Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பெரியார் பல்கலை: கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே சலசலப்பு ஆரம்பம்!

பெரியார் பல்கலையில், கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே மூத்த பேராசிரியர்கள் சிலர் துறைத்தலைவர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியதால் துணை வேந்தர் கடும் அதிருப்தி அடைந்தார்.

 

சேலம் பெரியார் பல்கலையில் 2018-19ம் கல்வி ஆண்டின் முதல் நாள் வகுப்புகள் ஜூலை 2ம் தேதி தொடங்கின. இதையொட்டி, அன்றைய தினம் பல்கலையில் பணியாற்றும் அனைத்து உதவி, இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்ட கூட்டம், துணை வேந்தர் கொழந்தைவேல் தலைமையில் நடந்தது.

 

செனட் அரங்கத்தில் நடந்த இந்தக் கூட்டம், பகல் 12 மணிக்கு தொடங்கி 1.45 மணியளவில் நிறைவு பெற்றது. கூட்ட நிகழ்வுகள் வெளியே ‘லைவ்’ ஆக தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரின் செல்போன்களும் கூட்டம் முடியும் வரை செயல்படாத வகையில் ஜாமர் கருவி மூலம் முடக்கப்பட்டது.

பெரியார் பல்கலை

ஆராய்ச்சி தொடர்பாக வெளிநாடு செல்லும் பேராசிரியர்களுக்கு 50 சதவீதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று துணை வேந்தர் கொழந்தைவேல் எடுத்த எடுப்பிலேயே இனிப்பான செய்தியைச் சொன்னார். அடுத்து, பி.ஹெச்டி., ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்கலை சார்பில் மாதந்தோறும் 5000 ரூபாய் உதவித்தொகை (யூஆர்எஃப்) வழங்கப்படும் என்றும் துணைவேந்தர் கொழந்தைவேல் கூறினார்.

 

யூஆர்எஃப் (University Research Fellowship) உதவித்தொகையை பெரும்பாலான ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளாதது குறித்தும் அவர் கோடிட்டுக் காட்டத்தவறவில்லை. ஒவ்வொரு துறையிலும் ஆராய்ச்சி மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் வகையில் மேலும் ஓர் இடம் உயர்த்திக் கொள்ளவும் இசைவு தெரிவித்துள்ளார்.

 

இப்படி சுமூகமாக கூட்டம் நடந்து கொண்டிருந்தாலும், சில பேராசிரியர்கள் தங்களின் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தினர். புவியமைப்பியல் (ஜியாலஜி) துறை பேராசிரியர் வெங்கடாசலபதி, துறைத்தலைவர் பதவியிடங்களை சுழற்சி முறையில் ஒதுக்க வேண்டும் என்று தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.

பெரியசாமி

மேலும் அவர், சில பேராசிரியர்கள் நடத்தும் செமினார்களுக்கு மட்டும் பல்கலைக்கழகம் நிதியுதவி வழங்குகிறது. செமினார் நடத்தும் அனைத்து பேராசிரியர்களுக்கும் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

உடனடியாக தமிழ்த்துறை மூத்த பேராசிரியரான தமிழ்மாறன், எல்லாமே இங்கு விதிகளின்படி செயல்படுவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள். துறைத்தலைவர் பதவி நியமனத்திலும் விதிகளை அமல்படுத்தினால் நல்லது என்று அவரும் துணைவேந்தரிடம் தன் விருப்பத்தை முன்வைத்தார்.

 

ஒரே நேரத்தில் இரு மூத்த பேராசிரியர்களிடம் இருந்து எழுந்த இக்கோரிக்கையால் துணை வேந்தர் பதிலேதும் பேசாமல் சிறிது நேரம் மவுனம் காத்ததாகச் சொல்கின்றனர் கூட்ட விவரங்களை அறிந்த மூத்த பேராசிரியர்கள்.

 

துறைத்தலைவர் பதவி நியமனத்தில் பின்பற்றப்படும் விதிகள் குறித்து மூத்த பேராசிரியர்கள் சிலர் நம்மிடம் பேசினர்…

 

”பேராசிரியர் பெரியசாமி, தமிழ்த்துறை தலைவராக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பதவியில் இருந்து வருகிறார். பல்கலை சாசன விதிகளின்படி, துறைத்தலைவர் பதவி என்பது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இத்தனைக்கும் துறைத்தலைவர் பதவி என்பது ஒரு கவுரவ பதவி மட்டுமே. அதனால் பண  ஆதாயங்கள் ஏதுமில்லை.

 

பேராசிரியர் தமிழ்மாறன், இன்னும் இரண்டு ஆண்டுகளில் பணி நிறைவு பெற உள்ளார். சுழற்சி முறையில் அவருக்கு துறைத்தலைவர் பதவி கிடைத்தால் அந்த அந்தஸ்திலேயே ஓய்வு பெறலாம் என்றுகூட அவர் கருதக்கூடும்,” என்றவர்கள், பேராசிரியர் பெரியசாமியின் சில பராக்கிரமங்களையும் பட்டியலிட்டனர்.

 

”இப்போது தமிழ்த்துறை தலைவராக உள்ள பேராசிரியர் பெரியசாமி 2004ல் பெரியார் பல்கலையில் பணியில் சேர்ந்தார். பெரியசாமி 10.3.2000ல் தான் பி.ஹெச்டி., ஆய்வுப்படிப்பை நிறைவு செய்துள்ளார். முழு நேர பி.ஹெச்டி., மாணவராக நிறைவு செய்துள்ளதாக அனுபவ சான்றிதழில் தெரிவித்துள்ளார்.

துணை வேந்தர் கொழந்தைவேல்

ஆனால் அதே காலக்கட்டத்தில், அதாவது 1998 முதல் 30.6.2000 வரை மருதமலை முருகன் கோயிலில் ஓதுவாராக மாதம் 1500 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றியதாகவும் சான்றிதழில் குறிப்பிட்டுள்ளார்.

 

இதுமட்டுமின்றி, கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 3.7.1999 முதல் 17.6.2000 வரை தமிழ் விரிவுரையாளராக பணியாற்றியதாகவும், அதன்பிறகு, கோபியில் உள்ள கோபி அரசு கலைக்கல்லூரியில் 19.6.2000 முதல் 22.11.2004 வரை விரிவுரையாளராக பணியாற்றிதாகவும் பணி அனுபவ சான்றிதழில் குறிப்பிட்டுள்ளார்.

 

ஒரே ஆள், எப்படி ஒரே காலத்தில் கோயிலில் ஓதுவாராகவும், கல்லூரிகளில் ஆசிரியராகவும், முழுநேர பி.ஹெச்டி., மாணவராகவும் மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் செயலாற்ற முடியும்? ஆனால், இந்த முன்அனுபவ சான்றிதழை அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டுதான் அப்போது பெரியார் பல்கலை இவரை உதவி பேராசிரியராக பணியில் நியமித்து இருக்கிறது.

 

அப்பட்டமாக விதிகளை மீறி ஒருவர் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார் என்றால் பணமும், அரசியல் செல்வாக்கும்தானே காரணமாக இருக்க முடியும்?. அவர் வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் ஆளும் கட்சியினரின் செல்வாக்கோடு தொடர்ந்து பல ஆண்டுகளாக துறைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்,” என்கிறார்கள் மூத்த பேராசிரியர்கள்.

 

இன்னும் சில பேராசிரியர்கள் துறைத்தலைவர் பதவியில் நிலவும் முரண்பாடுகள் குறித்தும் பேசினர்.

 

”பேராசிரியர் தங்கவேல் கணிதத்தில் பி.ஹெச்டி., முடித்திருக்கிறார். ஆனாலும், முதுநிலையில் கணினி பாடம் படித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்தால் அவரை நீண்ட காலமாக கணினி அறிவியல் துறைக்குத் தலைவராக நியமித்துள்ளனர். கணினி துறையில் அனுபவம் பெற்ற பேராசிரியர் சந்திரசேகர் போன்றோரெல்லாம் துறைத்தலைவராகக்கூட ஆகாமலேயே ஓய்வு பெற்றாலும் ஆச்சர்யமில்லை,” என்றும் கிண்டலாக கூறுகின்றனர்.

 

– பேனாக்காரன்