Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: நீட் தேர்வில் மஹாதர்ஷினி மாவட்ட அளவில் முதலிடம்!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு
எனப்படும் நீட் தேர்வில் தேர்ச்சி
பெறுவது கட்டாயம். மதிப்பெண், இட ஒதுக்கீடு
ஆகியவற்றின் அடிப்படையில்
மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை
நடத்தப்படும். நாடு முழுவதும் கடந்த
மே 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது.
ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
மட்டும் மே 20ல் தேர்வு நடந்தது.
இத்தேர்வு முடிவுகள்
ஜூன் 5ல் வெளியாகின.

 

இத்தேர்வில்,
சேலம் அழகாபுரம்புதூர் ராஜாராம் நகரைச்
சேர்ந்த மஹாநேருராஜ் – ராதிகா தம்பதியின்
மகள் மஹாதர்ஷினி 596 மதிப்பெண்கள் பெற்று,
சேலம் மாவட்ட அளவில்,
முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில்
உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்2
முடித்த மஹாதர்ஷினி, கடந்த ஆண்டு
நடந்த நீட் தேர்வில் 235
மதிப்பெண்கள் பெற்றார்.

பெற்றோருடன் மாணவி மஹாதர்ஷினி

ஆனாலும், மருத்துவர் கனவில்
இருந்த அம்மாணவி, தன்னம்பிக்கையைக்
கைவிடாமல், நாமக்கல்லில் உள்ள
ஒரு தனியார் பள்ளி அளித்த நீட் பயிற்சி
வகுப்பில் சேர்ந்து ஓராண்டு படித்தார்.
இந்தாண்டு நடந்த நீட் தேர்வில்,
சேலம் மாவட்ட அளவில் முதலிடம்
பிடித்து சாதித்துள்ளார்.
அகில இந்திய அளவில் 8640வது இடமும்,
தமிழக அளவில் 130வது
இடமும் பிடித்துள்ளார்.

 

கடந்த சில நாள்களுக்கு முன்,
தனியார் பள்ளி மாணவி இலக்கியா என்பவர்
நீட் தேர்வில் 593 மதிப்பெண்கள் பெற்று
சேலம் மாவட்டத்தில் முதலிடம் பெற்றதாகவும்,
அவரை ஆட்சியர் ரோகிணி பாராட்டி பரிசு
வழங்கியதாகவும் பத்திரிகைகளில்
செய்திகள் வெளியாகின. தனியார் நீட் பயிற்சி
மைய நிர்வாகிகள், அந்த மாணவியை
ஆட்சியரிடம் அழைத்து வந்து
இவ்வாறு வாழ்த்து பெற்றிருப்பது
தெரிய வந்தது.

 

இந்நிலையில், மாணவி மஹாதர்ஷினியின் பெற்றோர், தங்கள் மகள்தான் உண்மையில் சேலம் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து இருப்பதாக ஆட்சியர் ரோகிணியை நேரில் சந்தித்து தகவலைக் கூறினர். இதையடுத்து அந்த மாணவிக்கு ஆட்சியர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.