நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஓய்வு பெற்ற பெண் செவிலியர் உதவியாளர் ஒருவர், சட்ட விரோதமாக குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்து வந்த சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகம் முழுவதுமே, ஆண், பெண் இருபாலரிடத்திலும் மலட்டுத்தன்மை பிரச்னை அதிகரித்து வருவதுதான் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம்.
இதனால், சட்டப்படி குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ள மத்திய, மாநில அரசுகளே அதற்கான வழிமுறைகளைச் செய்திருந்தாலும், அதற்கான நடைமுறைகளும், விதிமுறைகளும் அதிகம். அதனால்தான் குழந்தையில்லா தம்பதியினரில் பலர் தத்தெடுக்க தயாராக இருந்தாலும், அரசின் கெடுபிடிகள் காரணமாக சட்ட ரீதியான தத்தெடுத்தலை புறக்கணித்து விட்டு, சட்ட விரோதமாக குழந்தையை விலை கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனினும், புதிய அகராதி வாசகர்களுக்காக, சட்டப்பூர்வமாக ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வதற்காக அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பதை இங்கே கொடுத்திருக்கிறோம்.
முந்தைய காலங்களில் அரசர்கள், ஜமீன்தார்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் தங்களுடைய சொத்துகளை ப £ர்த்துக் கொள்ளவும், ஆண்டு அனுபவிக்கவும், வாரிசு இல்லாத சூழ்நிலையில் ஒரு மகனையோ, மகளையோ தன் குழந்தையாக தத்தெடுத்துக் கொள்வார்கள். இவ்வாறு தத்தெடுத்தலுக்கு இப்போது அரசே, சட்டப்பூர்வமான வடிவம் கொடுத்திருக்கிறது.
தத்து எடுத்தலை இரண்டு வழிமுறைகளில் மேற்கொள்ளலாம்…
(1) தத்து எடுக்க விரும்பும் பெற்றோர்கள், தத்து கொடுக்க விரும்பும் பெற்றோரிடம் இருந்து தத்தெடுப்பது. இந்தமுறை மிகவும் எளிதானது.
இந்து, பவுத்தம், சீக்கியம், ஜெயின் மதங்களைச் சேர்ந்தவர்கள் ‘இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரித்தல் சட்டம்-1956’ மூலமாகவும், முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை சார்ந்தவர்கள் ‘Guardians and Wards Act-1890’ மூலமாகவும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்.
இதற்கான வழிமுறைகள் எளிதானவையாகும்.
தத்து எடுக்கும் மற்றும் கொடுக்கும் பெற்றோர்கள், இதன்மூலம் தத்தெடுப்பதற்கான பத்திரம் (Adoption deed) ஒன்றினை பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், பதிவு செய்வதற்குமுன் இதன் சம்பிரதாயங்களை முடிப்பது அவசியம்.
சம்பிரதாய முறைப்படி எவ்வாறு திருமணங்கள் செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறதோ, அதேபோல தத்தெடுப்பதும் பதிவு செய்யப்படுகிறது. தத்து ஒப்பந்தம் (Adoption deed) பதிவு செய்யப்படுவதே தத்து எடுப்பதற்கான சாட்சி ஆகும்.
(2) தத்து எடுப்பதற்கான மற்றொருவழி சற்று அரிய வழிமுறை ஆகும். ஏனெனில், தற்போதைய காலகட்டத்தில் யாரும் தன் குழந்தைகளை தத்து கொடுப்பதற்கு முனைவதில்லை.
தத்து எடுக்கப்படும் குழந்தைகளை சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு உட்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காகவும், குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வுக்காகவும் இந்த சட்ட வழிமுறைகள் சற்றே கவனத்துடன் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த வழிமுறையானது பின்வரும் சட்டங்களைப் பின்பற்றிச் செயல்படுகிறது…
1. Guidelines Governing Adoption of Children 2015
2. Juvenile Justice (Care and Protection of Children) Act, 2000
3. Hague Convention on the Protection of Children and Co-operation in Respect of Inter-country Adoption act, 1993.
குழந்தையை தத்து எடுக்க தகுதிகள்:
தத்து எடுக்க விரும்பும் பெற்றோர்கள் நல்ல மனநிலையுடனும், உடல்நிலையிடனும், பொருளாதார நிலையிடனும் இருக்க வேண்டும்.
திருமணம் ஆனவர்களும், திருமணம் ஆகாதவர்களும் தத்தெடுக்க முடியும்.
தனி பெண்மணி குழந்தையை (பெண்பால் / ஆண்பால்) தத்தெடுக்க முடியும்.
தனி ஆண்மகன், பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.
திருமணமான தம்பதியர் குறைந்தது இரண்டு ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகே தத்தெடுக்க முடியும்.
வயது விதிமுறைகள்:
4 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியரின் கூட்டு வயது 90க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதுவே தனி பெற்றோராக இருக்கும்பட்சத்தில் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
4 முதல் 6 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் கணவன், மனைவி ஆகிய இருவரின் கூட்டு வயது 100க்கு மிகாமல் இருக்க வேண்டும். தனி பெற்றோராக இருந்தால் 50 வயது வரை இருக்கலாம்.
8 முதல் 18 வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்க விரும்பும் தம்பதியரின் கூட்டு வயது வரம்பு 110க்கு மிகாமல் இருக்க வேண்டும். தனி பெற்றோராக இருந்தால் 55 வயது வரை இருக்கலாம்.
குழந்தை மற்றும் தத்து எடுக்க விரும்பும் பெற்றோரில் யாரேனும் ஒருவரது வயது இடைவெளி 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
4 குழந்தைகளுக்கு மேல் ஒருவர் / தம்பதியினர் தத்தெடுக்க முடியாது.
இந்தியா மற்றும் வெளிநாட்டவர் இந்தமுறை மூலம் முறையான அனுமதியுடன் தத்தெடுக்கலாம்.
செயல்முறைகள்:
1. தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
2. ‘காரா’ (Central Adoption Resource Authority) வலைதளத்தில் அதற்கான விண்ணப்பம் கிடைக்கும். இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம்.
3. விண்ணப்பம் பதிவு செய்த நாளில் இருந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்க வேண்டும்.
4. அரசாங்கத்தால் இதற்கான அனுமதி வழங்கப்பட்ட அனாதை இல்லம், ஆதரவற்ற அமைப்புகள், தன்னார்வ விடுதிகள் (என்ஜிஓ) மூலம் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளின் புகைப்படங்கள் வலைதளத்தில் காண்பிக்கப்படும்.
5. தாங்கள் விரும்பும் குழந்தையை தேர்வு செய்ய முடியும்.
6. இதற்காக அமைக்கப்பட்ட குழு, தத்தெடுக்கப்பட்ட பெற்றோரின் மருத்துவ, உடல்நிலை, மனநிலை, பொருளாதார நிலை, வாழ்க்கைச்சூழல் ஆகிய அம்சங்களை ஆராய்ந்து அறிக்கையை அளிக்கும்.
7. தகுதியான பெற்றோர் குழந்தையை தத்து எடுத்தவுடன் அரசு சாரா இயக்கம் அல்லது இல்லம் குழந்தையை தத்து கொடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெற வேண்டும். இவ்வாறு குழந்தையைத் தத்தெடுக்கலாம்.
இதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகலாம். தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வாழ்க்கைமுறை அவர்களின் 18 வயது வரை கண்காணிக்கப்படும்.
இடையில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், குழந்தையை திரும்பப்பெற்றுக்கொள்ளும் அதிகாரம் அரசுக்கு உண்டு.
– பேனாக்காரன்