இயக்குநர் பாலா ஆக்கத்தில் வெளியான ‘நான் கடவுள்’ படத்தில் மாற்றுத்திறனாளிகளை வைத்து பிச்சை எடுக்கும் கொடூர வில்லனாக நடித்தவர், ‘மொட்டை’ ராஜேந்திரன்.
ஆரம்பத்தில் சண்டைக்கலைஞராக இருந்து வந்த அவர், ‘நான் கடவுள்’ படத்திற்குப் பிறகு முழு நேர நடிகரானார்.
‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திற்குப் பின்னர் அவருக்கு தொடர்ந்து காமெடி வேடங்களும் கிடைத்து வருகின்றன. இன்றைக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.
சந்தானம், முழுநேர கதாநாயகன் அவதாரம் எடுத்துவிட்ட நிலையில், இப்போது மொட்டை ராஜேந்திரனுக்கும் நாயகன் ஆசை எட்டிப்பார்த்துள்ளது.
எல்எஸ்கே மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மோகனா’ என்ற படத்தில் மொட்டை ராஜேந்திரன்தான் கதாநாயகன். அவருக்கு ஜோடியாக மலையாள வரவான கல்யாணி நாயர் நடிக்கிறார்.
இருவரும் திருமணம் முடிந்து தேனிலவுக்காக செல்லும் இடத்தில் ஒரு வீட்டை எடுத்து தங்குகின்றனர். அந்த வீட்டில் உள்ள பேய், அவர்களை ஒன்று சேர விடாமல் தடுக்கிறது. அவர்கள் பேயிடம் இருந்து தப்பித்தார்களா? வெற்றிகரமாக தேனிலவு கொண்டாடினார்களா? என்பதை காமெடியுடன் சொல்கிறது ‘மோகனா’.
‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், அஸ்மிதா, கிங்காங் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.