Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் ரவுடியை தீர்த்துக்கட்டிய 9 எம்.எம். பிஸ்டல்! பத்து ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டூமீல்!!

சேலத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த
ரவுடியை காவல்துறையினர்,
வியாழக்கிழமை (மே 2, 2019) காலையில்
நடந்த எதிர்மோதல் (என்கவுண்டர்)
தாக்குதலில் சுட்டுக்கொன்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதாலோ என்னவோ, மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சேலம் மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறையினர் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்குவதில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு, முன்னாள் குற்றவாளிகள், பிணையில் வெளியே சுற்றும் ரவுடிகளின் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று அறிவுரைகளும், மென்மையான எச்சரிக்கையும் வழங்கினர்.

 

இது ஒருபுறம் நடந்தாலும், கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்தல், குண்டர் சட்டத்தில் அடைத்தல் போன்ற நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினர். மாநிலத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் சேலம் மாநகர காவல்துறையில்தான் மிக அதிகளவில் குண்டாஸ் சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் நீட்சியாகத்தான், சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த ரவுடி கதிர் என்கிற கதிர்வேலை (28) எதிர் மோதலில் சுட்டு வீழ்த்தி இருக்கிறது மாவட்ட காவல்துறை. காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணி தலைமையிலான தனிப்படையினர்தான் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கின்றனர். ஆய்வாளர் சுப்ரமணியின் உறையில் இருந்த 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கியில் (பிஸ்டல்) இருந்து சீறிப்பாய்ந்த குண்டு, கதிர்வேலின் மார்பை துளைத்தெடுத்தது. நிகழ்விடத்திலேயே அவர் இறந்தார்.

 

காவல்துறையின் எதிர்தாக்குதலுக்கு இரண்டு விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.

 

முதலாவது…

 

வலசையூர் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்த முறுக்கு வியாபாரியான கணேசன் (31), கடந்த ஏப்ரல் 5ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். காரிப்பட்டி காவல்நிலையம்தான் இந்த வழக்கை விசாரித்தது. கணேசன் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதை கண்டுபிடித்த காவல்துறை, காட்டூர் ஆனந்தன், கதிர்வேல், முருகன், கோபி, பிரபு ஆகியோரை தேடி வந்தது.

இந்த நிலையில்தான் மே 1ம் தேதி, ரோந்து சென்ற வீராணம் காவல்துறையினரிடம் வசமாக சிக்கியிருக்கிறார் கதிர்வேல். அவர்கள், காரிப்பட்டி காவல்நிலையத்தில் கதிரை ஒப்படைத்துவிட்டு நகர்ந்து கொண்டனர்.

 

கொலையுண்ட கணேசன் முறுக்கு வியாபாரம் செய்தது கொஞ்ச காலம்தான். அவரும், கதிர்வேல், காட்டூர் ஆனந்தன் ஆகியோரிடம் பல்வேறு கட்டப்பஞ்சாயத்து, கொள்ளை குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார். அதில் பணம், நகைகளை பங்கு போடுவதில் கணேசனுக்கும் கதிர்வேலுக்கும் மோதல் ஏற்பட, அதன் தொடர்ச்சியாகத்தான் கணேசனை கதிர்வேலும் அவருடைய கூட்டாளிகளும் தீர்த்துக்கட்டியுள்ளனர்.

 

கணேசனை கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை குள்ளம்பட்டியில் உள்ள ஓர் ஆலமரத்தின் பொந்தில் பதுக்கி வைத்திருப்பதாக கதிர் சொல்லி இருக்கிறார். இந்த ஆலமரத்தடி நிழல், பகல் நேரத்திலேயே திறந்தவெளி மதுக்கூடமாகத்தான் இருந்து வருகிறது என்பது உபரி தகவல். ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காக காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணி, எஸ்.ஐ.க்கள் மாரி, பெரியசாமி ஆகியோர் காவல்துறை வாகனத்தில் கதிர்வேலை அவர் குறிப்பிட்ட ஆலமரத்தடிக்கு அழைத்துச்சென்றனர்.

 

அப்போது மறைத்து வைத்திருந்த
கத்தியை எடுத்த கதிர்வேல், திடீரென்று
காவல்துறையினரை குத்த முயன்றார்.
இதில், ஆய்வாளர் சுப்ரமணிக்கு
மார்பின் இடப்புறமும், மற்றும்
இடது கையிலும், எஸ்ஐ மாரிக்கு
இடக்கையிலும் காயம் ஏற்பட்டது.
அதன்பிறகே, கதிர்வேலிடம் இருந்து
தப்பித்துக்கொள்வதற்காக
ஆய்வாளர் சுப்ரமணி தனது
கைத்துப்பாக்கியை எடுத்து,
அவரை சுட்டுக் கொன்றிருக்கிறார்.

துப்பாக்கிச்சூடு நடந்ததாகச் சொல்லப்படும்
அந்த இடத்தை மதியம் 2 மணியளவில்
நாம் நேரில் பார்த்தோம். ஆனால் அங்கே
எதிர்தாக்குதல் நடந்ததற்கான தடயங்கள்
ஏதும் தெரியவில்லை. நிகழ்விடத்தில்
ஒரு துளி ரத்தம்கூட சிதறியிருக்கவில்லை.
ஆனால், பாதுகாப்புக்காக அங்கும் பத்துக்கும்
மேற்பட்ட காவல்துறையினர்
நிறுத்தப்பட்டிருந்தனர். மாவட்ட
எஸ்பி தீபா கனிக்கரும் அந்த
இடத்தை நேரில் பார்வையிட்டார்.

 

வழக்கமாக எதிர்மோதல் கொலைகள் என்பது எங்கோ ஓரிடத்தில் நிகழ்த்தப்பட்டு, இன்னொரு இடத்தில் நடந்ததாக சித்தரிக்கப்படும். இதிலும் அப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும், இரக்கம் கொள்ள, கொல்லப்பட்டவர் ஒன்றும் உத்தமர் இல்லை. அதேநேரம், அவரைக் காட்டிலும் அதிதீவிர குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டு இருக்கும்போது கதிர்வேல் மட்டும் பலியானதும் கேள்வியை எழுப்புகிறது.

 

சொல்லப்படாத இன்னொரு காரணம்…

கடந்த மார்ச் 22ம் தேதி நள்ளிரவில், பவானியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கு தன் காதலருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் அடியில் சென்று கொண்டிருந்தபோது அந்த ஜோடி, முள்புதர் ஓரம் ‘ஒதுங்கியிருக்கிறது’. அப்போது அவர்களை மறித்த ஒரு கும்பல், அந்தப்பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததோடு, அவரிடம் அத்துமீறவும் செய்திருக்கிறது.

 

பின்னர் நகைகளை மட்டும் பறித்துக்கொண்டு விடுவித்திருக்கிறது அந்த கும்பல். பல பெண்களிடம் இதுபோல் ஆபாச படம் எடுத்து, மிரட்டியே பாலியல் வன்புணர்வில், அதாவது இன்னொரு பொள்ளாச்சி சம்பவத்திற்கு இணையாக சேலத்திலும் நடந்திருப்பதுபோல சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. அது எந்தளவுக்கு உண்மை என்பது இன்னும் புலப்படவில்லை. ஆனாலும், காவல்துறையும் அதுகுறித்து ஏனோ மவுனம் சாதிக்கிறது.

 

பட்டர்பிளை மேம்பால பாலியல் வழக்கை விசாரித்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர், பெரிய புத்தூரைச் சேர்ந்த மணிகண்டன், சுபாஷ், இளங்கோ, தினேஷ், தைலானூர் வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்தது. இந்த சம்பவத்திலும் கதிர்வேல், கணேசன் ஆகியோருக்கு தொடர்பு இருந்துள்ளது. கணேசன், ஏனோ திடீரென்று காவல்துறையில் ஆஜராகி அப்ரூவர் ஆக மாறி, எல்லோரையும் காட்டிக்கொடுத்ததால்தான் முதல்கட்டமாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்ததாகவும் சொல்கின்றனர்.

 

இப்படி கூட இருந்தே குழி பறித்ததால் ஆத்திரத்தில் இருந்த கதிர்வேல், கூட்டாளிகள் துணையுடன் திட்டமிட்டே கணேசனை தீர்த்துக்கட்டி இருப்பது தெரியவந்தது. இன்றும்கூட ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்துகள் மூலம் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொடுங்குற்றவாளிகளை விட்டுவிட்டு கதிர்வேலை மட்டும் இலக்கு வைத்து சுட்டுக்கொல்ல என்ன காரணம்? என்பது இப்போது வலுவான வினாவாக எழுந்துள்ளது.

பட்டர்பிளை மேம்பால வழக்கில், ஆபாசபட கும்பலை தப்பிக்க வைக்க அல்லது முதல்வர் மாவட்டம் என்பதால் நற்பெயர் கெடாமல் இருக்க, இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்த கதிர்வேலை துப்பாக்கியால் சுட்டு நிரந்தரமாக உண்மைகளை மறைத்துவிட்டதோ என்ற ஐயமும் பலருக்கு எழுந்துள்ளது. இதற்கிடையே, கதிர்வேலின் உறவுக்காரர்கள், சரண் அடைந்தவரை திட்டமிட்டு காவல்துறையினர் கொன்றுவிட்டதாகவும் குற்றச்சாட்டை கிளப்பி இருக்கின்றனர்.

 

கதிர்வேல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதால், (போலி) போராளிகள் குரல் கொடுக்க இப்போதைக்கு வர வாய்ப்பில்லை. கோட்டாட்சியர் விசாரணையும் காவல்துறைக்கே எப்போதும் சாதகமாக இருக்கும். கத்திக்குத்தில் காயம் அடைந்த காவல்துறை அதிகாரிகளுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

வந்த இடத்தில் நாயகனானார்!

 

கதிர்வேலை போட்டுத்தள்ளிய
காவல் ஆய்வாளரின் சொந்த ஊர் அரவக்குறிச்சி.
அவர் கடைசியாக திருப்பூர் மாவட்டக்
காவல்துறையில் பணியாற்றி வந்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக,
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக
ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி
வந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அப்படி காரிப்பட்டிக்கு மாறுதலில்
வந்தவர்தான் ஆய்வாளர் சுப்ரமணி.
இப்போது ரவுடியை சுட்டுக்கொன்றதன்
மூலம் தமிழகம் முழுக்க ஒரே நாளில்
அவருடைய பெயர் மூலைமுடுக்கெல்லாம்
சென்று சேர்ந்துள்ளது.

 

பத்தாண்டுக்குப் பின்
மீண்டும் துப்பாக்கி சத்தம்!

 

கடந்த 2009ம் ஆண்டு,
நாமக்கல் மாவட்டம்
மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த கோபி
என்பவர் மீது கொலை, கொள்ளை
வழக்குகளில் திருச்செங்கோடு மற்றும்
சேலம் மாநகர காவல்துறையினர்
தேடி வந்தனர். சேலத்தை அடுத்த
பனைமரத்துப்பட்டி அருகே
குரால்நத்தத்தில் ஓர் ஆலமரம் அருகே
கோபி பதுங்கி இருப்பதாக சேலம்
மாநகர காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

 

அப்போது, செண்பகராமன் என்பவர்
காவல்துறை ஆணையராகவும்,
ஜான் நிக்கல்சன் துணை ஆணையராகவும்
பணியாற்றி வந்தனர். நுண்ணறிவுப்பிரிவு
காவல் ஆய்வாளர் காந்தி,
குற்றப்பிரிவு எஸ்.ஐ. பழனியாண்டி
மற்றும் காவலர்கள் குரால்நத்தம் விரைந்தனர்.
காவல்துறையினர் சுற்றி வளைத்ததை
அறிந்த கோபி, இரண்டு பெட்ரோல்
குண்டுகளை காவல்துறை வாகனங்கள் மீது
வீசி எறிந்துவிட்டு தப்ப முயன்றார்.

 

ஆனால், காவல்துறையினர் கோபியை
எதிர்தாக்குதல் (என்கவுண்டர்) மூலம்
சுட்டுக்கொன்றனர். கதிர்வேல் மற்றும் கோபி
ஆகிய இருவருமே ஆலமரத்தடியில்
வைத்துதான் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

– பேனாக்காரன்