Friday, May 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இன்றைய பெண்கள் நிலவுகள் அல்ல; சூரியன்கள்… – தில்லைக்கரசி நடராஜன்

(“புதிய அகராதி”, ஏப்ரல்-2017 இதழில்)

இருபத்திரண்டு
ஆண்டுகளுக்கு முன்
கனடா நாட்டிற்குச் செல்லும்
வாய்ப்பு, நான் பணிபுரிந்து
வந்த சேலம் தியாகராஜர்
பாலிடெக்னிக் கல்லூரி மூலம்
எனக்குக் கிடைத்தது.
(வகுப்பறையில் வாசிக்கவும்
வாழ்க்கையில் சுவாசிக்கவும்
கற்றுக்கொடுத்த என்
குருகுலத்திற்கு நன்றிகள்).
கனடாவில் டொராண்டோ
ஹம்பர் பல்கலைக் கழகத்தில்
பெண்கள் மேம்பாட்டுக்கான
மூன்று வாரப்பயிற்சி
எங்களுக்கு வழங்கப்பட்டது.

முதல் நாள் அனுபவமே
மொத்த பயிற்சியின் சாராம்சத்தை
சொல்லிக்கொடுத்தது.
அன்று காலை
இடைவேளையின்போது
நானும் என்னுடன் பயிற்சிக்கு
வந்திருந்த இரண்டு பெண்
ஆசிரியர்களும் கழிப்பறைக்குச்
சென்றிருந்தோம்.

 

அங்கே மிக அழகான
செல்லுலாய்டு பொம்மை
கணக்காய் ஓர் இளம்பெண்
கழிப்பறையைச் சுத்தம்
செய்து கொண்டிருந்தாள்.
“இவ்வளவு அழகான பெண்
கழிப்பறையைச் சுத்தம் செய்து
கொண்டிருக்கிறாள்…
அவளுக்கு என்ன கஷ்டமோ”
என்று எங்களுக்குள்
பேசிக்கொண்டோம்.

 

அன்று மாலை
அந்தக் கல்லூரி பேராசிரியர்
ஒருவரின் வீட்டில் எங்களுக்கு
விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு
இருந்தது. நாங்கள் அவர்
வீட்டை அடைந்தபோது,
அங்கு அமைக்கப்பட்டிருந்த
நீச்சல் குளத்தையும்,
அங்கு நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த
கார்களையும் பார்த்து
அதிசயித்தபடி நாங்கள்
காரை விட்டு இறங்கினோம்.

 

 

அந்தப் பேராசிரியர்,
எங்களை வாசலுக்கு
வந்து வரவேற்றார்.
அவரின் பக்கத்தில்,
காலையில் கழிப்பறையில்
பார்த்த அதே பெண்.
நான் ஆச்சரியப்பட்டு
முடிப்பதற்குள் அதிர்ச்சி
காத்திருந்தது.
பேராசிரியர்,
‘மீட் மை டாட்டர் கரோலின்’
என்றதும் எனக்கு தலை
தட்டாமாலை சுற்றியது.

அந்தப் பெண்ணும்
எங்களுக்கு கை கொடுத்து
வரவேற்றாள். நான் அவளிடம்,
“உங்களை பார்த்ததுபோல
உள்ளது,” என்று சொல்ல,
அவள் “ஆம். இன்று காலை
கழிப்பறையில் நான் சுத்தம்
செய்து கொண்டிருந்தபோது
பார்த்தீர்கள்,” என்று
சொன்னாள்.

 

“என்ன சார் உங்கள் பெண்
எதற்கு அந்த வேலை
செய்ய வேண்டும்?” என்றதும்,
அவரோ, ‘அவளிடமே கேளுங்கள்’
என்றார். நான் அவளைப்
பார்த்தேன்.

“நான் என் சொந்தக்காலில்
நிற்க விரும்புகிறேன்.
எனக்கு இப்போது 23 வயது.
பதினாறு வயதில் நான்
பெற்றோரை விட்டுப் பிரிந்து
தனியே சென்று விட்டேன்.
நான் பார்ட் டைம் வேலை
செய்து கொண்டே
படிக்கிறேன்.

 

எந்த வேலை
கிடைத்தாலும் செய்வேன்.
செய்யும் வேலையை
சிரத்தையாக செய்வேன்.
அவ்வப்போது வந்து
பெற்றோருடன் இருந்துவிட்டுப்
போவேன். இன்று
உங்களைப்போல் நானும்
விருந்தாளிதான்,” என்று
சிரித்தபடி கூறினாள்.

நான் நம் நாட்டில்
இதுபோல் பெண்கள்
படு காஷூவலாக எந்த
வேலையானாலும் செய்து
கொண்டு படிப்பார்களா?
என்று எண்ணினேன்.

 

என் ஏக்கம் தீரும் நாள் வந்தது.

 

அனேகமாய்,
ஒரு 12 ஆண்டுகள் இருக்கும்.
நானும் என் கணவரும்
சேலத்தின் அந்தப் பிரபலமான
ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம்.
மாலை நேரங்களில் அங்கு
கூட்டம் அலைமோதும்.
இளம்பெண்களும், ஆண்களும்
சீருடையில் பலகாரங்களை
கஸ்டமர்களுக்கு பார்சல்
செய்து கொடுத்துக்
கொண்டிருந்தார்கள்.

 

நானும் ஏதாவது
ஸ்வீட் வாங்கலாமென
யோசித்துக் கொண்டிருந்தபோது
”குட் ஈவ்னிங் மேடம்” என்ற
குரல் கேட்டுத் திரும்பினேன்.

 

பேண்ட் சர்ட் சகிதமாய்
தலையில் தொப்பியோடு
என் மாணவி மனோசித்ரா.
இரண்டு மணி நேரத்திற்கு
முன் கல்லூரியில் பாடத்தில்
சந்தேகம் கேட்டவள்…
“சித்ரா…நீ இங்க…” என்று
இழுத்ததும் அவள்,
“மேடம், இங்க பார்ட்
டைம் வேலை செய்யறேன்.
காலேஜ் முடிஞ்சதும்
வந்துடுவேன்.
ஒன்பது மணி வரை
வேலை செஞ்சு முடிச்சிட்டு
வீட்டுக்கு போயிடுவேன்.
நீங்க ஜிலேபி வாங்கிக்கோங்க
மேடம்” என்று சொன்னவளைப்
பார்த்துப் பெருமைப்பட்டேன்.

இன்னுமொரு ஆச்சரியம்.
ஐந்து வருடங்களுக்கு
முன் நடந்தது.

 

அது ஓர் இனிய
மாலைப்பொழுது.
நானும் என் கணவரும்
மகன், மருமகளோடு
ஸ்வீடன் செல்வதற்காக,
கீல் நகரத்தில் இருந்து
புறப்பட்டோம். எங்களை
வழியனுப்ப வந்திருந்த
அர்ச்சனா, என் மருமகளோடு
கீல் பல்கலைக்கழகத்தில்
எம்.எஸ்., தகவல் தொழில்நுட்பம்
படித்துக் கொண்டிருந்தாள்.

 

ஹைதராபாத்தில்
ஒரு நடுத்தரக் குடும்பத்தில்
பிறந்து வங்கிக்கடன் பெற்று,
மேற்படிப்புக்காக ஜெர்மனி
படிக்க வந்திருந்த அவள் தன்
பெற்றோரை சிரமப்படுத்தக்
கூடாது என்பதற்காக கல்லூரிக்கு
அருகில் இருக்கும் ரெஸ்டாரண்டில்
பார்ட் டைம் வேலை செய்து
கொண்டு இருப்பதாக என்
மருமகள் ஏற்கனவே
கூறியிருந்தாள்.

 

இதில் விசேஷம்
என்னவென்றால் அவளுக்குத்
தெரிந்த சுமாரான ஜெர்மன்
மொழியை வைத்துக்கொண்டே
அவளுடன் இன்னும் நான்கு
பேருக்கு வேலை
வாங்கிக்கொடுத்து,
அவர்களை ஒரு குழுவாக
செயல்படுத்திக்
கொண்டிருந்தாள்.

 

இன்று ஜெர்மனியில்
டாயிஷ் வங்கி ஒன்றில்
அதிகாரியாக பணிபுரியும்
அவளை நினைக்கும்
போதெல்லாம் என்
தேசப்பெண்கள் எல்லாம்
யாருக்கும் இளைத்தவரில்லை
என்று மனம் பூரிக்கிறது.
அவளின் பெற்றோரின்
கடமைகளை எல்லாம்
அவள் செய்கிறாள்.
தம்பி, தங்கையை படிக்க
வைப்பது முதல் வீட்டுக்குத்
தேவையான எல்லாவற்றையும்
முறைப்படி செய்கிறாள்.
பல வருடங்களுக்கு முன்
நான் பார்த்த கரோலினைவிட
அர்ச்சனாவின் உழைப்பு
அற்புதமானது. அவளின்
உழைப்பு, ஒட்டுமொத்த
குடும்பத்தின் தலையெழுத்தையே
மாற்றிவிட்டது.

 

அருமையான அன்பான
பெற்றோர்களே, இன்னும்
இரண்டு மூன்று மாதங்களில்
உங்கள் பெண் பிள்ளைகளை
கல்லூரிகளில் சேர்க்க
வேண்டியிருக்கும்.
பாதுகாப்பற்ற சூழல் என்று
எண்ணி படிப்பை
நிறுத்தி விடாதீர்கள்.

 

அவர்களுக்குத் தேவை
அன்பான தூண்டுதலும்,
சரியான வழிகாட்டுதலும்தான்.
வாழ்க்கையை சரியாக
புரிந்து கொண்ட என் தேசத்து
பெண் பிள்ளைகள்
வாழப்பிறந்தவர்கள்
மட்டுமல்ல;
ஆளப்பிறந்தவர்களும்கூட.

 

இன்றைய பெண்கள்
நிலவுகள் அல்ல; சூரியன்கள்.

 

தொடர்புக்கு: 98948 07075.
கட்டுரையாளர்: கல்வியாளர்

(புதிய அகராதி இதழ் சந்தா பெற: 9840961947).

%d bloggers like this: