Tuesday, March 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

பெண்ணே நிர்வாக ஆளுமையில் சிறந்தவள்! – சொல்கிறார் லட்சுமி சித்தார்த்தன்; டி.எம்.எஸ். கண் மருத்துவமனை இயக்குநர்

திட்டமிட்ட நேர மேலாண்மை இருந்தால், நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு பல்வேறு விதங்களிலும் ஆக்கப்பூர்வமாக பங்களிக்க முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம், லட்சுமி சித்தார்த்தன்.

இவர், சேலம் சாரதா
கல்லூரிச்சாலை எல்ஆர்என்
காலனியில் உள்ள டிஎம்எஸ்
கண் மருத்துவமனையின் இயக்குநர்.
இது மட்டுமல்ல. லேடீஸ் சர்க்கிள்,
சேலம் சிட்டிசன் ஃபோரம்,
இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ),
சேலத்தின் பாரம்பரியத்தை
மீட்டெடுக்கும் ‘இன்டேக்’ உள்ளிட்ட
அமைப்புகளில் இணைந்தும்
செயல்பட்டு வருகிறார்.

லட்சுமி சித்தார்த்தனின்
பிறந்த வீடு, புகுந்த வீடு
இரண்டுமே பாரம்பரியம் மிக்கது.
இலங்கையின் கொழும்பு நகரம்தான்
இவருடைய பூர்வீகம்.
ஈழ மண்ணில் தொடங்கப்பட்ட
முதல் தமிழ் பத்திரிகையான
‘வீரகேசரி’ நாளேட்டின்
நிறுவனரான நடேசன்
அய்யாவின் பேத்திதான் இவர்.

இவருடைய கணவர் சித்தார்த்தன்.
சேலம் அறிந்த பிரபல கண்
மருத்துவர். காங்கிரஸ் கட்சியின்
மூத்த தலைவர்களுள்
ஒருவரான பெரியவர் ராமசாமி
உடையாரின் மருமகள் என்ற
பெருமையும் லட்சுமி சித்தார்த்தனுக்கு உண்டு.
இவருக்கு இரண்டு மகன்கள்.
இருவருக்கும் திருமணமாகி விட்டது.

அவருடனான உரையாடல்களில் இருந்து…

எங்கள் குடும்பமும்,
கணவர் சித்தார்த்தன் குடும்பமும்
உறவினர்கள். நல்ல நட்பும் இருந்தது.
அந்த தொடர்பில்தான் நான்
சேலத்தின் மருமகள் ஆனேன்.
என் கணவர் கண் மருத்துவத்தில்
மேல்படிப்பை முடித்தார்.
அதன்பின், 1988ம் ஆண்டில்
பெரமனூர் சாலையில் முதன்முதலில்
மூன்று படுக்கைகள் கொண்ட
கண் மருத்துவமனையை தொடங்கினோம்.
அந்த நாளிலேயே அதற்கான
‘பட்ஜெட்’ ரொம்ப அதிகம்.

கணவருடன்...

அப்போது என் மாமனார், ‘எதையும் பெரிதாக ஆரம்பித்தால்தான் அடுத்தடுத்து பெரிய அளவில் சாதிக்க முடியும். சின்னதாக தொடங்கினால் இன்னும் சிறிய அளவிலேயே முடங்கி விடுவோம். முடியும் என்று நினைத்தால் எதுவும் நம்மால் முடியும்,’ என்றார்.

என் கணவர் மேல்படிப்பை
ஜப்பானில் முடித்திருந்தார்.
அங்குள்ள தொழில்நுட்பத்தை
நம்ம ஊர் மக்களுக்கும்
கொண்டு வந்தோம்.

அப்போது, என் மகன்கள்
இருவருமே குழந்தைகள்.
அவர்களைக் கவனித்துக் கொண்டு
வீட்டில்தான் இருந்தேன்.
ஒருநாள் என் மாமனார்
ஃபோன் பண்ணி, ‘வீட்டில்
என்ன செய்கிறாய்?
நீ குழந்தைகளை பக்கத்து
வீட்டில் விட்டுவிட்டு உடனே
புறப்பட்டு மருத்துவமனைக்கு
வா,’ என்றார். சென்றேன்.
“இந்த மருத்துவமனையை
தம்பி மட்டுமே
பார்த்துக்க முடியாது.
நீயும் கூட இருந்து
பார்த்துக்கணும்னு,” சொன்னார்.
ஆனால், மருத்துவமனை
நிர்வாகம் பற்றி எனக்கு
எந்த அனுபவமும் இல்லாததால்
கொஞ்சம் தயக்கம் இருந்தது.

பிறகு சென்னையில் உள்ள நண்பர் ஒருவரின் கண் மருத்துவ மனைக்கு நேரில் சென்று நான்கு நாட்கள் நிர்வாகம் பற்றி பயிற்சி பெற்றேன். அதன்பின் எங்கள் மருத்துவமனையை இன்று வரை நான்தான் நிர்வாகம் செய்து வருகிறேன்.

நண்பர்கள் ஆலோசனையின்பேரில் பின்னர், கண் கண்ணாடி கடையும் தொடங்கினோம். அந்த கடை என் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. தொழிலில் நிறைய ஏமாற்றங்கள்… நிறைய கஷ்டங்கள். எல்லாமே பார்த்து விட்டோம்.

இந்த நிலையில்தான்,
இப்போது இருக்கும் இந்த இடம்
விற்பனைக்கு வந்தது.
சென்னையில் உள்ள
சங்கர நேத்ராலயா
கண் மருத்துவமனை
மருத்துவர் பத்ரிநாத்
அவர்கள்தான், என் கணவருக்கு
கண் மருத்துவத்தில் ஆசான்.

அதனால் சங்கர
நேத்ராலயா மாடலிலேயே
இந்த மருத்துவமனையை
1993-ல் கட்டி முடித்தோம்.
15 படுக்கைகளும், மூன்று
தளங்களும் கொண்டது.
கோவையைச் சேர்ந்த
பொறியாளர் ரமணி சங்கர்தான்
கட்டினார். காங்கிரஸ் கட்சித்
தலைவர் மூப்பனார் அய்யாவும்,
மருத்துவர் பத்ரிநாத் அவர்களும்
இம்மருத்துவமனையைத்
திறந்து வைத்தனர்.

இந்த மருத்துவமனை கட்டி முடித்த சில ஆண்டுகளில் திடீரென்று நாங்கள் எதிர்பாராத ஒரு நெருக்கடியை சந்தித்தோம்.

கண் சிகிச்சைக்கு வந்த ஒருவருக்கு திடீரென்று இருதயக் கோளாறு வந்துவிட்டது. அவரை ராமகிருஷ்ணா சாலையில் உள்ள வேறு ஒரு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். அவர் போலியான முகவரி கொடுத்திருப்பது தெரியவந்தது.

ஆனாலும் இறந்தவரின் உறவினர்களுக்கு எப்படியோ தகவல் கிடைத்து, எங்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இரவு நேரம் அது. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

எங்களுக்கும் அவருடைய மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லியும் அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை. அப்போதிருந்த சேலம் மாவட்ட கலெக்டர், இரவென்றும் பாராமல் இங்கு நேரில் வந்து மக்களை சமாதானம் செய்து, பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைத்தார்.

இந்த சம்பவம், எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால், இன்னொரு சம்பவம் எங்களை நெகிழ்ச்சிப்படுத்தியது. ஜானகி என்ற சிறுமிக்கு கண் மாற்று அறுவை சிகிச்சை செய்தோம்.
சிகிச்சை முடிந்து கண் கட்டை அவிழ்க்கும்போது, அவள் திடீரென்று முதன்முதலில் தன் அம்மாவைத்தான் பார்க்க வேண்டும் என்று சொன்னாள். அதன்படி அவளுடைய அம்மாவை அழைத்து வந்தோம். அந்த சம்பவம் எங்கள் எல்லோரையுமே மிகுந்த நெகிழ்ச்சிக்கு ஆளாக்கியது.

இதுவரை 30000க்கும் மேற்பட்ட கண்புரை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக அளித்திருக்கிறோம்.

ஆண்களைவிட பெண்கள் நிர்வாகப் பணிகளை சிறப்பாக செய்வார்கள். ஆனாலும், ஆண்கள் இருக்கும் இடத்தில் எப்படி சகஜமாக இருப்பது என்ற பயம் அல்லது ஏதேனும் கிசுகிசு வந்து விடுமோ என்ற எண்ணமும் பெண்களிடம் இருக்கிறது. அது தேவையற்றது. நாம் பழகும் விதம் நன்றாக இருந்தால், எல்லோரும் நம்மிடம் நன்றாக பழகுவார்கள்.

என் அம்மாவும், அப்பாவும்தான் எனக்கு ‘ரோல் மாடல்’. என் அம்மா, விஜயலட்சுமி. அவர் திடீரென்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். நீண்ட காலமாக வீல் சேரிலேயே வாழ்நாளைக் கழித்தார். ஆனாலும் அவர் மனதளவில் தளரவில்லை. எம்பிராய்டரி, தையல் போன்ற கைவேலைப்பாடுகளை அழகாகச் செய்வார். பெண்கள் எந்தச் சூழ்நிலையிலும் முடங்கி விடக்கூடாது என்பதற்கு அவர்தான் உதாரணம். என் அப்பா, கிருஷ்ணமூர்த்தி. உறவினர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பார்.

வீட்டில் நான்தான் கடைக்குட்டி. என் அண்ணன் ரவீந்திரன், ரோட்டரி இன்டர்நேஷனல் தலை வர். 48 நாடுகளைச் சுற்றியிருக்கிறார். இப்போது யு.எஸ்.-ல் இருக்கிறார். நான் பொது தளத்தில் இயங்க அண்ணனும் முக்கிய காரணம்.

அர்த்தச் செறிவுடன் சொன்னார், லட்சுமி சித்தார்த்தன்.

லட்சுமி சித்தார்த்தன் அவர்களை தொடர்பு கொள்ள: 98940 18760.

(‘புதிய அகராதி’ மார்ச்-2017 திங்கள் இதழில்)

Leave a Reply