Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கொடூரன் தஷ்வந்த்துக்கு தூக்கு தண்டனை: மக்களின் மனசாட்சி சொல்வது என்ன?

ஆறு வயது சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்புணர்வு செய்ததோடு, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த கொடூரன் தஷ்வந்த் வழக்கு ஒரு வழியாக இன்று (பிப்ரவரி 19, 2018) முடிவுக்கு வந்திருக்கிறது.

சிறுமியை பறிகொடுத்த பெற்றோருக்கு மகளின் கருகிய சடலமே கிடைத்தது. முழுதாகக்கூட கிடைக்கவில்லை. எல்லாவற்றையும் செய்துவிட்டு 24 வயதான தஷ்வந்த்தால் ஒரு சராசரி மனிதன் போலவே எப்போதும்போல எந்தவித குற்ற உணர்வும் இல்லாமலேயே நடந்து கொள்ள முடிந்திருக்கிறது.

ஊரே சிறுமியை காணாமல் தேடும்போது, தான் மட்டும் அதுபற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தால் எப்படி என அப்போது அவன் யோசித்திருக்கக் கூடும். அதனால்தான் அவனே அனகாபுத்தூர் பகுதியில் சிறுமியின் சடலம் ஒன்று பாதி எரிந்த நிலையில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் அளித்து, நல்ல பிள்ளை பெயர் எடுக்க முடிவு செய்திருந்திருக்கிறான்.

ஆனால், அதுவே அவனுக்கு தூக்குத் தண்டனையைப் பெற்றுத்தரும் என அப்போது அவன் யோசித்திருக்கவில்லை.

தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுமி ஹாசினி வழக்கில், கொடூரன் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையும், 46 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் அளித்து தீர்ப்பு அளித்திருக்கிறது, செங்கல்பட்டு மகளிர் சிறப்பு நீதிமன்றம்.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்த நீதிபதி வேல்முருகனை, நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் எல்லோருமே ‘நீதிபதி வேல்முருகன் வாழ்க…’ என்று கோஷமிட்டு வாழ்த்து தெரிவித்தனர். நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

தொழில்முறையைத் தாண்டிய மனித உணர்வும், தார்மீக அறத்தின் மீதான உள்ளக்கிடக்கையும்தான் அவர்களின் ஆரவாரத்திற்குக் காரணமாக பார்க்கிறேன்.

நீதிபதி வேல்முருகன், இந்திய தண்டனை சட்டத்தை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் சமூகத்தின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

ஒரு கட்டத்தில் தஷ்வந்த் நீதிபதியிடம் இரண்டு கோரிக்கையை முன்வைத்தான். ஒன்று, தனக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பது. மற்றொன்று, அபராதம் விதிக்கக் கூடாது என்பது.

இரண்டாவது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி வேல்முருகன், அவனுக்கு அபராதம் ஏதும் விதிக்கவில்லை.

ஆனால், ”சிறுமி கொலை வழக்கில் அதிகபட்ச தண்டனை கொடுக்காவிட்டால் நீதிமன்றம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பகத்தன்மை போய் விடும்,” என்று கருத்து தெரிவித்திருக்கிறார். அதன் பிறகுதான் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விவரங்களை அறிவித்துள்ளார்.

தண்டனை விவரங்களைக் கேட்டதும், சிறுமியை பறிகொடுத்த தந்தை பாபு, கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். தீர்ப்புக்குப் பின்னர் நீதிமன்ற அறையை விட்டு வெளியே வந்த அவர், ”இந்த தண்டனையை வரவேற்கிறேன். என் மகளுக்கு ஏற்பட்ட கதி வேறு யாருக்கம் ஏற்படக்கூடாது.

என் மகளுக்கு நியாயம் கிடைக்க போராடிய காவல்துறை, குரல் கொடுத்த ஊடகங்களுக்கு நன்றி,” என்றவர் அதற்குமேல் பேச வார்த்தைகள் வராமல் அழுதார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிரான வாதங்களும் இன்றைய நாளில் எழாமல் இல்லை. தூக்குத் தண்டனையை எதிர்க்கும் பலரும்கூட தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை வரவேற்று கருத்து தெரிவித்திருப்பதை சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது.

பலர், இதைவிட கொடூரமான தண்டனை இருந்தால் விதித்திருக்கலாம் என்றும் ஆவேசமாக கருத்து தெரிவித்து இருந்தனர். ட்விட்டர் சமூகவலைத் தளத்தில் #JusticeForHasini என்றும், #HasiniMurderCase என்றும் ஹேஷ்டேக் செய்திருந்தனர்.

கயல்விழி என்ற பதிவர், ”இன்னிக்கு #ஜஸ்டிஸ்பார்ஹாசினி என்று ஹேஷ்டேக் போடுகிறவன்ல பாதி பேர், ட்விட்டர்ல பொண்ணுங்கள ஏமாற்றக்கூடியவர்கள்தான்,” என்று பதிவிட்டு இருந்தார்.

அவருடைய கருத்து அப்படியே முகத்தில் அறைந்தது போல இருந்தது. பொதுவெளியில் பெண்ணியம் பேசக்கூடிய நம்மில் பெரும்பாலானோர், தனி அறையில் எந்தளவுக்கு சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்பது அவரவர் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.

வாய்ப்பு கிடைத்தால் எல்லோருமே இங்கு துச்சாதனர்கள்தான். அப்படி இல்லாதவர்கள் மிகச்சொற்பமே என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்.

தஷ்வந்த்துக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து மக்களின் மனவோட்டம் என்ன என்பதற்காக ட்விட்டரில் பதிவிட்ட சிலரின் கருத்துகளை இங்கே பகிர்ந்திருக்கிறோம். அதுவே ட்விட்டருக்கு வெளியே இருக்கும் வெகுசன மக்களின் உளவியலாகவும் இருக்கக் கூடும் என்பது என் நம்பிக்கை.

இதுபோன்ற வழக்குகளில் இன்னும் விரைவாக வழக்கை முடித்து, தீர்ப்பு வழங்க வேண்டும். அத்துடன், தீர்ப்பை நிறைவேற்றவும் தாமதிக்கக்கூடாது. அப்போதுதான் மேற்கொண்டு இதுபோன்ற அரக்கத்தனமாக குற்றங்கள் நடைபெறாமல் ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

 

– நாடோடி.