Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கவிஞர் சினேகன் மீது தமிழார்வலர்கள் கொதிப்பு

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியது யார் என்றுகூட தெரியாமல் இருக்கும் பாடல் ஆசிரியர் சினேகன் மீது தமிழார்வர்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார்? என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு கவிஞர் சினேகன்,’தாயுமானவர்’ என பதில் அளித்தார். உண்மையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியது, பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை.

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை

‘நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்…’ என்று ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்து வருகிறோம். வந்திருக்கிறோம். ஆனால், அந்தப்பாடலை எழுதியது யார் என்று தெரியாமல்தான் பலரும் இருக்கிறோம். தமிழுக்கு நேர்ந்த இன்னொரு கொடுமை, இது.

இதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஜூலை 4ம் தேதி, போட்டியாளர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாடினர். அப்போது கவிஞர் சினேகன் சக போட்டியாளரான ஜூலியானாவிடம் இந்தப் பாடலை எழுதியது யார்? என்று கேட்க, அதற்கு ஜூலியானாவும் ‘தாயுமானவர்’ என்றே பதில் அளித்தார்.

அந்த வாரத்தின் இறுதியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல் பேசும்போது, தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது தாயுமானவர் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். ஆயினும், நேற்று (11/07/17) ஒளிபரப்பான எபிசோடிலும் கவிஞர் சினேகன், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியது ‘தாயுமானவர்’ என்றே கூறினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில், ”’மூலன்’ என்ற பெயருடைய புலவர் யார்?” என்றும், ‘பொருத்துக’ பிரிவில் காகம், குயில், சிங்கம், குதிரை என்று ஒருபுறமும், எதிர்ப்புறத்தில் கூவும், கனைக்கும், கரையும், முழங்கும் என்றும் விடை வாய்ப்புகள் தரப்பட்டு இருந்தன. இதனை சில அச்சு ஊடகங்கள், ‘எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்?’ என்று கேலியாக தலைப்பிட்டு கடுமையாக விமர்சித்து இருந்தன. டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் வடிவமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை சொல்லி இருந்தன.

     

ஆனால், மனிதர்கள் ஆறறிவு கொண்டர்வர்கள் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருக்கும் நாம், ஓரறிவு, இரண்டாம் அறிவு, மூன்றாம் அறிவு, நான்காம் அறிவு, ஐந்தாம் அறிவு பற்றியெல்லாம் அறிந்து வைத்திருப்பதில்லை. அப்படித்தான் நமது கல்வித்திட்டமும் இருக்கிறது. சொல்லித்தரும் ஆசிரியர்களும் ‘கூறியது கூறல்’ பாணியையே கடைப்பிடிப்பதால், அவர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது யார்? என கவிஞர் சினேகனுக்குத் தெரியாமல் போனதற்காக வருத்தப்படுவதைவிட, நம் பாடத்திட்டமும், கற்பித்தல் முறையையும் நினைத்துதான் வருத்தப்பட வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

தமிழ்த்திரையுலகில் கிட்டத்தட்ட 2500 பாடல்களை எழுதியுள்ள கவிஞர் சினேகன், ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா’, ‘தோழா தோழா தோள் கொடு சாய்ந்துக்கணும்’, ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே’ போன்ற பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பெரிதும் கவனம் ஈர்க்கப்பட்டவர். இவருக்கு, ‘சின்னபாரதி’ என்ற பட்டப்பெயரும் உண்டு. தமிழ்நாடு அரசின், சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருதை இரண்டு முறை பெற்றுள்ள சினேகன், மனோன்மணீயம் சுந்தரனாரை மறந்தது ஏனோ?

ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

-இளையராஜா சுப்ரமணியம்