Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் சிறையில் மன்சூர் அலிகான் திடீர் உண்ணாவிரதம்!; ”யாருக்காக எட்டு வழிச்சாலை?”

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நடிகர் மன்சூர் அலிகான், எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திடீரென்று இன்று (ஜூன் 23, 2018) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தும்பிப்பாடி கிராமத்தில் கடந்த மே 3ம் தேதி, காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கம், எட்டு வழிச்சாலை திட்டங்களுக்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினர்.

 

குறிப்பாக மன்சூர் அலிகான், ‘எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை வெட்டிக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போவேன்,’ என்று ஆவேசமாக பேசினார். கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கடந்த 17ம் தேதி காலை, சென்னை அரும்பாக்கத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மன்சூர் அலிகானை சேலம் மாவட்டக் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இதே வழக்கில் சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷை கடந்த 19ம் தேதி கைது செய்தனர். இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இருவருக்கும் ஜாமின் கோரி, ஓமலூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் பியூஷ் மானுஷ் மட்டும் நிபந்தனை ஜாமினில் நேற்று விடுவிக்கப்பட்டார். மன்சூர் அலிகானின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.

 

இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மன்சூர் அலிகான், இன்று காலை திடீரென்று உணவு சாப்பிட மறுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். மதிய உணவையும் மறுத்து விட்டார். ‘எட்டு வழிச்சாலை யாருக்காக?,’ என்று கேட்டு சிறைத்துறை காவலர்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

 

சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஆண்டாள் மற்றும் காவலர்கள் மன்சூர் அலிகானை சமாதானப்படுத்தினர். ஆனாலும், ‘எட்டு வழிச்சாலையால் யாருக்கு லாபம்? இந்த திட்டத்தை அரசு கைவிடும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்,’ என்று முரண்டு பிடித்தார். தொடர்ந்து அவரிடம் காவல்துறை அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

பாதுகாப்பு கருதி, சக கைதிகளுடன் இல்லாமல் மன்சூர் அலிகான் ஹைசெக்யூரிட்டி பிரிவில் அடைக்கப்பட்டு உள்ளார். என்றாலும், பிரபல நடிகர் என்பதால் மன்சூர் அலிகானை காண்பதற்காக மற்ற கைதிகள் அவர் அடைக்கப்பட்டு உள்ள ‘செல்’ அருகே ஆவலாக சென்று வருவதாகவும் சிறைத்துறையினர் கூறினர்.

 

இதுகுறித்து மத்திய சிறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ”அவர் திடீர் திடீரென்று எட்டு வழிச்சாலை பற்றி பேசுகிறார். உணவு சாப்பிட மறுத்தார். அதிகாரிகள் சமாதானம் செய்த பிறகு, இரவு உணவு சாப்பிட்டார். காலவரையற்ற உண்ணாவிரதம் என்பதெல்லாம் வதந்தி,” என்று பட்டும் படாமலும் கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டனர்.