Sunday, December 10மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பட்டினியில்லா நாடுகளில் இந்தியாவுக்கு 100வது இடம்: இதுதான் புதிய இந்தியாவா?

பட்டினியில்லா நாடுகளில் இந்தியாவுக்கு 100வது இடம் கிடைத்துள்ளது. ஒவ்வொரு திட்ட அறிவிப்பின்போதும் பிரதமர் நரேந்திர மோடி, புதிய இந்தியா பிறந்துவிட்டதாகக் கூறுவதும், ஆய்வு முடிவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பற்று இருப்பதைக் காண முடிகிறது.

உலக உணவுக்கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் பட்டினியில்லா நாட்டை உருவாக்குதல், ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையகமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது.

இந்த அமைப்பு, ஆண்டுதோறும் உலகளவில் ஊட்டச்சத்து, குழந்தைகள் நலம், பட்டினி குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் உலகம் முழுவதும் 119 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டது. புள்ளிகள் அடிப்படையில் நாடுகளின் தகுதி பட்டியலை வரிசைப்படுத்துகிறது.

அந்த ஆய்வில், பட்டினியில்லா நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 100வது இடமே கிடைத்துள்ளது. இந்தியா, வெறும் 31.4 புள்ளிகளை மட்டுமே பெற்றிருப்பதாக இந்த ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இது, ‘சீரியஸ் லெவல்’ என்று அந்த அமைப்பு வகைப்படுத்தியுள்ளது.

ஆசிய நாடுகளில் நேபாளம் (72), மியான்மர் (77), பங்களாதேசம் (88), ஸ்ரீலங்கா (84) ஆகிய நாடுகள் இந்தியாவைக் காட்டிலும் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கின்றன. இத்தனைக்கும் இந்த நாடுகள் பெரும்பாலும் உணவுத்தேவைக்காக இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளையே நம்பி இருக்கக் கூடியவை.

சீனா, இந்தப்பட்டியலில் 29வது இடத்தில் இருக்கிறது.

அதேநேரம் பாகிஸ்தான் (106), ஆஃப்கானிஸ்தான் (107) ஆகிய நாடுகளில் பசியால் வாடுவோர், இந்தியாவைக் காட்டிலும் அதிகம். எப்போதும் போர் அச்சுறுத்தல் காட்டிக் கொண்டே இருக்கும் வட கொரியா நாடு 93வது இடத்திலும், எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திருக்கும் ஈராக் 78வது இடமும் பிடித்துள்ளன.

உலகம் முழுவதும் 9ல் ஒருவர் பட்டினியால் மிக மோசமாக பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

கடந்த 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, அதாவது மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் முடிவில், இதே அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியா 55வது இடத்தில் இருந்தது.

ஜன்தன், ஆதார், மொபைல் பேங்கிங் என ஜாம் ஜாம் என்று ஒவ்வொரு திட்டம் துவங்கும்போதும் பிரதமர் மோடி, புதிய இ ந்தியா பிறந்து விட்டதாக அறிவித்துக் கொண்டே இருந்தார். இன்னும் இத்தகைய அறிவிப்பு முடிந்தபாடில்லை. ஆனால், பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் நிலை பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கொண்டே இருந்ததை அவர் வசதியாக மற ந்து விட்டார். 2015ம் ஆண்டில் இந்தியா 80வது இடத்திலும், 2016ம் ஆண்டில் 97வது இடத்திலும் இருந்தது.

வழக்கம்போல் ஆப்பிரிக்க நாடுகள் இன்னும் பசி, பட்டினியால் வாடிக்கொண்டிருப்பதை இதன் சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. உலகளவில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாடுகளான சோமாலியா, சாட், சியாராலியோன், மடகாஸ்கர், ஸாம்பியா மற்றும் தெற்கு சூடான், சிரியா ஆகிய நாடுகள் பசி பட்டினியால் வாடும் மிக மோசமான நாடுகளாக இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவைப் பற்றிய மேலும் சில அதிர்ச்சிகரமான தகவல்களும் அந்த ஆய்வில் கிடைத்துள்ளது. அது, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பற்றியது.

ஐந்து வயதுக்கு உள்பட்ட இந்திய குழந்தைகளில் 20 சதவீதம் பேர், வயது மற்றும் உயரத்துக்கு ஏற்ற எடையில் இருப்பதில்லை. மேலும், 33 சதவீத குழந்தைகள் (5 வயதுக்கு உள்பட்ட) வயதுக்கேற்ற உயரத்திலும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. குள்ளமான குழந்தைகள் பிறப்பது அதிகரித்திருக்கிறது. ஊட்டச்சத்து போதாமைதான் இதற்கு முக்கிய காரணம் என்றும் அந்த அமைப்பு சொல்கிறது.

உலகில் அதிகளவில் உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் இருக்கிறது. உணவுப்பொருள்களை சேமிப்பதில் கோட்டை விடுவதால் அதை வீணாக்குவதிலும் இந்தியாதான் முதல் வரிசையில் இரு க்கிறது.

வளர்ச்சி என்பது எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பொருளாதார வளம் ஒரே இடத்தில் குவிவதும் இதுபோன்ற சிக்கல்களுக்கு ஆளாக்கும். ‘புதிய இந்தியா’ என்பது, எதிர்காலத்தில் ‘நோஞ்சான் குழந்தை’யாக இருந்து விடக்கூடாது.

source: www.ifpri.org

– பேனாக்காரன்.