Monday, December 11மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நயன்தாரா அழகில் மயங்கிய திருடன்; நூதனமாக பிடித்த பீஹார் பெண் போலீஸ்!

நயன்தாரா அழகில் மயங்கிய மொபைல் ஃபோன் திருடனை நூதனமாக கைது செய்த பெண் காவல்துறை அதிகாரிக்கு, பீஹார் காவல்துறையில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

பீஹார் மாநிலத்தில் இன்றைய தினம் இரண்டு செய்திகள் பரபரப்புக்கு உள்ளானவை. ஒன்று, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு மீண்டும் சிறைவாசம்.

இன்னொரு பரபரப்பு, காவல்துறையில் இருந்து…

மதுபாலா தேவி

பரபரப்புக்குக் காரணமானவர், மதுபாலா தேவி. பீஹார் தர்பங்கா நகர காவல் நிலையத்தில் உதவி துணை ஆய்வாளர். சாதனையாளர்கள் புதிதாக எதையும் செய்வதில்லை; ஏற்கனவே இருக்கும் ஒன்றை புதிய கோணத்தில் செயல்படுத்துவதாக ஒரு கூற்று உண்டு.

ஒரு வழக்கில் மதுபாலா தேவி கையாண்ட ஓர் உத்தி, இன்றைக்கு பீஹார் முழுவதும் அவரை ‘டாக் ஆப் த டவுன்’ ஆக ஆக்கியிருக்கிறது.

பீஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் இருக்கிறது தர்பங்கா மாவட்டம். அந்தப் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர், சஞ்சய் குமார் மகாதோ. அவருடைய விலை உயர்ந்த செல்போன் ஒன்று அண்மையில் தொலைந்து விட்டது.

தர்பங்கா காவல் நிலையத்தில் புகார் தர, வழக்கை விசாரிக்கும் பொறுப்பு மதுபாலா தேவி வசம் ஒப்படைக்கப்படுகிறது. பாஜக தயவில்தான் மாநிலத்தில் ஆட்சியே நடக்கிறது. அப்படியிருக்கும்போது பாஜக பிரமுகரின் புகாரை லேசில் விட்டுவிட முடியுமா? உடனடியாக களத்தில் இறங்கினார்.

திருடுபோன சஞ்சய்குமார் மகாதோவின் செல்போன் எண் தொடர்ந்து பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. அதன்மூலம் அவருடைய மொபைல் போன், முஹமது ஹஸ்னைன் என்பவனிடம் இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்து விட்டார். ஆனாலும், குற்றவாளியை பிடிப்பதில்தான் சிக்கல் இருந்தது. தொடர்ந்து போக்குக் காட்டி வந்தான்.

அதனால் உதவி துணை ஆய்வாளர் மதுபாலா தேவி, திருடனை பிடிக்க கொஞ்சம் மாற்றி யோசித்தார். சாதாரண பெண் போல, அந்த மொபைல் திருடனுக்கு காதல் வலை விரித்தார். அவனும் உடனடியாக நம்பிவிடவில்லைதான்.

தொடர்ந்து நாலைந்து நாள்கள் திருடனுடன் செல்போன் மூலமாக காதல் மொழிகள் பேசினார். ஒருகட்டத்தில் காதலை ஏற்றுக்கொண்ட அந்த திருடன், மதுபாலா தேவியின் புகைப்படத்தை ‘வாட்ஸ் அப்’ செய்யும்படி சொல்ல, மதுபாலா தேவியோ தன் புகைப்படத்திற்குப் பதிலாக நம்ம ஊரு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா படத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.

மான் விரித்த வலையில் வீழாத புலியும் உண்டோ?. படத்தில் இருப்பது தென்னிந்திய நடிகை என்பது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை. அகப்பட்டுக்கொண்டான்.

நயன்தாரா அழகில் கிறங்கிப்போன திருடன், மதுபாலா தேவியுடன் தொடர்ந்து காதல் மொழிகள் பேசினான். மதுபாலா தேவி, தன்னுடைய மொபைலில் புரஃபைல் போட்டோவாகவும் நயன்தாரா படத்தை வைத்தார்.

அடுத்ததாக, சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன் முஹமது ஹஸ்னைன் சொல்ல, தர்பங்கா நகரில் ஓர் இடத்தைக் குறிப்பிட்டு அங்கு வரும்படி மதுபாலா தேவி நாள் குறித்தார். துணைக்கு முஃப்தி என்ற காவலர் ஒருவரையும் அழைத்துச் சென்றார்.

குறிப்பிட்ட இடத்தில், மதுபாலா தேவி சாதாரண உடையில் புர்கா அணிந்தபடி இருந்ததால் முஹமது ஹஸ்னைனால் உடனடியாக அவரை அடையாளம் காண முடியவில்லை. அந்த இடைவெளியில், சக காவலர் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் முஹமது ஹஸ்னைனை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

முஹமது ஹஸ்னைன்

விசாரணையில் அந்த நபர், பாஜக பிரமுகரிடம் இருந்து தான் மொபைல் ஃபோனை திருடவில்லை என்றும், தனக்குத் தெரிந்த இன்னொரு திருடனிடம் இருந்து ரூ.4500க்கு வாங்கியதாகவும் கூறினான். அவனையும் தற்போது காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மதுபாலா தேவியின் வித்தியாசமான அணுகுமுறை, பீஹார் மாநில காவல்துறை வட்டாரத்தில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. தர்பங்கா மாவட்டக் காவல்துறை அவருக்கு வெகுமதி அறிவித்ததுடன், பாராட்டவும் செய்திருக்கிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி மதுபாலா தேவி கூறுகையில், ”மொபைல் போனில் அவனுக்கு அனுப்பிய நயன்தாரா படத்தைப் பார்த்தவுடன், அவன் அதில் மயங்கி பைத்தியம்போல் ஆகிவிட்டான். அதன்பிறகுதான் என்னிடம் சகஜமாக பேச்சுக் கொடுத்தான். அதையே அவனைப் பிடிக்க சாதகமாக்கிக் கொண்டேன்,” என்றார்.

காதல்மொழி பேசி கைது செய்வதெல்லாம் நமக்கு ஒன்றும் புதிதில்லைதான். நாமெல்லாம் 1964-லேயே ‘புதிய பறவை’ லதா மூலம் கோப்பாலை காதல் வலை விரித்து கைது செய்தவர்களாயிற்றே!