Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘வாய்தா ராணி’, ‘ஓசி பயணம்…’ வாய்த்துடுக்கால் வீழ்ந்த பொன்முடி

ஜெயலலிதாவை வாய்தா ராணி என்றும், பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணத்தை ஓசி பயணம் என்றும் பொதுவெளியில் வாய்த்துடுக்கு காட்டிய அமைச்சர் பொன்முடிக்கு, சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை என்பதை சொந்தக் கட்சியினரே ரசிக்கின்றனர்.

தமிழகத்தில் தந்தை பெரியார் மீது ஈர்ப்பு கொண்டவர்கள், பேரறிஞர் அண்ணா, திராவிடர் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய பிறகு அக்கட்சியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். அப்படி பெரியாரிய பட்டறையில் இருந்து திமுகவுக்குள் காலடி வைத்தவர்தான் பேராசிரியர் பொன்முடி. பொதுமேடை, அரசியல் மேடை என எந்த மேடயாக இருந்தாலும் திராவிட சித்தாந்தங்களைப் பேசாமல் இருக்கவே மாட்டார். அந்தளவுக்கு திராவிட சிந்தனைகளில் ஊறிப்போனவர்.

திராவிட இயக்கத்தின் மீது பொன்முடி கொண்ட சித்தாந்த பிடிப்பைச் சுட்டிக்காட்ட, அவர் எழுதிய, ‘The Dravidian Movement and the Black Movement’ என்ற ஒரு புத்தகமே போதுமானது.

மு.க.ஸ்டாலின் தலைமையில்

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து,

பொன்முடி சர்ச்சையில்தான் சிக்கி வருகிறார்.

பெண்களுக்கான இலவசப் பேருந்து

சேவையை ‘ஓசி பயணம்’ எனப் பேசி,

பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

நிர்வாகிகளை ஒருமையில் பேசுவது,

கோரிக்கை மனு அளிக்கும் பெண்களிடம்

ஆவேசமாகப் பேசுவது எனத் தொடர்ந்து

சர்ச்சையில் சிக்கி வந்தார்.

இந்த நிலையில்தான் சொத்துக்குவிப்பு

வழக்கில் சிக்கி, தன் பதவியை

இழந்திருக்கிறார்.

திமுகவில் பட்டதாரிகள்,

கூட்டம் கூட்டமாகச் சேர்ந்த காலக்கட்டம் அது.

விழுப்புரம் மாவட்டம், டி.எடையார் கிராமத்தில்

கந்தசாமி – மரகதம் தம்பதிக்கு 1950ம் ஆண்டு,

ஆகஸ்ட் 19ம் தேதி பிறந்தவர்தான்

பொன்முடி என்கிற தெய்வசிகாமணி.

கல்வி, பொருளாதாரத்தில் மேம்பட்ட குடும்பப் பின்னணியில் இருந்து வந்த காரணத்தாலோ என்னவோ எம்.ஏ., வரலாறு, எம்.ஏ., பொது நிர்வாகம், எம்.ஏ., சமூக அறிவியல், பி.எட்., பி.ஜி.எல்., பி.ஹெச்டி., என டிகிரிகளை வாங்கிக் குவித்தார். பள்ளி ஆசிரியர்களான பெற்றோரைப் போல, கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர், திராவிட இயக்கத்தின் மீதான பற்றினால் அரசுக் கல்லூரிப் பேராசிரியர் பதவியைத் துறந்து திமுகவில் இணைந்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தீவிர விசுவாசியான பொன்முடிக்கு முதன்முதலில் 1989ம் ஆண்டு, விழுப்புரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. 47.18 சதவீதம் வாக்குகள் பெற்று திமுகவின் கவனம் பெற்றார்.

தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதவியைக் கொடுத்தார் கருணாநிதி. இதன்மூலம், தமிழ்நாட்டு மக்களின் கவனத்தைப் பெற்றார் பொன்முடி.

1991ம் ஆண்டு நடந்த தேர்தலில்,

மீண்டும் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டார்.

ராஜிவ்காந்தி படுகொலையால்

ஏற்பட்ட அனுதாபத்தில்,

அதிமுக – காங்கிரஸ் கூட்டணி

அதிரிபுதிரியாக வெற்றி பெற,

அந்த தேர்தலில் பொன்முடி

தோல்வி அடைந்தார். 1996ம் ஆண்டு,

விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு

வெற்றி பெற்ற அவருக்கு,

போக்குவரத்துத்துறை ஒதுக்கப்பட்டது.

2001 மற்றும் 2006 சட்டப்பேரவைத்

தேர்தல்களிலும் விழுப்புரத்தில்

வெற்றி பெற்றார்.

2006ல் ஆட்சி அமைத்த கருணாநிதி,

பொன்முடிக்கு உயர்கல்வி மற்றும்

கனிமவளத்துறை அமைச்சர்

பதவியை வழங்கினார்.

கட்சிக்குள்ளும் அவருக்கு

உயர் பதவிகள் வழங்கப்பட்டன.

இந்தக் காலக்கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா தலைமையிலான அரசு, பொன்முடிக்கு எதிராகச் சொத்துக்குவிப்பு வழக்கை 2011ல் பதிவு செய்தது. அதன்படி, வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகிய இருவரின் மீதான குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரமில்லை என்று, கடந்த 2016ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் 2017ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்தது.

அதன்படி, இந்த வழக்கில், அரசுத்தரப்பு மற்றும் பொன்முடி தரப்பின் வாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2023 நவ. 27ம் தேதி, எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்துச் சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி இருவருக்கும், டிச. 21ம் தேதி, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் எட்டாவது பிரிவு, விதி 8 (1)ன் படி, பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார்.

பொன்முடியின் எதிர்காலம் இனி என்னவாகும் என்ற கேள்வியோடு, திமுக முன்னோடிகளுள் ஒருவரிடம் பேசினோம்…

”தலைவர் கலைஞருக்கு ஒரு பேராசிரியர் அன்பழகன் எப்படியோ, அதுபோலதான் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு பேராசிரியர் பொன்முடி. அரசியலுக்கு அப்பாற்பட்டு இரு தரப்புக்கும் குடும்ப அளவில் நல்ல நெருக்கம் உண்டு. அதேபோல, அழகிரியிடமும் பொன்முடி நட்பு பாராட்டினார். தற்போது பொன்முடிக்கு ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலை அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவுதான்.

திமுகவில் பல அமைச்சர்கள் மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருக்கிறது. ஆனால், பொன்முடிக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு அவரே முதல் காரணமாகி விட்டார். ஏனென்றால், தான் செய்வதுதான் சரி என்ற மனநிலை கொண்டவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியிருந்தபோது அவரை ‘வாய்தா ராணி’ என்று பொதுவெளியில் கிண்டலாகச் சொன்னார். அந்த விமர்சனம் அரசியல் அரங்கில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது.

பொன்முடியைப் பொருத்தவரை கட்சிக்கும் தலைமைக்கும் ஒருவர் எதிரி என்றால், தனக்கும் அவர் எதிரிதான் என்று எண்ணக்கூடியவர். கலைஞர், தளபதி, சின்னவர் வரை அவரின் நெருக்கம் தொடர்ந்தது. அதேநேரத்தில், தலைமை, மூத்தவர்களை தாண்டி யாரிடமும் நெருக்கமாகப் பேசக்கூட மாட்டார். இந்தக் குணத்தால், சொந்த மாவட்டத்திலேயே கடைமட்டத் தொண்டர்களுக்கும் அவருக்கும் இடையே பெரிய இடைவெளியே ஏற்படுத்தியது.

வாய்தா ராணி என்ற விமர்சனத்தால்தான், பொன்முடியின் மீது ஜெயலலிதாவின் கோபப்பார்வை விழுந்தது. அதனால்தான், பிற வழக்குகளைக் காட்டிலும் பொன்முடி மீதான வழக்கில் மிகத்தீவிரமாக இருந்தார். அப்போதும்கூட, தலைமையின் சொல் கேட்டு அவர் நடக்கவே இல்லை.

இருப்பினும், விழுப்புரம் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனால் சி.வி.சண்முகம் சட்டத்துறை அமைச்சராக இருந்தபோதுதான், இந்த வழக்கை துரிதப்படுத்தினார். பொன்முடிக்கு எதிரான பல ஆதாரங்களை அவரே நேரடியாகக் களத்தில் இறங்கிச் சேகரித்தார். அதுதான் தற்போது பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

பொன்முடி கொஞ்சம் பொறுமையாக இருந்து இருந்தால், பிரச்னை இந்தளவு தீவிரம் ஆகியிருக்காது. தற்போது அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்ததைக்கூட விழுப்புரம் திமுகவினரே ரசிக்கத்தான் செய்கின்றனர். பக்கத்து மாவட்டத் தலைகளும் குஷியில் ஆரவாரம் செய்கின்றார்கள். சொந்தக் கட்சியினர், சொந்த மாவட்டத்திலும்கூட யாருக்கும் அவர் மீது அனுதாபம் ஏற்படவில்லை. அந்தளவுக்குச் வெறுப்பைச் சம்பாதித்து வைத்திருக்கிறார் பொன்முடி.

இதே போன்ற நிலைமையில்தான் முன்னாள் அமைச்சர் செல்வகணபதியும் இருந்தார். ஆனாலும், அவருக்குக் கட்சி உறுதுணையாக இருந்தது. தற்போது தீர்ப்பு 30 நாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தலைமை எடுக்கும் முடிவை வைத்துதான் பொன்முடியின் எதிர்காலம் இருக்கிறது,” என்றார் அந்த மூத்தத் தலைவர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றிருக்கும் பொன்முடி மீது, செம்மண் கடத்தல் வழக்கு ஒன்றும் நிலுவையில் இருக்கிறது. இதை மையப்படுத்திதான் அமலாக்கத்துறை அவருடைய வீட்டில் அண்மையில் சோதனை நடத்தியது. அந்த வழக்கும் சூடுபிடித்தால், பொன்முடியின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்கிறார்கள்.

– பேனாக்காரன்