மனிதப் பரிணாமவியல் ஆராய்ச்சியில் ஒரு திருப்புமுனையாக இருந்த மரபணு ‘சி-எம் 130 ஒய்’ (C-M 130 Y), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விருமாண்டி, அவரைப்போல் சிலரிடம் 2001இல் மேற்கொள்ளப்பட்ட கண்டறிதல் மூலம் தெரிய வந்தது. இந்தக் கண்டறிதலை நிகழ்த்தியவர்களில் முக்கியமானவர் மதுரை காமராஜர் பல்கலைப் பேராசிரியர் முனைவர் ராம.பிச்சப்பன். அந்தக் கண்டறிதல் மேற்கொள்ளப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. மனித குலப் பரிணாமவியல் வரலாற்றில் நாமும் ஒரு முக்கியக் கண்ணியாக இருந்தது தொடர்பான இந்தக் கண்டறிதல், கொண்டாடப்பட வேண்டும்.
என்ன கண்டறிதல்?
உலகில் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே நவீன மனித இனம் ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ (Homo sapiens). ஆப்பிரிக்காவில் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இனம் தோன்றியது. தற்போது உலகெங்கும் இது பரவியுள்ளது. ஆனால் இந்த மனித இனம் எப்படி உலகம் முழுக்கப் பரவியது என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. மரபணு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பின்னர், மனிதர்களின் பரவல் குறித்த மரபணு ஆராய்ச்சிகள் தீவிரம் அடைந்தன. இந்தத்துறை, ‘ஜீனோகிராஃபிக் ஸ்டடீஸ் ஆப் ஹியூமன் எவால்யுஷன்’ (Genographic Studies of Human evolution) எனப்படுகிறது.

1996இல் ஸ்பென்சர் வெல்ஸ் என்பவர், ஒய் (Y) குரோமசோம் மூலம் மத்திய ஆசியாவில் மனித இனப்பரவல் குறித்த ஆய்வுகளைத் தொடங்கினார். அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மதுரை காமராஜர் பல்கலைப் பேராசிரியர் ராம.பிச்சப்பன் மூலம் இந்தத் திட்டத்திற்கான ஆய்வு நடத்தப்பட்டது. அதில் பிறமலைக்கள்ளர், யாதவர், சவுராஷ்டிர சமூகத்தினரின் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு ஒய் குரோமசோம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒய் குரோமசோம் ஆய்வு:
இது ஆண்களிடம் நடத்தப்படும் குரோமசோம் அடிப்படையிலான ஆராய்ச்சி. ஆண்களிடம் எக்ஸ் (X), ஒய் (Y) என ஒரு ஜோடி குரோமசோம்கள் உள்ளன. இந்த ஜோடி குரோமசோம்கள் ஒத்த உயரம், உருவத்தைக் கொண்டிருக்காது. இதனால் எக்ஸ், ஒய் குரோமசோம்களுக்கு இடையில் மரபணுப் பரிமாற்றம் நடைபெறுவதில்லை.
இந்த ஒய் குரோமசோம், மனித இனம் தோன்றியதில் இருந்து எக்ஸ் குரோமசோம் ஜோடியோடு எந்த மரபணுப் பரிமாற்றமும் மேற்கொள்ளாது கடத்தப்பட்டு வருகிறது. அதனால் இது, ‘Non Recombinant Y Chromosome (NRY)’ என அழைக்கப்படுகிறது. ஒய் குரோமசோமில் உள்ள மரபியல் பகுதிகள் தலைமுறைகளுக்கு இடையே சிறு சிறு நிலையான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. இந்த ஒற்றை நியூக்ளியோடைடு பாலிமார்ஃபிசம் – என்என்பி (Single Nucleotide Polymorphism (SNP) மாற்ற வீதம் தோராயமாக 8000 முதல் 10000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. அவ்வாறு ஏற்படும் மரபியல் மாறுபாடுகள் டிஎன்ஏ குறியீடு (DNA Markers) என அழைக்கப்படுகின்றன.

எம் 130 (எம் 130) அப்படிப்பட்ட ஒரு குறியீடே. இந்த மாற்றத்தின்போது, டிஎன்ஏவின் நைட்ரஜன் காரங்களின் (அடினின், தைமின், குவானின், சைட்டோசின்) குறிப்பிட்ட இடங்களில் பதிலீடுகள் ஏற்பட்டிருக்கலாம். இந்தக் குறிப்பிட்ட குறியீடுகளைப் பகிர்ந்து கொள்ளும் மக்கள் குழுக்கள் ஹாப்லோ குழு (Haplo group) என வகைப்படுத்தப்பட்டுகின்றன. ‘ஒய் குரோமசோம் ஹாப்லோ குழு C’-ஐ வரையறுக்கும் முக்கிய குறியீடே எம்130. அதனால்தான் இதை ‘சி-எம் 130 ஒய்’ என்று குறிப்பிடுகின்றனர். அப்படி ஒய் குரோமசோமில் ஏற்பட்ட குறியீடுகளை ஆராய்வது மனித இனப் பயணம் உலகெங்கும் பரவிய வழித்தடத்தைக் கண்டறிய உதவுகிறது.
எப்போது தொடங்கியது?:
ஆப்ரிக்காவில் உருவான மனிதப் பரிணாம வளர்ச்சியின் முன்னோடியான ஹோமோ எரக்டஸ் (Homo Erectus) 19 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறி உலகெங்கும் பரவியது. அதில் ஒரு கூட்டம் அத்திரப்பாக்கம் வந்து வாழ்ந்து மடிந்துள்ளது. இப்படிப் பிற கண்டங்களிலும் பரவிச் சிறு சிறு மனித இனங்களை உருவாக்கி இருக்கிறது. அப்படி உருவானவர்களே நியாண்டர்தால், டெனிசோவன் இனங்கள். இக்குழுக்கள் சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன்னர் வரை நவீன மனிதமான ஹோமோ சேப்பியன்ஸ் இனத்துடன் கலந்து வாழ்ந்துள்ளனர். தற்போது ஆப்ரிக்காவிற்கு வெளியே வாழும் நவீன மனிதர்களிடம் இவர்களின் மரபணுக்கள் 2 முதல் 3 வரை சதவீதம் காணப்படுகின்றன.
சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பரிணமித்த நவீன மனித இனம் (ஹோமோ சேப்பியன்ஸ்) ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஊழிப் பனிக்காலத்தில் இடம் பெயரத் தொடங்கி 70000 ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறியது. மேற்குக் கடற்கரையோரமாகவே பயணித்து மேற்குத் தொடர்ச்சி மலை வழியாகத் தற்போதைய தமிழ் நிலப்பரப்புக்கு வந்திருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் அங்கு ஒய் குரோமசோமில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க எஸ்என்பி மாற்றமே சிஎம் 130 (ஹாப்லோ குரூப் சி) என வகைப்படுத்தப்படுகிறது. ஆப்ரிக்காவில் தோன்றிய தொடக்கக் கால ஹாப்லோ குழுக்கள் ஏ, பி, இவையே மிகப்பழமையானவை. அதற்கு அடுத்து சிஎம் 130 என்கிற ஹாப்லோ குழுவாக வகைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்படக் காரணமாக இருந்தவர் விருமாண்டி. அந்த ஆண்டு 2001-2002.
விருமாண்டி சொன்ன கதை:
1997-98 வாக்கில் விருமாண்டி படித்த உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் ரத்த மாதிரிகள் எடுக்க ஆராய்ச்சி உதவியாளர்கள் வந்துள்ளனர். இளைஞராக இருந்த விருமாண்டி உள்ளிட்ட சுமார் 200 பேரிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதன் பின்னர் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆனால், ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்த பின் கல்லூரிக்குச் சென்று முகவரி தேடிச் சென்றபோது, அருகில் வாழும் விருமாண்டியின் முகவரி கிடைத்துள்ளது. அது மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அருகில் உள்ள ஜோதிமாணிக்கம் என்கிற கிராமம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் திட்டம் ஒன்றில் விருமாண்டி பணியாற்றி வந்துள்ளார்.

பேராசிரியர் பிச்சப்பன் விருமாண்டியைப் பார்த்ததும் அரிய புதையலைப் போல் வரவேற்றுள்ளார். ஆனால், விருமாண்டிக்கோ வியர்க்கத் தொடங்கிவிட்டது. அவரிடம் மிகவும் பழமையான சிஎம் 130 மரபணுக் குறியீடு உள்ளது என்றும், ஆப்ரிக்க மனிதக் குழுவின் தொடர் மரபணு நுண்மாற்றம் எனக்கூறி பிச்சப்பன் வியக்க வைத்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் தலைவர் ஸ்பென்சர் வெல்ஸ், ஜோதிமாணிக்கம் கிராமத்திற்குச் சென்றபோது, கிராமமே அல்லோலகல்லோலப்பட்டு உள்ளது. விருமாண்டியை அழைத்து அருகில் உட்கார வைத்து விவரத்தைக் கூற, அவரோ ஆச்சரியத்துடன் ”என்னிடம் மட்டும் எப்படி அந்த மரபணுக் குறியீடு இருக்கிறது?” எனக் கேட்டிருக்கிறார்.
”இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முதலில் அந்த மரபணுக் குறியீடு கண்டறியப்பட்டவர் நீங்கள்தான். இப்பகுதி வழியாக இடம்பெயர்ந்தவர்களின் வழிவந்தவர்களில் உங்கள் சமூகமும் ஒன்று. இந்தச் சமூகம் தொடர்ந்து இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்ததால், இக்குழுக்களைச் சேர்ந்தவர்களிடம் இந்த மரபணுக் குறியீடு காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் தொடர்ந்து இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து வந்ததால், அது நிலை பெற்றுள்ளது,” என ஸ்பென்சர் வெல்ஸ் கூறியுள்ளார். இதன் பின் தன்னை ஆதிவாசி என்றும், ஒரு தொலைக்காட்சியில் குரங்கு வழியில் வந்த மனிதர் என்றும் பேசியதை அறிந்து நீண்ட நாள்களாக மிகவும் சங்கோஜமாகவே வாழ்ந்து வந்ததாக விருமாண்டி கூறியுள்ளார்.
உலகெங்கும் பரவிய சிஎம் 130:
ஜோதிமாணிக்கம் கிராமத்தில் இந்த மரபணுக் குறியீடு 13 நபர்களிடம் மட்டுமே உள்ளது. இந்தக் குறியீடு தற்போது தென்னிந்தியாவிலும் இந்தியக் கடற்கரைப் பகுதிகளிலும் காணப்படுகிறது. அதேநேரம், வடக்கு, வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் இது காணப்படுவதில்லை. இதிலிருந்து, இந்தக் குழுவினர் தெற்குக் கடற்கரையோரம் பயணித்து உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மங்கோலியா, கிழக்கு ரஷ்யா, பாலினேசியா ஆகிய பகுதிகளில் இந்த மரபணுக் குறியீடு அதிக சதவீதத்தில் காணப்படுகிறது. கஸகிஸ்தானில் 50 முதல் 86 சதவீதம் வரையிலும், ஆஸ்திரேலியப் பழங்குடிகளில் இதன் உட்பிரிவு 46 சதவீதம் வரையிலும் காணப்படுகிறது. மனித ஆதி இடப்பெயர்வு தொடர்ந்து செல்லும்போது ஒய் குரோமசோமின் டிஎன்ஏக்களில் நுண் மாற்றங்கள் ஏற்பட்டு டி முதல் ஆர் வரை ஹால்லோ குழுக்கள் பரிணமித்துள்ளன.
தற்போது கீழடி கொந்தகையில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புகளின் 75000 குறியீடுகளை ஆய்வு செய்து கொண்டிருக்கும் முனைவர் குமரேசன், கீழடியில் வாழ்ந்த மனிதர் எக்காலத்தவர் என நிரூபிப்பதற்கு இந்த ஆய்வு உதவி செய்யும் என்கிறார். அதாவது, கீழடி மனிதர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தெற்கு ஆசிய மனித இனத்தை ஒத்திருக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன என்கிறார். இது அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வறிக்கைக்கு ஆதாரத்தைக் கொடுக்கக் கூடும்.
தற்போது உலகமெங்கும் வாழ்ந்துவரும் மனிதர்கள் தமிழ்நாட்டின் வழியாகச் சென்றிருப்பதால் ஆப்ரிக்காவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடே அவர்களின் தாய்நாடு என்கிறார் பேராசிரியர் பிச்சப்பன். அதேபோல் எம் 130 என்பது தற்போது தென் பகுதியில், வாழும் ஒரு சமூகக் குழுவின் மரபணு எனப் பார்க்காமல் மனித குலத்தின் அனைவரிடமும் பரவியுள்ளதால் மனித குலம் ஒன்றுதான் என்பதை தான் செல்லும் இடம் எல்லாம் பேசி வருகிறேன் என்கிறார், 50 வயதைத் தாண்டி விட்ட விருமாண்டி.
ஆனால் அவருடைய ஒய் மரபணுத் தொகுதியோ 70000 ஆண்டு பழமையான எம் 130 மரபணுக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது, 25 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்டுள்ளதால், அதன் வெள்ளி விழா ஆண்டாக இதைக் கொண்டாடி மகிழ்வோம்.
- – பொ.இராஜமாணிக்கம், அறிவியல் எழுத்தாளர்.
(செப். 21, 2026 நாளிட்ட இந்து தமிழ் திசை நாளிதழில்)
