Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பேடிஎம் ஐபிஓ வெளியீடு! 18000 கோடி ரூபாய் முதலீடு திரட்ட திட்டம்; முதல் நாளிலேயே அமர்க்களம்!

முதலீட்டாளர்களிடையே பெரிதும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட பேடிஎம் பொதுப்பங்கு (ஐபிஓ) வெளியீடு திங்கள்கிழமை (நவ. 8) தொடங்கியது.

டிஜிட்டல் பேமென்ட் மற்றும்
நிதிச்சேவை வர்த்தகத்தில்
முன்னணியில் உள்ள ஒன்97
கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்குச்
சொந்தமான பேடிஎம்,
வணிக விரிவாக்கத்திற்காக
பொதுப்பங்கு வெளியீட்டின் மூலம்
18300 கோடி ரூபாய் திரட்ட
உத்தேசித்துள்ளது.

இந்திய பங்குச்சந்தை
வரலாற்றில் இதுவரை இல்லாத
வகையில் மிகப்பெரும் பொதுப்பங்கு
வெளியீடாக பேடிஎம் ஐபிஓ
கருதப்படுகிறது. கடைசியாக,
கடந்த 2010ம் ஆண்டு
கோல் இந்தியா ஐபிஓ மூலம்
15475 கோடி ரூபாய் திரட்டப்பட்டதே
பெரிய ஐபிஓ ஆக இருந்தது.

மோர்கன் ஸ்டேன்லி இண்டியா,
கோல்டுமேன் சாக்ஸ் (இண்டியா)
செக்யூரிட்டீஸ், ஆக்சிஸ் கேப்பிடல்,
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்,
ஜேபி மோர்கன் இண்டியா,
சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ்
இண்டியா, ஹெச்டிஎப்சி வங்கி
ஆகிய நிறுவனங்கள் இப்பொதுப்பங்கு
வெளியீட்டை நிர்வகிக்கின்றன.

பொதுப்பங்கு மூலம் திரட்ட
திட்டமிடப்பட்டுள்ள 18300 கோடி
ரூபாயில், 8300 கோடி ரூபாய்
மதிப்பிலான பங்குகள் புதிய
ஈக்விட்டி பங்குகளாக
வெளியிடப்படுகின்றன.
எஞ்சிய 10 ஆயிரம் கோடி
ரூபாய்க்கான பங்குகள்
ஏற்கனவே உள்ள பங்குதாரர்களுக்கு
ஓஎப்எஸ் (Offer for Sale) மூலமும்
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதாவது மொத்த ஒதுக்கீட்டில்
10 சதவீதம் சில்லரை
முதலீட்டாளர்களுக்கும்,
நிறுவனம் அல்லாத
முதலீட்டாளர்களுக்கு
15 சதவீத பங்குகளும்,
தகுதி வாய்ந்த முதலீட்டு
நிறுவனங்களுக்கு
(Qualified Institutional Investors)
75 சதவீத பங்குகளும்
ஒதுக்கப்பட்டு உள்ளன.

ஒரு பங்கின் விலை
2080 முதல் 2150 ரூபாய் ஆக
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதிகபட்ச விலை அடிப்படையில்
ஏலம் கோரப்படும். ஒரு லாட்டுக்கு
6 பங்குகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
ஒரு லாட் என்பது 6 பங்குகள் ஆகும்.
சில்லரை முதலீட்டாளர் ஒருவர்,
குறைந்தபட்சம் ஒரு லாட் முதல்
அதிகபட்சம் 15 லாட் (90 பங்குகள்)
வரை வாங்க முடியும்.
ஒரு லாட் விலை 12900 ரூபாய்.

பொதுப்பங்கு வெளியீட்டின்
முதல் நாளான நேற்றே (நவ. 8)
18 சதவீத பங்குகளுக்கான
சந்தா செலுத்தப்பட்டு உள்ளது.

அதாவது,
ஒதுக்கப்பட்ட 89 லட்சத்து 98076
பங்குகளில் 43 லட்சத்து 65420
பங்குகள் சில்லரை விற்பனை
பகுதிக்கு சந்தா செலுத்தப்பட்டது.
மொத்த பொதுப்பங்குகளின்
எண்ணிக்கை 4 கோடியே 83 லட்சத்து
89422 ஆகும்.

ஒரு பங்குக்கு 2149 ரூபாய்
என்ற விலையில் சந்தா செலுத்திய
ஆங்கர் முதலீட்டாளர்களிடம் இருந்து
ஏற்கனவே 8235 கோடி ரூபாய்
திரட்டியுள்ளது. பிளாக்ராக், கனடா
பென்ஷன் பிளான் இன்வெஸ்ட்மென்ட்
போர்டு, சிங்கப்பூர் மற்றும்
அபுதாபி சவ்ரின் ஃபண்ட் ஆகிய
நிறுவனங்கள் முதலீடுகளைச்
செய்திருக்கின்றன.

பேடிஎம் பொதுப்பங்குக்கு
முதலீடு செய்ய விரும்புவோர்
நாளை (நவ. 10) வரை
சந்தா பெற முடியும்.

பேடிஎம் நிறுவனம்,
தனது 18300 கோடி ரூபாய்
ஐபிஓவில் 50 சதவீத பங்குகளை
ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு
விற்பனை செய்து வருகிறது.
அதேநேரம், இந்நிறுவனத்தின்
முக்கிய பங்குதாரராக உள்ள
சீனாவின் ஆன்ட் குரூப் மற்றும்
ஜப்பான் சாப்ட்பேங்க் ஆகிய
நிறுவனங்கள் பேடிஎம்
நிறுவனத்தில் வைத்திருந்த
பெரும் பங்குகளை விற்பனை
செய்ய முடிவு செய்துள்ளது.

ஏலம் கோரிய முதலீட்டாளர்களுக்கு
பொதுப்பங்கு குறித்த தகவல்கள்
வரும் 15ம் தேதி தெரிய வரும்.
இந்திய பங்குச்சந்தையில்
நவ. 18ம் தேதி பேடிஎம்
பொதுப்பங்கு பட்டியலிடப்படும்.

ஏற்கனவே டிஜிட்டல் பேமெண்ட் வர்த்தகத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிறுவனம் என்பதால், முதலீட்டாளர்களிடையே பேடிஎம் ஐபிஓ மீது பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

 

நிதிநிலை எப்படி?

 

பேடிஎம் நிறுவனத்தின்
சொத்து மதிப்பு கடந்த 2019ல்
8766 கோடி ரூபாயாக இருந்தது.
2020ம் ஆண்டில் 10303 கோடியாக
உயர்ந்து, நடப்பு 2021ம் ஆண்டில்
9151 கோடியாக சற்று சரிந்துள்ளது.
எனினும், சொத்து மதிப்பு வகையில்
இந்நிறுவனம் வலிமையாக
இருப்பதாகவே சொல்லப்படுகிறது.

அதேநேரம்,
வரிகளுக்குப் பிறகான
இந்நிறுவனத்தின் லாபத்தைக்
கணக்கிடுகையில் 2019ம் ஆண்டில்
4230 கோடியாக இருந்தது.
2020ம் ஆண்டில் 2942 கோடியாகவும்,
நடப்பு ஆண்டில் 1701 கோடியாகவும்
உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில்
பேடிஎம் நிறுவனத்தின் லாபம்
பெருமளவு சரிந்துள்ளது.

அதேநேரம், பேடிஎம் நிறுவனத்தின் எதிர்கால வர்த்தக நடவடிக்கைகள் வலிமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பொதுப்பங்கு முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அன்றே குறைந்தபட்சம் 10 சதவீதம் லாபம் ஈட்ட முடியும் என்றும் சொல்கிறார்கள் பங்குத்தரகு ஆலோசகர்கள்.

 

– ஷேர்கிங்