Saturday, March 2மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திறக்கப்பட்டது ஜெயலலிதா சிலையா? அல்லது காந்திமதி சிலையா?; நெட்டிஸன்கள் கிண்டல்

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அவருடைய முழு உருவச்சிலை திறக்கப்பட்டது. சிலை, ஜெயலலிதா உருவத்தோடு பொருந்திப் போகாமல் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஆளும் அதிமுகவினர் விமர்சையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். அவருடைய பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 24, 2018), சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதாவின் 7 அடி உயரமுள்ள முழு உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது.

அங்கு ஏற்கனவே உள்ள எம்ஜிஆர் சிலை அருகிலேயே ஜெயலலிதாவின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்.

”இந்தியாவிலேயே கட்டுக்கோப்புடன் கட்சி நடத்திய ஒரே தலைவர் அம்மா அவர்கள்தான்” என்று முதல்வர் இபிஎஸ் புகழாரம் சூட்டினார். ”ஆட்சி நடத்துவது அம்மா. கட்சியை நடத்துவது தொண்டர்கள்” என்று ஓபிஎஸ்ஸூம் தன் பங்குக்கு புகழ்மாலைகளை பறக்க விட்டார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு, கட்சி வளாகத்தில் கூடியிருந்த தொண்டர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது. தன் பக்கம்தான் அதிக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை இபிஎஸ்ஸூக்கு சொல்லாமல் சொன்னதுபோல் இருந்தது துணை முதல்வரின் பேச்சு.

இந்தப் பேச்சினூடாக அவர், ”அரசியல் வானில் பறக்க நினைக்கும் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் வெடித்துச் சிதறும்,” என்றும் கமல், ரஜினி ஆகியோருக்கும் பூடகமாக சாபம் விட்டு அதிரடித்தார். அட…ஓபிஎஸ்ஸூக்கு இப்படியெல்லாம்கூட பேசத்தெரியுமா என்பதுபோல் இருந்தது. நல்லதொரு முன்தயாரிப்பு.

சிலை திறப்பு விழாவின் ஒரு பகுதியாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக, ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ தமிழ் நாளிதழ் வெளியீடும் அமர்க்களமாக அரங்கேறியது.

மன்னார்குடி கும்பலிடம் இருந்து கட்சியையும், தொண்டர்களையும் தக்க வைத்துக்கொள்வதில் இபிஎஸ், ஓபிஎஸ் ஏதாவது செய்யப்போக, அது ஒவ்வொன்றும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து கேலிக்குரியதாகி வருகிறது.

சில நாள்களுக்கு முன்பாக, பிரதமர் நரேந்திரமோடி சொன்னதால்தான் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்ததாக ஓபிஎஸ் ஒரு சரவெடியை கொளுத்திப் போட்டார்.

முதல்வரின் ஊதுகுழலான அமைச்சர் ஜெயக்குமார், கமலின் அரசியல் வருகையை கிண்டல் செய்யும் விதமாக அவர் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை. எதற்கும் உதவாது என்றார்.

இன்று ஜெயலலிதா சிலையும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியிருக்கிறது.

இன்று திறக்கப்பட்டது ஜெயலலிதாவின் சிலையே அல்ல என்றும், அது அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் சாயலில் இருப்பதாகவும், சிலர் நடிகை கா ந்திமதியின் முகத்துடன் ஒத்துப்போவதாகவும், இன்னும் சிலர் சசிகலாவின் சாயலில் சிலையின் முக அமைப்பு இருப்பதாகவும் கிண்டலாக கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

நடிகை கஸ்தூரி, ஜெயலலிதா சிலை குறித்து இரண்டு விதமான பதிவுகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதல் பதிவில், ”ஜெயலலிதா சிலையை வடிவமைத்த சிற்பியை பாராட்டுகிறேன். ஒரே சிலையில் இரண்டு உருவங்களை செதுக்கியுள்ளார். கருப்பு கண்ணாடியும், தலையில் தொப்பியும் அணிவித்தால் அப்படியே எம்ஜிஆர் சிலையாகி விடும்” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில், ”அம்மா சிலையை வடிக்கச் சொன்னால் சிற்பி அவரோட சொந்த அம்மா சிலையை வடிச்சிட்டாரு போல. கமலை பார்த்து ஊழல் புகாருக்கு ஆதாரம் இருக்கான்னு கேட்கற மங்குனிஸ், இனி கட்சி ஆபீஸ்ல இந்த சிலைய பார்த்தாலே போதுமே,” என்று தெறிக்கவிட்டிருக்கிறார். இதே கருத்தை கமல்ஹாஸனும்கூட முன்மொழிய வாய்ப்பு இருக்கிறது.

சிலர், சிலை வடிவமைப்பதில் கூட கமிஷன் பார்த்துவிட்டார்கள். அதனால்தான் ஏடாகூடமாக சிலை வந்திருக்கு என்று பதிவிட்டுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பதிவர், ”ஜெயலலிதா சிலையை செதுக்கச் சொன்னா, வெங்கய்யா நாயுடு சிலையை செய்திருக்கீங்க. உங்க விசுவாசத்தைக் காட்ட அளவே இல்லையா?” என்று கேலி செய்துள்ளார்.

ஜெயலலிதா சிலை வடிவமைப்பு குறித்து ட்விட்டரில் #JayalalithaaStatue என்று ஹேஷ்டேக் செய்துள்ளனர். இந்தியா முழுவதும் இன்று வைரல் ஆன பதிவுகளில் ஜெ., சிலை விவகாரம் ஆறாவது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஊடகர்கள் கேட்டபோது, ”மனசாட்சி இல்லாத மிருகங்கள்தான் அம்மாவின் சிலையை வளர்மதியுடன் ஒப்பிட்டு பேசும்,” என்று சற்றே கடுமை காட்டினார்.

மற்றொரு அமைச்சர் கடம்பூர் ராஜூ, ”சிலையை விமர்சிப்பவர்கள் அம்மாவின் உண்மையான விசுவாசிகளாக இருக்க முடியாது. தகுதியற்றவர்கள்தான் கருத்து தெரிவிக்கிறார்கள்,” என்றார்.

விழாவின்போது, ஜெயலலிதா சிலையை செய்த சிற்பி பிரசாத்தை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து, மோதிரம் அணிவித்தார். அதுவும்கூட, சமூகவலைத்தளவாசிகளால் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

இன்னும் சிலர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மனைவியின் முகச்சாயலுடன் ஜெயலலிதாவின் சிலை ஒத்துப் போவதாகவும் திரி கொளுத்திப் போட்டுள்ளனர். அதுவும் சமூக வலைத்தளங்களில் இப்போது வைரல் ஆகியுள்ளது.

அரசியல் களத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜெயலலிதா மையப்படுத்திய சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. இப்போது சிலையாகி நிற்கும்போதும்கூட.

இங்கே இயற்கையின் சதிராட்டம் சற்றே ஓர் அழுத்தமான பாடத்தையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, குமரியில் வீற்றிருக்கும் திருவள்ளுவர் சிலையை, தனது அரசியல் எதிரியான கருணாநிதி வைத்தார் என்ற ஒரே காரணத்துக்காக அதை சிதைக்க முயன்றார்.

இப்போது சிலையாகவும் சிதைந்து போயிருக்கிறார் ஜெயலலிதா.

இங்கே இயற்கையின் சதிராட்டம் சற்றே ஓர் அழுத்தமான பாடத்தையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

 

– பேனாக்காரன்.