Saturday, March 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: பகலில் மாணவர்கள்; மாலையில் குழந்தை தொழிலாளர்கள்! சமூக பேரவலத்தின் நேரடி பதிவு

– சிறப்புக்கட்டுரை –

பெற்றோர் / தாய் / தந்தையை இழந்த வேடுகாத்தாம்பட்டி அரசுப்பள்ளி குழந்தைகள்.

 

பள்ளிக்கல்வித்துறையின் பாராமுகத்தால் ஒரே பள்ளியில் படித்து வரும் தாய், தந்தை அல்லது பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்த 29 மாணவ, மாணவிகளின் கல்வி நலன் கேள்விக்குறியாகி உள்ளது.

சேலத்தை அடுத்த வேடுகாத்தாம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 470க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

வேடுகாத்தாம்பட்டி, பனங்காடு, ஆண்டிப்பட்டி, பெத்தானூர், குட்டக்காடு, சந்தைக்கரடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் இப்பள்ளியில் படிக்கின்றனர்.

சிவதாபுரம், வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி ஆகிய பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரம், பெரும்பாலும் வெள்ளிப்பட்டறைத் தொழிலை நம்பியே இருக்கிறது. இத்தொழிலுக்கு அடுத்தபடியாக அவர்களுக்குக் கைகொடுப்பது, கட்டட வேலை. வெள்ளிப்பட்டறை முதலாளிகளைத் தவிர, மற்றவர்கள் 200 ரூபாய் கூலிக்குச் செல்லும் அன்றாடங்காய்ச்சி வர்க்கத்தினர்தான்.

 

வேடுகாத்தாம்பட்டி அரசுப்பள்ளி

 

இத்தகைய அடித்தட்டு வர்க்கத்தினரின் பிள்ளைகளின் படிப்புக்கு ஆதாரமாக விளங்குவது வேடுகாத்தாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மட்டுமே.

ஒரு கணக்குப் பாட நோட்டுப்புத்தகம் வாங்கக்கூட இயலாத நிலையில் உள்ள நலிவுற்ற பிரிவினரால், தனியார் பள்ளிகளில் தங்கள் குழ ந்தைகளை சேர்த்துப் படிக்க வைப்பது என்பது இந்த நூற்றாண்டில் ஆகாதது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் சூழல் இப்படித்தான் இருக்கிறது.

சரி. நாம் சொல்ல வருவது, விளிம்புநிலை மக்களின் துயரங்களைப் பற்றியது அல்ல. அவர்களின் குழந்தைகளின் கல்வியைப் பற்றியது.

 

 

வேடுகாத்தாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளில் 29 பேர் ஆதரவற்றவர்களாக உள்ளனர். அதாவது, அவர்களில் 4 குழந்தைகள் அப்பா, அம்மா இருவரையும் பறிகொடுத்தவர்கள். 22 பிள்ளைகளுக்கு அப்பா கிடையாது. அவர்களின் தந்தைமார்கள் விபத்திலோ, மதுப்பழக்கத்திற்கோ, தற்கொலை காரணமாகவோ இறந்துபோனவர்கள். 3 குழந்தைகளுக்கு அம்மா இல்லை.

ஆதரவற்ற அந்தக் குழந்தைகளில் சிலரை சந்தித்துப் பேசினோம். நம்மிடம் பேசும்போதே அந்தப் பிஞ்சுகள் விம்மி விம்மி அழத்தொடங்கினர். தாயோ, தந்தையோ எந்த காரணத்திற்காக இறந்தனர்? என்பதைக்கூட சிலர் அறிந்திருக்கவில்லை.

தாய், தந்தையரை இழந்த குழந்தைகள் பெரும்பாலும் பாட்டிமார்களின் பாதுகாப்பில் வளர்கின்றனர். தந்தை அல்லது தாயை மட்டும் இழந்தவர்களின் நிலையும், பெற்றோர் இருவரையும் பறிகொடுத்த குழந்தைகளின் நிலையும் ஏறக்குறைய சமநிலையில்தான் இருக்கின்றன.

 

 

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சுஹாசினியின் (13) தாயும், தந்தையும் குடும்பத் தகராறில் அவளுடைய மூன்று வயதின்போதே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனராம். பாட்டி சின்னப்பொண்ணுவின் பாதுகாப்பில் வளர்கிறாள்.

”எங்க அண்ணன் கொத்து வேலைக்குப் போறான். ஏதாவது புக்ஸ் வேணும்னு பாட்டிக்கிட்ட கேட்டா காசு இல்லேனு அடிப்பாங்க. அப்போலாம் அம்மா, அப்பா நினைப்பு வரும். அவங்க இருந்திருந்தா என்னை யாரும் அடிக்க விட்ருக்கமாட்டாங்கள்ல…,” எனக்கூறும் சிறுமி சுஹாசினி, மேற்கொண்டு பேச முடியாமல் விசும்பினாள்.

சின்னப்பொண்ணு பாட்டியும் பாவம்தான். ஒரே ஒரு கறவை மாட்டை வைத்து பிழைப்பு நடத்தும் அந்த மூதாட்டியால் தன் பெயர்த்தியின் எந்த ஆசையைத்தான் தீர்த்து விட முடியும்?. மூதாட்டியின் பொருளாதார கஷ்டங்களை உணரும் வயதில் சுஹாசினியும் இல்லையே!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வாகன விபத்தில் தந்தையை பறிகொடுத்த பிரவீன்ராஜ் (13), இவனது சகோதரன் கவுதம் (14) உடல்நலமில்லாமல் இறந்துபோன தந்தையை மறக்க முடியாமல் தடுமாறும் கண்ணன் (14) ஆகியோரும் விளிம்புநிலை குடும்பங்களைத் சேர்ந்த குழந்தைகள்தான்.

ஒன்பதாம் வகுப்பு பயிலும் தமிழரசியின் (14) தந்தை கோவிந்தன், கடந்த 2009ம் ஆண்டில் இறந்து விட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது இதுவரை தனக்குத் தெரியாது என்கிறார் வெள்ள ந்தியாக.

அவளுக்கு எல்லாமே அம்மா விஜயாதான். கட்டட வேலைக்குச் செல்லும் அவர்தான் மகளை படிக்க வைக்கிறார். தமிழரசியின் தம்பி சபரிநாதன், இதே பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கின்றான்.

பத்தாம் வகுப்பு பயிலும் சிறுவன் துரைசாமியின் (14) கதை இன்னும் மோசம்.

”எங்க அம்மா ஒரு ஹோட்டலில் வேலைக்குப் போறாங்க. காலைல 6 மணிக்கு வேலைக்குப் போனாங்கனா நைட்டு 10 மணிக்குதான் வருவாங்க. எங்க அண்ணன் கட்டட வேலைக்குப் போறான். நான் மட்டும்தான் படிக்க வந்துட்டேன்,” எனக்கூறும் துரைசாமியின் கண்கள், தந்தை இல்லாததன் சோகத்தையும், தாயின் ஸ்பரிசத்துக்கு ஏங்குவதையும் சொல்லாமல் சொல்லின.

பெற்றோர் மரணம் என்பது மட்டுமின்றி கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெற்ற தாய், தந்தையரும் உண்டு. அப்படிப்பட்ட சுழலில்தான் சிக்கித் தவிக்கிறாள், பிரியங்கா (14).

இந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகளில் பலர், வேறு ஒரு சமூகப் பிரச்னையிலும் சிக்கித் தவிக்கின்றனர். தாம் என்ன செய்கிறோம் என்பதெல்லாம் அவர்களுக்கு போதிய புரிந்துணர்வு இல்லை. அவர்களின் பாதுகாவலர்களுக்கும்தான்.

பெற்றோர் அரவணைப்பு இல்லாத குழந்தைகள் என்பதாக மட்டும் நாம் இந்தப் பிரச்னையை அணுகவில்லை. பல குழந்தைகள், மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டில் புத்தகப்பையை வீசிவிட்டு, அருகில் உள்ள வெள்ளிப்பட்டறைகளுக்கு வேலைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

 

அனுராதா, தலைமை ஆசிரியர்.

 

வெள்ளி கொலுசுகளுக்கு பொடி வைக்கும் வேலைகளில் இக்குழந்தைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இரவு 7.30 மணிக்கு வீடு திரும்புகின்றனர். இரண்டரை மணி நேர வேலையில் அவர்கள் சராசரியாக 50 ரூபாய் சம்பாதிப்பதாகச் சொல்கின்றனர்.

சனி, ஞாயிறு வார விடுமுறை நாள்களில் வெள்ளிப்பட்டறைகளில் 12 மணி நேரம் வேலை செய்கின்றனர். இரண்டு நாங்களில் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை சம்பாதிப்பதை பெருமிதமாகச் சொல்கின்றனர்.

படிப்பின் வாசனையை இன்னும் அவர்கள் முழுதாக முகராததால் ஏற்பட்ட விளைவா? அல்லது விளிம்பு நிலை மக்களின் சாபக்கேடா? என்று நம்மால் எளிதில் விளங்கிக் கொள்ள இயலவில்லை.

சபரிநாதனும், அக்காள் தமிழரசியும் விடுமுறை நாள்களில் வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்குச் செல்கின்றனர்.

”அப்பா இறந்ததுக்குப் பிறகு, அம்மா கொத்து வேலைக்குப் போய்க்கிட்டு இருக்காங்க. அதுல 250 ரூபாய் கிடைக்கும்னு சொல்லுவாங்க. அம்மாவோட கஷ்டத்தப் பாத்து நாங்களும் வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்குப் போவோம்.

டிரஸ் எல்லாம் எடுக்கணும்னு தோணும். ஆனா, சாப்பாட்டுக்கே சரியாப் போய்டும்,” என்கிறாள் தமிழரசி. அந்தச் சிறுமியின் மனதுக்குள் ஏக்கம் இருந்தாலும், குடும்ப பாரத்தை சுமக்க இப்போதே தயாராகிவிட்டதை உணர முடிந்தது.

ஆனால், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பேசுகையில், ”பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதில் கவனம் செலுத்துகிறோம்,” என்றார்.

ஆனால், வேடுகாத்தாம்பட்டியில் பள்ளிக் குழந்தைகள்தான், குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர். இப்பிரச்னையின் மீது ஆட்சியரும் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

என்னதான் அரசுப்பள்ளிகளில் புத்தகம் முதல் கல்விக்கட்டணம் வரை அனைத்தும் இலவசம் என்றாலும், அவர்களுக்கும் சில தனிப்பட்ட செலவுகள் இருக்கின்றன. பெற்றோரை இழந்த அல்லது தாய், தந்தையரில் ஒருவரை இழந்த குழந்தைகள் பள்ளிக்கு வருவதே மதிய உணவு க்காகத்தான் என்கிற நிலையில்தான் இருக்கின்றனர்.

வருவாய் ஈட்டும் பெற்றோரில் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குகிறது.

அத்தொகை, குழந்தைகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டித்தொகையை கல்விச்செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

ஆனால், வேடுகாத்தாம்பட்டியில் பயிலும் பெற்றோரை அல்லது தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்தை குழந்தைகளில் ஒருவர்கூட இதுவரை இதுபோன்ற உதவித்தொகையை பெற்று பலனடையவில்லை. பலருக்கு அப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியாததுதான் சோகம்.

இதுகுறித்து வேடுகாத்தாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் அனுராதாவிடம் கேட்டபோது, ”பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக உதவித்தொகை பெறுவதற்காக நாங்கள் சில முயற்சிகளை மேற்கொண்டோம். இறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் என பல ஆவணங்கள் கேட்டு அலைக்கழிக்கின்றனர்.

இதற்காக சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலர்களை அழைத்தால், அவர்கள் எங்களுக்கு வேலை இருக்கிறது என்று சென்று விடுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களால் மட்டும் என்ன செய்ய முடியும்?,” என்றார்.

கடந்த காலங்களில் ஒரே ஒரு மாணவி மட்டும் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றதாகக் கூறிய தலைமை ஆசிரியர் அனுராதாவிடம், ”6ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்பு வரை பயிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏதோ ஓர் ஆண்டிலாவது கொஞ்சம் மெனக்கெட்டிருந்தாலும்கூட உதவித்தொகை கிடைத்திருக்குமே? என்று கேட்டோம்.

அதற்கு அவர், ”ஏதோ காரணத்தால் நாங்களும் அப்படியே விட்டுவிட்டோம். அது எங்கள் தவறுதான்,” என்று ஒப்புக்கொண்டார்.

வறுமையின் கொடுமையோ, இயற்கையின் சதியோ. எது எப்படி இருப்பினும், பள்ளிக் குழந்தைகள் மாலை நேரத்திலும், விடுமுறை நாள்களிலும் வேலைக்குச் சென்றே ஆக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பேனாவையும், பென்சிலையும் பிடிக்க வேண்டிய தூரிகை விரல்கள் வெள்ளி கொலுசையும், உலோகத்தையும் பிடித்தல் தகுமா? இதனால் அவர்கள் ஒரே நேரத்தில் தொலைப்பது கல்வியை மட்டுமின்றி, பிறகெப்போதும் மீட்டெடுக்க முடியாத குழந்தைமையும்தான்.

இத்தகைய சமூகப் பேரவலத்திற்கு காரணம் ஆட்சியயாளர்கள் மட்டும்தான் என்று சொல்லி ஒதுங்கிவிட முடியாது. ஒருவகையில் நாமும்தான் பலமான காரணிதான்.

இப்பள்ளிக்கு மட்டுமின்றி, இதுபோல பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனிக்கவனம் செலுத்தி உடனடியாக கல்வி உதவித்தொகை கிடைக்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரத்தில், அரசு இன்னொன்றையும் முக்கியமாக கவனிக்க வேண்டும். அதாவது…

இப்போதுள்ள திட்டமானது, பொருளீட்டும் தாய் அல்லது தந்தை அல்லது இருவரும் ”விபத்தில் மரணம்” அடைந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட குழந்தைகள் உதவித்தொகை பெற முடியும் என்று இருக்கிறது. இந்த திட்டத்தில்தான் சிறிய மாற்றத்தை செய்ய வேண்டும் என்கிறோம் நாம்.

இயற்கை மரணம் அடைந்திருந்தாலும், தற்கொலையால் மாண்டு போயிருந்தாலும், மணமுறிவு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தாலும் அத்தகைய சூழலைப் பிளந்து கொண்டு பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.

 

– பேனாக்காரன்