Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எட்டுவழிச்சாலையும் எடப்பாடி பழனிசாமியும்… மீம்ஸ்களால் தோரணம் கட்டும் இணையவாசிகள்!

 

சென்னை – சேலம் இடையிலான எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆகியோரை கேலி, கிண்டல் செய்து சமூகவலைத்தளங்களில்  வெளியிடப்பட்டுள்ள மீம்ஸ்கள் ரொம்பவே வைரல் ஆகி வருகின்றனர்.

 

சென்னை – சேலம் இடையே எட்டுவழி பசுமைச்சாலைத் திட்டம், 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைகிறது. இதற்காக 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில், 90 சதவீத நிலம், விளை நிலங்கள் ஆகும்.

 

 

இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதில் இருந்தே விவசாயிகள், பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, விவசாயிகள் தானாகவே முன்வந்து நிலங்களை  கொடுத்து வருவதாகவும், நூற்றுக்கு நாலைந்து பேர் மட்டும்தான் எதிர்க்கின்றனர் என்றும் அப்பட்டமாக பொய்யான தகவலை வெளியிட்டார்.

 

‘எட்டு வழிச்சாலைக்காக எடப்பாடி பழனிசாமி தனக்கு சொந்தமான விளை நிலத்தையும், வீட்டையும் விட்டுக்கொடுப்பாரா?,’ என்று பாதிக்கப்படும் விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். பசுமைவழி விரைவுச்சாலை திட்டத்தை மத்திய அரசிடம் போராடி பெற்றதாக ஒருமுறை முதல்வர் சொன்னார். மக்களிடம் எதிர்ப்புகள் வலுத்து வருவதை அறிந்த அவர், இது ஒரு மத்திய  அரசு திட்டம். அதற்கான நிலங்களை கையகப்படுத்தித் தருவது மாநில அரசின் கடமை என்று பல்டி அடித்தார்.

 

இது ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு ஹெக்டோருக்கு 21 லட்சம் முதல் அதிகபட்சமாக 9.04 கோடி ரூபாய் வரை இழப்பீடு, தென்னை மரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். இவை எல்லாமே சமூகவலைத்தளங்களில் பெரும் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. நெட்டிஸன்கள் முதல்வர் மற்றும் ஆட்சியரின் நடவடிக்கைகளை கிண்டல் செய்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

எடப்பாடி பழனிசாமி ஏதோ ஒரு விழாவில் கலந்து கொண்ட பிறகு அவர் தன் காரில் ஏறும்போது அவருக்கு செல்போனில் ஓர் அழைப்பு வருகிறது. அதில் பேசும் மர்ம நபர், ”பழனிசாமி அண்ணே சேலம் ராஜாபுரம் பகுதியில ஒரு வீடு பூட்டியே கிடக்கு. எட்டு வழிச்சாலைக்காக இடிச்சிடலாமா?,” எனக் கேட்கிறார்.

 

அதைக் கேட்டு நொந்துபோன முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”செருப்பால அடிப்பேன். அது என் வீடு. இப்பதான் பூட்டிட்டு வந்தேன்,” என்று கோபமாக கூறுவதுபோல் கிண்டலடித்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். அருகில் இருப்பவர்கள், எடப்பாடி வீட் டுக்கே எட்டு வழிச்சாலையா? என ஆச்சர்யமாக பார்ப்பதுபோல் மீம்ஸ் பதிவிடப்பட்டுள்ளது.

 

ஆதவன் என்ற பதிவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பசுமைவழி விரைவுச்சாலைக்காக விளை நிலத்தில் இருக்கும் மரங்கள், பயிர்கள், ஏழை விவசாயிகளின் வீடுகள், கிணறுகள், கால்நடைகள், மாட்டு வண்டிகள், ஆண், பெண் விவசாயிகள் ஆகியோரை மண்வெட்டியால் அடியோடு வெட்டி அப்புறப்படுத்துவதுபோல் கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளார்.

 

கடைநிலை ஊழியன் என்ற பதிவர், விவசாயிகள் தாமாகவே முன்வந்து நிலங்களை தருகின்றனர் என்ற முதல்வரின் கூற்றையும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எட்டு வழிச்சாலைக்காக தரிசு நிலங்கள்தான் கையகப்படுத்தப்படுகின்றன என்று கூறியதையும் ஒப்பிட்டு, ‘என்ன ஒரு கருத்து ஒற்றுமை… ஆட்சினா இப்படித்தான் இருக்கணும்,’ என்று ‘கலகலப்பு’ படத்தில் நடிகர் சந்தானம் தலையில் அடித்துக்கொள்வது போன்ற காட்சி மூலம் கேலி செய்துள்ளார்.

 

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி இழப்பீடு குறித்து கூறியதைக் கிண்டலடித்து, ”அடடா என்ன அறிவு…? இந்த இழப்பீட்டை வெச்சு மறுபடியும் மரம், குளம், குட்டைகளை பிக்பஜாரில் வாங்கிடலாமா? வளர்ச்சி என்பது நீங்க போடுற ரோட்டுல இல்ல. 120 கோடி பேருக்கும் மூன்று நேரமும் உணவு, உடை, கல்வி, மருத்துவம் சமமாக கிடைக்கணும். வெறும் 120 பேருக்கு மட்டும் கிடைச்சா பத்தாது,” என்று அருண்குமார் என்ற பதிவர் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

 

மெத்தவீட்டான் என்ற பதிவரும் ஆட்சியர் ரோகிணியை வறுத்தெடுத்துள்ளார். ‘சகாயம்போல பெயர் வாங்க ஆசைப்பட்டு, கடைசியில் ஆள்பவர்களுக்கு சகாயம் செய்து கொண்டிருக்கிறார்,’ என்று தெரிவித்துள்ளார்.

 

சரவணன் என்ற பதிவர் ட்விட்டர் பக்கத்தில், ”8 வழிச்சாலைக்காக வெட்டப்படும் பனைக்கு 5000 ரூபாய் இழப்பீடு என்கிறார் ஆட்சியர் ரோகிணி. ஒரு பனை மரம் முழுதாக உருவாக 40 வருடங்கள் ஆகும். பனை என்பது மரம் மட்டும் அல்ல. பறவை, பூச்சி, வண்டுகள் என பல உயிர்களின் வாழிடம். நீரை சேமிக்கும் வரம். 5 லட்சம் தந்தாலும் ஒரு பனை மரத்தை விரைவில் உங்களால் உருவாக்கிக் காட்ட இயலுமா?,” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அரசுப்பள்ளியில் பயிலும் ஒரு சிறுவன், கிழிந்துபோன சட்டையுடன் பெஞ்¢சில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான். அந்தப் படத்தை வெளியிட்ட அகிலா என்ற பதிவர், ”10000 கோடியில் 8 வழிச்சாலை போடும் எடுபிடி அரசே, ஏழைப்பிள்ளைக்கு முடிந்தால் சீருடை ஒன்று அதிகமாக கொடு,” என்று முகத்தில் அறைந்தால் போல் பதிவிட்டுள்ளார்.

 

இணையவாசிகள் போகிறபோக்கில் ரஜினியையும் விட்டு வைக்கவில்லை. அவர் ‘காலா’ படத்தில் நிலமே எங்கள் உரிமை என்று வசனம் பேசியிருப்பார். அதை வடிவேல் கிண்டல் செய்வதுபோல, ‘தலைவா… சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலத்தைப்  பிடுங்குறாங்க தலைவா,’ என்று சொல்வது போலவும், கதவை மூடிக்கொண்டு ரஜினி கடும் மன உளைச்சலுடன் ‘அது க்குள்ள அடுத்த ரவுண்டா?’ என்று புழுங்குவது போலவும் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.

 

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே அரசுப்பள்ளி குழந்தைகள் மதிய சத்துணவுக்காக கையில் தட்டுடன் ஒரு கி.மீ. தூரம் தெருவில் ஓடிச்சென்று சாப்பிடும் அவலம் குறித்து பத்திரிகையில் வந்த செய்தியைக் குறிப்பிட்டு, ‘சேலம் டூ  சென்னையை இணைக்கிறது எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். மொதல்ல சத்துணவுக்கூடத்தை அந்த அரசுப்பள்ளியோட இணைங்கப்பா..’ என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

 

டிஜிட்டல் யுகத்தில், அரசின் எந்த ஒரு நடவடிக்கையும் சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் விவாதப் பொருளாகி வி டுகிறது. பல நேரங்களில், சமூக ஊடகங்கள் பெரும்பான்மை மக்களின் எண்ணங்களையே பிரதிபலிக்கின்றன. எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் மக்களிடம் துளியளவும் விருப்பம் இல்லை என்பதையே, நெட்டிஸன்களும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் மூலம் பிரதிபலித்துள்ளனர்.

 

ஆனாலும், கார்ப்பரேட் முதலாளிகளுக்காக மத்திய பாஜக அரசும், தமிழக அரசும் இத்திட்டத்தை விரைந்து முடிப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருவது தொடர்ந்து சலசலப்புகளை உருவாக்கி வருகிறது. மக்களின் மனநிலைக்கு எதிர் திசையில் நின்று கொண்டு எந்த ஒரு அரசும் வெற்றிகரமாக களமாடிய வரலாறு கிடையாது என்பதை ஏனோ எடப்பாடி பழனிசாமி அரசு மறந்து போனது.

 

 

 

– நாடோடி.