Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சிண்டிகேட் கூட்டம்: முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த பெரியார் பல்கலை! #PeriyarUniversity

 

உதவி பேராசிரியர் பணி நியமனங்களில் விதிமீறல், போலி அனுபவச் சான்றிதழ்கள், கல்வித்தகுதிகள் குறித்து தணிக்கை அறிக்கையில் ஆட்சேபனைகள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த விவரங்களை பெரியார் பல்கலை நிர்வாகம் உயர்கல்வித்துறை செயலருக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

101வது சிண்டிகேட் குழு கூட்டம்

 

சேலம் பெரியார் பல்கலையில் 101வது சிண்டிகேட் குழு கூட்டம் ஆட்சிக்குழு அரங்கத்தில் நேற்று (செப். 29, 2018) நடந்தது. உயர்கல்வித்துறை செயலராக அண்மையில் நியமிக்கப்பட்டு உள்ள மங்கத்ராம் ஷர்மா, நேற்றைய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

 

இதற்காகவே அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு காலை 11.15 மணியளவில் வந்து சேர்ந்தார். அங்கிருந்து கார் மூலம் பல்கலைக்கு அழைத்து வரப்பட்டார். இதனால் வழக்கத்தைவிட சற்று தாமதமாக சிண்டிகேட் குழு கூட்டம் தொடங்கியது. பகல் 12.15 மணிக்கு தொடங்கிய இக்கூட்டம், மதியம் 2 மணிக்கு முடிவுற்றது.

சிண்டிகேட் குழு கூட்டத்தில் பல்கலை தரப்பு, அரசுக்கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், பதவிவழி உறுப்பினர் என மொத்தம் 17 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ரூ. 47 கோடிக்கு தணிக்கை தடைகள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்பியதில் ஊழல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சூழ்ந்துள்ள நிலையில், அதைப்பற்றி எல்லாம் சிண்டிகேட் குழு கூட்டத்தில் விவாதம் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

 

உப்புச்சப்பு

 

உயர்கல்வித்துறை செயலர் கலந்து கொண்டார் என்பதைத்தவிர, நேற்றைய கூட்டம் உப்புச்சப்பு இல்லாமல்தான் முடிவுற்றதாக பல்கலை வட்டாரங்கள் கூறுகின்றன. உயர்கல்வித்துறை செயலர், ”பல்கலை வளர்ச்சிக்கு எல்லோரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நான் முதன்முதலில் இந்த துறைக்கு பொறுப்பேற்ற பிறகு கலந்து கொள்ளும் முதல் கூட்டம் இது. அதனால் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துவிட்டுப் போகலாம் என்பதால்தான் வந்தேன்,” என்று சொல்லிவிட்டு, கூட்ட நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாராம்.

 

சிண்டிகேட் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருள்நிரல்கள் குறித்த விவரங்களை அறிந்த சில பேராசிரியர்களிடம் பேசினோம்.

 

பெரியார் பல்கலைக்கு புதிய பதிவாளர், தேர்வாணையர் நியமிக்கப்படுவதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. பதிவாளர் பதவிக்கு 14 விண்ணப்பங்களும், தேர்வாணையர் பதவிக்கு 18 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன. அந்த விண்ணப்பங்கள் மீது இன்னும் ஆய்வுப்பணிகள் துவங்காதது குறித்து விவாதிக்கப்பட்டது. விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்காக விரைவில் ஒரு குழு நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

மூன்று பேராசிரியர்கள் வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதி கேட்டுள்ளது குறித்தும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர், பல்கலை மற்றும் கல்லூரிகளில் பிஹெச்.டி முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்குவது குறித்தும் பேசப்பட்டது. அதன்பிறகே, 29 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்த அஜண்டாவை கையிலெடுத்துள்ளனர்.

 

உயர்கல்வித்துறை செயலர் கேள்வி

 

பதவி உயர்வு குறித்த பேச்சு தொடங்கியபோதே, உயர்கல்வித்துறை செயலர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென்று, பதவி உயர்வு பட்டியலில் உள்ள உதவி, இணை பேராசிரியர்கள் மீது எந்த புகார்களும் இல்லைதானே? எல்லா அம்சங்களும் சரியாக இருக்கின்றனவா? என ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். அவரிடம் இருந்து இப்படி ஒரு கேள்வி வரும் என்று துணைவேந்தர் குழந்தைவேல் உள்பட உறுப்பினர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.

 

தணிக்கை அறிக்கை

 

கடந்த 2015-2016ம் ஆண்டின் பல்கலை செலவின தணிக்கை அறிக்கையில், உதவி / இணை பேராசிரியர்களான கிருஷ்ணகுமார் (வணிகவியல்), சூரியவதனா (உயிர் வேதியியல்), லட்சுமி மனோகரி (ஆடை வடிவமைப்பியல்), திருமூர்த்தி (பிரிம்ஸ்), சாரதி (பிரிம்ஸ்), சுப்ரமணியபாரதி (பிரிம்ஸ்) ஆகியோர் பணியில் சேர்ந்தபோது பிஹெச்.டி., ஆய்வுப்படிப்பை முடித்திருக்கவில்லை.

 

ஆனால் அவர்களுக்கு விதிகளை மீறி ஊதிய உயர்வு வழங்கப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் வழக்கமான கால இடைவெளியில் பதவி உயர்வு பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவே பதவி உயர்வு பெறும் நிலை உள்ளது. இது பல்கலை மானியக்குழு விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. இதுபற்றி தணிக்கை அறிக்கையில் பகிரங்கமாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

 

ஆனால், பல்கலை துணைவேந்தர் இதைப்பற்றி உயர்கல்வித்துறை செயலரிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் மறைத்துவிட்டார். பதவி உயர்வு பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் மீது எந்த புகார்களும் இல்லை என்று துணைவேந்தர் அப்பட்டமாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டார். மற்ற உறுப்பினர்களும் பிரச்னைகளை கிளப்பாமல் அமைதி காத்துவிட்டனர்.

இணை பேராசிரியர் லட்சுமி மனோகரி, பணியில் சேரும்போது சமர்ப்பித்த முன்அனுபவ சான்றிதழ் போலியானது. அதன் மீது இன்னும் கல்லூரிக்கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெறப்படவில்லை. தமிழ்த்துறை இணை பேராசிரியர் சுந்தரமூர்த்தியின் பணி நியமனத்தில் 200 புள்ளி இனசுழற்சி விதி பின்பற்றப்படாததால் அவருடைய பணி நியமனமே கேள்விக்குறியாக உள்ளது.

 

இந்த விவரங்கள் அனைத்துமே சிண்டிகேட் கூட்டத்தில் முற்றாக மறைக்கப்பட்டுவிட்டது. உயர்கல்வித்துறைக்கு செயலராக மங்கத்ராம் ஷர்மா புதிதாக பொறுப்பேற்றுள்ளதால் அவருக்கு பெரியார் பல்கலையில் நடக்கும் கூத்துகள் பற்றி எதுவும் தெரியாது.

 

அதை துணைவேந்தரும், சிண்டிகேட் உறுப்பினர்களும் வசதியாக பயன்படுத்திக் கொண்டனர். இதையறியாத உயர்கல்வித்துறை செயலரும் பதவி உயர்வு பெற வேண்டியவர்களின் பட்டியலை விரைவில் தனக்கு அனுப்பி வைக்கும்படி கூறிவிட்டார்.

ஓரிரு அஜண்டா தவிர ஏனைய அஜண்டாக்கள் எந்தவித எதிர்ப்புகளும் இல்லாமல் தீர்மானத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

 

பொருளாதார துறை உதவி பேராசிரியர் வைத்தியநாதன் மீது பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்ததாக ஒரு புகார் வந்தது. இந்த புகார் குறித்து கடந்த முறை நடந்த சிண்டிகேட் கூட்டத்திலும்கூட விவாதிக்கப்பட்டது.

 

நேற்று நடந்த கூட்டத்தின்போதும், அவர் மீது இரண்டு அல்லது நான்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சிலர் கூறினர். பின்னர், அவருக்கு ஒரே ஒரு ஊதிய உயர்வை மட்டும் நிறுத்தி வைக்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அவர் விளக்கம் அளிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

தொகுப்பூதிய பணியாளர்

 

அஜண்டாவில் குறிப்பிடாத ஒரு விவகாரத்தைப் பற்றியும் உறுப்பினர் ஒருவர் உயர்கல்வித்துறை செயலரின் கவனத்துக்கு கொண்டு சென்றாராம். அதாவது, பல்கலையில் பணியாற்றி வரும் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலரிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு உயர்கல்வித்துறை செயலர், மறுப்பேதும் சொல்லவில்லை. அதேநேரம், படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிரீன் சிக்னல் காட்டினாராம்.

 

ஆனாலும், இந்த விவரம் சிண்டிகேட் கூட்ட தீர்மான பதிவேட்டில் பதிவு செய்யப்படுமா என்பது தெரியவில்லை என்றும் அன்த உறுப்பினர் சிலரிடம் புலம்பினார் என்கிறார்கள் விவரம் அறிந்த பேராசிரியர்கள்.

 

விசாரணை

 

சிண்டிகேட் கூட்டம் முடிந்து வெளியே வந்த உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் ஷர்மாவிடம் கேட்டபோது, ”ஐந்து பல்கலைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக யுஜிசி தரப்பில் இருந்து 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் பெரியார் பல்கலைக்கழகம் இடம்பெற வில்லை. மற்ற நான்கு பல்கலைகளுக்கு தலா 50 கோடி ரூபாய் வீதம் வழங்கப்பட்டுவிட்டது. அதனால் அந்த நிதியை பெறுவதற்கு ஏற்ப தரத்தை உயர்த்திக்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன.

 

ஏற்கனவே ஆய்வக மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பெரியார் பல்கலைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எந்தளவுக்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் பேசினோம். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். சர்ச்சைக்குரிய விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறேன். வேறு எந்த முக்கிய முடிவுகளும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை,” என்றார்.

 

அவரிடம் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணி நியமனங்களில் ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் உள்ளனவே என்று கேட்டதற்கு, ”அதுபற்றி என் கவனத்திற்கு வந்தால் உரிய விசாரணை நடத்தப்படும். இனி ஒவ்வொருமுறை கூட்டம் நடக்கும்போதும் வருவேன். அப்போது எல்லா ஊடகர்களுக்கும் முறையான அழைப்பு விடுக்கப்படும்,” என்றார்.

 

சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு ஐகியூஏசி அறையில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் ஷர்மா மதிய உணவை முடித்துக்கொண்டு, 3.30 மணியளவில் கார் மூலம் சென்னைக்கு கிளம்பிச் சென்றார். துணைவேந்தர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

 

//உதவி பேராசிரியர் சொல்வது என்ன?//

உதவி பேராசிரியர் வைத்தியநாதனுக்கு ஒரு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்க சிண்டிகேட் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து அவரிடம் கேட்டோம்.

 

”சிண்டிகேட் குழு கூட்டத்தில் என் மீது என்ன நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது என்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக எனக்குத் தெரியவில்லை. அதிகாரப்பூர்வ தகவல் வந்த பிறகு, அதன்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறேன்,” என்றார்.

 

 

– பேனாக்காரன்.