Monday, June 17மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நக்கீரன் கோபால் கைது பின்னணியில் அறுவடை யாருக்கு? #NakkheeranGopal

 

புலனாய்வு இதழ்களில் தனக்கென தனித்த அடையாளத்துடன், எத்தனையோ நெருக்கடிகளுக்கு இடையிலும் இன்றுவரை பீடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது நக்கீரன். இந்த இதழின் ஆசிரியர் கோபால், நேற்றைய (அக்டோபர் 9, 2018) தினம் கைது செய்யப்பட்ட நிமிடம் முதல் ஒட்டுமொத்த ஊடகங்களிலும் தலைப்பு செய்தி ஆனார்.

 

சின்னதாக ஒரு விசாரணை

புனே செல்வதற்காக நக்கீரன் கோபால், தனது நண்பரான சித்த மருத்துவர் ஒருவர், மற்றும் நக்கீரன் இணையதள ஆசிரியர் வசந்த் ஆகியோருடன் சென்னை விமான நிலையத்திற்குச் சென்றார். சிறுநீர் கழிப்பதற்காக ‘வாஷ் ரூம்’ சென்ற கோபாலிடம் நெருங்கிய போலீசார், உயரதிகாரியின் பெயரைச்சொல்லி ‘சின்னதாக ஒரு விசாரணை’ என அழைக்கின்றனர்.

 

அப்படியே அவரை அணைத்துக் கூட்டிச்செல்லும்போது, அவரிடம் இருந்த செல்போனை பறிக்க போலீசார் முயன்றபோதே, தன்னை கைது செய்யத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொண்டார். ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப்படுவதை அறிந்து கொண்டார்.

 

பொறியில் சிக்கிய கவர்னர்

கைதுக்கான காரணமும், வழக்குப்பதிவும் ரொம்பவே மொக்கையானது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அலுவலகத்தில் துணை செயலாளராக இருக்கும் செங்கோட்டையன், அக்டோபர் 8, 2018ம் தேதி இரவு 8 மணியளவில், ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் நக்கீரன் கோபால் மீது ஒரு புகார் அளித்திருக்கிறார்.

 

அந்தப் புகாரில், ஏப்ரல் 20 – 22ம் தேதியிட்ட நக்கீரன் இதழில், ‘பூனைக்கு மணி கட்டிய நக்கீரன்! பொறியில் சிக்கிய கவர்னர்! சிறையில் நிர்மலாவுக்கு ஆபத்து!’ என்ற தலைப்பில் ஒரு செய்தி பிரசுரமாகி இருந்தது.

 

பேராசிரியை நிர்மலாதேவி

 

அருப்புக்கோட்டை மகளிர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, ஆளுநர் உள்ளிட்ட முக்கிய விஐபிக்களுக்கு மாணவிகளை ‘அறிமுகப்படுத்தி’ வைத்ததாக விவரிக்கிறது அந்த செய்தி. இப்படியான செய்தி மூலம் கவர்னரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார். அதன்பேரில்தான், நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது இ.த.ச. பிரிவு 124ன் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அக்டோபர் 9ம் தேதி காலை 8 மணியளவில், விமான நிலையத்தில் வைத்து கைது செய்திருக்கிறது.

 

கடைசியாக செப்டம்பர் மாதம் வெளியான இதழில்கூட, நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநரை சம்பந்தப்படுத்தக்கூடாது என்று ஆளும் மேலிடத்தில் இருந்து காவல்துறைக்கு தொடர்ந்து அழுத்தம் தரப்படுவதையும், சிறைக்குள்ளேயே நிர்மலாதேவியை கதை முடித்துவிடும் திட்டமும் காவல்துறை வசம் இருப்பதையும் அம்பலப்படுத்தி இருந்தது.

 

ஆளுநர் மாளிகை

இதெல்லாம் சேர்ந்துதான் ஆளுநர் மாளிகையை எரிச்சல் அடையச் செய்திருக்கிறது. கடந்த 5ம் தேதி மாலையில் ஆளுநரை திடீரென்று சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது உடன் இருந்த ஆளுநரின் செயலாளர் ராஜகோபால், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில்தான் நக்கீரன் கோபாலை கைது செய்ய ஆலோசனை நடத்தப்பட்டதாக நேற்று இரவு முதலே தகவல்கள் கசியத் தொடங்கின.

 

ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை குறித்தும் பேசியதாக ஊடகங்களிடம் சொன்னார்.

 

ஆளுநர் மாளிகை திரைக்கதையில் இங்குதான் சின்ன டிவிஸ்ட். 7ம் தேதி போடப்பட்டிருந்த ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை விலக்கிக்கொண்ட எடப்பாடி, நக்கீரன் கோபாலை கைது செய்ததன் மூலம் குடைச்சல் கொடுத்து வரும் ஆளுநர் மீதே சர்ஜிகல் ஸ்டிரைக்கை நடத்தி இருக்கிறார் என்கிறார்கள்.

 

கிரிஜா வைத்தியநாதன்

 

நக்கீரனில் ஆளுநரை குறி வைத்து எழுதப்படும் கட்டுரைகளுக்கு கொஞ்சம் கடிவாளம் போட வேண்டும் என்றுதான் ஆளுநர் மாளிகை வட்டாரம் பேசியிருக்கிறது. நக்கீரனில் ஆளுநரை மய்யப்படுத்தி வெளியான சில கட்டுரைகள் அடங்கிய கோப்புகளை கிரிஜா வைத்தியநாதன் கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு கோப்பு தயாரிக்கப்பட்டிருப்பது குறித்து கிரிஜா வைத்தியநாதன் முன்கூட்டியே முதல்வரிடம் சொல்லவில்லையாம். இதனால் இபிஎஸ் ஏகத்துக்கும் கடுப்பானார் என்கிறார்கள்.

 

பிறகுதான் 8ம் தேதி இரவு அவசர அவசரமாக ஆளுநர் மாளிகை துணை செயலாளர் மூலம் ஜாம்பஜார் காவல்நிலையத்தில் நக்கீரன் கோபால் மீது புகார் தரப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், நக்கீரன் இதழின் இம்பிரிண்டில் உள்ள அனைத்து செய்தியாளர்கள், அலுவலக ஊழியர்கள் என 35 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

 

நிர்மலாதேவி பற்றிய கட்டுரையால் ஆளுநரின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த முடியாது என்று காவல்துறைக்கு தெரிந்திருத்தும், இ.த.ச. பிரிவு 124ன் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதில் எடப்பாடியின் யோசனைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

 

ஆமாம்.

 

சில நாள்களுக்கு முன்பு, தான் பொறுப்பேற்பதற்கு முன்பாக நடந்த பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனங்களில் ஊழல் நடந்துள்ளதாக திடீரென்று சம்பந்தமே இல்லாமல் பகிரங்கமாக சொன்னார் பன்வாரிலால் புரோஹித். அதைக்கேட்டு ஆளும் வட்டாரமே கிறுகிறுத்துப் போனது. இதற்குத் தக்க பதிலடி கொடுக்க, எடப்பாடி தரப்பினர் தக்க தருணத்திற்காக காத்திருனர்.

 

சூப்பர் முதல்வர்

மேலும், பாஜக மேலிடத்திற்கு அதிமுக அரசு அடங்கி ஒடுங்கிப் போனாலும்கூட, சூப்பர் முதல்வர் போல ஆளுநர் செயல்படுவதை இபிஎஸ் தரப்பு கொஞ்சமும் ரசிக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக மேலிடம் அதீதமாக தாங்கிப்பிடிப்பதும் எடப்பாடி பழனிசாமி கோஷ்டியை எரிச்சல் படுத்தியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேல், பாஜகவில் ஒரு தரப்பினர் தொடர்ந்து டிடிவி தினகரனிடம் பேச்சு நடத்தி வருவதும் இபிஎஸ் தரப்பில் உஷ்ணத்தை ஏற்றியுள்ளது.

 

மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தமிழிசை வரை பலரும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தமிழக அரசை நேரடியாகவே ஊழல் அரசு போல சித்தரிக்க முயல்வதையும் ரொம்ப நாளாகவே ஜீரணிக்க முடியாமல்தான் தவித்து வருகிறார் எடப்பாடி.

 

இவற்றுக்கெல்லாம் ‘செக்’ வைக்கும் விதமாகத்தான் நக்கீரன் கோபாலை கைது செய்யும் ஆபரேஷனை தொடங்கினார் என்கிறார்கள் ஆளுங்கட்சிக்கு நடவடிக்கைகளை அறிந்தவர்கள். ஆளுநர் மாளிகையின் விருப்பத்திற்கு இணங்க நக்கீரன் கோபால் கைது செய்யப்பட வேண்டும்; அதேநேரம், அவர் மீதான வழக்கும் வலுவிழந்து போக வேண்டும்; நிர்மலா தேவி வழக்கும் நீர்த்துப்போகக் கூடாது என்று ஆளும்தரப்பில் இருந்து காவல்துறைக்கு சிக்னல் கொடுக்கப்பட்டதாம்.

 

வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், கேள்வி மேல் கேள்வி கேட்டு, காவல்துறையினரை கழுவி கழுவி ஊற்றியதுடன், நக்கீரன் கோபாலையும் விடுதலை செய்தது.

 

கன்னத்தை தடவிய பன்வாரிலால்

இந்த நிகழ்வின் மூலம் ஊடக சுதந்திரம் காக்கப்பட்டது, ஊடக ஒற்றுமை, அரசியல் கட்சியினரின் ஒன்றிணைவு போன்ற நல்லபல அம்சங்கள் வெளிப்பட்டாலும், ஆளுநருக்கு எதிராக தன்னுடைய ஸ்டிராடஜி முழுமையாக வெற்றி பெற்றதில் எடப்பாடி தரப்பு ஏகத்துக்கும் குஷி என்கிறார்கள், கோட்டை வட்டாரத்தை உற்று நோக்குபவர்கள்.

 

பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தடவிய பன்வாரிலால் புரோஹித்தை தொடர்புபடுத்தி அருப்புக்கோட்டை நிர்மலாதேவி சொன்ன வாக்குமூலத்தை பதிவு செய்த நக்கீரன் கட்டுரை, இந்த கைது சம்பவத்திற்குப் பிறகு பட்டித்தொட்டி எங்கும் பரவியதில் ஆளும் தரப்பினர் ரொம்பவே உற்சாகம் அடைந்திருக்கிறார்களாம்.

 

– பேனாக்காரன்.