Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: கேன்சர் நோயால் உயிருக்குப் போராடும் இலங்கை தமிழரின் மகன்; ‘உதவும் உள்ளங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்’!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டி (அட்டை) இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் யோகராஜா. பெயிண்டர். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். மகளும், மகனும் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கின்றனர். இரண்டாவது மகன் பூபாலன் (16), எஸ்எஸ்எல்சி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த ஏராளமான தமிழர்களில் யோகராஜா குடும்பமும் ஒன்று. கடந்த 1990ம் ஆண்டு குறுக்குப்பட்டி முகாமில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்தார். பெயிண்ட் அடிக்கும் வேலைக்குச் சென்றால்தான் அன்றாடம் வீட்டில் அடுப்பெரியும்.

இந்த வேலையில் தினமும் அவருக்கு ரூ. 450 கூலி கிடைக்கிறது. 12 மணி நேரம் வேலை செய்தால் ரூ. 650 வரை கிடைக்கும். ஆனாலும் ஆண்டு முழுவதும் வேலை கிடைக்காது.

சொற்ப கூலி, அரசு வழங்கும் உதவித்தொகை மூலம் குடும்பம் நடத்தி வந்த நிலையில், இளைய மகன் பூபாலனின் வலது கெண்டைக்கால் பகுதியில் திடீரென்று ஒரு கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. அவ்வப்போது வலி எடுக்கவே, ஓமலூரில் உள்ள சுகம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றிருக்கிறார்.

பரிசோதித்த மருத்துவர் மணிவண்ணன், ‘அது ஒண்ணுமில்லீங்க. சாதாரண கொழுப்புக் கட்டிதான். அறுவை சிகிச்சை செய்தால் சரியாயிடும்,’ என்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இது நடந்தது, கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம். ‘அப்பாடா மகனுக்கு எல்லாம் நல்லபடியாக நடந்தது’ என்று ஆசுவாசப்படுவதற்குள், அடுத்த ஐந்தே மாதத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் கட்டி பெரிதாக வர ஆரம்பித்தது.

மீண்டும் மருத்துவர் மணிவண்ணனிடம் சென்றனர். அப்போதும் அவர், ‘பயப்படும்படி ஒன்றுமில்லை. சீழ் பிடிக்கற மாதிரி செய்து, கட்டியை அகற்றிவிடலாம். அதுக்கு தகுந்த மாத்திரைகளைத் தருகிறேன்,’ என்றுகூறி மருந்து, மாத்திரைகளைக் கொடுத்துள்ளார். ஆனாலும், தீர்வு கிடைத்தபாடில்லை.

கையில் இருந்த காசும் செலவழிந்த நிலையில், கடைசியாக யோகராஜா மகனைத் தூக்கிக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள்தான், மகனுக்கு புற்றுநோய் இருப்பதை உறுதிப்படுத்துகின்றனர். கீமோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால், சென்னை ராயப்பேட்டை அரசு புற்றுநோய் மருத்துவமனைக்குச் செல்லும்படியும் பரிந்துரைத்தனர்.

அதன்பேரில் மகனை அழைத்துக்கொண்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்றார் யோகராஜா. அங்கு நடந்த பரிசோதனையில், சிறுவன் பூபாலனுக்கு காலில் ஏற்பட்ட புற்றுக்கட்டியின் தாக்கம், நுரையீரல், இருதயம் வரை பரவியிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், காலில் இருக்கும் கட்டியை அகற்றினாலும் நுரையீரல், இருதயம் வரை பரவியிருக்கும் கிருமிகளை அழிப்பது கடினம். கீமோதெரபி சிகிச்சை அளிப்பதன் மூலம் கொஞ்ச காலத்திற்கு அவனை காப்பாற்றி வைக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

அதைக்கேட்டு யோகராஜாவின் குடும்பமே அதிர்ந்து உறைந்து போனது. மாதத்திற்கு இரண்டு முறை கீமோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்து செல்வது கடினம். அதனால், கோவை அரசு மருத்துவமனையில் கீமோதெரபி எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் பரிந்துரைத்திருக்கின்றனர்.

அதையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்று பூபாலனுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது.

”கோவை அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் பையனுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அவனுக்கு உடம்புல தெம்பு இல்லாமப்போச்சு.

ஒரே வாரத்துல தலை முடியெல்லாம் சுத்தமாக கொட்டிப்போச்சு. ரொம்பவே இளைச்சுப் போயிட்டான். அவனால நடக்கக்கூட முடியாது. அவன் பாத்ரூம் போகணும்னாலும் நானும், என் மனைவியும்தான் அவனை தூக்கிட்டுப் போவோம்,” என்றார் யோகராஜா.

இதற்கிடையே, நண்பர் ஒருவர் சொன்னார் என்பதற்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ராய் கேன்சர் மருத்துவமனைக்கும் மகனை அழைத்துச் சென்றிருக்கிறார்.

”ராய் மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர், இதற்குமேல் பண்ணுவதற்கு ஒண்ணுமே இல்ல என்றார். இருந்தாலும் இன்னும் இரண்டு மருத்துவர்களை அழைத்து வந்தும் பரிசோதனை செய்து பார்த்தார்.

ஆபரேஷன் செஞ்சாலும் உயிருக்கு ஆபத்துனுதான் சொன்னாங்க. அங்கு சென்ற வகையில் எம்ஆர்ஐ ஸ்கேன், டாக்டர் ஃபீஸ் அது இதுனு 23 ஆயிரம் ரூபாய் ஆச்சு,” என்கிறார் யோகராஜா.

இதையடுத்து, நண்பர் ஒருவரின் யோசனையின் பேரில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள சதானந்த நாயக் என்ற நாட்டு வைத்தியரிடம் கடந்த இரண்டு மாதமாக மகனை அழைத்துச் சென்று வருகிறார்.

இந்த நாட்டு வைத்தியரிடம் சிகிச்சை பெற்ற 10 நோயாளிகளில் 9 பேருக்கு புற்று நோய் குணமாகியிருப்பதாக கேள்விப்பட்டு, அங்கு சென்று வருவதாக கூறுகிறார்.

இப்போது மகனின் உடல் எடை 2 கிலோ கூடியிருப்பதாகவும், யார் உதவியும் இல்லாமல் அவனாகவே எழுந்து செல்ல முடிகிறதாகவும் கூறினார். ஆனால் கடும் பொருளாதார நெருக்கடியால் சிகிச்சைக்கான மருந்துகள் வாங்கவே சிரமப்படுவதாகவும் சொன்னார்.

உடுப்பி நாட்டு வைத்தியர், மாதத்திற்கு ஒருமுறை மருந்து வழங்குகிறார். நோயாளியை கண்டிப்பாக உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.

பொடியாக தயாரிக்கப்பட்ட ஒரு வகையான மருந்தும், மருந்து கலந்த தேனும், மூலிகை காய் ஒன்றும் சேர்த்து மருந்துக்காகவே ரூ.8000 ஆகிறது என்கிறார். மகன், உதவிக்கு ஒருவர் என மூன்று பேர் ரயிலில் சென்று வர போக்குவரத்துச் செலவு மட்டுமே ரூ.4500 ஆகிறது என்றார்.

மருந்துக்கும், போக்குவரத்திற்காகவும் மட்டுமே மாதம் ரூ.13000 வரை செலவாகிறது என்கிறார் யோகராஜா. சில நேரம், ஒரு நாள் வரை அங்கு அறை எடுத்து தங்க வேண்டிய சூழலும் ஏற்படும் என்றவர், மகனின் உடல்நலம் சரியில்லாததால் கடந்த 6 மாதமாக வேலைக்கும் செல்ல முடியவில்லை என்கிறார்.

மருத்துவச்செலவு, குடும்பச்செலவுகளை சமாளிக்க அவர் கந்துவட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடன் பெற்று செலவு செய்துள்ளார்.

”என் பையனுக்கு என்ன வருத்தம்னு தெரியும். ஆனா, அவன் இன்னும் எவ்வளவு காலம் நல்லாயிருப்பானுலாம் அவனுக்கு தெரியாது. அக்கம்பக்கம் இருக்க பசங்க யாரோ சொன்னானுங்கனுட்டு, ‘அப்பா…டாக்டருங்க என் காலை எடுத்துடுவாங்களாப்பானு,’ ஒரு நாள் கேட்டான்.

உடனே எங்களுக்கு அழுக வந்துடுச்சி. என்ன செய்ய. சண்டையில எத்தனை பேரு கை காலு உசுரு போனத பாத்துருக்கேன். நான் எங்கேயாவது வெளியே போய்கூட அழுதுருவேன். என் மனைவிதான் பையன பார்க்கும்போதெல்லாம் அழுதுடுவா…,” என்றார் யோகராஜா ததும்பிய கண்ணீரை துடைத்தபடி.

பூபாலன் என்ற அந்தப் பள்ளிச்சிறுவன் பிழைத்து விடுவான், நீங்கள் மனது வைத்தால்….!

பூபாலனின் சிகிச்சைக்கு உதவ விரும்புவோர்
கீழ்க்கண்ட அவருடைய தந்தையின் வங்கிக்
கணக்கில் பணம் செலுத்தலாம்…

Name: V.YOGARAJA
Bank: STATE BANK OF INDIA
Branch: Tharamangalam
A/C No: 11420460684
IFSC: SBIN0002275

தொடர்புக்கு: 97870 77933.