Sunday, October 6மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நேற்று மநீம… இன்று தேமுதிக…! கொரோனா கிலியில் வேட்பாளர்கள்!!

சந்தோஷ்பாபு, பொன்ராஜ், அழகாபுரம் மோகன்ராஜ்

மக்கள் நீதி மய்ய
வேட்பாளர்கள் சந்தோஷ்பாபு,
பொன்ராஜ் ஆகியோரை
தொடர்ந்து சேலம் மேற்கில்
போட்டியிடும் தேமுதிக
வேட்பாளர் அழகாபுரம்
மோகன்ராஜிக்கும்
கொரோனா தொற்று
ஏற்பட்டு உள்ளது.
நோய்த்தொற்று கிலியால்
வேட்பாளர்கள் கூட்டங்களை
புறக்கணிக்கும் முடிவுக்கு
தள்ளப்பட்டு உள்ளனர்.

 

தமிழக சட்டப்பேரவை
தேர்தல் களம்,
தலைவர்களின் உச்சக்கட்ட
பரப்புரைகளால் அனல்
பறந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க,
கொரோனா இரண்டாவது
அலை இம்முறை அரசியல்
கட்சியினர் மீது அடுத்தடுத்து
தாக்குதலை தொடர்ந்து
வருவது, வேட்பாளர்களிடையே
கலக்கத்தை ஏற்படுத்தி
உள்ளது.

 

ஏற்கனவே,
சென்னை வேளச்சேரி
தொகுதியில் மக்கள் நீதி மய்யம்
சார்பில் போட்டியிடும்
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி
சந்தோஷ்பாபு கொரோனா
தொற்றுக்கு ஆளானார்.
மக்களை நேரில் சந்திக்க
முடியாமல் போனதற்காக
வருத்தப்படுவதாகவும்
அவர் தெரிவித்தார்.
ஏனெனில், அவர்
முதன்முதலில் சந்திக்கும்
தேர்தல் களம் இதுவாகும்.

 

அடுத்து,
அண்ணா நகர் தொகுதியில்
போட்டியிடும் மற்றொரு மநீம
வேட்பாளரான பொன்ராஜிக்கும்
கொரோனா தொற்று
ஏற்பட்டுள்ளது. மாற்று
அரசியலை முன்னெடுக்க
விரும்பும் அவர்,
கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டதில் ரொம்பவே
மன உளைச்சலுக்கு
ஆளாகி உள்ளார்.
எனினும், ‘ஸூம் மீட்டிங்’
உள்ளிட்ட டிஜிட்டல்
முறையிலான பரப்புரையை
தொடர்வதாக
தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில்,
சேலம் மேற்கு தொகுதியில்
தேமுதிக சார்பில் போட்டியிடும்
அழகாபுரம் மோகன்ராஜிக்கும்
கொரோனா நோய்த்தொற்று
ஏற்பட்டுள்ளது. கடந்த 2011ல்
அதிமுக கூட்டணியில்
சேலம் வடக்கு தொகுதியில்
போட்டியிட்டு எம்எல்ஏ
ஆகியிருந்தார்.

 

தற்போது,
தீவிர பரப்புரையில்
ஈடுபட்டிருந்த அழகாபுரம்
மோகன்ராஜிக்கு திடீரென்று
காய்ச்சல் ஏற்படவே,
மருத்துவ பரிசோதனை
செய்ததில் அவருக்கு
கொரோனா தொற்று
இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அவர்
சென்னையில் உள்ள
தனியார் மருத்துவமனையில்
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு
உள்ளார்.

 

நோய்த்தொற்று காரணமாக அவர் 5 நாள்களுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட மாட்டார் என தேமுதிக தெரிவித்துள்ளது. அதேநேரம், அவருக்காக அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்கள் எனத்தெரிகிறது.

 

இன்னும் 13 நாள்கள் பரப்புரைக்கான அவகாசம் உள்ள நிலையில், வேட்பாளர்கள் சிலர் அடுத்தடுத்து கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தேர்தல் முடியும் வரை கூட்டமாக செல்வதை தவிர்த்து, டிவி, வாட்ஸ்ஆப் வீடியோ உள்ளிட்ட டிஜிட்டல் வடிவிலான பரப்புரைகளை மேற்கொள்ள முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் யோசித்து வருகின்றனர்.

 

– பேனாக்காரன்