Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கற்பனையான ராமர் பாலத்தை காப்பாற்ற துடித்த பாஜக விவசாயத்தை அழிக்க துடிப்பது ஏன்?: சுப்புலட்சுமி ஜெகதீசன் காட்டம்

கற்பனையான ராமர் பாலத்தைக் காட்டி சேது சமுத்திர திட்டத்திற்கு தடை வாங்கிய பாஜக, விவசாய நிலத்தை அழித்து எட்டு வழிச்சாலை போடலாமா? என திமுக மாநில துணை செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக போலீசார் விவசாயிகளை மிரட்டி நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக்கோரியும், விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வலியுறுத்தியும் சேலத்தில் திமுக சார்பில் இன்று (ஜூன் 23, 2018) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திமுக மாநில துணை செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை வகித்தார். சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சிலர் கறவை மாடுகளுடனும், மரவள்ளிக் கிழங்கு பயிர்களுடனும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தனர். விவசாயிகள் ஏமாற்றப்படுவதை குறிக்கும் வகையில் சிலர் நெற்றியில் பட்டை நாமம் அணிந்து வந்திருந்தனர்.

 

சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசியது:

 

ஒரு சில கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசும், மாநில அரசும் துடிக்கின்றன. இந்த திட்டம் மக்களுக்கானது அல்ல. மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்த காலங்களில், அரசுத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளின்போது, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்படுவது நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதுபோன்ற கருத்து கேட்பு கூட்டங்களின்போது 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அந்த திட்டமே கைவிடப்படும். அதுதான் நடைமுறையில் இருந்தது. ஆனால் மோடி அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, மக்களிடம் கருத்து கேட்கும் நடைமுறையையே ஒழித்துவிட்டது. எங்கு வேண்டுமானாலும் மக்களிடம் இருந்து நிலத்தை தன்னிச்சையாக கையகப்படுத்தலாம் என்று முடிவெடுத்து விட்டனர். அதனால்தான் எட்டு வழிச்சாலையால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

சேது சமுத்திர திட்டம் கொண்டு வரும்போது, ராமர் பாலம் என்ற கற்பனையான பாலத்தின் பெயரைச் சொல்லி, அந்த திட்டத்தை நிறைவேற்ற விடாமல் பாஜகவினர் தடுத்தனர். கற்பனையான பாலத்தைக் காப்பாற்ற துடித்த பாஜக அரசாங்கம், இப்போது விவசாய நிலங்களை அழித்துவிட்டு எட்டு வழிச்சாலை போட துடிக்கின்றனர்.

விவசாயிகள் நலனுக்காக திமுக எப்போதும் துணை நிற்கும். நீங்கள் நம்பிக்கையோடும் தைரியமாகவும் இருக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போல சேலத்தில் நடந்தாலும், அதில் முதல் ஆளாக நான் பலியாவேன். எட்டு வழிச்சாலைத் திட்டம் நிறுத்தப்படும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசினார்.

 

திடீர் சாலை மறியல்:

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வுப்பணிகளுக்காக சென்றிருந்தார். இதைக் கண்டித்து நாமக்கள் மாவட்ட திமுக சார்பில் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் நாமக்கல் மாவட்ட செயலாளர் காந்தி செல்வன் உள்பட நூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

 

இதைக் கண்டித்து சென்னையில் இன்று காலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

 

அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த திமுகவினர், ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக எம்எல்ஏ ராஜேந்திரன் உள்பட 270 பேரை போலீசார் கைது செய்தனர்.