Friday, May 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அமமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்; பின்னணி என்ன?

டிடிவி தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியதன் பின்னணியில் கட்சிப் பெயர் மீதான அதிருப்தி மட்டுமின்றி, மேலும் சில காரணங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு எதிராக டிடிவி தினகரன் கம்பு சுழற்றத் தொடங்கியது முதலே, அவருக்காக மேடைதோறும் முழங்கியவர் நாஞ்சில் சம்பத். தினகரன் அணியில் கொள்கை பரப்புத் துணைச்செயலாளராகவும் இருந்து வந்தார்.

மதிமுகவில் இருந்து பிரிந்த அவர், கடந்த 2012ல் அதிமுகவில் ஐக்கியமானார். அப்போது ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட அதே பதவியில்தான் டிடிவி தினகரனும் அமர்த்தி இருந்தார்.

அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும், அவர் கேட்டிருக்கும் கட்சிப் பெயர்களில் ஒன்றை வழங்கலாம் என்றும் தீர்ப்பு அளித்தது.

இதை வரவேற்ற நாஞ்சில் சம்பத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ”குக்கர் கிடைத்தது. சிக்கல் தீர்ந்தது. யாருக்கோ விக்கல் என்று கேள்வி. நக்கல் செய்வது நடைபிணமாவது உறுதி” என்று தினகரன் எதிர்ப்பாளர்களை வார்த்தை ஜாலங்களால் தெறிக்க விட்டார்.

‘காலில் விழுவதும், கண்ணீர் சிந்துவதும், காரியம் சாதிப்பதும், காட்டிக் கொடுப்பதும் ஓ.பன்னீர்செல்வத்திற்குக் கை வந்த கலை’ என்று மேடைக்கு மேடை முழங்கினார், நாஞ்சில் சம்பத்.

கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரனால் மட்டும்தான் தமிழர்கள் விரும்பும் அம்மாவின் ஆட்சியை வழங்க முடியும் என்றும், அம்மாவிடம் உள்ள துணிச்சல் டிடிவி தினகரனிடம் மட்டுமே இருக்கிறது என்றும் கூறினார்.

சென்றடைந்த கூடாரத்திற்கு ஏற்ப, தன் விசுவாசத்தை ஒருபடி மேலே காட்டிக் கொள்வதில் நாஞ்சிலாருக்கும் கை வந்த கலைதான். டிடிவி தினகரனை அவர், ‘வருங்கால அமெரிக்க ஜனாதிபதி’ என்று மட்டும்தான் முழக்கமிடமில்லை.

இன்றைய நாளில் அரசியல் களத்தில் 24 மணி நேரம் என்பதேகூட ஒரு மாமாங்கம் போன்றதுதான். அதற்குள் எதுவும் நடந்தேறிவிடும்.

இந்த நிலையில்தான் கடந்த 15ம் தேதி டிடிவி தினகரன் மேலூரில், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அமைப்பை தொடங்கினார்.

தமிழகத்தில் புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் குறிப்பாக திராவிட கட்சிகளில் இருந்து பிரிந்து சென்று தொடங்கும்போது கட்சியின் பெயரில் அண்ணா, திராவிடம், கழகம் போன்ற சொற்களைத் தவறாமல் இடம்பெறச் செய்வதுண்டு. திராவிட அரசியல் களத்தில், இந்த சொற்களுக்கு இன்னும் சக்தி இருப்பதாக நம்புவதுதான் அதற்குக் காரணம்.

ஆனால் டிடிவி தினகரன் கட்சியில் அண்ணா, திராவிடம் போன்ற சொற்கள் இல்லாதது கண்டு அப்போதே பரவலாக விமர்சனங்கள் எழுந்தன.

அரசியல் களத்தில் புதிய வரவான தீபாவும்கூட தனது அமைப்பின் பெயரில் எம்ஜிஆர் பெயரைப் பயன்படுத்திக் கொண்ட நிலையில், அதிமுகவால் பெரிதும் பலனடைந்த தினகரனோ, கட்சிப் பெயரில் ஜெயலலிதாவுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்திருந்தார். எம்ஜிஆரை மறந்தது குறித்து யாருமே விமர்சிக்காதது எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

இந்நிலையில் கட்சியின் பெயரில் அண்ணா, திராவிடம் ஆகிய சொற்கள் இல்லை என்ற சப்பையான காரணங்களைக் கூறி நாஞ்சில் சம்பத் வெளியேறிருப்பது நகைப்புக்குரியது.

இத்தனை நாளும் டிடிவி தினகரனை, திராவிடர் தலைவராகத்தான் கருதி வந்தாரா நாஞ்சில் சம்பத்?, அவர் எப்போது அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றினார் என்பதையும் நாஞ்சிலார்தான் விளக்க வேண்டும்.

திமுகவிடம் கொஞ்சமே ஒட்டியிருந்த திராவிடர் சித்தாந்தம், கடவுள் மறுப்பு, பார்ப்பனர் அல்லாதோருக்கு ஆதரவான போக்குகளை அதிமுகவை தொடங்கியபோது எம்ஜிஆர் பாதி சிதைத்தார்.

அதன்பிறகு கம்பெனி ஆட்சி நடத்திய ஜெயலலிதா திராவிட சித்தாந்தத்தை அடியோடு குழிதோண்டி புதைத்தார். அங்கேயே கரைந்துவிட்ட சிந்தனையை, டிடிவி தினகரனிடம் இருப்பதாக நாஞ்சில் சம்பத் எப்படி, எதை வைத்து நம்பிக்கொண்டிருந்தார்?

வெளியேற வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு கண்டுபிடிக்கப்படும் மொன்னையான காரணங்கள்தான் அண்ணாவும் திராவிடமும்.

திராவிடம் பேசியே கட்சியை வளர்த்த திமுககூட எப்போதோ அந்தக் கொள்கையில் இருந்து விலகிப் போய்விட்டது. ஆட்சி அதிகாரப் பசியால் அறிஞர் அண்ணாகூட ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற முழக்கத்தை முன்வைக்க வேண்டியதாகியது.

திராவிடம் என்பதையே பெரியார்தான் கண்டுபிடித்தார் என்று நம்பிக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களும் உண்டு.

நிலைமை இவ்வாறு இருக்க, டிடிவி தினகரனை வானளாவப் புகழ்ந்து துதி பாடிய நாஞ்சில் சம்பத், வேறு முகாம் மாற தன்னை உள்ளத்தளவில் தயார்படுத்திக் கொண்டுவிட்டார். இப்போதைக்கு அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்திருக்கிறார். அது, தற்காலிகமானதுதான். அவர் தன்னுடைய முடிவில் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறார் என்பது விரைவில் தெரிந்து விடும்.

டிடிவி தினகரன் புதிதாக தொடங்கிய அமைப்பில், தன்னை இரண்டாவது வரிசைக்கு தரம் உயர்த்தி விடுவார் என்ற எதிர்பார்ப்பில் நாஞ்சில் சம்பத் இருந்தார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

ஆனால், அமமுக-ல் தங்க தமிழ்ச்செல்வனை கொள்கை பரப்பு செயலாளராக நியமித்த தினகரன், நாஞ்சில் சம்பத்திற்கு புதிய பதவி ஏதும் தராமல் கைவிட்டுவிட்டார். அதாவது, ஏற்கனவே உள்ள கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் தொடரட்டும் என்று விட்டுவிட்டார்.

இன்னொரு தரப்பினர், அமமுக-ல் பொருளாளர் பதவியை நாஞ்சில் சம்பத் எதிர்பார்த்து இருந்ததாகவும், அந்தப் பதவியிலும் தினகரன் தனது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்ததாலும் ரொம்பவே ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறுகின்றனர். இந்த விரக்தியின் உச்சக்கட்டம்தான் அவரை அமமுக&ல் இருந்து வெளியேற வைத்துள்ளதாகக் சொல்கின்றனர்.

நாஞ்சில் சம்பத்தின் முடிவை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலர் கேலி செய்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

நாஞ்சில் சம்பத்தின் இன்னோவா கார் மீண்டும் தாயகத்திலோ அல்லது அறிவாலயத்திலோ ஒதுங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

 

– வழிப்போக்கன்.