Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

துணைவேந்தரை ஏமாற்றுகிறதா பிரைடு நிர்வாகம்? குழப்பத்தின் உச்சத்தில் பெரியார் பல்கலை!!

 

தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, தேர்வுக்கு அனுப்பும் வரை புத்தகங்கள் வழங்கப்படாமல் இருக்கும் விவரமே, நாங்கள் சொல்லித்தான் தெரியும் என்றும், பிரைடு நிர்வாகம் துணை வேந்தரிடம் முக்கிய தகவல்களை மறைப்பதாகவும் படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.

 

பெரியார் பல்கலை

சேலம் பெரியார் பல்கலையில் ‘பிரைடு’ என்ற பெயரில் தொலைநிலைக் கல்வி மையம் இயங்கி வருகிறது. தொலைதூரக் கல்வித் திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்காக, தமிழகம் முழுவதும் 110 தனியார் படிப்பு மையங்களுக்கு பல்கலை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

 

படிப்பு மையம் மட்டுமின்றி ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் நேரடியாக சேரவும் அனுமதிக்கப்படுகிறது. தற்போது தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் 25 ஆயிரத்தக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

 

பாடப்புத்தகங்கள்

இது ஒருபுறம் இருக்க, கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே, தொலைதூர கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்காமல் போக்குக் காட்டி வருகிறது பெரியார் பல்கலை. அதேநேரம், பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கும்போதே புத்தகங்களுக்கும் கட்டணம் வசூலித்து விடுகின்றனர்.

 

தவிர, குறித்த நேரத்தில் தேர்வுகள் நடத்துவதிலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தொடர்ந்து பல்வேறு குளறுபடிகளை அரங்கேற்றி வருகின்றனர். தேர்வு முடிவுகளை வெளியிட்டாலும் பட்டச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களை வழங்குவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

 

இதனால் படிப்பு மையங்களின் ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்களை நேரடியாக சந்திக்க முடியாமல் திணறி வருகின்றனர். சில இடங்களில், புத்தகங்களைக் கேட்டு மாணவர்கள் படிப்பு மையங்களை முற்றுகையிடுவது, ஒருங்கிணைப்பாளர்களுடன் தகராறில் ஈடுபடுவதும் நடந்துள்ளது.

 

ஆலோசனை கூட்டம்
படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில்தான், 70க்கும் மேற்பட்ட படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் சேலத்தில் புதன்கிழமையன்று (26.12.2018) திடீரென்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கூட்டம் நடந்தது. சேலம், தர்மபுரி, நாமக்கல், சென்னை ஆகிய இடங்களில் இருந்து ஒருங்கிணைப்பாளர்கள் வந்திருந்தனர்.

 

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் நம்மிடம் பேசினர்.

 

தாமதமாக தேர்வுகள்

 

”பெரியார் பல்கலையில் இரண்டு கட்டங்களாக மாணவர் சேர்க்கை, தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கல்வி ஆண்டின் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்திலும், காலண்டர் ஆண்டின் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதத்திலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். 2017-2018ம் கல்வி ஆண்டு, காலண்டர் ஆண்டில் சேர்ந்தவர்களுக்கு பல மாதங்கள் தாமதமாகத்தான் தேர்வுகள் நடத்தப்பட்டன.

 

சான்றிதழ்கள்  வழங்குவதில்லை
பேராசிரியர் புவனலதா

தேர்வு எழுதியவர்களில் பலருக்கு எவ்வித காரணமும் இல்லாமல் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டச்சான்றிதழ்கள் குறித்த காலத்தில் வழங்குவதில்லை. நன்றாக தேர்வு எழுதிய மாணவனுக்கு வெறும் இரண்டு அல்லது மூன்று மதிப்பெண்களும், சரியாக எழுதாத மாணவர்கள் அதிக மதிப்பெண்களும் பெறும் விந்தைகளும் நடக்கின்றன.

 

தொலைநிலைக் கல்வி மாணவர்களிடம் புத்தகங்களுக்கும் சேர்த்துதான் பெரியார் பல்கலை கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், இதுவரை அவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து முன்பு ‘பிரைடு’ இயக்குநரிடம் கேட்டதற்கு, ‘பெரியார் பல்கலை ஆன்லைனில் பாடப்புத்தகங்களை பதிவேற்றம் செய்திருக்கிறோம். அதிலிருந்து மாணவர்கள் புத்தகங்களை டவுன்லோடு செய்து படித்துக் கொள்ளட்டும்’ என்றார்கள்.

 

அவகாசம் வழங்கப்படவில்லை

 

ஆனால், இன்றுவரை பல்கலை இணையதளத்தில் பாடப்புத்தகங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. சமீபத்தில் நடந்த தேர்வுகளின் முடிவுகள் இன்று (டிச. 26) வெளியிடப்பட்டு உள்ளன. இதில் தோல்வி அடைந்த தேர்வர்களுக்கு, ‘அரியர்’ தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தக்கூட போதிய அவகாசம் வழங்கப்படவில்லை.

 

ஆனால், அதற்குள் வரும் 2019, ஜனவரி 4ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கும் என கால அட்டவணையை பல்கலை வெளியிட்டுள்ளது. மாணவர்களுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. இப்பிரச்னைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் கொண்டு வந்துள்ளோம்,” என்றனர்.

 

இதையடுத்து, படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் பெரியார் பல்கலை துணை வேந்தர் குழந்தைவேலுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்கள் வருவதை அறிந்திருந்த துணை வேந்தர், முன்னெச்சரிக்கையாக தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் பேராசிரியர் புவனலதா மற்றும் தேர்வாணையர், பதிவாளர் ஆகியோரையும் தனது சேம்பருக்கு வரவழைத்திருந்ததாகச் சொல்கின்றனர்.

 

துணை வேந்தருடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசியதாக ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். அவர்கள் கொடுத்த கோரிக்கை மனு மீது விசாரித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று துணை வேந்தர் கூறியதாகவும் சொன்னார்கள். துணை வேந்தரிடம் பேசிய விவகாரம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் சிலர் நம்மிடம் பேசினர்.

துணைவேந்தர் அதிர்ச்சி
துணை வேந்தர் குழந்தைவேல்

”படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் எல்லோரும் எங்கள் கோரிக்கை மனுவை துணைவேந்தரிடம் நேரில் கொடுத்தோம். குறிப்பாக, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்காமலேயே தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது குறித்து பேசினோம். ‘புத்தகங்கள் வழங்கப்படவில்லை என்று இப்போது வந்து சொல்கிறீர்கள்?’ என்று ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் துணைவேந்தர் கேட்டார்.

 

நாங்கள் சொல்லும் வரை அவருக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதே தெரியாததுபோல் கேட்டார். மேலும், இது தொடர்பாக பிரைடு மைய இயக்குநரிடம் இருந்து இதுவரை ‘நோட் ஆர்டர்’ எதுவும் வரவில்லை என்றும் கூறினார்.

 

ஒருவேளை, சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் அவரிடம் இதுபோன்ற பிரச்னைகள் குறித்து எதுவும் சொல்லாமல் மறைத்து விடுகிறார்களோ என்னவோ. தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் சிறப்புத்தேர்வு நடத்தப்படும் என்று துணைவேந்தர் கூறினார். ஆனால், நடைமுறையில் அதுபோல் எந்தப் பல்கலையும் சிறப்புத்தேர்வு நடத்தியதில்லை.

 

மாணவர்களின் எதிர்காலம்

 

தேர்வாணையரோ, ‘புத்தகம் வழங்கப்படாதது எங்கள் வேலை இல்லை. நாங்கள் திட்டமிட்டபடி தேர்வு நடத்துவோம்’ என்கிறார். இப்படி பெரியார் பல்கலையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், மாணவர்களின் எதிர்காலம்தான் பாதிக்கப்படுகிறது,” என்கிறார்கள் படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள்.

 

துணை வேந்தர் குழந்தைவேல், ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒரு சங்கமாக அமைத்து, முக்கிய நிர்வாகிகள் மாதத்திற்கு ஒருமுறையாவது தன்னை நேரில் வந்து பார்க்கும்படியும் ஆலோசனை கூறியுள்ளார். இதையடுத்து, உடனடியாக அங்கேயே சங்கத்தை கட்டமைத்த அவர்கள், ஒருங்கிணைப்பாளர் கோபி என்பவரை தலைவராக தேர்வு செய்துள்ளதையும் அவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

 

முடங்கிய இணையதளம் 

இந்த களேபரங்களுக்கு இடையே, பெரியார் பல்கலையின் தேர்வுக்கால அட்டவணை, தேர்வு மையங்கள் தொடர்பான அறிவிப்புகள் அடங்கிய இணையதளம் திடீரென்று திறக்க முடியாமல் முடங்கியதால், தேர்வர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

– பேனாக்காரன்.