Friday, June 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: முதல் தேர்தலிலேயே பாமகவை கிளீன்போல்டு ஆக்கிய 22 வயது இளம்பெண்!

சேலம் அருகே,
தான் சந்தித்த முதல்
தேர்தலிலேயே பாமகவை
வீழ்த்தி, 22 வயதே ஆன
இளம்பெண் அபார வெற்றி
பெற்றுள்ளார்.

 

சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (ஜன. 2) எண்ணப்பட்டன. ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா ஒரு வாக்கு எண்ணும் மையம் வீதம் மொத்தம் 20 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

 

சேலத்தை அடுத்த, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள், மாசிநாயக்கன்பட்டியில் உள்ள வைஸ்யா கல்லூரியில் எண்ணப்பட்டன.

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் சுக்கம்பட்டி, பூவனூர் கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட 3வது வார்டில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு மோகன் மனைவி பிரீத்தி என்பவர் திமுக சார்பில் உதயசூரியன்  சின்னத்தில் போட்டியிட்டார். பிரீத்திக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. 22 வயதே ஆன பிரீத்தி, அஞ்சல் வழியில் எம்.ஏ. ஆங்கிலம் பட்டமேற்படிப்பு படித்து வருகிறார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டார்.

 

சுழற்சி முறையில் 3வது வார்டு இந்தமுறை பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டதால், தேர்தலில் போட்டியிடும் கனவில் இருந்த மோகன், தனது மனைவியை போட்டியிட வைத்தார். தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (ஜன. 2) எண்ணப்பட்டன. தேர்தல் முடிவு, மாலை 5 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

 

இளம்பெண், பிரீத்தி 2204 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமகவைச் சேர்ந்த பூங்கோதை செல்வம் 1154 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். பாமகவினரும் அந்தப் பகுதியில் பெரிய அளவில் செல்வாக்குடன் உள்ளனர். அக்கட்சி வேட்பாளரை, 1050 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பிரீத்தி அமோக வெற்றி பெற்றார்.

தேர்தல் வெற்றி குறித்து
பிரீத்தியிடம் கேட்டபோது,
பத்திரிகையாளர்களிடம் பேட்டி
அளித்து பழக்கம் இல்லை
என்று ரொம்பவே கூச்சப்பட்டார்.
வெட்கத்தில் நெளிந்தார்.
கணவர் மோகன்,
‘இனிமேல் கவுன்சிலர்
கூட்டங்களில் நீதானே
பேசி ஆகணும். இங்கேயே
பேசி டிரெயினிங் எடுத்துக்கொள்’
என்று சொல்லி, அவரை
உற்சாகப்படுத்தினார்.
அதையடுத்து, பிரீத்தி
நம்மிடம் பேசினார்.

”அயோத்தியாப்பட்டணம்
3வது வார்டு, பெண்களுக்கு
ஒதுக்கப்பட்டதால் நான்
போட்டியிட வேண்டும் என்று
கணவர் கூறினார்.
இதுதான் எனக்கு முதல்
தேர்தல் அனுபவம்.
சந்தித்த முதல் தேர்தலிலேயே
வெற்றி பெற்றது மகிழ்ச்சி
அளிக்கிறது. என் மாமனார்,
தீவிர திமுக தொண்டர்.
கட்சி ஆரம்பித்த நாளில்
இருந்தே அவர் திமுகவில்
இருக்கிறார். கணவரும்
திமுகவில் இருக்கிறார்.
அவர்களுக்கு உள்ளூரில்
உள்ள செல்வாக்கும்,
உதயசூரியன் சின்னமும்தான்
எனக்கு வெற்றியை தேடித்தந்து.
மகிழ்ச்சியை சொல்ல
வார்த்தைகளே இல்லை.

 

தூய்மை இந்தியா பற்றியும்,
இந்தியாவில் திறந்தவெளி
கழிப்பிடங்களே இல்லை என்பது
போலவும் பிரதமர் நரேந்திர மோடி
பேசி வருகிறார். ஆனால் நாங்கள்
பிரச்சாரத்திற்கு சென்ற சுக்கம்பட்டி,
பூவனூர் கிராமங்களில் இன்னும்
திறந்தவெளி கழிப்பிடங்கள்
ஏராளமாக இருக்கின்றன.
பிரச்சார பயணத்தின்போது
பொதுமக்கள் கழிப்பறை,
குடிநீர் வசதி, சாக்கடை
கால்வாய் உள்ளிட்ட
அடிப்படை வசதிகளைத்தான்
செய்து கொடுக்கும்படி கூறினர்.

 

கடந்த எட்டு ஆண்டுகளாக,
ஆட்சியில் இருப்பவர்களும்,
இதற்கு முன்பு 3வது வார்டில்
பொறுப்பில் இருந்த உள்ளாட்சி
பிரதிநிதிகளும் அந்த கிராமங்களில்
எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளையும்
செய்யவில்லை. அதனால்,
என் கவனமெல்லாம் எங்கள்
கிராம மக்களுக்கு பொதுக்கழிப்பறை
மட்டுமின்றி, வீடுகள்தோறும்
தனிநபர் கழிப்பறை கட்டிக்
கொடுப்பதில்தான் இருக்கிறது,”
என்றார் பிரீத்தி.

 

பாமகவை வீழ்த்தி,
மாம்பழத்தை துளைத்தெடுத்த
வண்டாக வெற்றி பெற்றிருக்கிறார்
இந்த பட்டதாரி இளம்பெண்.

 

– பேனாக்காரன்