Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மக்கள் மீதான பாஜகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, ஆதார், ரேஷன் மானியம் ரத்து என் பாஜக அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் சாமானிய மக்கள் விழி பிதுங்கி உள்ளனர்.

பாகிஸ்தான் ஊடுருவலை முறியடிக்க இந்திய அரசு சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துகிறதோ இல்லையோ, சொந்த நாட்டினர் மீதான தாக்குதலைத்தான் அதிகரித்துள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளும் முன்பே மாடு விற்கத் தடை விதித்தது. இதனால் நாடெங்கும் கால்நடைச் சந்தைகள் முடங்கின. விளைபொருளுக்கு விலை, கடன் தள்ளுபடி கோரிப் போராடிய மத்தியப் பிரதேச விவசாயிகளை சுட்டுக் கொன்றது பா.ஜ.க அரசு.

இதற்கிடையில் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தாக்குதலைத் துவங்கியது மோடி அரசு. குஜராத் மண்ணிலேயே இலட்சக்கணக்கான வணிகர்கள், சிறு முதலாளிகள் ஜ.எஸ்.டி வரிவிதிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். தமிழகத்திலோ தீப்பெட்டி,, ஜவுளி, திருப்பூர் வட்டாரம், வணிகர் சங்கங்கள் என மாநிலமெங்கும் வரியை எதிர்த்து போராட்டங்கள்!

ரயில்வே தனியார்மயத்தின் தொடக்கமாக ரயில் நிலையங்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன. லாபத்தில் இயங்கும் ஏர் இந்தியா தனியார்மயமாக்கப்படுகிறது. திறன் நகரங்களுக்கான திட்டப்படி நகராட்சிகளின் நடவடிக்கைகள் தனியார்மயமாக்கப்பட்டு பங்குச் சந்தையில் சேர்க்கப்படுகின்றன.

ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்ட 1925-ம் வருடத்தின் நூற்றாண்டுக்குள் இந்தியாவை ‘இந்து ராஷ்ட்டிரம்’ ஆக்க விரும்புகிறதாம் பார்ப்பன பாசிசக் கும்பல். ராஜஸ்தானில் மாடு வாங்கச் சென்ற தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள் இந்துமதவெறியர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பசுவின் பெயரால் கொலை செய்வதைக் கண்டிப்பதைப் போல மோடி நடித்து முடிப்பதற்குள் ஜார்க்கண்டில் மாட்டின் பெயரால் ஒரு கொலை நடக்கிறது.

இந்தித் திணிப்பு, பாடத்திட்டங்கள் இந்துமயமாக்கம், நீட் தேர்வு என கல்வித் துறையிலும் பா.ஜ.கவின் நிகழ்ச்சி நிரல்கள் அதிவேகமாக அமலாகின்றன. உ.பியில் யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கத்தில் தலித்துக்களும், முசுலீம்களும் அன்றாடம் தாக்கப்படுகின்றனர். மோடியின் குஜராத் டீக்கடை வரலாகிறது. தமிழகத்தின் கீழடி ஆய்வு குப்பைக் கூடைக்குள் எறியப்படுகிறது.