Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கேள்விகள் எழுப்பலாமா அல்லது வேண்டாமா? இதுதான் என் கேள்வி?

ஏன்? எதற்கு? எப்படி? என்று யாரையும், எதையும், எப்போதும் கேள்வி எழுப்பச் சொல்லி பழக்கிவிட்டுப் போயிருக்கிறார் தந்தை பெரியார். அவரின் பெயரில் அமைந்த பல்கலைக்கழகமோ, கேள்வி எழுப்பியதாலேயே ஓர் உதவி பேராசிரியரை சிறையில் தள்ள துடித்துக் கொண்டிருப்பதுதான் ஆகப்பெரும் துயரம்.

எல்லாமே தலைகீழ் விகிதமாக
மாறிப் போயிருந்த அல்லது அதுவே
ஒழுக்கமாகிவிட்ட ஒரு பல்கலையில்,
ஓர் இளைஞன் நுழைந்தான்.
தான் கற்றுவந்த ஆகச்சிறந்த நெறிகளை
இங்கும் பரவச் செய்ய வேண்டும் என்று
நினைத்ததுதான் அந்த இளைஞன்
செய்த ஒரே குற்றம்.

 

ஒரு மூத்த பேராசிரியர்
வகுப்பிற்குள் நுழைகிறார்.
ஏதோ கேள்வி கேட்கிறார்.
ஒரு மாணவி, இருக்கையில் அமர்ந்தபடியே
பதில் அளிக்கிறாள். அதற்கு அந்த பேராசிரியரோ,
‘ஏன்மா… இதுதான் நீ ஆசிரியருக்கு
தரும் மரியாதையா? உட்கார்ந்துட்டே
பதில் சொல்ற?,’ என அதிகாரமாய் கேட்கிறார்.
அதற்கு அந்த மாணவியோ,
”பேராசிரியர்களே கேள்வி கேட்டாலும்
மாணவ, மாணவிகள் எழுந்து நின்று
பதில் சொல்லத் தேவையில்லை.
அமர்ந்தபடியே பதில் சொல்லலாம் என்று
எங்கள் ஆசிரியர் சொல்லி இருக்கிறார்,”
என வெகுளியாய்க் கூறியிருக்கிறாள்.
சற்றே அந்த ஆசிரியரின் முகம் மாறுகிறது.
யாருமா அந்த ஆசிரியர்? என வினவுகிறார்.
அதற்கு அந்த மாணவியோ,
‘அவர்தான் பிரேம்குமார். வரலாற்றுத்துறை
உதவிப் பேராசிரியர்,’ என்கிறார்.

உதவி பேராசிரியர் பிரேம்குமார் (32)
ஒன்றும் பெரியார் பல்கலையை மீட்டெடுக்க
வந்த ரட்சகன் கிடையாது.
அவர் விரும்பியதெல்லாம் குறைந்தபட்சம்,
தன்னுடைய வரலாற்றுத் துறையையாவது
செழுமைப் படுத்த வேண்டும்
என்பதுதான்.

 

வணிகவியல் படித்த ஒருவரை,
வரலாற்றுத்துறைக்கு தலைவராக்கியது
கொடுமை என்று விமர்சிக்காமல்
இருக்கும் வரை; ஒன்னரை லட்சம் ரூபாய்
சம்பளம் வாங்கினாலும் தினமும்
முக்கால் மணி நேரத்திற்கு மேல் மறந்தும் கூட
வகுப்பறையில் நேரம் செலவழிக்காத
ஆசிரியர்களைப் பற்றி எந்தக் கேள்வியும்
எழுப்பாமல் இருக்கும் வரை;
பாலியல் புகார்களில் சிக்கினாலும்
சாதி ஆதரவுடன் மூடி மறைக்கும்
அக்கிரமங்களை கண்டுகொள்ளாதவரை;
முனைவர் பட்டத்துக்கு லஞ்சம் வாங்கினாலும்,
லஞ்சம் வாங்கிய பேராசிரியரிடமே
லஞ்சம் வாங்கிக் கொண்டு பணியமர்த்தினாலும்
ஆதாரம் எங்கே என்று கேட்காத வரை
பெரியார் பல்கலையில் யாருடைய
வயிற்றுப்பாட்டுக்கும்
பங்கம் வரப்போவதில்லை.

 

இங்குதான் ஆசிரியர் பிரேம்குமார்
மாறுபடுகிறார். மாணவர் வருகைப்பதிவேடு
என்பதே சம்பிரதாய சடங்காக இருந்தநிலையில்,
அதை அன்றாடம் காலை, மதியம் என
இருவேளைகளிலும் பழக்கப்படுத்தினார்.
விளைவு… மற்ற ஆசிரியர்களும்
அதைச் செய்யத் தொடங்கினர்.

 

வரலாற்றுத்துறை நூலகத்திற்கும்
நிதி ஒதுக்கப்படும். ஆனால் அதுவரை
நூலகம் என ஒன்று இருப்பதையே
மாணவர்கள் அறிந்திடாமல்தான் இருந்தனர்.
மாணவர்களே துறைத்தலைவரை அணுகி,
எங்களுக்கென்று நூலகம் வேண்டும் என
கடிதம் கொடுக்கின்றனர். இதைப்பார்த்து
அவர் அதிர்ச்சி அடைகிறார்.
ஏனெனில் அதற்கு முன்பு,
வரலாற்றுத்துறை மாணவர்கள் யாரும்
இப்படி கடிதம் கொடுக்கும் அளவுக்கு
துணிச்சல்காரர்களாக இருந்ததில்லை.

 

துறைத்தலைவரோ,
எங்கிருந்து இத்தனை துணிச்சல்
வந்தது அவர்களுக்கு? சினம் கொண்ட அவர்,
இதென்ன புதுப்பழக்கம்? யார் இதையெல்லாம்
கற்றுக்கொடுத்தார்? வரலாற்றுத்துறைக்கு
அவமானத்தை ஏற்படுத்தி விடுவீர்கள்
போலருக்கு… என காச்மூச் என சத்தம்
போட்டு அடக்கப் பார்த்தார்.
ஊஹூம். வேலைக்கு ஆகவில்லை.

நூலக அறை தயாராகி விட்டது.
மாணவர்களின் நிதியுதவியுடன்,
பிரேம்குமாரும் தன்னால் ஆன பங்களிப்பைச்
செலுத்தி, போட்டித்தேர்வுக்கான
சிஎஸ்ஆர் நூல்கள், வேலைவாய்ப்பு
பருவ இதழ், தமிழ் மற்றும் ஆங்கில
தினசரிகளை வாங்கிப் போடுகிறார்.
தவிர, துறை தொடர்பான நூல்களும் உண்டு.
அத்துடன் நில்லாமல், மாணவர்கள்
அன்றாடம் நூலகத்தை கட்டாயம்
பயன்படுத்த வேண்டும் என்றும்
கட்டளையிடுகிறார்.

 

மற்ற ஆசிரியர்களின்
வகுப்பறைச் சூழல் ஒருவழிப்பாதையாக
மட்டும் இருக்கும்போது,
பிரேம்குமாரோ தன் வகுப்பறையை
உடையாடல் களமாக மாற்றுகிறார்.
வரலாற்றுத்துறையில் உள்ள ஓர் ஆசிரியர்,
வகுப்புக்குள் நுழையும்போது
ஒரு தாளில் குறிப்புகளை
எழுதிக்கொண்டு வருவார்.
அதைப் பார்த்து பாடம் நடத்துவார்.
யாரேனும் கேள்வி எழுப்பினால்
அன்றைய வகுப்பு அத்துடன்
முடிவுக்கு வந்துவிடும்.

 

ஆனால் பிரேம்குமாரோ,
பாடம் சார்ந்து கேள்விகள்
எழுப்பாவிட்டால்தான் கோபப்படுவார்.
கடிந்து கொள்வார். ஆனால் அதெல்லாம்,
‘கடிதோச்சி மெல்ல எறிக ரகம்’தான்.

 

ஒரு பேரரசைப் பற்றி படிக்கையில்,
இடையில் ஆட்சியில் இருந்த சிற்றரசுகளையும்
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்
என மாணவர்களைத் தூண்டுவார்.
அதேநேரம், எதையும் மேலோட்டமாக
இல்லாமல் ஆழ்ந்து வாசிக்க வேண்டும்
என்பதில் விடாப்பிடியாக இருப்பார்.
அதனால்தான் அவர் மாணவராக
இருந்தபோது கல்லூரியிலும்,
பல்கலைக்கழகத்திலும் மூன்று
தங்கப் பதக்ககங்களை
வெல்ல முடிந்திருக்கிறது.

 

மிக மிக மிக பின்தங்கிய
குடும்பத்தில் பிறந்து, சிறு வயதிலேயே
தந்தையை இழந்து, பூக்கடையில்
வேலை செய்து கொண்டே படிப்பை
முடித்தவர்தான் பிரேம்குமார்.
அந்தச் சூழல் காரணமாகவோ என்னவோ,
புத்தகம் வாங்க பணம் இல்லாமல்
தடுமாறும் மாணவர்களுக்கு தன்னால்
இயன்ற பொருளுதவிகளைச்
செய்து வந்துள்ளார்.

 

வருமான சான்றிதழ் உள்ளிட்ட
சான்றிதழ்களை அவரே மாணவர்களுக்கு
சொந்த செலவில் ஆன்லைனில்
விண்ணப்பித்து, பெற்றுக்
கொடுத்திருக்கிறார்.

 

அரசாங்கம் கொடுக்கும் ஸ்காலர்ஷிப்
பணத்தில் இருந்து குறைந்தபட்சம்
படிப்புக்குத் தேவையான ஒரு புத்தகத்தையாவது
வாங்க வேண்டும் என்பதை அவர்
இடித்துச் சொல்லி இருக்கிறார்.
இது, கல்வியின் அவசியம் எத்துனை
முக்கியத்துவம் வாய்ந்தது என்ற
புரிதலால் சொல்வது.
இப்படி இடித்துச் சொல்வதை பிடிக்காத
ஒரு மாணவியை, அவர் மீது பாலியல்
புகார் கொடுக்கும்படி பல்கலையில் உள்ள
கீழான மனிதர்களால்
தூண்டப்பட்டிருக்கிறாள்.

 

”நான் வகுப்பறைக்குள் நுழையும்போது
யாரும் எழுந்திருக்கத் தேவையில்லை.
வழியில் பார்த்தாலும் கையெடுத்து
வணக்கம் சொல்ல வேண்டாம்.
வெறுமனே வணக்கம் என்றோ,
ஹாய் சார் என்றோ, ஹலோ என்றோ
சொன்னால் போதும். கைகட்டி நின்று
பதில் சொல்ல இது பள்ளிக்கூடம் அல்ல;
என்னை பெயர் சொல்லியும்கூட அழைக்கலாம்…,”
என திறந்த மனதுடனே மாணவர்களிடம்
சொல்லி இருக்கிறார்.

 

ஏனெனில்,
அவர் பயின்று வந்த கல்வி
நிலையங்கள் அப்படித்தான்
அவருக்கு பயிற்சி அளித்திருக்கின்றன.

 

ஒரு மாணவி பிரேம்குமார் மீது
புகார் அளித்ததும், உடனடியாக
காவல்துறைக்கு பரிந்துரை செய்ததில்
காட்டிய வேகத்தில் இருந்தே
நிர்வாகத்தின் கோர முகம் அப்பட்டமாக
தெரிகிறது. ‘குணம்நாடிக் குற்றமும் நாடி
அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்’
என்பது வேண்டாமா? அப்படி
என்ன காழ்ப்பு அவர் மீது?

 

பல்கலையில் அமர்ந்து கொண்டு
ரியல் எஸ்டேட், மருந்து வணிகம்,
மருத்துவமனை நிர்வாகம், கேண்டீனே கதி
என்றிருந்தாலும் கவலைப்படாத நிர்வாகம்தான்,
கேள்வி எழுப்பினார் என்ற ஒரே
காரணத்திற்காக அவரை
காயடிக்கப் பார்க்கிறது.

 

இன்றைய தேதியில்
அந்தப் பல்கலையில் ஒரே ஆண் மகன்
பிரேம்குமார்தான் எனச் சொன்னாலும்
குற்றம் ஆகாது. அவன்தான்
கேள்வி எழுப்பினான்.
அதனாலேயே அவனை சிலுவையில்
அறையப் பார்க்கிறது பல்கலை நிர்வாகம்.

 

சிண்டிகேட் தீர்மானத்தை
புறக்கணிக்கச் சொன்னதன் மூலம்
யாருக்காக நீதி கிடைக்கப் போராடினானோ
அந்த ஆசிரியர் உள்பட, பல்கலையில்
பணியாற்றும் அத்துனை ஆசிரியர்களும்
அவனுக்காக குரல் கொடுக்காமல்
வாய்மூடி, கைகட்டி நடமாடும்
சடலங்களாக இருக்கிறார்கள்.
இன்று பிரேம்குமார்; நாளை
நீங்களாகவும் இருக்கலாம்.

 

அதிகார வர்க்கத்திற்கு பலியாடுகள்
எப்போதும் தேவை என்பதை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட
சக ஆசிரியருக்கு குரல் கொடுக்காமல்
தங்கள் வயிறு எந்த வகையிலும்
காய்ந்து விடக்கூடாது என்பதில்
கவனமாக பார்த்துக் கொள்வது
கேவலத்தின் உச்சம் என்ற குற்ற
உணர்வுகூட இல்லாமல் இருக்கின்றனர்.

 

பிரேம்குமாருக்காக குரல் கொடுக்காத பல்கலை ஆசிரியர்களிடம், சோறா? சொரணையா? என்று கேட்டால் சோறே பிரதானம் என்கிறார்கள்.

 

உதவி பேராசிரியர் பிரேம்குமார் செய்தது இரண்டே குற்றங்கள்தான். ஒன்று, பெரியார் பல்கலை நிர்வாகத்தை எதிர்த்துக் கேள்வி எழுப்பியது. அடுத்து, பெரியாரையும், மார்க்ஸையும், அம்பேத்கரையும் உள்வாங்கியது.

 

– பேனாக்காரன்