Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரவுடி கதிர்வேல் கொல்லப்பட்டது என்கவுண்டரில் அல்ல! அது ஒரு லாக்-அப் மரணம்!! சில்லிட வைக்கும் தகவல்கள்!!

சேலத்தைச் சேர்ந்த பிரபல
ரவுடியை போலி என்கவுண்டரில்
தீர்த்துக்கட்டிவிட்டு, மாவட்டக்
காவல்துறையினர் என்கவுண்டர்
நாடகத்தை திட்டமிட்டு அரங்கேற்றி
இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

கதிர்வேல்

சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே உள்ள தேவாங்கர் காலனியைச் சேர்ந்த பிரபல ரவுடி கதிர் என்கிற கதிர்வேலை, சேலம் மாவட்ட காவல்துறையினர் மே 2ம் தேதி காலை 11 மணியளவில் எதிர்மோதலில் (என்கவுண்டர்) சுட்டுக்கொன்றது. காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணி தலைமையிலான தனிப்படையினர் இ ந்த ஆபரேஷனை செய்து முடித்துள்ளனர்.

 

ஆய்வாளர் சுப்ரமணியின் கைத்துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த ஒரே ஒரு தோட்டா கதிர்வேலின் மார்பை துளைத்து, மரணத்தை விளைவித்திருக்கிறது. கதிர்வேல், மூன்று கொலை, 9 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர். இதற்காக பலமுறை கைது செய்யப்பட்டு, சிறைப்பறவையாக இருந்திருக்கிறார்.

உடற்கூறாய்வு முடிந்தபின், கதிர்வேலின் சடலம் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்படுகிறது.

என்கவுண்டரை தொடர்ந்து நீதி விசாரணை நடத்தப்படுவது நடைமுறை என்பதால், அதற்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. சேலம் மாவட்ட மூன்றாவது நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சரவணபவன் விசாரித்து வருகிறார். மே 3ம் தேதி (வெள்ளிக்கிழமை), சேலம் அரசு மருத்துவமனையில் கதிர்வேலின் சடலம், உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

 

சட்டம் சார்ந்த மருத்துவத்துறைத் தலைவர் கோகுலரமணன், மருத்துவர் கார்த்திக் ஆகியோர் மேற்பார்வையில் பகல் 12.15 மணிக்கு தொடங்கிய உடற்கூறாய்வு, மதியம் 2 மணிக்கு முடிந்தது. நீதிபதி சரவணபவன் முன்னிலையில், ஒன்றேமுக்கால் மணி நேரம் நடந்த உடற்கூறாய்வுகள் முழுவதும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஒளிந்துள்ள சந்தேகங்கள், சர்ச்சைகள் குறித்து நாம் புலனாய்வு செய்ததில் பல பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை அப்படியே தருகிறோம்…

 

வழக்கமாக அரசு மருத்துவமனைகளில் உடற்கூறாய்வின்போது, சர்ச்சைகள் இல்லாத சாதாரண வழக்குகளில், ஒரு மணி நேரத்தில் சடலத்தை கூறு போட்டு மூட்டை கட்டி கொடுத்துவிடுவார்கள். ஆனால், கதிர்வேல் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டதால், சடலத்தில் இருந்து எடுக்கப்பட்ட முக்கிய உடல் உறுப்புகள், தோட்டா என தனித்தனியாக எடுத்து, மரணத்திற்கு முன்பும், பின்பும் அந்த உறுப்புகள் இருந்த நிலை குறித்து நீதிபதியிடம் மருத்துவர்கள் நீண்ட விளக்கம் அளித்திருக்கின்றனர்.

 

காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணி என்கவுண்டருக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கி, 9 எம்எம் ரகத்தைச் சேர்ந்தது. ஒரே நேரத்தில் மொத்தம் 12 ரவுண்டுகள் வரை சுடலாம். 30 கெஜம் தூரம் வரை இலக்கு வைத்து சுட முடியும். இந்த துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த தோட்டா, கதிர்வேலின் மார்பை முன்பக்கம் துளைத்து, முதுகுப்புறமாக பாதி வெளியேறிய நிலையில் இருந்தது உடற்கூறாய்வில் தெரிய வந்தது.

சுடுகாட்டில் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு…

 

‘விஸ்ரா டெஸ்ட்’ (Viscera test) எனப்படும்
அறிவியல் ஆய்வக பரிசோதனைக்காக,
சடலத்தில் இருந்து துப்பாக்கி தோட்டா
துளைத்த பாகத்தில் இருந்தும்,
தோட்டா வெளியேறிய பகுதியில் இருந்தும்
(entry point and exit point) உறைந்திருந்த
ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.
அதற்குக் காரணம், இந்த இரு இடங்களிலும்
துப்பாக்கி தோட்டாவில் இருந்து பறந்த
துகள்கள் படிந்திருக்கும். அதை வைத்து
உடலில் கண்டெடுக்கப்பட்ட தோட்டா,
எந்த துப்பாக்கிக்குச் சொந்தமானது
என்பதை ஊர்ஜிதம் செய்ய முடியும்.
தோட்டாவும், தனியாக பாலிதீன்
பையில் போட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு,
அறிவியல் ஆய்வகத்திற்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

மிக நெருக்கமாக வைத்தே,
தோட்டா தாக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும், கதிர்வேலின் இரைப்பை,
குடல், சிறுநீரகம், கல்லீரல் ஆகிய
உறுப்புகளின் ஒரு பகுதிகளும்
வெட்டி எடுக்கப்பட்டு ஆய்வக
பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கை கிடைக்க 60 நாள்கள்
அல்லது அதற்கு மேலும் ஆகலாம்.

 

உடற்கூறாய்வு முடிந்த பின்,
அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ்
வாகனம் மூலமே சடலம் கதிர்வேலின்
சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட
சொந்த ஊர் மக்கள், உறவினர்கள்
சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது
என்பதற்காக, இருநூறுக்கும் மேற்பட்ட
காவல்துறையினர் குவிக்கப்பட்டு
இருந்தனர்.

கதிர்வேல் கொல்லப்பட்டதையொட்டி துக்கம் விசாரிப்பதற்காக அவருடைய வீட்டில் கூடியுள்ள உறவினர்கள்.

வலசையூர் பனங்காட்டில் உள்ள
சுடுகாட்டில் மாலை 3.15 மணியளவில்
கதிர்வேலின் சடலம் எரியூட்டப்பட்டது.
அவருடைய தம்பி பூபதி, சடலத்திற்கு
கொள்ளி வைத்தார். மாவட்ட தனிப்பிரிவு,
மாநில உளவுப்பிரிவு காவல்துறையினர்
இறுதிக்காரிய சம்பவங்களையும்
செல்போன் கேமராவில் பதிவு செய்தனர்.

 

இவை ஒருபுறம் இருக்க, காவல்துறையினர் சொல்லும் தகவல்களில் உள்ள லாஜிக் ஓட்டைகளே இந்த என்கவுண்டர் மீது பல ஐயங்களை ஏற்படுத்துகிறது.

 

உண்மையில், சுட்டுக்கொல்லப்பட்ட
ரவுடி கதிர்வேல் மே 1ம் தேதி
மாலையே, வேறு ஒரு வழக்கில் வீராணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுவிட்டார்.
ஆனால் அதுகுறித்து காவல்துறையினர்
அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யாமலேயே
விசாரித்து வந்தனர். இதில் வேடிக்கை
என்னவென்றால், கதிர்வேல் சிக்கியது குறித்து
மே 2ம் தேதியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழில்
செய்தியும் வெளியாகி இருக்கிறது.

கதிர்வேல் பதுங்கி இருந்ததாக காவல்துறையினர் குறிப்பிடும் குள்ளம்பட்டி ஆலமரம்.

இந்நிலையில், மே 2ம் தேதி அதிகாலையில்,
காரிப்பட்டி காவல்நிலைய மேல்தளத்தில்
வைத்து கதிர்வேலிடம் ஆய்வாளர் சுப்ரமணி
விசாரித்துள்ளார். கடந்த ஏப்ரல் 5ம் தேதி
நடந்த காட்டூரைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி
கணேசன் கொலை வழக்கில் உண்மையை
ஒப்புக்கொள்ளுமாறு துப்பாக்கி முனையில்
வைத்து விசாரித்திருக்கிறார்.

 

ஏற்கனவே அவருடைய கைத்துப்பாக்கி
லோடிங் செய்யப்பட்டு இருந்தது.
சுட்டு விடுவதாக மிரட்டுவதற்காகவே
அப்படி செய்திருந்தார் என்கிறார்கள்
இதன் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஆய்வாளர்
கவனக்குறைவாக கைத்துப்பாக்கியின்
விசையை (Trigger) அழுத்த,
அதிலிருந்து சீறிப்பாய்ந்த தோட்டா,
கதிர்வேலின் மார்பை துளைத்தது.
ஒற்றைத் தோட்டாவில்
கதிர்வேலின் மூச்சு அடங்கிப்போனது.

சேட்டு

திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதால், கீழ் தளத்தில் இருந்த எஸ்ஐ மாரி மற்றும் சில காவலர்கள் பதற்றத்துடன், மேல் தளத்திற்கு ஓடிச்சென்று பார்த்தனர். அங்கே, கதிர்வேல் ரத்த வெள்ளத்தில் சடலமாக கீழே சரிந்து கிடந்தார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ஆய்வாளர் சுப்ரமணியும், காவலர்களும் அரை மணி நேரத்திற்கும் மேலாக விழி பிதுங்கி நின்றுள்ளனர்.

 

அதன்பிறகே, ஆய்வாளர் சுப்ரமணி, மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் முத்தமிழ் செல்வராஜூக்கு தகவலை தெரிவிக்கிறார். அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக எஸ்பி தீபா கனிகரிடம் சொல்ல, அவர் சேலம் சரக டிஐஜியிடம் தெரிவிக்க, அனைத்து காவல்துறை உயரதிகாரிகளும் சுப்ரமணியின் கவனக்குறைவான செயலைக் கண்டித்து செல்போனிலேயே போட்டு புரட்டி எடுத்துள்ளனர். இத்தனைக்கும் வாழப்பாடி டிஎஸ்பி சூரியமூர்த்திக்கு ஏனோ தாமதமாகவே தகவலைச் சொல்லி இருக்கின்றனர்.

 

கவனக்குறைவாக நடந்திருந்தாலும்கூட இது ஒரு காவல் மரணம் (Lock-Up Death). இடைத்தேர்தல் நேரத்தில், முதல்வர் மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வெளியே கசிந்தால், ஆய்வாளர் சுப்ரமணி மட்டுமின்றி காவல்துறையின் உயரதிகாரிகள் அனைவரின் தலைகளும் உருட்டப்படும் என்பதால், என்கவுண்டர் நாடகத்தை அரங்கேற்றும் முடிவுக்கு வந்தது மாவட்ட காவல்துறை.

 

 

இதையடுத்து என்கவுண்டரை நிகழ்த்துவதற்கான இடம் மற்றும் நேரத்தை முடிவு செய்வதிலும் காவல்துறையினர் ரொம்பவே குழம்பிப் போனார்கள். ‘குள்ளம்பட்டியில் ஓர் ஆலமரத்தின் பொந்தில் ரவுடி கதிர்வேல் பதுங்கி இருப்பதாக மே 2ம் தேதி காலை 11 மணியளவில் ரகசிய தகவல் கிடைக்கிறது. அதன்பேரில், ஆய்வாளர் சுப்ரமணி, எஸ்ஐக்கள் மாரி, பெரியசாமி ஆகியோர் கதிர்வேலை சுற்றிவளைத்தபோது, கத்தியால் அவர்களை தாக்க முயற்சித்தார் கதிர்வேல். அதனால், தற்காப்புக்காக சுப்ரமணி தனது கைத்துப்பாக்கியால் சுட்டதில் கதிர்வேல் மரணம் அடைந்ததாக,’ சொன்னது காவல்துறை.

 

குள்ளம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள மது பிரியர்கள் சிலர், சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் ஆலமரத்தடி நிழலைத்தான் திறந்தவெளி மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த மரத்தின் பொந்துகளில் யாரும் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. அப்படியிருக்கையில், அங்கு கதிர்வேல் பதுங்கி இருந்ததாக பொதுவெளியில் சரம் சரமாக பூ சுற்றியிருக்கிறது மாவட்ட காவல்துறை.

கதிர்வேலை வீராணம் காவல்துறையினர் மே 1ம் தேதி கைது செய்ததாக மே 2ம் தேதி வெளியான தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 100 ஆனது, உடலைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை, மரணம் விளைவிக்கும் அளவுக்கு எப்போது நீடிக்கிறது என்பதை விளக்குகிறது. இந்தப் பிரிவின்படி, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, தற்காப்புக்காக எதிராளிக்கு மரணம் ஏற்படுத்தும் செயலை யார் செய்தாலும் குற்றம் ஆகாது. ஆக, இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி கதிர்வேலின் காவல் மரணத்தில் இருந்து சுலபமாக தப்பிக்க நினைக்கிறது காரிப்பட்டி காவல்துறை.

 

காரிப்பட்டி காவல் நிலையத்தில் முன்பு எஸ்ஐ ஆக இருந்த செந்தில், கதிர்வேல் மீது இதச பிரிவு 110ன் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதுகுறித்து விசாரிப்பதற்காக கதிர்வேலை அழைத்தார். அவரும் தானாகவே சென்று காவல்நிலையத்தில் ஆஜரானார். அந்த சம்பவத்தை இப்போது சுட்டிக்காட்டும் காவல்துறை வட்டாரங்கள், அதிகாரிகளை தாக்கும் அளவுக்கு கதிர்வேலுக்கு துணிச்சல் இல்லை என்றும் கூறுகின்றனர்.

எஸ்பி தீபா கனிகர்

அதுமட்டுமின்றி, மே 1ம் தேதி இரவு, கதிர்வேல் செல்போன் மூலம் தனது தந்தை சேட்டுவை தொடர்பு கொண்டு, ஒரு வழக்கில் காவல்துறையினர் பிடித்து விட்டதாகவும், அவர்கள்தான் அயோத்தியாப்பட்டணம் ரயில்வேகே அருகே ஒரு உணவகத்தில் இரவு உணவு வாங்கிக் கொடுத்ததாகவும், தான் சாப்பிட்டுவிட்டதாகவும் தகவலை கூறியிருக்கிறார். காவல்துறையினரின் டெம்போ டிராவலர் வாகனத்தில் கதிர்வேல் இருந்ததை அயோத்தியாப்பட்டணத்தில் சிலர் அன்று இரவு பார்த்துள்ளனர் என்கிறார் கதிர்வேலின் தந்தை சேட்டு.

 

சமூகத்தின் சமநிலை தவறியதால் ஏற்பட்ட களைகளில் ஒருவர்தான் கதிர்வேல். அவரும் வேரடி மண்ணோடு அகற்றப்பட வேண்டியவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்போதுள்ள வழக்குகள் மூலமே கதிர்வேலை நிரந்தரமாக சிறைக்குள் தள்ளி விட முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது. மே 1ம் தேதியன்று காரிப்பட்டி காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தால் அவர் என்று கைது செய்யப்பட்டார் என்ற விவரங்கள் கிடைத்து விடும். ஆனால் அதுவரை அந்தப் பதிவுகள் இருக்க வேண்டுமே?

 

இது தொடர்பாக நாம் மாவட்ட எஸ்பி தீபா கனிகரிடம் பேசினோம். இது ஒரு காவல் மரணம் அல்ல என்றவர், மே 2ம் தேதியன்று, கதிர்வேலை பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் நடந்த மரணம் என்றும் கூறினார். மேலும், நீதி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எதுவாக இருந்தாலும், அந்த விசாரணையில் தெரிய வரும் என்று மிகச்சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

 

ஆய்வாளர் சுப்ரமணியின் அஜாக்கிரதையான செயலுக்காக அவர் மீது வெளிப்படையாக நடவடிக்கை எடுக்க முடியாது. அவ்வாறு செய்தால், இது ஒரு போலி என்கவுண்டர் என்பதும், காவல் மரணம் என்பதும் வெட்டவெளிச்சமாகி விடும் இக்கட்டான நிலையில், ஒட்டுமொத்த காவல்துறையும் சேர்ந்த நடத்தி வரும் நாடகம்தான் கதிர்வேல் என்கவுண்டர்.

 

– பேனாக்காரன்