Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்களில் 17% பேர் மட்டுமே பெண்கள்! ‘ஆண்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது’

இந்தியாவில் அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாடு என்பது கிட்டத்தட்ட ஒரு புரட்சிபோல உருவெடுத்து உள்ளது. ஆனாலும், மொபைல் போன் சிம் கார்டு பதிவுதாரர்களில் 17.4 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்பது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

நடப்பு ஆண்டில் 31.3.2018ம் தேதி வரையில், இந்தியாவில் 99 கோடி மொபைல் சந்தாதாரர்கள் இருப்பதும், அவர்களில் 17.24 கோடி பெண் சந்தாதாரர்கள் என்றும் இந்திய தொலைத்தொடர்புத்துறை ஆய்வு கூறுகிறது.

 

அதேநேரம், மொத்தம் உள்ள 79.58 ஆண் சந்தாதாரர்களில் 2.50 கோடி சந்தாதாரர்கள் பற்றிய விவரங்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறுகிறது.

 

மொபைல் சந்தாதாரர்களில் நிலவும் பாலின இடைவெளி குறித்து ஒவ்வொரு தொலைதொடர்பு வட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தன.

 

மும்பையில், மொபைல் சந்தாதாரர்களில் 11.85 சதவீதம் பேர் பெண்கள். இது ஹரியானா மாநிலத்தை விட வெறும் ஒரு சதவீதம் மட்டும்தான் அதிகம். ஹரியானாவில் 10.99 சதவீதம் பேர் பெண் சந்தாதாரர்கள்.

 

தாய்வழிச்சமூக பண்பாட்டுப் பின்னணியில் உள்ள வடகிழக்கு மாநிலங்களில் மொபைல் போன் சந்தாதாரர்களில் 31 சதவீதம் பேர் பெண்கள் என்கின்றன ஆய்வுகள்.

 

தலைநகர் புதுடெல்லியில் 15.29 சதவீதம் பேர் பெண் சந்தாதாரர்கள்.

 

தொலைதொடர்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”பெண்கள் பெயரில் சிம் கார்டு இணைப்பு பெறவில்லை என்பதற்காக பெண்கள் குறைந்த அளவில் மொபைல் போன் பயன்படுத்துவதாக கருத முடியாது. ஒரு வீட்டில் குடும்பத் தலைவனோ அல்லது வேறு ஆணோ தன் பெயரில் சிம் கார்டு இணைப்பு பெறுகிறார். அந்த எண்ணை வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் பயன்படுத்துவதும் கணிசமாக உள்ளது. அதெல்லாம் எங்கள் ஆய்வில் கணக்கில் கொள்ளவில்லை,” என்றார்.

 

இந்தியாவில் 47 சதவீதம் பேர் பெண்கள் உள்ள நிலையில், மொபைல் போனை சொந்த பெயரில் உடைமையாக்கிக் கொள்ளும் உரிமைகூட மறுக்கப்படுகிறது. சில கிராமங்களில், மொபைல் போன் பயன்படுத்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படும் சூழலும் இன்றும் நிலவுகிறது.

 

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 18 நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் மொபைல் போன் சந்தாதாரர்களில் மிக அதிக பாலின இடைவெளி இருப்பதாக லிரனேஷியா என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல், இந்தியாவில் 30 சதவீத பெண்கள் மட்டுமே இணையத்தை பயன்படுத்துவதாகவும் மற்றோர் ஆய்வு கூறுகிறது.