Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரூ.800 கோடி மோசடி: ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் கைது

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11400 மோடி வழக்கின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், அதேபோன்ற மற்றொரு மோசடி வழக்கில் ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரியை சிபிஐ அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 19, 2018) கைது செய்துள்ளனர்.

பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.11400 கோடி மோசடி செய்திருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, சொத்துக்களை முடக்கியுள்ள நிலையில் நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில், பிரபல பேனா நிறுவனமான ரோட்டோமேக் நிறுவனத் தலைவரான விக்ரம் கோத்தாரியும் நீரவ் மோடி போலவே வங்கிகளின் கடன் பெற்று மோசடி செய்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ரோட்டோமேக் நிறுவனம். அந்த நிறவனத் தலைவர் விக்ரம் கோத்தாரி. அவர், பரோடா வங்கி, அலகாபாத் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுனைடெட் வங்கி ஆகிய ஐந்து வங்கிகளில் ரூ.800 கோடிக்கும் மேல் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதில், அதிகபட்சமாக யூனியன் பேங்க் ஆப் இந்தியாவிடம் இருந்து 485 கோடி ரூபாய், அலகாபாத் வங்கியிடம் இருந்து 352 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார்.

இத்தொகைக்கு அவர் கடந்த ஓராண்டாக வட்டிக்கூட செலுத்தாமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கான்பூரில் உள்ள அவருடைய நிறுவனம் கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்டு உள்ளது சிபிஐ தரப்புக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. நீரவ் மோடி பாணியில் விக்ரம் கோத்தாரியும் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் பிறகு சுதாரித்துக்கொண்ட சிபிஐ அவருக்குச் சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் அவரை சிபிஐ அதிகாரிகள் அவருடைய வீட்டில் வைத்து இன்று (பிப்ரவரி 19, 2018) அதிரடியாக கைது செய்தனர். வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடந்தது.

கைதின்போது விக்ரம் கோத்தாரி ஊடகங்களிடம் கூறுகையில், ”கடன் பெற்றுவிட்டு அதை நான் திருப்பிச் செலுத்தவில்லை என்பது தவறான தகவல். நான் குடும்பத்துடன் என் வீட்டில்தான் இருக்கிறேன். இதே ஊரில்தான் வசித்து வருகிறேன். வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லவில்லை. நான் வசிப்பதற்கு இந்தியாவை விட சிறந்த நாடு வேறெதுவும் இல்லை,” என்றார்.