Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பெரியார் பல்கலை: பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது சிண்டிகேட் குழு! #PeriyarUniversity

ஆசிரியர் பணி நியமனங்களில் முறைகேடு, தகுதியற்றவர்களுக்கு பதவி உயர்வு, பல கோடி ரூபாய்க்கு தணிக்கை தடைகள் என பல்வேறு சர்ச்சைகள், பரபரப்புகளுக்கு நடுவே பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று (செப். 29, 2018) கூடுகிறது சிண்டிகேட் குழு.

அலிபாபா குகை

 

சேலம் பெரியார் பல்கலை தொடங்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணி நியமனங்களில் அரசியல் தலையீடு இருந்து வருகிறது. முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் காலத்தில், கல்விக்கூடமான பெரியார் பல்கலை கிட்டத்தட்ட அலிபாபா குகைபோல் பரிணாம வளர்ச்சி அடைந்தது எனலாம்.

 

காரணம், அவர் பதவி வகித்தபோது ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வசூலித்துக்கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பினார். அதுகுறித்த புகார்கள் மீது தமிழக உயர்கல்வித்துறையும், ஊழல் தடுப்புத்துறையும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்குள் பலருடைய ஆயுளும் முடிந்துவிடும்.

 

கடந்த காலங்களில் நடந்த கசப்பான நிகழ்வுகளை புறந்தள்ளிவிட்டு புதிதாக ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்னெடுப்போம் என்ற நோக்கத்தில் இப்போதைய துணை வேந்தர் குழந்தைவேல் செயல்பட்டு வருகிறார். ஆனாலும், கடந்த 2015-2016ம் ஆண்டின் செலவினங்களை தணிக்கை செய்த அதிகாரிகள் குழு, 47 கோடி ரூபாய்க்கு ஆட்சேபனைகளை சுட்டிக்காட்டி இருக்கிறது.

குழந்தைவேல்

அவற்றில் பலவற்றுக்கு பல்கலை நிர்வாகம் போதிய ஆவணங்களுடன் இந்நேரம் விளக்கம் கொடுத்திருக்கும். என்றாலும், போலி பணி அனுபவச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், பணி நியமனத்தின்போது பிஹெச்.டி முடிக்காத உதவி பேராசிரியர்களுக்கும் நான்கு ஆண்டுகளுக்குள் ஊதிய உயர்வு (ஏஜிபி) வழங்கியதும், அதனால் மிகை ஊதியம் கொடுக்கப்பட்ட தணிக்கை தடைகளுக்கும் இன்றும் பெரியார் பல்கலை நிர்வாகம் மவுனம் காக்கிறது.

 

இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, பல்கலை மானியக்குழு (யுஜிசி) விதிகளுக்கு முரணாக இணை பேராசிரியர்கள் சிலருக்கு பேராசிரியர் பதவி உயர்வு வழங்க முடிவு செய்திருக்கிறது, பெரியார் பல்கலை.

 

இது தொடர்பாக ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் இலவச சட்ட உதவி மைய நிறுவனர் வழக்கறிஞர் மாசிலாமணி உயர்கல்வித்துறை செயலர் மற்றும் பதவிவழி சிண்டிகேட் உறுப்பினர்களுக்கும், பெரியார் பல்கலையைச் சேர்ந்த சிண்டிகேட் உறுப்பினர்களுக்கும் விரிவாக கடிதம் அனுப்பி உள்ளார்.

 

கிராஸ் மேஜர் சர்ச்சை
செல்வம்

பெரியார் பல்கலையில் தாவரவியல் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி வரும் செல்வம், பிஹெச்.டி ஆய்வுப்படிப்பை உயிரி தொழில்நுட்பத் துறையில் நிறைவு செய்துள்ளார். யுஜிசி விதிகளின்படி, கிராஸ் மேஜர் படித்தவர்களுக்கு முதன்மை துறையில் நியமனம் செய்யக்கூடாது.

 

ஆனால், ஆளுங்கட்சியின் அரசியல் செல்வாக்கு காரணமாக பணி நியமனம் செய்யப்பட்டதாக செல்வத்தைச் சுற்றி புகார்கள் வட்டமடிக்கின்றன. இந்த நிலையில், அவருக்கு விரைவில் பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.

வெங்கடேசன்

அதேபோல், சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி வரும் வெங்கடேசன் மீதும் கிராஸ் மேஜர் புகார் உள்ளது. பிஎஸ்சி தாவரவியல் படித்த வெங்கடேசன், எம்எஸ்சியில் நுண்ணுயிரியலிலும், பிஹெச்.டி ஆய்வின்போது சுற்றுச்சூழல் நுண்ணுரியிரியல் துறையிலும் படிப்பை நிறைவு செய்திருக்கிறார். ஒவ்வொரு பட்டப்படிப்பின்போதும் வேறு வேறு துறைக்கு தாவி, ‘தாவுகிற இயல்’-லிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறார் வெங்கடேசன்.

 

அதுமட்டுமின்றி, அவருடைய பணி நியமனத்தின்போது வேறு ஒரு கூத்தும் அரங்கேறியது. இணை பேராசிரியருக்கான நேர்காணலில் வெங்கடேசன் கலந்து கொண்டபோது, அவருக்கு உரிய தகுதிகள் இல்லை எனக்கூறி அந்த நேர்காணலே நிறுத்தி வைக்கப்பட்டது.

 

இதையடுத்து, மறு நேர்காணல் நடத்தாமலேயே சர்ச்சைக்குரிய வகையில் அவரையே இணை பேராசிரியராக நியமித்தது பெரியார் பல்கலை. இப்போது அவருக்கும் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இவர் சமர்ப்பித்த முன்அனுபவ சான்றிதழில் இதுவரை கல்வித்துறை இணை இயக்குநரின் மேலொப்பம் பெறப்படவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

கல்வியியல் புலம்
தனலட்சுமி

இது இப்படி இருக்க, கல்வியியல் புலத்தில் இணை பேராசிரியராக பணியாற்றும் தனலட்சுமி மீதான புகார் ரொம்பவே வேடிக்கையானது என்கிறார்கள், பல்கலை வட்டாரத்தில். பெரியார் பல்கலையில் பணியில் சேர்வதற்கு முன்பு அவர், விநாயகா மிஷன் பல்கலையில் பணியாற்றி வந்தார். உதவி பேராசிரியர் ஒருவர், இணை பேராசிரியர் பதவிக்கு வர கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆகும்.

 

ஆனால், தமிழ் சினிமாவில் ஏழை கதாநாயகன் ஒரே பாடலில் செல்வந்தர் ஆவதுபோல், உதவி பேராசிரியர் தனலட்சுமி இரண்டே ஆண்டுகளில் இணை பேராசியராக பதவி உயர்வு பெற்ற மர்மம் இன்றுவரை யாருக்கும் விளங்கியபாடு இல்லை. அப்படிப்பட்ட அனுபவ சான்றிதழை சமர்ப்பித்துதான் பெரியார் பல்கலையில் தனலட்சுமி பணிக்கு சேர்ந்தார். அவருக்கும் விரைவில் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட இருக்கிறது.

 

எதற்காக நிதியாளர்?

 

இவை ஒருபுறம் இருக்க, மேட்டூர், எடப்பாடி உள்ளிட்ட உறுப்புக் கல்லூரிகளுக்கு நிதியாளராக (பர்சார்) நியமிக்கப்பட்ட ஊழியர்களை இதுநாள் வரை உறுப்புக் கல்லூரிகளுக்கே அனுப்பாமல், பல்கலையிலேயே பணியர்த்தி வைத்திருக்கிறது பல்கலை நிர்வாகம்.

 

உறுப்புக்கல்லூரிகளுக்கு தேவையில்லை எனில், எதற்காக நிதியாளர் பணியிடத்திற்கு ஆள்களை நியமிக்க வேண்டும்? ‘கைநீட்டி வாங்கிய’தால் வந்த வினையா? என்பதை பல்கலை நிர்வாகம்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.

 

101வது சிண்டிகேட் குழு கூட்டம்
மங்கத்ராம் ஷர்மா

இவ்வாறு பல்வேறு புகார்கள், முறைகேடுகளுக்கு நடுவே பெரியார் பல்கலையில் 101வது சிண்டிகேட் குழு கூட்டம் இன்று கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் ஷர்மா கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

இந்நிலையில், உண்ண உயர்தர சாப்பாடு, குடிக்க காபி, கொறிக்க வறுத்த முந்திரியுமாக கூட்டத்தை நிறைவு செய்யாமல் பல்கலை வளர்ச்சி சார்ந்த முடிவுகள் எடுக்கப்படுமா? என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

– பேனாக்காரன்.