Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பல்கலை, கல்லூரிகளில் இனி ‘நொறுக்க’, ‘கொறிக்க’ முடியாது! #JunkFood #UGC

 

இந்தியாவில் இளம் தலைமுறையினர் அதிகளவில் உடல்பருமனால் அவதிப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து, அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் வளாகத்திலும் இனி நொறுக்குத்தீனிகள் (Junk Food) விற்கக்கூடாது என்று பல்கலை மானியக்குழு (யுஜிசி) அதிரடியாக தடை விதித்து உள்ளது.

 

இந்தியா எதிர்கொண்டுள்ள உடல்நலம் சார்ந்த முக்கிய பிரச்னைகளுள் ஒன்று, உடல்பருமன் (Obesity). 1975ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் ஒரு மில்லியன் பேருக்கு உடல்பருமன் பிரச்னை இருந்தது. ஆனால், 2016ம் ஆண்டு நிலவரப்படி 30 மில்லியன் இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல்பருமனால் அவதிப்படுவதாக கூறுகிறது ஓர் ஆய்வு. அடுத்த ஏழு ஆண்டுகளில், அதாவது 2025ல் இப்பிரச்னைக்கு 70 மில்லியன் பேர் இலக்காகக் கூடும் என்றும் எச்சரிக்கிறது அந்த மருத்துவ ஆய்வு.

பாட்டிக்கு இருந்த அதே பிரச்னை பேத்திக்கும் இருக்கலாம். அந்த வகையில் இதுவும் மரபியல் சார்ந்த பிரச்னைகளுள் ஒன்றுதான். என்றாலும் அடியோடு மாறிவிட்ட, தாறுமாறான உணவுப்பழக்கம்தான் உடல்பருமன் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதனால்தான் தொற்றாவகை நோய்களுள் முக்கியமானதாக உடல்பருமன் தொந்தரவும் கவனிக்கப்படுகிறது.

 

கிராமப்புறங்களைக் காட்டிலும் நகர்ப்புறங்களில் இப்பிரச்னையின் தீவிரம் ரொம்பவே அதிகம். ‘தொப்பை இல்லாத போலீசு எங்கே இருக்கிறார்?’ என்று கிண்டலடித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது வெகுசன மக்களில் தொப்பை இல்லாதவர்கள் குறைவு என்ற காலம் வந்துவிட்டது.

பருமனான உடலைத் தூக்கிக்கொண்டு நடப்பதுதானே நாம் எதிர்கொள்ளும் சவால் என்று மட்டும் நினைத்துவிட முடியாது. எப்படி நீரிழிவு நோய் பல்வேறு உடல்நலக்கோளாறுகளுக்கு வழிவகுக்கிறதோ அதேபோல்தான் உடல்பருமனும்.

 

உடல்பருமனால் ஞாபக மறதி, மனச்சோர்வு, மனஅழுத்தம், அஜீரணக்கோளாறு, இருதய நோய்கள், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக தொந்தரவுகள், புற்றுநோய்களும் வரலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். பெருநகரங்களில் ஒரு முன்னணி மருத்துவர், ஓராண்டில் 100 பேருக்கு உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிவிக்கிறார். அவரே, முந்தைய ஆண்டைக் காட்டிலும் இப்போது 29 சதவீதம் இத்தகைய அறுவை சிகிச்சைகள் அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறார்.

 

தாறுமாறான உணவுப்பழக்கம் என்றால் தேவையைக் காட்டிலும் கூடுதலாக உண்பது, அதையும் சரியான நேரத்திற்கு சாப்பிடாதது என்பதும் அடங்கும். குறிப்பாக, நொறுக்குதல் அல்லது கொறிக்கும் வகை உணவுகளான பீட்ஸா, பர்கர், ஃபிரைடு சிக்கன், ஃபிரைடு ரைஸ் போன்ற வறுத்த உணவுகளை அதிகளவில் அடிக்கடி உண்பதும் உடல்பருமனாக முக்கிய காரணங்கள் என்கிறார்கள்.

 

இவ்வகை உணவுப்பொருள்களை நாம் எவ்வளவு சாப்பிட்டோம் என்பதே தெரியாமல் உள்ளே போய்கக்கொண்டே இருக்கக்கூடியவை. அதனால்தான் குழந்தைகளும் திட்டம் தெரியாமல் எக்கச்சக்கமாக சாப்பிட்டு விடுகின்றனர்.

இந்த உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை நிறமூட்டிகள், சுவையூட்டிகள், அஜினோமோட்டோ போன்றவைகளால் உடல் எடை கூடுகிறது. இவ்வகை உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவதால்தான் இந்திய அளவில் தற்போது 14.4 சதவீத குழந்தைகள் அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுவதாக கூறுகிறது மருத்துவ ஆய்வு.

 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழோ, 19.3 சதவீத குழந்தைகளுக்கு உடல்பருமன் தொந்தரவுகள் இருப்பதாக கூறுகிறது. ஒருபுறம், உடல்பருமன் பிரச்னைகளையும், மற்றொருபுறம் ஊட்டச்சத்து குறைபாடு (Malnutrition) மற்றும் எடை குறைவு (Under Weight) என இந்தியா தற்போது இரட்டை சுமைகளை (Double Burden) சுமந்து கொண்டுள்ளதாகவும் அந்த இதழ் கவலை தெரிவித்துள்ளது.

 

குழந்தைப்பருவத்தில் ஏற்பட்டுள்ள உடல்பருமன் பிரச்னையை, 13 முதல் 22 வயது வரையிலான பருவத்தினரும் அதிகளவில் சந்திக்கின்றனர். அதனால் ‘ஜங்க் ஃபுட்’ எனப்படும் உணவு வகைகளை அறவே தவிர்ப்பது நலம் பயக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

சரி… நாம் சொல்ல வந்த சேதி இவை மட்டுமல்ல.

 

பல்கலை மானியக்குழு எனப்படும் யுஜிசி அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கும் ஒரு முக்கியமான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது, பல்கலை மற்றும் கல்லூரிகளின் வளாகத்திற்குள் இனிமேல் எக்காரணம் கொண்டும் ‘ஜங்க் ஃபுட்’ (Junk Food) உணவு வகைகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையோ விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை அனைத்து பல்கலை துணைவேந்தர்களும் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதுதான் லேட்டஸ்ட் செய்தி.

 

மாணவ, மாணவிகளின் உடல்நலன் சார்ந்த தரவுகளை சேகரிக்கவும், அனைவருக்கும் பிஎம்ஐ எனப்படும் உடல் நிறை எண் (Body Mass Index) விவரங்கள், உயரம், இடுப்பு சுற்றளவு குறித்த விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊட்டச்சத்துணவு, மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மத்திய பல்கலைகள் 46, மாநில பல்கலைகள் 367, மாநில தனியார் பல்கலைகள் 263 உள்பட மொத்தம் 903 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் கீழ் 1550 உறுப்புக்கல்லூரிகள் உள்பட 37977 கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில் நடப்பு 2017-2018ம் கல்வி ஆண்டில் 13 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

 

பல்கலைகள், கல்லூரிகளில் உள்ள கேண்டீன்களில் பீட்ஸா, பர்கர், சமோசா மற்றும் பஜ்ஜி, வடை போன்ற எண்ணெய் பலகாரங்கள், குர்குர்ரே, பிங்கோ, சிப்ஸ் போன்ற கொரிக்கும் வகை நொறுக்குத் தீனிகள் விற்கப்படுகின்றன. பெரும்பாலும் தனியார் கல்வி நிலையங்களில் இவை எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் விற்கப்படுகின்றன. கேண்டீன் நடத்த ஒப்பந்தம் விடுவதன் மூலம் கல்வி நிலையங்களுக்கு கணிசமான வருவாய் கிடைப்பதால், இத்தகைய தின்பண்டங்களை தாராளமாக அனுமதிக்கின்றனர்.

 

யுஜிசியின் இந்த தடை உத்தரவால் கேண்டீன் ‘ஜங்க் ஃபுட்’ மூலம் கிடைத்து வந்த வருவாய் ஓரளவு பாதிக்கப்பட்டாலும், மாணவர்களின் உடல்நலம் காக்கப்பட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

 

தனியார் பள்ளிகளிலும் இதேபோல் ஜங்க் ஃபுட் உணவு வகைகளை விற்க தடை விதிக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

அதுசரி…. ‘ஜங்க்’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? அதற்கு அர்த்தம் தெரிந்தவர்கள் இனி கேஎப்சி சிக்கன், மெக்டொனால்டு, பீட்ஸா, பர்கர், ஃபிரைடு ரைஸ் கடைகள் பக்கம்கூட ஒதுங்க மாட்டார்கள் என நம்பலாம்.

 

– ஞானவெட்டியான்.