Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘பணவீக்கம்’ மோடி அரசின் மிகப்பெரும் தோல்வி – ஆய்வில் தகவல்

இந்தியா டுடே, தேசத்தின் மனநிலை குறித்து அண்மையில் ஓர் ஆய்வை நடத்தியது. நாடு முழுவதும் 35801 பேரிடம் கருத்துகளைக் கேட்டறிந்தது. வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை, தனிநபர் வருவாய் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு, 2023, டிச. 15 முதல் 2024, ஜன. 28க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் நடந்தது.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்னை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும், இப்போது அதிதீவிரமான பிரச்னையே இதுதான் என்று 71 சதவீதம் பேர் கொட்டித் தீர்த்துள்ளனர்.

படிப்புக்கேற்ற தரமான வேலைவாய்ப்புகள் கிடைக்காததால், வேலையின் தரமும் குறைந்துள்ளது என்றும் புலம்புகின்றனர். அரசாங்க வேலைக்காக ஒரு பெரும் குழு, போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வருவதாகவும் சொல்கின்றனர்.

ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அக்னிவீர் திட்டம், இளைஞர்களை பெரிய அளவில் கவரவில்லை என்பதோடு, குறுகிய கால ஒப்பந்தம் என்பதால் இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளனர்.

எகிறிய வீட்டுச்செலவுகள்:

நாட்டில் தற்போது,
பொருள்களின் விலையேற்றம்
கடுமையாக பாதித்துள்ளதாக
95 சதவீதம் பேர் கவலையை
வெளிப்படுத்தி உள்ளனர்.
இதனால் அன்றாடம் வீட்டுச்
செலவுகளை நிர்வகிப்பதுகூட
கடினமாக இருப்பதாக 62 சதவீதம்
பேர் கூறுகின்றனர்.

கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில்
66 சதவீதம் பேர், தங்கள் குடும்ப
வருமானம் மேலும் உயரும் என்று
நம்பிக்கையே இல்லை என்கிறார்கள்.
30 சதவீதம் பேர், குடும்ப வருமானம்
மேலும் மோசமடையும் என்றும்
அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

தாறுமாறாக உயர்ந்துள்ள
விலை பணவீக்கம், நரேந்திர மோடி
தலைமையிலான பாஜக அரசின்
மிகப்பெரிய தோல்வி என்று 26 சதவீதம் பேர்
கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நகர்ப்புறங்களைப் பொருத்தவரை
உணவுப் பணவீக்கம் 9 சதவீதமாக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில், மைய அரசு வகுத்துள்ள பொருளாதாரக் கொள்கைகள் எல்லாமே, பெரும் வணிகங்களை குறி வைத்தே வகுக்கப்பட்டு உள்ளதாக 52 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த பொருளாதாரக் கொள்கைகள் விவசாயிகளுக்குக் ஓரளவு கைகொடுக்கும் என்று வெறும் 9 சதவீதம் பேர் மட்டுமே நம்புகின்றனர். 11 சதவீதம் பேர் சிறு வணிகத்திற்கு உதவுவதாகவும், 8 சதவீதம் பேர் சம்பளதாரர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

மோடி அரசின் பொருளாதாரக்
கொள்கைகள் பணக்காரர்களுக்கும்,
ஏழைகளுக்கும் இடையிலான
இடைவெளியை விரிவடையச் செய்துவிட்டன.
கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில்
கிட்டத்தட்ட பாதி பேர் இதைத்தான் சொல்கின்றனர்.
45 சதவீதம் பேர், இந்த இடைவெளி
மிக அதிகமாகி விட்டதாக
உணர்கிறார்கள்.

மத்திய பாஜக அரசின்
பொருளாதாரக் கொள்கைகள்,
இன்னொரு பெரும் தாக்கத்தையும்
ஏற்படுத்தி இருக்கின்றன.
அதாவது, கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள்,
செயல்திறனற்ற தொழிலாளர்களின்
வருமானத்தில் பெரும் சரிவை ஏற்படுத்தி
உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதேநேரம்,
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வருமானம்,
கடந்த இரண்டு ஆண்டுகளில்
10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா
பெருந்தொற்று காலத்தில் பெரும்
நிறுவனங்கள் பலத்த அடி வாங்கிய நிலையில்,
இந்தியாவில் அதானி குழுமம் மட்டும்
அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டது.
இது, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தையும்,
வணிக சமூகத்தில் அதன் சகாக்களின்
வளர்ச்சியையும் விட அதிகமாக இருந்தது.

மத்திய அரசின் கொள்கைகளால், பெரும் நிறுவனங்கள் பயன் அடைந்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் குறைந்தபோதும், இந்தியாவில் அதன் பலன்கள் மக்களைச் சென்றடையவில்லை. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீதான செஸ் வரியால் இந்தப்பலன் நுகர்வோருக்குக் கிடைக்கவில்லை. எரிபொருள் விலை உயர்வு, வருமான அளவின் இறுதி நிலையில் உள்ளவர்களை மிகக் கடுமையாக பாதித்துள்ளதும் ஆய்வில் தெரிய தெரியவந்துள்ளது.

 

– பேனாக்காரன்