Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலத்தில் ‘மினி எமர்ஜென்ஸி!’ விவசாயிகளை நெருங்கினாலே கைது… சீமான் உள்பட 22 பேருக்கு காப்பு!!

 

சேலத்தில், எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் கருத்து கேட்கவோ, ஆறுதல் சொல்லவோகூட செல்லக்கூடாது என காவல்துறை மூலம் தமிழக அரசு ‘மினி எமர்ஜென்ஸி’ உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையும் மீறி விவசாயிகளை சந்திக்கச் சென்ற சீமான் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட 22 பேரை காவல்துறையினர் இன்று (ஜூலை 18, 2018) கைது செய்து, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துள்ளனர்.

 

சேலம் – சென்னை இடையிலான பசுமைவழி விரைவுச்சாலை எனப்படும் எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு சேலம் மாவட்ட விவசாயிகள், பொதுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்படும் மக்களிடம் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டு வருகின்றன.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி நிர்வாகிகளுடன் இன்று காலை, சேலம் அருகே உள்ள பாரப்பட்டி கூமாங்காடு கிராமத்தில் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளை நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார்.

அப்போது அங்கு வந்த சேலம் ரூரல் டிஎஸ்பி சங்கர்நாராயணன் தலைமையிலான மல்லூர் காவல்துறையினர், மக்களிடம் கருத்துகளைக் கேட்கக் கூடாது என்றும் உடனடியாக கிராமத்தை விட்டு வெளியேறுங்கள் என்றும் சீமானிடம் கூறினர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து சீமான் மற்றும் அவருடைய கட்சியைச் சேர்ந்த யுவராஜ்குமார், தேவி, ஜானகி, ஜெகதீசன், தமிழ்ச்செல்வம், சிவக்குமார், தமிழரசன், மணி, ஆதிதீபக், அழகரசன் ஆகிய 11 பேரை காவல்துறையினர் கைது செய்து, மல்லூரில் உள்ள வெங்கடா கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

 

இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கருத்து கேட்பதற்காக பாரப்பட்டி செல்ல முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர், சீலநாயக்கன்பட்டி அழகுநகர் அருகே அவர்களை தடுத்து நிறுத்தினர். பாரப்பட்டி உள்ளிட்ட எந்த கிராமத்திற்கும் விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசக்கூடாது என்று தடை விதித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடையை மீறி அவர்கள் செல்ல முயன்றதால் விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் துரைமாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், மாநில துணைத்தலைவர்கள் துளசிமணி (ஈரோடு), நல்லையா (தூத்துக்குடி), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாவட்ட செயலாளர் மோகன், பாலன் உள்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தேவா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

 

நாம் தமிழர் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு கூமாங்காடு கிராம விவசாயிகள் காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவத்திற்கு தமிழக முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்றும், விவசாயிகளை சந்திக்கக்கூட அனுமதி மறுப்பது ஜனநாயக படுகொலை என்றும் விவசாயிகள் கூறினர்.