Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அதிகார வர்க்கத்தின் மீது பாய்ந்த ஒத்த செருப்பு! – சினிமா விமர்சனம்!

தான் செய்த கொலை குற்றங்களில் இருந்து, செய்யாத ஒரு கொலையைச் சொல்லி புத்திசாலித்தனமாக தன்னை காவல்துறையின் பிடியில் இருந்து விடுவித்துக் கொள்ளும் ஒரு சாமானியனின் ஒப்புதல் வாக்குமூலம்தான், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே. பார்த்திபன் பாணியில் சொல்ல வேண்டுமானால், ஒரு நீலப்படத்தில் நடிக்க சன்னி லியோன் போன்ற ஒரே ஒருவர் போதும். ஆனால், ஒத்த செருப்பு போன்ற ஒரு முழு நீளப்படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருப்பது இந்தியாவில் முதல் முயற்சி.

 

அதுவும் பக்கத்து வீட்டுக்காரர் போன்ற தோற்றத்தில் இருக்கும் பார்த்திபனை மட்டுமே, பாப்கார்ன்கூட கொறிக்க விடாமல் திரையில் இரண்டு மணி நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? உண்மையில், ரசிகர்களுக்கு எந்தவித சலிப்பும் ஏற்படாத வகையில் அவர்களை இருக்கையில் கட்டிப்போட்டு சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறார் பார்த்திபன்.

தமிழ்த்திரை உலகில் முப்பது ஆண்டுகளாக பயணித்து வரும் ஆர்.பார்த்திபன், தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் ஒற்றை செருப்பில் இறக்கி வைத்திருக்கிறார். எல்லா வகையிலும் கச்சிதமாக செதுக்கப்பட்ட கலை, வணிகப்படைப்பாக வெளிவந்திருக்கிறது, ஒத்த செருப்பு சைஸ் 7.

 

மனித உரிமைகள் ஆணைய தலைவர் சுந்தரவள்ளி பாத்திர அறிமுகம், அவருடைய காதலுக்கும் பரிதாபத்திற்கும் உரிய மனைவி உஷா, உயர் காவல்துறை அதிகாரிகளை அறிமுகப்படுத்துவதில் திரைமொழியிலும் கைதேர்ந்தவராக இருக்கிறார். மேற்கூரையில் சுழலும் மின்விசிறியில் உஷா என்ற எழுத்துகளின் மீது கேமரா செல்லும்போதே அதுதான் அவருடைய மனைவியின் பெயர் என்பதை குறிப்பால் உணர்த்தி விடுகிறார்.

 

ஒரு காட்சியில், அறையில் இருக்கும் தண்ணீர் கேன்களை பார்த்திபன் தூக்கி கீழே போடுவார். அதிலிருக்கும் தண்ணீர் கொட்டி விடும். அதன்பிறகு, கதைப்போக்கில் அந்த பிளாஸ்டிக் கேன் இருந்த இடத்தில் சில்வர் பாத்திரம் ஒன்றில் தண்ணீர் வைக்கப்பட்டு இருக்கும். இப்படியான துல்லியமான விவரணைகள் படத்தில் எக்கச்சக்கம். மாசி என்கிற மாசிலாமணி பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் பார்த்திபன். மனைவி சோரம் போனவளாகச் சொன்னாலும், அவனுக்கு ஒட்டுமொத்தமாக பெண்கள் மீது சினமேதும் இல்லை. அதனால்தான் மகனுக்கு கண் மருந்திடும்போது பெண் காவலர் ஒருவரை மருந்து போடச் சொல்வார்.

 

மனைவியை தவறான பாதைக்குக் கொண்டு சென்ற ஆட்டோ ஓட்டுநர் அமீன், பெண் காவலர் ரோசி, எம்எல்ஏ பெருமாள், சாமி என்றழைக்கப்படும் அய்யப்ப பக்தரான காவலர் என பாத்திரப்பெயர்களை எல்லாம் குறியீடுகளாக பயன்படுத்தி இருக்கிறார் பார்த்திபன். சூர்யா என்ற பெண் உளவியல் மருத்துவர் பாத்திர வடிவமைப்பும் ரசிக்கும்படி காட்சிப்படுத்தி இருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் எழுதிக் கொடுக்கும்போது கார்பன் தாளைக் கொண்டு படியெடுத்து எழுதிக் கொடுக்கும் மாசிலாமணி (பார்த்திபன்), அதற்கும் விளக்கம் கொடுத்திருக்கும் பாங்கு, தர்க்க ரீதியில் இந்தப் படத்தை உயர்த்திப் பிடிக்கிறது.

 

வார்த்தை ஜாலங்களால் புகுந்து விளையாடும் பார்த்திபனின் சேட்டைகளுக்கு, ஒத்த செருப்பும் விதிவிலக்கு அன்று. ஒரு முக்கிய பிரமுகரை கொலை செய்தது எப்படி என்பது குறித்து விளக்குகையில், ‘சார்… அவருக்கு ஒரு சின்னவீடு இருந்தது. அந்த சின்ன வீட்டுக்கு ஒரு பெரிய வீடு வாங்கிக் கொடுத்திருந்தாரு…’, ‘அவர் யூரின் விட்டுக்கிட்டு இருந்தாரு. எங்கே என்ன பார்த்துடுவாரோனு நான் பயந்து இருட்டுக்குள் ஒளிந்து இருக்கும்போது அவர் பேனர்ல இருக்கற ஓவியாவையே பார்த்துட்டு இருந்தாரு…’ என வசனங்களில் ஜாலம் காட்டியிருப்பார்.

‘அடீங்க… நீயே சட்டத்தைக் கையில எடுத்துக்கிட்டா அப்ப போலீஸ்லாம் எதுக்கு…’ என்று காவல்துறை அதிகாரி பேசி முடிப்பதற்குள் மாசிலாமணி, ‘புடுங்கறதுக்குதான் இருக்கீங்க அய்யா’னு சொல்ல முடியுமா…’ என்று மிச்ச வசனங்களைக் கொண்டு நிரப்பி விடுவார். சற்றே இறுக்கமான திரைக்கதைக்கு இத்தகைய வசனங்கள் கொஞ்சம் ரசிகர்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது. பல இடங்களில், வசனங்கள் கைத்தட்டலை அள்ளுகிறது.

 

மாசிலாமணியின் மகன், டுஷேன் மஸ்குலர் டிஸ்ட்ரஃபி சிண்ட்ரோம் எனப்படும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை விவரிக்கும் காட்சிகளில் பார்வையாளர்களையும் அழ வைத்துவிடுகிறார். காவல்துறை அதிகாரிகளின் விசாரணையில் இருந்தாலும், இடையிடையே மகனுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுக்கச் சொல்வதும், சாப்பிட பலூடா வாங்கிக் கொடுங்க என்பதும் என அவனின் உடல்நலத்தில் காட்டும் அக்கறையின்போது எல்லோரையும் நெகிழ வைத்துவிடுகிறார். இப்படியான உன்னத கலைஞனிடம் இருந்து தசை சிதைவு நோயை மையமாக வைத்து ஒரு படம் வந்தால் இச்சமூகத்திற்கு ஆகப்பெரிய பாடமாகவும் அமையும்.

 

ரூபாய் தாள்களில் காந்தி புன்னகை தவழ இருப்பதைக்கண்டு எரிச்சலடையும் மாசிலாமணி, காவல்நிலையத்தில் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் காந்தியின் படத்தை உடைப்பதும், பின்னர் அதை செல்லுலோஸ் டேப்பால் ஒட்டுவதும் என சர்ச்சைக்கு இடமில்லாத வகையில் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

 

ஒரு குற்றவாளியின்
வாக்குமூலம்தான் படம்
என்றாலும், இதில் மார்க்சியம்,
சமகால அரசியல்,
பொருளாதார இடைவெளி
என பலவற்றையும்
பேசுகிறது ஒத்த செருப்பு
சைஸ் 7. ‘சம்பாத்தியம்,
சேமிப்புனு வந்த
பிறகுதானே சார்
எல்லா தப்புகளும்
நடக்க ஆரம்பிக்குது’;
‘எல்லாத்தையும்
தூக்கிப்போட்டுட்டு
எங்கள போல ஜீரோவுல
இருந்து ஆரம்பிக்க
சொல்லுங்க… அப்புறம்
பாருங்க யாரு
ஜெயிக்கிறாங்கனு தெரியும்…’
‘நீங்க பாட்டுக்கு பூனைய
திறந்து விட்டுட்டீங்க…
குருவிக்கூட்ட மட்டும்
தொங்கல்ல விட்டுட்டீங்க…’
என பொதுவுடைமை
சிந்தனைகளை
பேசுகிறார் மாசிலாமணி.

 

நம் நாட்டில் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்பதெல்லாம் வெற்று வாய்ஜாலம். அப்படி சித்தரிப்பதுகூட காட்சிப்பிழை என்பதுதான் நிகழ்கால யதார்த்தம். சட்டத்தின் செல்லரித்த ஓட்டைகளின் வழியே, நான்கு கொலைகளைச் செய்த சாமானியனான மாசிலாமணியும் தப்பித்துக் கொள்கிறார். அதிகார வர்க்கத்தை தப்ப வைக்கும் சட்டத்தில் உள்ள அதே ஓட்டைகள்தான் மாசிலாமணிகள் போன்ற ஏதுமற்றவனையும் தப்ப வைக்கிறது. அதை கூடுமான வரை தர்க்கப்பிழையின்றி காட்சிப்படுத்தி இருக்கிறார் பார்த்திபன்.

 

அதிகாரவர்க்கத்தினர்
செய்யும் கொலை
பாதகச்செயலுக்கு
உடந்தையாக இருக்கும்
காவல்துறை ஆணையர்…
அதைக்கண்டு எதுவும்
செய்ய இயலாமல்
கையறு நிலையில்
இருக்கும் துணை ஆணையர்
என காக்கிகளிலும்
இரு வகையானவர்கள்
உண்டு என்பதைச்
சொல்கிறார். காவல்துறையினர்
மாசிலாமணியை விடுவித்து
அனுப்பும் காட்சியின்போது
துணை ஆணையர்,
அவரிடம் 2000 ரூபாய்
தாளைக் கொடுத்து,
‘குழந்தைக்கு ஏதாவது
வாங்கிக் கொடுங்க மாசி’
என்பார். அந்த
ரூபாய் தாளில்
புன்னகையுடன் காந்தியின்
படத்தைக் காட்டும்போது,
இலக்கிய நயத்துடன்
காட்சியமைத்திருக்கும்
நெகிழ்ச்சி நமக்கு
ஏற்படுகிறது.

 

ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டியை ஏன் பார்த்திபன் தேர்வு செய்தார் என்பதற்கு இந்தப்படத்தை பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். மன்னிக்கவும். கேட்டுக்கொள்வார்கள். அந்தளவுக்கு மாசிலாமணியின் வாக்குமூலத்தை ஒலியால் நமக்கு காட்சிகளாக கண்முன்னே நிறுத்தி விடுகிறார் ரசூல் பூக்குட்டி. பின்னணி இசைக்கலைஞர் சத்யா, மிக அற்புதமான மாயாஜாலங்களை நிகழ்த்தி இருக்கிறார்.

 

இன்னொரு முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர், ஒளிப்பதிவாளர் ராம்ஜி. தரையில் அமர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் எழுதும் மாசிலாமணியை, அவருடைய மூக்குக்கண்ணாடி வழியே படம் பிடிப்பது, சுழலும் மின்விசிறியின் ஊடாக மாசியின் மனதுக்குள் சுழன்றடிக்கும் மனைவி, நோய்வாய்ப்பட்ட குழந்தையின் மீதான பாசம், சமூகத்தின் மீதான கோபங்களை விவரிப்பது என ஓர் அறைக்குள்ளேயே கேமரா சுழன்றாலும் படத்தைத் தாங்கிப் பிடித்திருப்பதில் ராம்ஜியின் ஒளிப்பதிவு பெரும் பங்கு வகிக்கிறது.

 

குழந்தையின் காலிபர், பள்ளி புத்தகப்பை, உஷாவை குறிக்கும் பெண் பொம்மை, காவல்நிலைய அறை என நுணுக்கமான அரங்க அமைப்புகளால் வெகுவாக கவர்கிறார் அமரன். மனைவி உஷாவுக்கு இளையராஜா இசை என்றால் ரொம்பவும் பிடிக்கும் எனக்கூறும் மாசி, அவளைப்பற்றிய காட்சிகள் வரும்போதெல்லாம் ராஜாவின் இசையை மெல்லிய இழையாக ஒலிக்க விட்டிருப்பது நாவல் படித்த உணர்வு.

 

தொடர் கொலைகளை
நிகழ்த்தும் ஒருவன்,
நிகழ்விடங்களில்
விட்டுச்சென்ற
ஒத்த செருப்பைதான்
முக்கிய தடயமாக
கருதுகிறது காவல்துறை.
தடயமாக கிடைத்த
செருப்பின் அளவு
எண் 7. ஆனால்
குற்றவாளி எனக்கருதப்படும்
மாசிலாமணியின்
கால் அளவு எண் அதுவன்று.
என்றாலும், எண்களில்
7 என்ற எண்
எப்போதும் தனித்துவமானது.
அதனாலோ என்னவோ
பார்த்திபன் தனது
ஒத்த செருப்பின்
அளவாக 7ம்
எண்ணை
வைத்திருக்கலாம்.

 

இருப்பவர்களுக்கும்
இல்லாதவர்களுக்குமான
இடைவெளி இங்கே
மிக அதிகமாக இருப்பதும்,
அதுவே குற்றங்களை
நிகழ்த்த ஒரு வகையில்
காரணமாக இருக்கிறது
என்பதும் உண்மை.
ஆனால், சட்டத்தின்
வழியிலான ஆட்சி
நடக்கிறதா என்பதையும்
கேள்வி எழுப்புகிறது
இந்தப்படம். அரசியல்
செல்வாக்கும், பணபலமும்
இருந்தால் போதும்,
எப்பேர்பட்ட குற்றங்களில்
இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம்
எனும் ஒருசார்பான
அதிகார வர்க்கத்தின்
முகங்களை நோக்கிதான்
தனது மற்றொரு
ஒத்த செருப்பையும்
வீசி எறிந்திருக்கிறார்
மாசிலாமணி.

 

இதுபோன்ற மாற்று முயற்சிகளுக்கு நாம் கொடுக்கும் ஆதரவுதான், தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கலைப்படைப்புகள் தமிழில் வர அடித்தளமாக அமையும்.

 

– வெண்திரையான்

கருத்துகளுக்கு: selaya80@gmail.com