Friday, May 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பெண்களை அச்சுறுத்தும் சினைப்பை நீர்க்கொப்பளம்! ”குழந்தைப்பேறும் பாதிக்கலாம்”

”கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள், அந்த இளம்பெண். வயது 18. திடீரென்று அவளது முகத்தில் அதிகளவில் பருக்கள் தோன்றவே, தோழிகள் கிண்டல் செய்தனர். போதாக்குறைக்கு மெல்லிதாக அரும்பு மீசையும் முளைக்க, தொடர் கேலி, கிண்டலுக்கு ஆளானாள்.

அந்தப்பெண் ஒரு நாள் என்னைச் சந்தித்தாள். உடல் பருமன், மெல்லிய மீசை, முகத்தில் பருக்கள் இதையெல்லாம் வைத்து அவளுக்கு என்ன பிரச்னை இருக்கும் என்ற யூகத்திற்கு வந்துவிட்டாலும், ‘மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா?’ என்றும் கேட்டேன். அதற்கு அவள், சில நேரம் இரண்டு மாதங்களுக்கு மேல்கூட மாதவிடாய் தள்ளிப்போகிறது. அப்போது ரத்தப்போக்கு அதிகமாக இருக்கிறது என்றாள்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில், நான் யூகித்ததுபோலவே அவளுக்கு சினைப்பையில் நீர்க்கொப்பளங்கள் இருப்பது தெரியவந்தது. ஆங்கிலத்தில், ‘பாலி சிஸ்டிக் ஒவேரியன் டிசீஸ் (Polycystic ovarian disease) என்பார்கள். சுருக்கமாக, பிசிஓடி.

சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள, ‘டாக்டர் ராமு லைப் கேர் மருத்துவமனை’யின் மகப்பேறு மருத்துவர் எம்.சுபாஷினி, பிசிஓடி பிரச்னை குறித்து மேலும் விரிவாக விளக்கம் அளித்தார்.

பிசிஓடி ஏன் ஏற்படுகிறது?: பெண்களின் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்ற குறைபாடு மற்றும் சமநிலையற்ற ஹார்மோன் சுரப்புகளாலும் பிசிஓடி பிரச்னை உருவாகிறது. இது நோய் அல்ல. ஒரு வகை ‘டிஸ்ஆர்டர்’ எனலாம். அடுத்து, பிசிஓடி என்பது பலர் நினைப்பதுபோல் சினைப்பையில் (முட்டைப்பை) உருவாகும் நீர்க்கட்டி அல்ல. இவை, ‘நீர்க்கொப்பளங்கள்’ ஆகும்.

உடல் இயக்கம் இல்லாமை, மாறி வரும் உணவுப்பழக்கம், சரியான நேரத்திற்கு சாப்பிடாதது, மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் சினைப்பையில் கட்டிகள் உருவாகின்றன. சமநிலையற்ற ஹார்மோன் சுரப்புகள் காரணமாக உடல் எடை அதிகரிக்கும். அதனால் உடல் பருமனான பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கொப்பளங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குறிப்பாக, 15 முதல் 40 வயது வரை உள்ள பெண்களுக்கு இப்பிரச்னை ஏற்படக்கூடும். பிசிஓடியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, Obese PCOD. அதாவது உடல் பருமனானவர்களுக்கு வரக்கூடியது. 60 சதவீத பெண்களுக்கு ‘ஒபீஸ் பிசிஓடி’ இருப்பது தெரியவந்துள்ளது. மற்றொன்று, ‘Thin PCOD’ எனப்படும் ஒல்லியானவர்களுக்கு வரக்கூடியது. 25 சதவீத பெண்களுக்கு ‘தின் பிசிஓடி’ பிரச்னை உள்ளது.

முகத்தில் முடி வளரும்: பெண்மைக்குரிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைந்து, ஆண் தன்மைக்கு காரணமான ஆன்ட்ரோஜன் சுரப்பு கொஞ்சம் அதிகரிக்கும். இதனால்தான் பிசிஓடி பிரச்னை உள்ள பெண்களின் முகத்தில் அதிகளவில் பருக்கள், முகத்தில் மெல்லிய ரோமங்கள் முளைத்தல் போன்ற பிரச்னைகள் உருவாகின்றன. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், பாதுகாப்பு கவசம்போல் செயல்படுகிறது.

இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்து, ஆன்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் அவர்களின் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்கிறது. இதனால் அவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்புகள் உள்ளன. உடல் எடை அதிகமாக உள்ள பெண்களின் பின் கழுத்துப் பகுதியில் பட்டையாக கறை (ACANTHOSIS NIGRICANS) படிந்ததுபோல் இருக்கும். இதுபோன்ற அடையாளங்கள் இருக்கும் பெண்களுக்கு சினைப்பை நீர்க்கொப்பளங்கள் இருக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

குழந்தை பிறப்பு பாதிக்கும்: பிசிஓடி பிரச்னை உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது. சினைப்பையில் இருந்து மாதம் ஒரு முட்டை வீதம் வெளியேறும். பிசிஓடி-யால் இதுவும் தடைப்படுகிறது.

இதனால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. திருமணமாகி ஓர் ஆண்டுக்கும் மேலாக குழந்தை பிறக்கவில்லை எனில், அவர்களுக்கு முறையான சிகிச்சைகள் மூலம் கருத்தரிக்க வைக்க முடியும்.

குணப்படுத்த முடியுமா?: பொதுவாக, பிசிஓடி பிரச்னைக்கு சிகிச்சைகள் அளிப்பது ரொம்பவே கடினம். இது ஒரு நீண்டகால சிகிச்சை முறையை அடிப்படையாகக் கொண்டது. குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகளில் இப்பிரச்னையை சரி செய்யலாம்.

என் அனுபவத்தில் சொல்கிறேன்…நாங்கள் தரும் சிகிச்சை 30 சதவீதம் பயன்தரும் எனில், சிகிச்சைக்கு வருபவரின் 70 சதவீத ஒத்துழைப்பு இருந்தால்தான் இதற்கான சிகிச்சை முழுமை பெறும்.

திருமணம் ஆகாத பெண்களுக்கு முதலில் ஹார்மோன் சுரப்பை சமநிலைப்படுத்த மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். அதன்பின், அவர்கள் முறையான உணவுப்பழக்கத்தை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

எண்ணெய்யில் பொரித்த உணவு, துரித உணவுகளை (ஃபாஸ்ட் ஃபுட்) அறவே தொடக்கூடாது. மாவுச்சத்தை குறைத்து, நார்ச்சத்துள்ள உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். எதுவாக இருந்தாலும் ஒரே வகை எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தினமும் மூன்று வேளை சாப்பிடும் உணவை ஆறு வேளையாக பிரித்து சாப்பிட வேண்டும். இவற்றுடன் கொஞ்சம் உடற்பயிற்சியும் கட்டாயம் தேவை. இதை சரியாக பின்பற்றினாலே மாதவிடாய் சுழற்சியை கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். மாதவிடாய் சரியான பின், ஆறு மாதம் கழித்து மீண்டும் சில சிகிச்சைகள் அளிக்க வேண்டும்.

திருமணம் ஆன பெண்களாக இருந்தால், அவர்களிடம் குழந்தை பெறுவதற்கான திட்டம் குறித்து முதலில் கேட்டுத் தெரிந்து கொள்வோம். அதைப் பொறுத்து சிகிச்சைகள் தொடங்கப்படும்.

முதலில், முட்டைப்பையில் நீர்க்கொப்பளங்கள் சுருங்குவதற்கான சிகிச்சை அளிக்கப்படும். பிறகு இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் குறைப்புக்கான சிகிச்சை அளிக்கப்படும். ஹார்மோன் மாத்திரை சிகிச்சை தவிர்த்து வேறு பல சிகிச்சைகள் வழங்கப்படும். தொடர் சிகிச்சை முறைகளால் பிசிஓடி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு பெற முடியும்.

இதையெல்லாம் சாப்பிடலாம்:

சினைப்பையில் நீர்க்கொப்பளங்கள் உள்ள பெண்கள் பின்வரும் உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்வது நல்லது.

தானியங்கள்: பிரவுன் அரிசி, சிவப்பு அரிசி, கேழ்வரகு, சாமை, வரகு, குதிரைவாலி அரிசி, தினை, கம்பு, கோதுமை, தானியங்களால் தயாரிக்கப்பட்ட பிரெட்.

பழங்கள்: அனைத்து வகை பழங்களும்

கீரைகள்: அனைத்து வகை கீரைகளும்

காய்கறி: அனைத்து வகை பச்சைக் காய்கறிகளும். கிழங்கு வகைகளை மட்டும் அளவுடன் எடுத்துக் கொள்வது நல்லது.

அசைவம்: முட்டையின் வெள்ளைக்கரு, மீன், கோழி இறைச்சி.

விளக்கமாகச் சொன்னார் மகப்பேறு மருத்துவர் எம்.சுபாஷினி.

 

தொடர்புக்கு : 0427 – 2267625, 98651 34646

 

சந்திப்பு: இளையராஜா சுப்ரமணியம்.