மனித உடலின் மிகப்பெரிய உறுப்பு, தோல். ஒருவருக்கு இயல்பான தோலின் நிறம் என்பது மரபியல் சார்ந்தே அமைகின்றன. அதேநேரம் தோல் நோய்கள் ஏற்பட்டால், அவை மனதையும் உளவியல் ரீதியாக தாக்குகின்றன. குறிப்பாக, தோல் நோய்களால் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
தோலில் ஏற்படும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, வெண்குஷ்டம் (Vitiligo). உலகளவில் 1 சதவீதம் பேருக்கு வெண்குஷ்டம் பிரச்னை உள்ளதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு.
வெண்குஷ்டம் ஏன் ஏற்படுகிறது, கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விரிவாக சொல்கிறார், சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள ‘டாக்டர் ராமு லைஃப் கேர் மருத்துவமனை’ தோல் சிகிச்சை மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ். இனி அவர்…
ஒருவருடைய தோலில் வெண்குஷ்டம் உருவாவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மரபணுக்கள் குறைபாடு அல்லது தோலுக்கு நிறம் தரக்கூடிய ‘மெலனின்’ என்ற நிறமியில் உண்டாகும் குறைபாடு காராணமாகவும் வெண்குஷ்டம் உண்டாகலாம்.
நிறமி செல்களில் உள்ள மூலக்கூறுகள் அடர்த்தியாக இருந்தால் தோலின் நிறம் கருப் பாகவும், அடர்த்தி குறைவாக இருந்தால் சிவப்பாகவும் அல்லது மாநிறமாகவும் தோன்றுவோம். வெண் குஷ்டம் உள்ள தோல் பகுதியில் நிறமிகள் இருக்காது.
வெண்குஷ்டம், உடல் முழுவதும் பரவக்கூடியது. பெரும்பாலும் உதடு, முகம், கைகள், கால் பகுதிகளில் ஏற்படும். சிலருக்கு பிற பகுதிகளிலும் பரவக்கூடும். வெண்குஷ்டம் பாதிப்பு உள்ள ஒருவரை தொடுவதால் எல்லாம் மற்றவர்க்கு பரவாது.
உடலில் தீக்காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் தோலின் நிறம் மாறிவிடும். அதற்கு ‘அக்கொயர்டு லூக்கோடெர்மா’ என்று பெயர். ஆசிட் போன்ற கெமிக்கல்கள் உடலில் பட்டாலும் தோலின் நிறம் மாறக்கூடும்.
அதுபோன்ற பாதிப்பை ‘கெமிக்கல் லூக்கோடெர்மா’ என்று கூறுவோம்.
எந்த வயதினருக்கும் வெண்குஷ்டம் பிரச்னை வரலாம். ஆனாலும், 15-20 வயதினருக்கு அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.
தாய்க்கும், தந்தைக்கும் வெண்குஷ்டம் இருந்தால் அதன் தாக்கம் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் இருக்குமா என்றால், நிச்சயமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், அதற்கான வாய்ப்பு 5 முதல் 10 சதவீதம் வரை உள்ளது.
சிகிச்சைகள் என்னென்ன?:
வெண்குஷ்டத்தை முற்றிலும் குணப்படுத் தலாம் என்பதற்கு போதிய பதிவுகள் இல்லை. எனினும் மருந்து, மாத்திரைகள் மூலமாக வெண்குஷ்டம் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். அல்ட்ரா வயலட் தெரபி, லேசர் தெரபி சிகிச்சைகள் மூலமாகவும் நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.
சிகிச்சை பெறுவதில் மக்களிடம் பொதுவாக ஒரு தவறான பழக்கம் இருக்கிறது. என்னவென்றால், சிகிச்சை நடைமுறைகளை முழுமையாக தொடர்வதில்லை.
மருத்துவர்கள் சொல்லும் நாள்கள் வரைக்கும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வதில்லை. நோயின் தாக்கம் லேசாக தணிந்த உடனேயே மருந்து / சிகிச்சை எடுத்துக் கொள்வதை நிறுத்தி விடுகின்றனர். அப்படி செய்வது தவறு.
தோலில் வெண்குஷ்டம் இருப்பதை மற்றவர்கள் பார்த்தால் அசிங்கமாக இருப்பதாகக் கருதினால், அந்த இடத்தில் மட்டும் அறுவை சிகிச்சை செய்து உடலின் மற்ற இடங்களில் உள்ளதைப் போன்ற தோலின் நிறத்தைக் கொண்டு வந்து விடலாம்.
முகம், கைகளில் வெண்குஷ்டம் இருந்தால் உடனடியாக தோல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
வெண்குஷ்டம் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுவதுபோல் இருந்தால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய மாட்டோம். அதனால் வெண்குஷ்டம் பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து ஓராண்டு க்காவது மருத்து வரை அணுகி, ஆலோசனை பெறுவது நல்லது.
வெண்குஷ்டத்தால் புற்றுநோய் வராது. ஆனால் இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு தோலின் நிறமி முற்றிலும் சேதமடைந்து விடுகிறது. அதன் மீது சூரிய ஒளி ஊடுருவுவதால் புற்றுநோய் வரலாம்.
அதேபோல் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் சிலருக்கும் வெண்குஷ்டம் வரலாம். அதனால் தைராய்டு பிரச்னை உள்ளவர்களும் மருத்துவரிடம் முன்னெச்சரிக்கையாக ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.
வைட்டமின் ஏ, சி, இ போன்ற எதிர் உயிர்ச்சத் துக்களை உடலில் சேர்ப்பதன் மூலம் வெண்குஷ்டம் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். அதனால் பச்சைக் காய்கறிகள், ஆரஞ்ச், கேரட், ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடுவது நல்லது. எதுவாக இருந்தாலும் அளவுடன் இருப்பது சிறந்தது.
கலரிங் ஏஜன்ட்:
சிகிச்சைகள் மூலம் வெண்குஷ்டம் பரவுவது கட்டுப்படுத்தப்பட்ட பிறகும், தோலின் நிறம் மாறாதபோது அந்த இடத்தில் கலரிங் ஏஜன்டுகள் தடவிக் கொள்ளலாம்.
ஒவ்வொருவரின் உடல் நிறத்துக்கு ஏற்ற கலரிங் ஏஜன்டுகள் கடைகளில் கிடைக்கின்றன. மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமலேயே இதைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த நேரத்தில் மக்களுக்கு தெளிவாக ஒன்றைச் சொல்கிறேன். வெண்குஷ்டம் என்பது பயப்படக்கூடிய வியாதி கிடையாது. தேவையில்லாமல் நாமே அதை பெரிய, பயப்படக்கூடிய வியாதியாக கட்டமைத் துவிட்டோம். வெண்குஷ்டம் உள்ளவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் அச்சப்படத்தேவை இல்லை.
விளக்கமாக சொன்னார் மருத்துவர் மேஜர் ஆர்.கனகராஜ்.
தொடர்புக்கு: 0427-2267625, 7094102291.