Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: அவல நிலையில் அகதி முகாம்கள்! குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு வசதியின்றி திண்டாடும் தொப்புள்கொடி உறவுகள்!!

-சிறப்புக்கட்டுரை-

 

ஈழத்தில் நடந்த உள்நாட்டுப் போரில், எல்லாவற்றையும் இழந்து, துயரங்களை மட்டுமே சுமந்து கொண்டு, தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்த ஈழத்தமிழர்கள், இங்கும் போதிய அடிப்படை வசதிகளின்றி நாலாந்தர குடிமக்களாக வாழ்ந்து (!) வருகின்றனர்.

குறுக்குப்பட்டி ஈழ அகதி முகாம்

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் ஏற்பட்ட மோதலில் தமிழர்கள் பலர் மனைவி, குழந்தைகளுடன் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். 1983-87, 1989-91, 1996-2003 என மூன்று கட்டங்களாக தமிழகத்திற்குள் தஞ்சம் புகுந்தவர்களைக் காட்டிலும், உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த 2006-2010 காலக்கட்டத்தில் அதிகளவில் ஈழத்தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

 

இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 110 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் 3 லட்சம் ஈழ அகதிகள் வசித்து வந்த நிலையில், தற்போது 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65 ஆயிரம் பேர் முகாம்களில் வசித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் பவளத்தானூர், குறுக்குப்பட்டி, நாகியம்பட்டி, தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி (வடக்கு மற்றும் தெற்கு) ஆகிய இடங்களில் ஈழ அகதிகளுக்கான முகாம்கள் உள்ளன.

 

இந்த முகாம்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்து அறிவதற்காக நாம் குறுக்குப்பட்டியில் உள்ள இரண்டு முகாம்களுக்குச் சென்றிருந்தோம்.

குறுக்குப்பட்டியில்
சிமென்ட் அட்டை முகாம்
மற்றும் ஓடு வேய்ந்த முகாம்
என இரண்டு முகாம்கள் அருகருகே
இருக்கின்றன. 350 குடும்பங்கள்
வசிக்கின்றன. இவர்களில்
பெரும்பான்மையினர் 25 ஆண்டுகளுக்கும்
மேலாக இங்கேயே அகதிகளாக
வசிக்கிறவர்கள். கால் நூற்றாண்டைக்
கடந்த பின்னும், குடியிருக்க வீடு,
உணவு, உடை ஆகியவற்றைக் கடந்து
அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க
வேறெந்த முன்னேற்றமும் இல்லை
என்பது பொதுமைப்படுத்தப்பட்ட
ஒன்றாக இருக்கிறது.

 

இந்த முகாம்களில் குடிநீர்
பிரச்னை நீண்ட காலமாக
இருந்து வருகிறது. மேல்நிலை
நீர்த்தேக்கத்தொட்டி மூலம், மாதத்திற்கு
இரண்டு அல்லது மூன்று முறை
மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
அதனால் அகதிகள், வீடுகளில் உள்ள
பெரிய டிரம்கள், குடங்களில் தண்ணீரைப்
பிடித்து சேமித்து வைத்துக் கொள்கின்றனர்.
நீண்ட நாள்களாக சேமித்து வைக்கப்படும்போது,
அதில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும்
ஈடிஸ் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகின்றன.

திடீரென்று சோதனைக்கு வரும் சுகாதாரத்துறை
ஊழியர்கள், நாள் கணக்கில் சேமித்து
வைக்கப்பட்டிருக்கும் குடிநீரை தரையில்
கவிழ்த்து விட்டுச் சென்று விடுகின்றனர்.
அவர்களின் இந்த செயல் சரியானதுதான்
என்றாலும், 12 நாள்களுக்கு ஒருமுறை
குடிநீர் விநியோகம் செய்யும்போது,
குடிநீரை சேமித்து வைக்காமல்
என்ன செய்வது? என்று கேள்வி
எழுப்புகின்றனர் அகதிகள்.

 

இந்த முகாமில் வசிக்கும் அகதிகள் சிலர் நம்மிடம் பேசினர்.

 

”எங்கட நாட்டில் கழனியையும், சொத்துகளையும் விட்டுவிட்டுத்தான் இங்கே அகதிகளாக ஓடிவந்தோம். இனியும் எங்கட நாட்டுக்குத் திரும்பப் போகும் உத்தேசமில்ல. ஆனாலும், இந்த முகாமிலும் எங்களுக்கு நல்ல சுகாதாரமான கழிப்பறை, சாலை வசதிகளோ இல்லை. பெண் பிள்ளைகளுக்காக ஒரு கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்காங்க. அதில் கதவுகள் எல்லாம் அரித்துக் கிடக்கின்றன. தண்ணீர் வசதியும் இல்லை. இதனால் பெண் பிள்ளைகள் மாதவிலக்கு காலத்தில் ரொம்பவும் அவதிப்படுகின்றனர்.

 

முகாமில் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டி வாறோம். காற்றில் குப்பைகள் பறக்கின்றன. பெண் பிள்ளைகள் சானிட்டரி நாப்கின்களை எரியூட்டப்படாமல் அப்படியே திறந்தவெளியில்தான் தூக்கி வீசுகின்றனர். இதற்கென குப்பைத் தொட்டிகளோ எரியூட்டிகளோ இல்லை. எப்போதாவது குப்பை லாரியை கொண்டு வந்து குப்பைகளை அள்ளிக்கிட்டு போகின்றனர்.

 

மாசத்துல ரெண்டு மூணு
தடவைதான் குடிக்க தண்ணீர்
திறந்து விடுகின்றனர். அதனால்
பற்றாக்குறையை சமாளிக்க நாங்களே
டேங்கர் லாரி மூலம் தண்ணீர்
கொண்டு வர்றோம்.
ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்னு
பிடிச்சிக்கிறோம். தண்ணீர் திறந்து
விடுவதற்காக இந்த முகாமைச் சேர்ந்த
ஜோதி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அவர் ஒவ்வொரு குடும்பமும்
மாதம் 15 ரூபாய் கொடுத்தால்தான்
தண்ணீர் திறந்து விடுவேன் என்கிறார்.
இந்த முகாமிற்கு வெளியே உள்ளூரைச்
சேர்ந்த யார் வீட்டிலாவது விசேஷம்
என்றால், அவர்களிடம் பணம்
வாங்கிக்கொண்டு, அந்த குடும்பத்திற்கு
மட்டும் தண்ணீர் திறந்து விடுகிறார்.

சிதிலமடைந்துள்ள கழிப்பறை

தண்ணீர் பற்றாக்குறை என்பதால்
முகாமில் பெண்கள் பல நாள்கள்
குளிப்பதைக்கூட தவிர்த்து வருகிறோம்.
கனமழை பெய்தால் அப்படியே பல
நாள்களுக்கு தண்ணீர் தேங்கிக் கிடக்கும்.
இதுவரைக்கும் தார் சாலை போடல.
இன்னும் தெரு விளக்கு வசதி கூட
தமிழக அரசு செய்து தரவில்லை.
இதையெல்லாம் கியூ பிராஞ்ச்,
கலெக்டர்னு பலர்கிட்ட சொல்லி
பார்த்துட்டோம். எந்த வசதிகளும்
கிடைக்கல.

 

தமிழ்நாட்டுக்குள் எந்த மூலையில் நரேந்திர மோடி வந்தாலும் இங்கேயும் கியூ பிராஞ்ச் போலீசார் சோதனை செய்கின்றனர். எங்கேயும் வெளியே செல்லக்கூடாதுனு தடை போடுகின்றனர். நாடு திரும்ப விரும்பாத அகதிகளுக்கு இந்திய அரசு, குடியுரிமை வழங்கினால் பரவால,” என்கிறார்கள் குறுக்குப்பட்டி முகாம் அகதிகள்.

 

குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்போது, முகாமிற்கு வெளியே உள்ளூர் பஞ்சாயத்துக்குச் சொந்தமான பொது குடிநீர் குழாயில் அகதிகள் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். அங்கே மணிக்கணக்கில் காத்திருந்தால்தான் உள்ளூர் மக்கள் அகதிகளுக்கு நீர் பிடித்துச்செல்ல அனுமதிக்கின்றனர். நீண்ட நேரம் காத்திருப்பதைச் சுட்டிக்காட்டி குடங்களை நீட்டினாலோ, ‘எங்கிருந்தோ வந்த அகதி நாய்களுக்கு அவசரத்தை பாரு. அங்கேயே செத்துத் தொலைய வேண்டியதுதானே…’ என்று உள்ளூர் மக்கள் சொல்லும்போது, தாங்கள் மீண்டும் மடிந்து போவதுபோல் இருக்கிறது என கண்ணீருடன் கூறினர். இத்தகைய வசவுச் சொற்களுக்கு குறுக்குப்பட்டி முகாம் பெண்கள் அனைவருமே பலமுறை ஆளாகி இருக்கின்றனர்.

 

குறுக்குப்பட்டி முகாம் மட்டுமின்றி, சேலத்தில் உள்ள அனைத்து முகாம்களிலும் இதேதான் நிலை.

 

ஆண்களில் 80 சதவீதம் பேர் மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இங்கே, பி.இ., முடித்த இளைஞர்களும், கல்வியறிவே இல்லாத ஆண்களும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்குதான் செல்கின்றனர். அல்லது கட்டுமானத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். மிக மிகச்சொற்பமான இளைஞர்கள்தான் படித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் வேலைக்குச் செல்கின்றனர்.

 

ஒரு செய்தியாளராக முகாம்களுக்குள் செல்லவும்கூட கியூ பிராஞ்ச், வருவாய்த்துறையினர் மூலம் கடும் நெருக்கடிகள் தரப்படுகின்றன. ஆனால், எவ்வித தடையுமின்றி கந்துவட்டிக்காரர்கள் முகாமிற்கு உள்ளே வந்து செல்வதை நாம் பார்த்தோம். கிட்டத்தட்ட, அகதிகள் எல்லோருமே கந்துவட்டிக்காரர்கள் பிடியில் இருப்பதையும் காண முடிந்தது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அகதி ஆறுமுகம்

சிலர், முதியோர் உதவித்தொகை கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரை நேரில் மனு கொடுத்துவிட்டு, ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். ஆறுமுகம் (72) என்பவருக்கு இடது கை, இடது கால் வாதத்தால் செயலிழந்து உள்ளது. அவரோ, ‘முதல்வர் சேலம் வந்திருந்தபோது இந்த முகாமில் உள்ள பலரும் உதவித்தொகைக்காக விண்ணப்பம் கொடுத்தோம். இன்னும் கிடைத்தபாடில்லை. அரசு கொடுக்கும் குடும்ப உதவித்தொகை, மாத்திரை மருந்து வாங்குவதற்குக்கூட போதவில்லை,” என்று கண்ணீர் மல்கினார்.

 

இதுபற்றி, தமிழ்நாடு ஈழ அகதிகள் மறுவாழ்வு துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

 

”சார்… ஆரம்பத்தில் தமி-ழ்நாட்டில் 3 லட்சம் அகதிகள் இருந்தனர். அவர்களில் சொந்த நாட்டுக்கு திரும்பியவர்கள் போக இன்று, 65 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் என்றைக்கு இருந்தாலும் சொந்த நாட்டுக்குப் போய்டுவாங்க. அதனாலதான் அகதி முகாம்களில் சாலை, தெருவிளக்கு வசதிகள் எல்லாம் அரசாங்கம் செய்து தருவதில்லை. அதுவும் இல்லாமல், தமிழ்நாட்டில் பல பஞ்சாயத்துகளில் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததும் முக்கிய காரணம்.

 

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோறும் சராசரியாக 3000 முதல் 4000 வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 20 கிலோ ரேஷன் அரிசி இலவசமாகவும், அதற்குமேல் 57 பைசா விலையில் அதிகபட்சமாக 28 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது. அகதி முகாம்களில் ஆண்களில் பெரும்பாலானோர் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். மதுவுக்கு செலவிடுவதில் கணிசமான தொகை செலவழித்தால் அவர்களே தெருவிளக்குகளை போட்டுக் கொள்ளலாமே? இத்தனைக்கும் அவர்களுக்கு மின்சாரம்கூட இலவசம்தான். அவர்களே நாலு பேர் சேர்ந்து வீட்டில் இருந்து வயர்களை இழுத்து தெருவிளக்கு போட்டுக்கொண்டால் நாங்கள் கேட்கவா போகிறோம்?

 

முகாம்களில் வசிக்கும் அகதிகளிடம், ‘நாம் தற்காலிகமானவர்கள்’ என்ற மனநிலை இருக்கிறது. அதேநேரம், நிரந்தர குடிமக்களுக்கான வசதி வாய்ப்புகளைக் கேட்கும் ஆசையிலும் இருக்கிறார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் மூலம் கோரிக்கை மனு அளித்தால் எது எது அரசாங்கத்தால் முடியுமோ அதை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார், பெயர் கூற விரும்பாத அந்த அதிகாரி.

 

நாகியம்பட்டி, பவளத்தானூர் முகாம்களில் பெண்கள், சிறுவர்கள் இன்றும் திறந்தவெளியைத்தான் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். ‘தூய்மை இந்தியா’ மற்றும் தனிநபர் கழிப்பறை குறித்து பெரிய அளவில் பரப்புரை மேற்கொள்ளும் இந்திய அரசு, அகதிகள் முகாம்களில் கொஞ்சமும் கவனம் செலுத்தவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.

 

நாலாந்தர குடிமக்களை விடவும் அவல நிலையில் இருக்கும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு கணக்குவழக்கு பார்க்காமல் இந்திய அரசும், தமிழக அரசும் தேவையான வசதிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்பதோடு, அவர்களிலும் படித்தவர்களுக்கு கவுரவமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பெண் அகதிகள் வீட்டில் இருந்தே சுயதொழில் செய்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித்தர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

 

– பேனாக்காரன்.
பேச: 9840961947