Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கொலையை மூடி மறைக்கிறதா போலீஸ்? 8 ஆண்டுக்கு பிறகு சடலம் தோண்டி எடுப்பு! சிபிசிஐடி தீவிர விசாரணை!!

சேலம் அருகே,
சந்தேக மரண வழக்கை
சரியாக புலனாய்வு செய்யாததால்
எட்டு ஆண்டுகள் கழிந்தும்
தூக்கம் தொலைத்து நிற்கிறது
சேலம் காவல்துறை.
சிபிசிஐடி காவல்துறை மீண்டும்
சடலத்தை தோண்டி எடுத்து
விசாரணை நடத்தத் தொடங்கியுள்ள
நிலையில், இளைஞரின்
மரணத்திற்குக் காரணமானவர்கள்
முதல் வழக்கை நீர்த்துப்
போகச் செய்தவர்கள் வரை
பலரும் கிலி அடித்துக்
கிடக்கின்றனர். 

மணிகண்டன்

சேலம் மாவட்டம் தளவாய்ப்பட்டி அருகில் உள்ள சித்தனூர் காத்தவராயன் கோயில் அருகில் வசிப்பவர் ராஜூ. இவருடைய மனைவி சகுந்தலா. கூலித்தொழிலாளிகள். இவர்களுடைய ஒரே மகன் மணிகண்டன் (30). அருகில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கூலித்தொழிலாளியாக இருந்தார். இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு தற்போது 18, 14, 11 வயதுகளில் மூன்று மகன்கள் உள்ளனர்.

 

கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 19ம் தேதியன்று பகல் 11 மணியளவில், அதே ஊரைச் சிலர் மணிகண்டனை கண்மூடித்தனமாக தாக்கியதில், அவர் குற்றுயிரும் குலையுயிருமாக போராடிக் கொண்டிருந்தார். அப்படியே அவரை தோளில் தூக்கி வந்து குறுகலான ஒரு தெருவில் வீசிவிட்டு அந்த கும்பல் ஓடிவிட்டது.

 

தகவல் கேட்டு துடிதுடித்துப் போனார் சகுந்தலா. தங்கா என்பவரின் வீடு அருகே தெருவில் மகன் நிலைகுலைந்து கிடந்ததைக் கண்டு அவரை மடியில் கிடத்தி, குடிக்கத் தண்ணீர் கொடுத்தார். ஒரு மடக்கு தண்ணீர் உள்ளே செல்வதற்குள் தாயின் மடியிலேயே உயிரிழந்தார் மணிகண்டன். இச்சம்பவம் குறித்து சகுந்தலா, அன்று மதியம் இரும்பாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

 

சித்தனூரைச் சேர்ந்த கோவிந்தராஜ், ஏழுமலை, முட்டை ராஜா என்கிற விஜயராஜா, அப்போதைய ஊராட்சிமன்ற 4வது வார்டு உறுப்பினர் ராம்குமார் ஆகியோர் தன் மகனை அடித்துக் கொன்று விட்டதாக புகாரில் கூறியிருந்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், சந்தேக மரண வழக்காக, சிஆர்பிசி பிரிவு 174 (3)ல் பதிவு செய்தனர்.

ராஜு – சகுந்தலா

அதற்கு அடுத்த நாள் (20.12.2012), சேலம் அரசு மருத்துவமனையில் மணிகண்டனின் சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உடற்கூறாய்வு முடிந்த பிறகு சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சகுந்தலாவின் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் அவர்களுக்குச் சொந்தமாக ஒரு மேட்டு நிலம் உள்ளது. அந்த நிலத்திலேயே மகனின் சடலத்தைப் புதைத்தனர். உடற்கூறாய்வுக்குப் பிறகு சடலம் பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்டு, எப்படி பொட்டலாமாகக் கட்டிக் கொடுக்கப்பட்டதோ அப்படியே புதைத்து விட்டனர்.

 

இதற்கிடையே, புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுள் ஒருவரான கோவிந்தராஜ், ”மணிகண்டனை நான்தான் உருட்டுக் கட்டையால் அடித்தேன்” என்று கூறி, இரும்பாலை காவல்நிலையத்தில் சரணடைந்தார். அதன்பிறகு, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. சம்பவத்தில் தொடர்பு உடைவர்களாக சொல்லப்பட்ட ஏழுமலை, முட்டை ராஜா, ராம்குமார் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச்சென்ற காவல்துறை, இரண்டு நாள் கழித்து விட்டுவிட்டனர். கோவிந்தராஜை மட்டும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

இந்நிலையில், மணிகண்டனுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்ததால், அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறியிருந்தனர். இது ஒருபுறம் இருக்க, இரண்டே மாதத்தில் கோவிந்தராஜூம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னர் இந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. 8 ஆண்டுகள் ஆகியும் வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

சடலம் புதைக்கப்பட்ட இடம்

இந்த வழக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தன் மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவன் சாவுக்கு நீதி வேண்டும் என்றும் கண்ணீர் விட்டு கதறினார் சகுந்தலா. வக்கீல் வைத்து வாதாடும் அளவுக்கு வசதி இல்லை என்பதோடு மனதிலோ உடலிலோ தெம்பும் இல்லை என்றனர் பெற்றோர். அதையடுத்து நீதிமன்றமே வழக்கறிஞர் இனியன் செந்தில் என்பவரை சகுந்தலா தரப்பில் ஆஜராக நியமித்து உத்தரவிட்டது. அவருடைய முயற்சியால், இந்த வழக்கை மீண்டும் முதலில் இருந்து புலன் விசாரணை செய்யும்படி சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட்டது, மாவட்ட நீதிமன்றம்.

 

இதையடுத்து, சேலம் சிபிசிஐடி காவல்துறை டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் 8 ஆண்டுக்கு முன்பு புதைக்கப்பட்ட மணிகண்டனின் சடலத்தை, கடந்த 2020, ஜூன் 30ம் தேதி தோண்டி எடுத்தனர். தலையில் முடி அடர்த்தியாக காணப்பட்டது. தொடை, கெண்டைக்கால் பகுதிகளில் சதைகள் அரிக்கப்பட்டு இருந்தாலும், பெரிய அளவில் சிதிலம் அடையாமல் இருந்தது. மண்டை ஓடு, தொடை எலும்பு, கால் எலும்பு உள்ளிட்ட சில உறுப்புகளை தடய அறிவியல் பரிசோதனைக்காக சேகரித்துச் சென்றனர். சடலம் தோண்டப்பட்ட இடத்திலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை மருத்துவர் கோகுலரமணன் உடற்கூறாய்வு செய்தார். இப்பணிகள் அனைத்தும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

 

திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக நாமும் விசாரணையில் இறங்கினோம். மணிகண்டனின் பெற்றோரைச் சந்தித்தோம்.

 

”எங்களுக்குச் சொந்தமாக
கொஞ்சம் மேட்டு நிலம்
இருக்கிறது. அந்த நிலத்துக்கு
ஊர்க்கவுண்டரான மணி என்பவரின்
நிலத்தின் வழியாகத்தான் சென்று
வந்தோம். இது தொடர்பாக
அவருக்கும் எங்களுக்கும்
அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மணிகண்டன் இறப்பதற்கு
ஒரு வாரத்திற்கு முன்பு,
ஊர்க்கவுண்டர் மணியின்
தூண்டுதலின்பேரில் ராம்குமார்,
முட்டை ராஜா இன்னும் சில பேர்,
என் மகனை துரத்தி வந்து
தாக்கினர். அவன் பயந்து
கொண்டு வீட்டுக்குள் புகுந்து
கதவை மூடிக்கொண்டான்.

 

அதனால் ஆத்திரம் அடைந்த
அந்த கும்பல் எங்கள் வீட்டின் மீது
கற்களை வீசி எறிந்தனர்.
மகனின் புது மோட்டார் சைக்கிளையும்
அடித்து நொறுக்கினர். இன்ஜின் மீது
பெரிய கல்லை தூக்கிப் போட்டு
சேதப்படுத்தினர். ராம்குமாரின்
உறவினரும், இப்போதைய
தளவாய்ப்பட்டி ஊராட்சி மன்றத்
தலைவருமான திமுகவைச் சேர்ந்த
ராஜா, ஊர்க்கவுண்டர் மணி ஆகியோர்
இதையெல்லாம் வேடிக்கைப்
பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து அப்போதே
இரும்பாலை காவல் நிலையத்தில்
புகார் அளித்தேன். அவர்கள்
நடவடிக்கை ஏதும்
எடுக்கவில்லை.

 

இந்த சம்பவம் நடந்து
ஒரு வாரம் கழித்து,
19.12.2012ம் தேதியன்று காலை
கோவிந்தராஜ் தனது வீட்டுக்குள்
வைத்து என் மகனை கட்டையால்
சரமாரியாக தாக்கினார்.
ராம்குமார், ஏழுமலை,
முட்டை ராஜாவும் தாக்கினர்.
பின்னர் தலை தொங்கிய நிலையில்
என் மகனை கோவிந்தராஜூம்
மற்றவர்களும் தூக்கி வந்தனர்.
தங்கா என்பவர் வீட்டு வாசல்
அருகே மணிகண்டனை அப்படியே
வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
உசுருக்குப் போராடிக் கொண்டிருந்த
அவனுக்கு ஒரு வாய் தண்ணீர்
கொடுக்கக்கூட யாரும் முன்வரவில்லை.
என் பேரன் வீட்டுக்குச் சென்று
தண்ணீர் எடுத்து வந்து தருவதற்குள்
மணிகண்டன் என் மடி மீதே
உசுர விட்டுட்டான்.

 

எங்க மவனோட சாவுக்கு
ஒரு நியாயம் கிடைக்கணும்.
வக்கீல் இனியன் செந்தில்
தெய்வம்போல வந்து
போராடினதாலதான்,
இன்னிக்கு இந்த வழக்கு
சிபிசிஐடி கைக்குப் போயிருக்கு.
அவங்களால்தான் என் பையன்
சாவுக்கு நியாயம் கிடைக்கும்னு
நம்புறேன்,” என்று கண்ணீர்
மல்கக் கூறினர்,
மணிகண்டனின் பெற்றோர்.

 

சகுந்தலாவின் வீட்டில் இருந்து
சுமார் 500 அடி தூரத்தில் வசிக்கும்
அமராவதி என்ற மூதாட்டி,
சம்பவத்தன்று குற்றுயுயிராக
போராடிக் கொண்டிருந்த
மணிகண்டனை கோவிந்தராஜ்
தோளில் சுமந்து வந்ததை
நேரில் பார்த்ததாகவும்,
தன் வீட்டு வழியாக வரக்கூடாது
என்று சத்தம் போட்டதால்
தங்காவின் வீட்டு வழியாகச்
சென்றதாகவும் கூறினார்.

 

மணிகண்டனின் தாயார்
சகுந்தலாவிடம் விசாரித்தபோது,
தன் மகனுக்கு பீடி புகைக்கும்
பழக்கம் மட்டுமே இருந்ததாகவும்,
அவருக்கு கஞ்சா பழக்கமெல்லாம்
கிடையாது என்றும் கூறினார்.
ஆனால், மகன் மரணம் குறித்து
8 ஆண்டுக்கு முன்பு அளித்த
புகாரில், அவருக்கு கஞ்சா
பழக்கம் இருந்ததாகவும்,
அதனால் போதையில் அடிக்கடி
ஊருக்குள் தகராறில் ஈடுபட்டு
வந்ததாகவும் கூறியிருக்கிறார்.
எழுதப் படிக்கவே தெரியாத
சகுந்தலா அவ்வாறு கூறினாரா
அல்லது காவல்துறையே
இடையில் அப்படியான சொற்களைச்
சேர்த்து எழுதிக் கொண்டு
சகுந்தலாவிடம் விரல் ரேகையைப்
பெற்றுக் கொண்டார்களா என்ற
அய்யமும் எழாமல் இல்லை.

 

மகனின் மரணத்துக்குக்
காரணமானவர் என்ற சந்தேகப்
பட்டியலில் உள்ளவர்களுள்
ஒருவரான ஏழுமலையைச்
சந்தித்தோம். இவருடைய வீடும்
சித்தனூர் காத்தவராயன் கோயில்
அருகில்தான் உள்ளது.
அவரும், மணிகண்டனும்
பங்காளிகள்.

ஏழுமலை

”சார்… மணிகண்டன் மரண வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கில் சரணடைந்த கோவிந்தராஜ் என் உடன் பிறந்த தங்கை லதாவின் கணவர். மணிகண்டன் மரணம் தொடர்பாக கோவிந்தராஜை போலீசார் ஜீப்பில் ஏற்றிச்சென்றது குறித்து எனக்கு லதா போன் செய்தார். அதைப்பற்றி விசாரிப்பதற்காக சென்றபோது என்னையும், ராம்குமார், முட்டை ராஜா ஆகியோரையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு இரும்பாலை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கே ரெண்டு நாள் வைத்து விசாரித்துவிட்டு கோவிந்தராஜை தவிர எங்கள் மூவரையும் விட்டுவிட்டனர்.

 

ராம்குமாருக்கு கொஞ்சம் அரசியல் செல்வாக்கு இருக்கு. அதனால் ராம்குமாரும், முட்டை ராஜாவும் கோவிந்தராஜிடம் எதை எதையோ கூறி கொலைப்பழியை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினர். ஜாமினில் எடுப்பதாகவும், அதுவரை குடும்பத்திற்கான செலவுகளை பார்த்துக் கொள்வதாகவும் கூறினர். சித்தர் கோயில் அருகே வைத்து, என்னிடம் 2 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து, கொஞ்ச நாள் ஊர் பக்கமே வராதே என்று சொல்லி அனுப்பி விட்டனர். அப்போது, இப்போதைய பஞ்சாயத்து தலைவரான ராஜாவும் உடன் இருந்தார். அதன்பிறகு என்னை போலீசார் எதற்காகவும் விசாரிக்கவில்லை,” என்றார் ஏழுமலை.

 

இதற்கிடையே, ஏழுமலையின் தங்கை, அதாவது கோவிந்தராஜின் மனைவி லதாவிடம், மணிகண்டன் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் அதனால்தான் அவரை கோவிந்தராஜ் சரமாரியாக தாக்கினார் என்றும் ஒரு தகவல் கிடைத்தது. இதுபற்றி மணிகண்டனின் தாயாரும் நம்மிடம் முதல்கட்ட விசாரணையின்போது கூறவில்லை.

 

லதாவிடம், மணிகண்டன் தவறாக நடக்க முயற்சித்தாரா என ஏழுமலையிடம் விசாரித்தோம். அதற்கு அவர், ”என்னுடைய தங்கை லதா, செத்துப்போன மணிகண்டனுக்கும் தங்கை உறவு முறை ஆகிறது. சம்பவத்திற்கு இரண்டு நாள் முன்னதாக, நானும் கோவிந்தராஜூம் சபரி மலைக்குப் போய்விட்டு வரும் வழியில் திருச்செந்தூரு க்குச் சென்று இருந்தோம். கோவிந்தராஜ் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, இரவு நேரத்தில் அவர் வீட்டுக்குச் சென்ற மணிகண்டன், லதாவை கத்தி முனையில் மிரட்டி தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தார். அன்று இரவே, திருச்செந்தூரில் இருந்த கோவிந்தராஜூக்கு மணிகண்டன் போன் போட்டு, ‘உன் பொண்டாட்டியை வேலை முடிச்சிட்டேன்’ என்று திமிராக கூறினார்.

 

நடந்த விவரத்தை லதாவும் போனில் சொன்னார். இதுபற்றி காலையில் போலீசில் புகார் செய்யும்படி கோவிந்தராஜ் கூறினார். மறுநாள் காலை லதா, எங்க அம்மா ஆகியோர் மணிகண்டன் மீது புகார் கொடுக்க இரும்பாலை காவல் நிலையத்திற்குப் போனார்கள். போலீசார் நேரில் வந்து விசாரிப்பதாகச் சொன்னதால் எழுத்து மூலமாக புகார் தராமல் வந்துவிட்டனர். ஆனால் போலீசார் அது தொடர்பாக விசாரிக்க வரவே இல்லை.

 

அதற்கு மறுநாள் அதாவது, 19.12.2012ம் தேதி அதிகாலை நாங்கள் திருச்செந்தூரில் இருந்து வீடு வந்து சேர்ந்தோம். கோவிந்தராஜ் இங்குள்ள காத்தவராயன் கோயில் அருகே குளித்துக் கொண்டிருந்தார். அப்போது லதாவின் வீட்டுக்குச் சென்ற மணிகண்டன் மீண்டும் அவரிடம் தவறாக நடக்க முயற்சிக்க, அவரை வெளியே தள்ளி கதவை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டார். இதுகுறித்து லதா, கணவருக்கு போனில் தகவல் சொல்ல, அவர் உடனடியாக வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த மணிகண்டனை வீட்டுக்குள் இழுத்துச் சென்று தாக்கினார். காலில்தான் ஒரு அடி வைத்ததாக எங்களிடம் சொன்னார். அப்போது மணிகண்டனை யார் யார் அடித்தனர் என்றெல்லாம் நான் கண்ணால் பார்க்கவில்லை,” என்கிறார் ஏழுமலை.

 

மீண்டும் நாம் மணிகண்டனின் தாயார் சகுந்தலாவிடம் இதுபற்றி கேட்டபோது, ”லதா, அடிக்கடி செல்போனில் பல பேரிடம் பேசி வந்தார். அதை தங்கை என்ற முறையில் மணிகண்டன் தட்டிக் கேட்கத்தான் லதா வீட்டுக்குப் போனான். அதனால் புருஷன்கிட்ட தனக்குக் கெட்டப் பெயர் வந்துடுமோனு லதா, அப்படியே மணிகண்டன் தன்னிடம் தப்பாக நடக்க முயற்சித்ததாக பிளேட்டை திருப்பிப் போட்டுட்டார்,” என்றார்.

உடற்கூறாய்வு அறிக்கை

எட்டு ஆண்டுகளுக்கு முந்தைய, மணிகண்டனின் உடற்கூறாய்வு அறிக்கையையும் பார்த்தோம். அதில், மணிகண்டனின் இடது முழங்கால், இடது கால், இடது நெற்றிப்பொட்டு, முன் கழுத்து ஆகிய இடங்களில் சிராய்ப்பு காயங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இடப்புற வயிறு, வலது மேல் கை ஆகிய பகுதிகளில் கன்றிய காயங்கள் இருந்ததாகவும், இடதுபுற நெற்றியில் கிழிந்த காயம் இருந்ததாகவும் சொல்லப்பட்டு உள்ளது. இதயம் வீக்கம் அடைந்து இருந்ததாகவும், இதயத்தின் இடது கீழ் அறையில் ரத்த ஓட்டம் குறைந்து, மாரடைப்பு ஏற்பட்டதற்கான தடயம் காணப்படுகிறது என்றும், இதய ரத்தக் குழாய்களில் அடைப்பு காணப்படுகிறது என்றும் அறி க்கையில் சொல்லப்பட்டு உள்ளது. எனினும், ரசாயனப் பரிசோதனைக்குப் பிறகே இறப்புக்கான காரணம் குறித்து சொல்ல முடியும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

இந்த அறிக்கையை வசதியாக எடுத்துக்கொண்ட காவல்துறை, மாரடைப்பினால்தான் மணிகண்டன் இறந்தார் என்று எளிதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டு வழக்கை முடித்துவிட்டனர். அதேநேரம், தாக்குவதன் மூலமும், மன உளைச்சல் மூலமும் கூட மாரடைப்பு ஏற்படலாம் என்கிறார் அரசு மருத்துவர் ஒருவர். அதையெல்லாம் காவல்துறை கண்டுகொள்ளவே இல்லை. இறந்தவர், ஏதுமற்ற விளிம்புநிலை மனிதர். அதனால் காவல்துறையினர் அப்படியே இந்த வழக்கை கிடப்பில் போட்டுவிட்டனர்.

 

இச்சம்பவத்திற்குப் பிறகு சித்தனூரில் இருந்து கோவிந்தராஜ் குடும்பத்துடன் சோளம்பள்ளத்திற்கு ஜாகையை மாற்றிக்கொண்டார். அங்கிருந்த கோவிந்தராஜின் மனைவி லதாவைச் சந்தித்துப் பேசினோம்.

சம்பவம் நடந்த கோவிந்தராஜுவின் வீடு (வலது புறம்)

”மணிகண்டன் இறப்பதற்கு
இரண்டு நாள் முன்பு இரவு
7 மணி இருக்கும். திடீர்னு
வீட்டுக்குள் நுழைந்த மணிகண்டன்,
‘எத்தனை பேத்தடீ வச்சிக்கிட்டு
இருப்ப. வாடீ… என்கூட வந்து
படுடி,’னு குரல் வளையில்
கத்தியை வைத்து மிரட்டினான்.
நாங்க குடியிருக்கும் வீட்டு
ஓனரை தாத்தானு கத்தி
கூப்பிட்டேன். அவன் கத்தியை
வைத்து அழுத்தினான்.
அதற்குள் அவன் கூட வந்த
சில பேரு அவனை விலக்கிவிட்டு
கூட்டிட்டுப் போய்ட்டாங்க.
எனக்கு பதற்றமாயிருச்சு.
அன்று என் கணவரும்,
அண்ணனும் சபரி மலைக்குப்
போயிருந்தாங்க. என் கணவரிடம்,
நடந்த சம்பவம் குறித்து
போனில் கூறினேன்.
அவர் போலீசில் புகார்
கொடுக்கச் சொன்னார்.

 

மறுநாள் காலை,
நானும் அம்மாவும் இரும்பாலை
போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம்.
அப்போது போலீசார்,
‘அவனே, ஒரு கஞ்சா பார்ட்டி.
குடிச்சிட்டு ராவுடி கட்டறான்.
போம்மா… பார்த்துக்கலாம்,’னு
சொல்லி அனுப்பிட்டாங்க.
அதற்கு அடுத்த நாள்தான்
சபரி மலையில் இருந்து
என் வீட்டுக்காரர் வந்தார்.
அன்று காலையிலும் மணிகண்டன்
வீட்டுக்கு வந்து பிரச்னை செய்தார்.
அதனால் ஆத்திரம் அடைந்த
என் கணவர் கோவிந்தராஜ்,
மணிகண்டனை காலில்
ஒரு அடி வைத்தார்.

 

அப்புறம் வார்டு மெம்பரான
ராம்குமாரிடம் போய் உதவி
கேட்டோம். அவரும், அவருடன்
ரோட்டுக்கார பசங்க நிறைய
பேரும் வந்தாங்க. அவர்கள்
எல்லாம் வந்து மணிகண்டனை
அடிச்சாங்க. அவர்களில்
ராம்குமாரையும், முட்டை
ராஜாவையும் மட்டும்தான்
அடையாளம் தெரியும்.
வீட்டு வாசலில் வைத்துதான்
மணிகண்டனை அடிச்சாங்க.
நான் பயந்துக்கிட்டு வீட்டுக்குள்ள
போய்ட்டதால, யார் யாரெல்லாம்
எப்படி எல்லாம் மணிகண்டனை
அடிச்சாங்கனு தெரியாது.
அந்த சம்பவத்துக்குப் பிறகுதான்
மணிகண்டன் இறந்தார்.

 

ராம்குமார், முட்டை ராஜா
ஆகியோருக்கும் மணிகண்டனுக்கும்
வேறு ஏதோ முன் பகை இருந்திருக்கு.
அதுபற்றி எங்களுக்கு முன்பே
தெரிந்திருந்தால் நாங்கள்
ராம்குமாரிடம் உதவி கேட்டுப்
போயிருக்க மாட்டோம்.
அவர்கள் ஒப்புக்கொள்ளச்
சொன்னதால் என் கணவரும்
ஒப்புக்கொண்டு சரணடைந்துவிட்டார்.
எங்கள் பிரச்னைக்காகத்தான்
ராம்குமாரும், முட்டை ராஜாவும்
வந்தார்கள் என நினைத்துக்
கொண்டு என் கணவர்
குற்றத்தை ஒப்புக்கொண்டார்,”
என்கிறார் லதா.

 

சந்தேக மரணம் அல்லது கொலை வழக்குகளில் காவல்துறையினர் ஒரு சார்பாக செயல்பட முடியுமா? என்பது குறித்து சேலம் சத்திரத்தைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை எஸ்.பி. சிவசுப்ரமணியனிடம் கேட்டோம்.

சிவசுப்ரமணியன்

”கொலைக்கான காரணம் இதுதான் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெளிவாக சொல்லப்பட்டு இருந்தால், அதற்கு முரணாக யாராலும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய முடியாது. அதுவும் கொலை அல்லது சந்தேக மரணம் போன்ற வழக்குகளில் எந்த அதிகாரியும் அழுத்தம் கொடுக்கவே முடியாது. அப்படியே அறிக்கையில் குளறுபடி செய்தாலும், என்றைக்கு இருந்தாலும் சம்பந்தப்பட்ட புலனாய்வு அதிகாரி பதில் சொல்லியே ஆக வேண்டும். அதேபோல் ஒரு வழக்கை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற கெடு எதுவும் கிடையாது. ஆனால் சில நேரம் உயரதிகாரிகள் வழக்கு விசாரணையை சீக்கிரம் முடிக்கச் சொல்வார்கள். அதற்காக ஏனோதானோ என்று வழக்கை முடித்துவிட முடியாது. அப்படிச் செய்யவும் கூடாது,” என்கிறார் சிவசுப்ரமணியன்.

 

இதுபற்றி சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணனிடம் கேட்டபோது, ”நீதிமன்ற உத்தரவின்பேரில், 8 ஆண்டுக்கு முன்பு புதைக்கப்பட்ட மணிகண்டனின் சடலத்தை தோண்டி எடுத்து, விசாரித்து வருகிறோம். கொஞ்சம் சவாலான வழக்குதான். சடலம், மீண்டும் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, முக்கிய உறுப்புகள் தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் முடிவுகளும் வந்த பிறகுதான் இறப்புக்கான காரணம் குறித்து தெளிவான ஐடியா கிடைக்கும். நாங்களும் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம்,” என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

 

இரும்பாலை காவல்நிலையத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 8 ஆய்வாளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக அவர்களிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கொலை வழக்கை, சாதாரண மாரடைப்பு மரணமாக மாற்றி போலீசார் மறைக்க முயற்சிப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

 

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல் மரணத்திலும்கூட ஆரம்பத்தில் உள்ளூர் போலீசார் போலியாக எப்ஐஆர் பதிவு செய்து இரட்டைக் கொலையை மறைத்த நிலையில், சிபிசிஐடி கையில் எடுத்த பிறகுதான் அச்சம்பவத்தின் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது. அதேபோல், எட்டு ஆண்டுக்கு முன்பு மண்ணோடு மண்ணாக புதைத்துவிட்ட மணிகண்டன் சந்தேக மரண வழக்கிலும் சேலம் சிபிசிஐடி போலீசார் உண்மைகளை அம்பலப்படுத்துவார்கள் என நம்புகிறார்கள் பிள்ளையைப் பறிகொடுத்த அப்பாவி பெற்றோர்.

 

– பேனாக்காரன்