Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

துணிச்சலின் முகவரி மீனாட்சி!

”தமிழகத்தின் முதல் பெண் தீயணைப்பு அலுவலர்”

“இப்போதுள்ள இளம்பெண்கள் எதையும் ஈஸியாக எடுத்துக்கொள்கிறார்கள். சொடுக்குப்போட்ட மாத்திரத்தில் எல்லாமே கிடைத்துவிட வேண்டும் என சினிமாத்தனமாக யோசிக்கிறார்கள். கனவுலகில் வாழ்கிறார்கள். அந்தக்கனவு கலையும்போதுதான், நிஜ வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பது தெரியும். பெண்களோ, ஆண்களோ யாராக இருந்தாலும் உழைப்பைக் கைவிடக்கூடாது. உழைத்தால்தான் மேலே உயர முடியும். எளிமையாகச் சொல்வதென்றால், உன் வாழ்க்கை உன் கையில்,” என்கிறார், மீனாட்சி விஜயகுமார்.

தமிழகத் தீயணைப்புத்துறையில் பெண்களும் பணியாற்றலாம் என்ற அறிவிப்பு வந்தபோது, மாவட்ட தீயணைப்பு அலுவலராக முதன்முதலில் இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர், மீனாட்சி விஜயகுமார். இவர் சென்னையில் நியமிக்கப்பட்டதால், அப்போதே பெரிய அளவில் ஊடக கவனம் பெற்றவர்.

துறையில் இன்றுவரை அப்பழுக்கின்றி பணியாற்றி வரும் மீனாட்சி விஜயகுமார், தற்போது தீயணைப்புத்துறை துணை இயக்குநராக வேலூரில் பணியாற்றி வருகிறார். அவருடைய நேர்மைகூட, மரபணு ரீதியாகவே ஒட்டியிருக்க வேண்டும். ஆமாம். காமராஜர் ஆட்சியின்போது உள்துறை அமைச்சராக இருந்த, கக்கனின் மகன்வழி பேத்தி இவர்.

தந்தை பத்மநாதன், ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர். தாய், கிருஷ்ணகுமாரி. மருத்துவர். தந்தை மறைந்து விட்டார். கணவர் விஜயகுமார், ‘ஏர் இந்தியா’வில் பொது மேலாளர். ஒரே மகன், ஷித்திஜ்.

பள்ளி நாட்களில், படிப்பில் மட்டுமின்றி, தடகள விளையாட்டுப் போட்டிகளில் ஐந்து முறை சாம்பியன், மாணவ தலைவர் என எல்லா ஏரியாக்களிலும் இறங்கி அடித்தவர்; கடந்த 2010ம் ஆண்டு, லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த தீயணைப்புத்துறை அலுவலர்களுக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதலில் தங்கம் வென்றதிலும், ‘முதல் தங்க மங்கை’ என்ற சிறப்பையும் பெற்றார். 2012ல் சிட்னியில் நடந்த சர்வதேச விளையாட்டுப் போட்டியில் டென்னிஸிலும் தங்கம் வென்றார். சிறு வயதில் இருந்த அதே உத்வேகம் இன்றுவரை அவரிடம் தொடர்கிறது. இனி அவர்…

தீயணைப்புத்துறைக்குள் எப்படி வந்தீர்கள்?

எங்கள் குடும்ப வகையறாவில் பலர் சீருடைப்பணியிலோ, அரசுப்பணியிலோ இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர். நாமும் நாலு பேருக்கு உதவ வேண்டும் என்றால் அரசுப்பணிதான் சரியென்று பட்டது. அதன்பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு இரவு, பகலாக 24 மணி நேரமும் வெறித்தனமாக படித்தேன்.

பலர் அரசுத்தேர்வுக்காக ஏதோ பெயரளவில் படிக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை, “அது கிடைத்தால்தான் நாம் இனி உயிர் வாழ முடியும்” என்ற வெறியுடன் படிக்க வேண்டும் என்பேன்.

முதல் முயற்சியிலேயே குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றேன். 2000ம் ஆண்டிலேயே தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டாலும், அப்போது தீயணைப்புத்துறையில் பெண்களை நியமிப்பதற்கான அரசாணை வராமல் இருந்தது. பின்னர் 2003ம் ஆண்டு முதன்முதலாக சென்னையில் டி.எஃப்.ஓ. பணியில் நியமிக்கப்பட்டேன்.

முதல் விபத்து அழைப்பு பற்றி?

தீயணைப்பு வீரர் என்பவர் 24 மணி நேரமும் மிகுந்த விழிப்புடன் இருக்கக் கடமைப்பட்டவர். மற்ற எந்த துறையைக் காட்டிலும் இந்த துறையில் ஆபத்து அதிகம். சென்னையில் ஒரு குடிசைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த தகவல்தான், நான் முதன்முதலில் களத்தில் இறங்கி பணியாற்றிய அழைப்பு.

தீயணைப்புத்துறை இயக்குநராக இருந்த டோக்ரா சார், ‘நீங்கள் முதலில் ஒரு ஃபயர் மேன். அதன்பிறகுதான் அதிகாரி’ என்று அடிக்கடி சொல்வார். இன்றுவரை நான் என்னை ஒரு முதன்மை தீயணைப்பு வீரராகத்தான் கருதுகிறேன். கிட்டத் தட்ட 100 குடிசைகளில் தீ பரவியதாக தகவல். நான்தான் அந்த இடத்தில் முதல் ஆளாகப் போய் நின்றேன்.

மறக்க முடியாத சம்பவம் என்றால்….

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திருவல்லிக்கேணியில் பழமையான ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், நானும் என் குழுவினரும் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்றோம். ஏழெட்டு மணி நேரம் போராடி, இடிபாடுகளுக்குள் சிக்கிக்கிடந்த இரண்டு பேரை உயிருடன் மீட்டோம். பிறகு, ஒரு சிறுவன் கதறும் சத்தம் கேட்டது.

இடிபாடுகளுக்குள் இக்கட்டான நிலையில் இருப்பது தெரியவந்தது. டிரில்லர் மெஷின் மூலம் ஒரு தூணில் துளையிட்டு, அந்தச் சிறுவனை உயிருடன் மீட்டோம். இந்த சம்பவத்தை என்னால் இன்று வரை மறக்க முடியாது. இந்த செயலுக்காக எனக்கும், என்னுடன் மீட்பு பணியில் பங்கேற்ற நான்கு வீரர்களுக்கும் குடியரசுத்தலைவர் ‘வீரதீர சாதனையாளர் விருது’
கிடைத்தது.

அதேபோல், கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான சம்பவத்தை இப்போது நினைத்தாலும் துக்கம் அடைக்கிறது. அந்த தீ விபத்து பணியில் நான் ஈடுபடாவிட்டாலும், அதுபோன்ற சம்பவம் இனி ஒருபோதும் நடந்துவிடக்கூடாது.

அதனால்தான் எந்த ஒரு கட்டடத்துக்கும் குறிப்பாக பள்ளிகளுக்கு அனுமதி வழங்கும் போது நன்கு ஆய்வு செய்தபிறகே ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வழங்கி வருகிறேன்.

உங்கள் நினைவுக் குறிப்புகளில் கக்கன் தாத்தா இன்னும் 
இருக்கிறாரா?

உப்பு சத்தியாகிரகப் போராட்டத் தில் கலந்துகொண்டபோது போலீசார் தாக்கியதில் கக்கன் தாத்தாவின் தலையில் ஒரு தழும்பு ஏற்பட்டது. அதை என்னிடம் அவர் காண்பித்து இருக்கிறார். அவர்தான் எனக்கு ‘மீனாட்சி’னு பேர் வைத்ததாக அம்மா சொல்வார்.

ஒருபோதும் மக்கள் வரிப்பணம் வீணாகக்கூடாது என்பதில் கக்கன் தாத்தா கண்டிப்பாக இருப்பாராம். அவரிடம் இருந்த நேர்மை, என் அப்பாவிடம் இருந்தது.

அவர்களைப்போல் இப்போதும் அரசியலிலும், அரசுத்துறையிலும் நேர்மையானவர்கள் பலர் இருக்கிறார்கள். ஏனோ அவர்கள் எல்லாம் வெளியே தெரிவதில்லை. நேர்மைக்கு அடிப்படையே, தனி மனித ஒழுக்கம்தான்.

இந்த துறையில் பணியாற்றும் துணிச்சல் எப்படி வந்தது?

என் அம்மாவை துணிச்சல் மிகுந்த பெண்ணாகத்தான் பார்க்கிறேன். என் துணிச்சல், அவரிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும். நானும் என் தங்கையும் சின்னஞ்சிறு குழந்தைகளாக இருக்கும்போதே அப்பா இறந்து விட்டார். தாத்தாக்கள் இறந்தபின் குடும்பமும் சிதறிவிட்டது.

ரெண்டு பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு எப்படி வாழப்போகிறாள் என்று அம்மாவைப் பார்த்து பலர் சொல்லி இருக்கிறார்கள்.
அப்போதெல்லாம் தனியாக இருக்கும் பெண்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கக்கூட யோசிப்பார்கள்.

எப்பாடுபட்டாவது எங்களை நல்லபடியாக படிக்கவைத்து, வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதில் அம்மா உறுதியாக இருந்தார். அவர் கிளினிக்கில் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வர நள்ளிரவு 12 மணிகூட ஆகிவிடும். நான்தான் சமைப்பேன். நானும் தங்கையும் சாப்பிட்டுவிட்டு, அம்மாவுக்கும் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு தூங்கிவிடுவோம்.

எத்தனையோ நாள் இரவுகளில் எங்களை நினைத்து விசும்பி அழுததை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட நிலையில்கூட அவர் கடின உழைப்பையும், நேர்மையையும் கடைப்பிடித்தார்.

தொடர்புக்கு: 94450 86104.

#புதிய அகராதி இதழ் சந்தா தொடர்புக்கு: 9840961947.