
தேஜ் மண்டலிடம் வேலை செய்து வந்த
பணியாளர்கள் தங்கியிருந்த அறையில்
இருந்து துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி
போலீசார், கதவை உடைத்து உள்ளே
சென்று பார்த்தனர்.
அங்கே உள் அறையில்
மேல் அலமாரியில் ஒரு சூட்கேஸ்
பெட்டிக்குள் கை, கால்கள் மடக்கி வைக்கப்பட்டு,
அழுகிய நிலையில் கிடந்த தேஜ் மண்டலின்
சடலம் கைப்பற்றப்பட்டது.
ரிஷி, நிஷி, ஷீலா, லப்லு ஆகிய
நான்கு பேரும் சேர்ந்து தேஜ் மண்டலை
அக். 7ம் தேதியே கழுத்தை நெரித்துக் கொலை செய்து,
சடலத்தை சூட்கேஸூக்குள் வைத்து பூட்டிவிட்டு,
தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.
அன்று இரவு, டிராலி பேக்குகளுடன் இவர்கள்
சேலம் புதிய பேருந்து நிலையத்திற்குள் சென்ற
காட்சிகள் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம்
உறுதிப்படுத்தி இருக்கிறது போலீஸ்.
வங்கதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் கொல்லப்பட்டதோடு, கொலையாளிகள் சொந்த நாட்டிற்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற தகவலால் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா ரொம்பவே அப்செட் என்கிறார்கள்.
தேஜ் மண்டலின் கொலை சம்பவம், சேலம் மாநகர போலீசில் வேறு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
கொலையுண்ட தேஜ் மண்டல், அவருடைய ரகசிய காதலனான ஆத்தூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரதாப் ஆகியோருடன் போலீசார் சிலர் அடிக்கடி செல்போனில் பேசியிருப்பதும், சிலர் அவர்களுடைய பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவின்பேரில் துணை கமிஷனர் மாடசாமி நேரடி விசாரணையில் இறங்கினார். தேஜ்மண்டல், பிரதாப் ஆகியோரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை (சிடிஆர்) ஆய்வு செய்தனர்.
சைபர் கிரைம் பிரிவு எஸ்ஐ ஆனந்த்குமார், இரும்பாலை எஸ்எஸ்ஐ கலைசெல்வன், பள்ளப்பட்டி நுண்ணறிவுப்பிரிவு எஸ்எஸ்ஐ சேகர், அஸ்தம்பட்டி காவலர் மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் தேஜ்மண்டல், பிரதாப் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததாக சிடிஆர் அறிக்கையில் தெரிய வர, அவர்கள் நால்வரையும் கடந்த நவ. 8ம் தேதி இரவு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா.
சஸ்பெண்ட் உத்தரவில், எஸ்ஐ ஆனந்த்குமார் 1.1.2021 முதல் 7.10.2021 வரை கொலையுண்ட தேஜ்மண்டலிடம் செல்போனில் 42 முறை தனிப்பட்ட ஆதாயத்திற்காக பேசியிருப்பதாகவும், எஸ்எஸ்ஐ கலைசெல்வன் தேஜ் மண்டலிடம் 3.8.2021 அன்று ஒரு முறையும், 2.9.2021 முதல் 15.10.2021 வரை தேஜ் மண்டலின் காதலன் பிரதாப்பிடம் 8 முறையும் பேசியதாக சொல்லப்பட்டு இருந்தது.
கமிஷனரின் இந்த உத்தரவுதான் மாநகர போலீசில் பெரும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. யார் யாரோ செய்த தவறுகள், பொறுப்பின்மைக்கு வெறும் சிடிஆர் ரிப்போர்ட் அடிப்படையில் நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக பேச்சுகள் கிளம்பின.
இது தொடர்பாக சேலம் மாநகர காவல்துறையில் நடுநிலையான போலீஸ்காரர்கள் சிலர் நம்மிடம் பேசினர்.
”தேஜ் மண்டல் கொலை சம்பவம் அஸ்தம்பட்டி காவல்நிலைய சரகத்திற்குள் நடந்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களுள் ஒருவரான எஸ்ஐ ஆனந்த்குமார், கடந்த மார்ச் மாதமே அஸ்தம்பட்டியில் இருந்து சூரமங்கலம் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு விட்டார். அங்கிருந்து செப். 3ம் தேதி சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே, ஜூன் முதல் ஆகஸ்ட் வரை துணை கமிஷனர் மோகன்ராஜின் நேரடி பார்வையில் செயல்பட்டு வந்த ஸ்பெஷல் டீமில் பணியாற்றினார். இந்த டீம், லாட்டரி, சாராயம், குட்கா ரெய்டுகளில் தீவிரமாக இறங்கி அடித்தது.
எஸ்ஐ ஆனந்த்குமார், அஸ்தம்பட்டி
காவல்நிலையத்தில் இருந்தபோது
தேஜ் மண்டலின் காதலன் பிரதாப்பிடம்
ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் 12 முறையும்,
மார்ச் மாதத்தில் 2 முறையும், மே மாதத்தில்
ஒரு முறையும், கடைசியாக ஆகஸ்ட்டில்
8 முறையும் பேசியிருக்கிறார்.
இவற்றில் 7.2.2021 அன்று பிரதாப்பிடம்
அதிகபட்சமாக 305 வினாடிகள்
பேசியிருக்கிறார் எஸ்ஐ ஆனந்த்குமார்.
மற்ற அழைப்புகளின் கால அளவு எல்லாமே
120 வினாடிகளுக்கும் குறைவானவை.
பேசப்பட்ட அழைப்புகள் தவிர, மற்றவை
வெறும் ‘கால் யு லேட்டர்’ போன்ற டெம்ப்ளேட்
மெசேஜ்கள் தான். பல அழைப்புகள்
பிரதாப்பிடம் இருந்து வந்தவை.
எஸ்எஸ்ஐ கலைசெல்வன்,
அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில்
கரண்ட் பேப்பர் பிரிவில் இருந்தார்.
தேஜ் ஸ்பாவில் பலான தொழில் நடப்பதாக
வந்த புகார் தொடர்பாக அவர்களிடம்
தொடர்பு கொண்டு எச்சரித்து இருக்கிறார்.
பள்ளப்பட்டி காவல்நிலைய
நுண்ணறிவுப்பிரிவு எஸ்எஸ்ஐ சேகர்,
லாக்டவுன் காலத்தில் ஸ்பா மையங்களை
திறக்கக்கூடாது என்று தேஜ் ஸ்பா
பிரதாப்புடன் பேசியிருக்கிறார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர் மணிகண்டன்,
அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில்
ரோந்து காவலராக இருந்தார். கடந்த ஜூன் மாதம்
தேஜ் மண்டல் ஏதோ காரணங்களால்
தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு
முயன்றிருக்கிறார். அவர் சிகிச்சைக்காக
எஸ்கேஎஸ் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவரை விசாரணைக்கு அழைப்பது,
சிகிச்சை ஆவணங்களை பெறுவது
தொடர்பாக தேஜ் மண்டலை 2 முறை
தொடர்பு கொண்டிருக்கிறார்.
போலீசார், பொதுவாக ஒரு குற்றவாளி மூலம்
மற்ற குற்றவாளிகளை பிடிப்பதற்காக
அவர்களுடன் தொடர்பில் இருப்பது
வழக்கமானதுதான். அதனால் வெறுமனே
சிடிஆர் ரிப்போர்ட்டை மட்டும்
வைத்துக்கொண்டு, எந்த விதமான
விளக்கமும் கோராமல் நான்கு போலீசாரை
சஸ்பெண்ட் செய்திருப்பது வியப்பு அளிக்கிறது.
இதுபோன்ற நடவடிக்கைகளால்,
ஸ்பெஷல் டீமில் இருக்கும் போலீசார்
செல்போனில் பேசுவதற்கே
அஞ்சுவார்கள்.
குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொண்ட
வேறு யாரையோ காப்பாற்றுவதற்காக இவர்கள்
நான்கு பேரும் பலிகடா ஆக்கப்பட்டு இருக்கலாம்
என்ற சந்தேகம் எழுகிறது,” என்கிறார்கள்
நடுநிலையான காவல்துறையினர்.
நம்முடைய கள விசாரணையில், மசாஜ் செண்டர்கள் ரெய்டு, தேஜ் மண்டல் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஸ்பெஷல் டீம் போலீசாரின் ஆடு, புலி ஆட்டம் வெளிச்சத்திற்கு வந்தன.
பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையில் நுண்ணறிவுப்பிரிவு எஸ்.ஐ.,க்கள் கருணாநிதி, ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட டீம்தான், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சேலம் மாநகரில் 35க்கும் மேற்பட்ட மசாஜ் செண்டர்களில் தொடர்ச்சியாக ரெய்டு நடத்தினர்.
மேலும், ஓட்டல்கள், வீடுகளில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவோரையும் கைது செய்திருக்கிறது இந்த டீம்.
கடந்த செப். 6ம் தேதி, சேலம் சங்கர் நகர் மற்றும் பள்ளப்பட்டியில் தேஜ் மண்டலுக்குச் சொந்தமான மசாஜ் செண்டர்களில் ஸ்பெஷல் டீம் திடீர் ரெய்டு நடத்தியது. சங்கர் நகரில் உள்ள மசாஜ் செண்டரில் இன்ஸ்பெக்டர் கற்பகம் வருவதற்கு முன்பே எஸ்ஐ கருணாநிதியும் காவலரும் ரெய்டு செய்துள்ளனர்.
ரெய்டுக்குச் சென்ற உடனேயே அங்கிருந்த சிசிடிவி டிவிஆர் பதிவுகளை நிறுத்தி விட்டதாகவும், கஸ்டமர் பதிவேடு புத்தகத்தை எஸ்ஐ கருணாநிதி எடுத்துக் கொண்டதாகவும் சொல்கின்றனர்.
ஸ்பெஷல் டீமிற்கு ரெய்டு நடத்த மட்டுமே அதிகாரம் உண்டு. பலான தொழில் நடக்கும் இடத்தில் இருந்தவர்களை பிடித்து சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையத்தில் ஒப்படைப்பதுடன் அவர்களுடைய பணி முடிந்தது. அதனால் சங்கர் நகர் ரெய்டு நடந்து கொண்டிருந்தபோதே அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரிக்கு தகவல் கொடுத்து வரவழைத்திருக்கிறது ஸ்பெஷல் டீம்.
தேஜ் மண்டலின் மசாஜ் செண்டரின் மேலாளர் முத்தம்மாள் என்கிற பிரியா, காதலன் பிரதாப் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது அஸ்தம்பட்டி போலீஸ். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த ஷீலா என்பவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் அப்போது முத்தம்மாள் மட்டும்தான் கைது செய்யப்பட்டாரே தவிர, பிரதாப் தலைமறைவாகிவிட்டார்.
இந்த சம்பவத்தில் சோர்ஸாக
செயல்பட்ட இளைஞர் ஒருவர்,
குமாரசாமிப்பட்டியில் தேஜ் மண்டலின் வீடும்,
அவருடன் இரண்டு வங்கதேச அழகிகள்
இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.
ஆனால் ஏனோ அப்போது
இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தேஜ் மண்டல் மீது
வழக்குப்பதிவு செய்யாமல் விட்டு விட்டார்.
அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க,
இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தரப்பில்
ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டு,
கடைசியாக 80 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகச்
சொல்கின்றனர் போலீசார்.
பிரதாப் மூலம் இந்தப்பணம்
கைம்மாறி இருக்கிறது.
ஒருவேளை,
செப். 6ம் தேதி நடந்த ரெய்டின்போதே
தேஜ் மண்டலை கைது செய்து இருந்தால்,
அக். 7ம் தேதி அவர் கொலையாவதில்
இருந்து காப்பாற்றி இருக்க முடியும்
என்ற பேச்சு இப்போது கிளம்பி இருக்கிறது.
அதாவது,
தேஜ் மண்டலிடம் பாலியல்
தொழிலாளியாக வேலை செய்து வந்த ஷீலா,
செப். 6ம் தேதி நடந்த ரெய்டின்போது
மீட்கப்பட்டு, காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
அன்று கைது செய்யப்பட்ட முத்தம்மாளை
மட்டும் பத்து நாள்களில் ஜாமினில்
வெளியே கொண்டு வந்தார் தேஜ் மண்டல்.
ஏனோ ஷீலாவை மீட்க எந்தவித
முயற்சியும் அவர் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் அரசு காப்பகத்தில் இருந்து அக். 5ம் தேதி வெளியே வந்த ஷீலா, நேராக தேஜ் மண்டலை சந்தித்து, உனக்காக காப்பகத்திற்குப் போன என்னை வெளியே கொண்டு வராதது ஏன்? என்று கேட்டுள்ளார். மேலும், இத்தனை நாள் வேலை செய்ததற்கு 2 லட்சம் ரூபாயும் கேட்டுள்ளார்.
அப்போது உடன் இருந்த ரிஷி, நிஷி, லப்லு ஆகியோரும் ஷீலாவுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்கள். இதில் ஏற்பட்ட தகராறில்தான் தேஜ் மண்டலை அவர்கள் நால்வரும் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரிடம் இருந்த பணம், நகைகளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுமட்டுமின்றி,
இன்னொரு இடத்திலும் தேஜ் பற்றிய
பின்னணியை விசாரிக்காமல்
கோட்டை விட்டிருக்கிறது
சேலம் மாநகர போலீஸ்.
அதாவது,
கடந்த ஜூன் 9ம் தேதி,
தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு
முயன்றிருக்கிறார் தேஜ் மண்டல்.
சிகிச்சைக்காக சேலம் எஸ்கேஎஸ் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அப்போது தற்கொலைக்கான காரணம் குறித்து
அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்தார்களே தவிர,
அவர் பின்னணி என்ன? அவருக்கும்,
அவரிடம் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கும்
வங்கதேசத்தில் இருந்து இந்தியா
வந்ததற்கான உரிய ஆவணங்கள்
இருக்கின்றனவா? என்பதெல்லாம்
விசாரிக்காமலேயே விட்டுவிட்டனர்.
நுண்ணறிவுப்பிரிவு காவல்துறை,
தேஜ் விஷயத்தில் கோட்டை விட்டிருக்கிறது.
தேஜ் மண்டலும், அவரை கொன்றவர்களும்
போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிற்குள்
நுழைந்ததாகச் சொல்லப்படுகிறது.
தேஜ் மண்டல் மற்றும் பிரதாப்பிடம்
பேசியவர்கள் என 8 போலீசாரின்
பெயர்கள் அடிபட்டாலும்,
எஸ்ஐ ஆனந்த்குமார் உள்ளிட்ட
நான்கு பேர் மட்டும் குறி வைத்து
சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் மட்டும் குறி வைக்கப்பட்டதிலும்
சில கசப்பான உண்மைகள் இருப்பதாகவும்
சொல்கிறார்கள் மாநகர போலீசார்.
சஸ்பெண்ட் ஆனவர்களில் எஸ்எஸ்ஐ சேகர்,
வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
மற்ற மூவரும் பட்டியல் சமூகத்தைச்
சேர்ந்தவர்கள். பணம், சாதி, அரசியல் என
பெரிதாக இன்ஃபுளூயன்ஸ் இல்லாதவர்கள்
என்பதாலேயே இவர்களை சஸ்பெண்ட் செய்து,
தற்காலிகமாக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
வைத்திருக்கிறது மாநகர போலீஸ்.
இவர்களில் எஸ்ஐ ஆனந்த்குமார்,
ஸ்பெஷல் டீமில் இருந்தபோது,
கோட்டையைச் சேர்ந்த திமுக பிரமுகர்
மஹமத் நடத்தி வந்த சூதாட்ட விடுதி,
குட்கா ரெய்டுகளில் சிறப்பாக
செயல்பட்டதற்காக இதே கமிஷனர்
கையால் இரண்டு முறை ரிவார்டு
வாங்கியிருக்கிறார். ஆனந்த்குமாரின் டீம்,
சூரமங்கலம் சரகத்தில் சூதாட்ட விடுதிகள்,
லாட்டரி விற்பனையாளர்கள் மீது
அதிரடி ரெய்டு நடத்தியது.
சூதாட்டம், லாட்டரி கும்பலுடன்
உதவி கமிஷனர் ஒருவர் நெருக்கமாக
இருந்ததாகவும், ஆனந்த்குமாரின் ரெய்டுகளால்
அவருக்கு கட்டிங் பாதிக்கப்பட்டதால்,
அவரை எப்படியாவது சஸ்பெண்ட்
செய்தாக வேண்டும் என்று நுண்ணறிவுப்பிரிவு
உதவி கமிஷனர் பூபதிராஜன் மூலமாக
கமிஷனரின் கவனத்துக்குக் கொண்டு
சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
இன்ஸ்பெக்டர் கற்பகமும் சூரமங்கலம் சரகத்தில் மசாஜ் செண்டர்களில் நடத்திய தொடர் ரெய்டுகளாலும் அந்த உதவி கமிஷனர் ஏகத்துக்கும் அப்செட் என்கிறார்கள். அதனால் கற்பகத்தையும் கட்டம் கட்ட ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர் மூலமாக அழுத்தம் கொடுத்திருக்கிறார்.
அதேநேரம், நுண்ணறிவுப்பிரிவில் இருந்த எஸ்ஐ கருணாநிதி, மசாஜ் செண்டர் என்ற பெயரில் பலான தொழில் நடத்தி வந்த செல்வம் என்கிற செந்திலுடன் நெருக்கமான தொடர்பில் இருந்திருக்கிறார்.
அவர் மீதும் பல புகார்கள் சென்றிருக்கின்றன. என்றாலும், நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனர் பூபதிராஜனின் சித்தப்பா மகன் என்பதால் எஸ்ஐ கருணாநிதி மீது பெரிய அளவில் நடவடிக்கைகள் பாயாமல் பூபதிராஜன் அரணாக இருந்தார் என்கிறார்கள்.
இதற்கெல்லாம் பலிகடாவாகத்தான், இரண்டு முறை ரிவார்டு வாங்கிய எஸ்ஐ ஆனந்த்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், இன்ஸ்பெக்டர் கற்பகமும் தர்மபுரிக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.
பாலியல் தொழில் நடத்திய தேஜ் மண்டல் மீது எப்ஐஆர் பதிவு செய்யாமல் தப்ப விட்ட புகாரில் அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, அங்கிருந்து சேலம் டவுன் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார்.
எல்லாவற்றுக்கும் மேலாக சேலம் மாநகர நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனர் பூபதிராஜனும் கடந்த நவம்பர் மாதம் திடீரென்று மாற்றப்பட்டு, வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் நியமிக்கப்பட்டார்.
நுண்ணறிவுப்பிரிவில் இருந்த தன் தம்பியான எஸ்ஐ கருணாநிதிக்கு சலுகை காட்டியதாலும், சேலம் மாநகரில் பல மசாஜ் செண்டர்களில் பாலியல் தொழில் நடந்து வருவதையும், சட்ட விரோத கும்பலுடன் போலீசார் நெருக்கமான தொடர்பில் இருந்ததையும் ஒற்றறியாமல் அலட்சியமாக இருந்ததும்தான் அவருடைய இடமாற்றத்திற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக உதவி கமிஷனர்
பூபதிராஜனிடம் கேட்டபோது,
”என்னுடைய பணிக்காலத்தில்
குற்றவாளிகளுக்கோ குற்றங்களுக்கோ
எப்போதும் துணை போனதில்லை.
சேலம் நுண்ணறிவுப்பிரிவு கட்டுப்பாட்டில்
உள்ள சிறப்புப்படையில் பணியாற்றிய
எஸ்ஐ கருணாநிதி எனது தம்பியாக
இருந்தாலும் கூட ஒருபோதும் அவருடைய
பணிகளில் குறுக்கிட்டதில்லை.
அவரே தப்பு செய்திருந்தாலும்
நிச்சயமாக காப்பாற்ற முயற்சித்திருக்க
மாட்டேன். என்னை என்ன காரணத்திற்காக
சேலம் நுண்ணறிவுப்பிரிவில் இருந்து
மாற்றினார்கள் என இப்போது வரை தெரியாது.
ஆனால் என்னை மரியாதையுடன்தான்
கமிஷனர் வழியனுப்பி வைத்தார்.
என் மடியில் கனமில்லை,” என்றார் அழுத்தமாக.
தேஜ் மண்டலை வழக்கில் சேர்க்காமல்,
பணம் வாங்கிக் கொண்டு தப்ப வைத்ததாக
கூறப்படும் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியோ,
”சேலம் பலபட்டறை மாரியம்மன் மீது
சத்தியமாக சொல்கிறேன். நான் யாரிடமும்
பணம் வாங்கவில்லை. ஒரு விபத்தில்
அடிப்பட்டு என் காலிலும், கையிலும்
பிளேட் வைத்திருக்கும் நிலையிலும்
நான் என் கடமையை சரியாகத்தான்
செய்து வருகிறேன்,” என்றார்.
இவர் இப்படிச் சொன்னாலும், தேஜ் மண்டல் தங்கியிருந்த குடியிருப்பின் உரிமையாளரான நடேசனோ, ”சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ், தூய்மைப் பணியாளர்களை அழைத்து வருவது என பல ஆயிரங்களை இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி எனக்கு செலவு வைத்துவிட்டார். விசாரணை என்ற பெயரில் அடிக்கடி அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து பல மணி நேரம் காக்க வைத்தார். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் அடுக்குமாடி குடியிருப்பை இடித்து கடைகளை கட்ட வைத்து விடுவேன்,” என மிரட்டினார் என்கிறார்.
சேலம் டிஒய்எப்ஐ மாநில
நிர்வாகி பிரவீன்குமார்,
”சேலம் மாநகரம் மற்றும் புறநகரில்
தனியார் தங்கும் விடுதிகள்,
மசாஜ் செண்டர்கள், வீடுகளில்
பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக
கடந்த நான்கு மாதங்களில்
300 கல்லூரி மாணவிகள் உள்பட
894 பேர் பிடிபட்டுள்ளனர்.
பாலியல் தொழிலின் பின்னணியில்
அரசியல் பிரமுகர்களும், காவல்துறையினரும்
இருக்கின்றனர். ரெய்டுக்குச் சென்ற
இடங்களில் காவல்துறையினர் கைப்பற்றிய
செல்போன்கள், பணம், நகைகளை
என்ன செய்தார்கள் என்று
இதுவரை தெரியவில்லை.
மீட்கப்பட்ட கல்லூரி மாணவிகளுக்கு
கவுன்சிலிங் தரப்பட்டதா?
அவர்கள் மீண்டும் கல்லூரியில்
சேர்க்கப்பட்டார்களா? கல்விக்கட்டணம்
செலுத்த உதவினார்களா என்ற
தகவல்களும் இல்லை.
பாலியல் தொழிலின் பின்னணியில்
உள்ள அனைவரையும் பாரபட்சமின்றி
கைது செய்ய வேண்டும்,” என்கிறார்.
இந்த சர்ச்சைகள் குறித்து
சேலம் மாநகர காவல்துறை
துணை கமிஷனர் மாடசாமியிடம்
கேட்டபோது, ”கொலை செய்யப்பட்ட
தேஜ் மண்டல், அவருடைய காதலன் பிரதாப்
ஆகியோருடன் போலீசார் அடிக்கடி
பேசியிருப்பது செல்போன் சிடிஆர்
அறிக்கையில் தெரிய வந்ததன் பேரில்தான்
மூன்று எஸ்ஐ உள்ளிட்ட நான்கு பேர்
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தேஜ் மண்டல் மீது எப்ஐஆர் போடாதது,
அவர் பணம் பெற்றதாக வந்த புகார்களின் பேரில்
இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களிடம்
உதவி கமிஷனர் வெங்கடேசன்
விசாரணை நடத்தி வருகிறார்.
யார் தவறு செய்திருந்தாலும்
அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும்,” என்றார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட
எஸ்ஐ ஆனந்த்குமார், எஸ்எஸ்ஐ கலைசெல்வன்
ஆகியோரை தொடர்பு கொண்டபோது,
”துறை ரீதியாக செல்போனில் பேசியது
ஒரு குற்றமாக பார்க்கப்படும்
என்று தெரியவில்லை. குற்றவாளிகளுடன்
பலர் வாட்ஸ்ஆப் மூலம் தொடர்பில்
இருக்கிறார்கள். அவர்களை எல்லாம்
விட்டுவிட்டார்கள்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்
இருந்து வெளியே தலை காட்டவே
அவமானமாக இருக்கிறது.
வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறோம்.
இதற்குமேல் எங்களிடம் கேட்க வேண்டாம் ப்ளீஸ்…,”
என மேற்கொண்டு பேச முடியாமல்
உடைந்து அழுதனர்.
எஸ்எஸ்ஐ சேகர், காவலர் மணிகண்டன் ஆகிய இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
யாரையோ காப்பாற்ற அப்பாவிகளை பலிகடாவாக்கக் கூடாது. அதேநேரம், தீர விசாரித்து குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் நடுநிலையான போலீசார்.
நன்றி: நக்கீரன்
– பேனாக்காரன்