Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

177 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு; தவறை உணர்ந்த பாஜக!

இந்திய அரசு 177 பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை இன்று (நவம்பர் 10, 2017) அதிரடியாக குறைத்துள்ளது. இதன்மூலம், எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய தவறுகளை பாஜக ஒப்புக்கொண்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நாடு முழுவதும் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஒரே இந்தியா ஒரே வரி என்ற பாஜகவின் கொள்கையாக இந்த புதிய வரி சீர்திருத்தம் கருதப்படுகிறது. இதன்படி 0, 5, 12, 18, 28 என ஐந்து படிநிலைகளில் ஜிஎஸ்டி வரிகள் நிர்ணயிக்கப்பட்டன.

அத்தியாவசியமான பொருள்களில் பலவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், முக்கியமான பல பொருள்களுக்கும், சேவைகளுக்கும் அதிகபட்ச வரி விதிக்கப்பட்டு இருப்பதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போன்றோர், மாநிலங்களில் மதிப்புக்கூடுதல் வரிகள் அமலில் இருக்கும்போது ஜிஎஸ்டியை ஒரே வரிவிதிப்பு எனச்சொல்ல முடியாது என்றும் கூறினர்.

மேலும், ஜிஎஸ்டியை அமல்படுத்தியதில் தோல்வி அடைந்துவிட்டதாகவும், இதனால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

குறிப்பாக, குடிசைத் தொழில்களுக்கு வரிவிலக்கு அல்லது வரி குறைப்பு செய்ய வேண்டும் என்ற வாதங்கள் வலுவாக எழுந்தன. இதனால் வேறு வழியின்றி பாஜக அரசாங்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பில் சில சீர்திருத்தங்களை செய்ய ஒப்புக்கொண்டது.

ஆனால் மத்திய அரசு சார்பில், சீரான இடைவெளியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூடி இது குறித்து ஆராயும் என தெரிவிக்கப்பட்டது. அது போலவே ஏற்கனவே ஓரிரு முறை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டங்களில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் 70-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி குறைக்க முடிவு செய்யப்பட்டதாக முதலில் வந்த தகவல்கள் கூறின.

ஆனால் அதன்பிறகு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் 177 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யை குறைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிடுவார்.

குறிப்பாக சிறுவர்களுக்கு பிடித்த சாக்லெட்களுக்கும், சாமானியர்கள் பயன்படுத்தும் ஷேவிங் கிரீம், சுவிங்கம் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டிருக்கிறது. வர்த்தக உலகத்தினரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஜவுளித்துறைக்கும் ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை ஜவுளி பொருட்களுக்கு 18 சதவிகிதம் அதிகபட்சமாக ஜி.எஸ்.டி வசூல் செய்யப்பட்டது. அதனை 13 சதவிகிதம் குறைத்து 5 சதவிகிதமாக குறைத்து இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

  • 177 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஷேவிக் கிரீம், பற்பசை உள்பட 177 பொருட்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரி குறைப்பு.
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்து மாவுக்கான வரி 5% ஆக குறைப்பு.
  • விளைபொருட்கள் சேமிப்புக்கான உள்கட்டமைப்பு பணிகளுக்கான வரி 12% ஆக குறைப்பு.
  • செங்கல் தொழில் தொடர்பான சில்லறை வேலைகள் மீதான சேவை வரி குறைப்பு.
  • சிகரெட் உள்பட பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள், ஆடம்பரப் பொருட்களை 28% வரிப்பிரிவில் வைக்க முடிவு.
  • திரைப்படம் தொடர்பான சாதனங்கள், கருவிகளுக்கு 28% லிருந்து 18% ஆக வரியை குறைக்க பரிந்துரைக்கபட்டு உள்ளது.
  • இனி 50 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத வரிப்பிரிவு

தற்போதைய நிலையில் மொத்தம் 50 பொருட்களுக்கு மட்டுமே அதிகபட்ச ஜி.எஸ்.டி-யாக 28 சதவிகிதம் வசூலிக்கப்படுவதாக கவுன்சில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

தொடர்ந்து வரும் கோரிக்கைகள் அடிப்படையில் ஜி.எஸ்.டி விகிதத்தில் தேவைப்பட்டால் மாறுதல்கள் செய்யப்படும் என மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.