Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் கொலை வழக்கு: புதுமனைவியின் நினைவலையில் யுவராஜ் கூட்டாளி! #Gokulraj

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கிடந்தது.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், உடன் படித்து வந்த கொங்குவேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலித்ததால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் பரவியது. இது தொடர்பாக, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 30, 2018ம் தேதி முதல் நடந்து வருகிறது.

செப்டம்பர் 6ம் தேதி, கோகுல்ராஜின் அண்ணன் கலைசெல்வனிடம் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை நடத்தினார். மதியம் 1.30 மணியளவில் உணவு இடைவேளை விடப்பட்டது. யுவராஜ் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் போலீசாரின் பாதுகாப்பு வாகனத்திலேயே அமர வைக்கப்பட்டு மதிய உணவு வழங்கப்பட்டது.

 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சதீஸ் என்கிற சதீஸ்குமார் என்பவருக்கு செப்டம்பர் 6ம் தேதியன்று, முதலாவது திருமண நாள் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறினர். நீதிமன்றத்திற்கு வந்திருந்த யுவராஜ் ஆதரவாளர்களில் ஒருவர், சதீஸிடம் திருமண நாளை நினைவு படுத்தும்படி மனைவி கூறச்சொன்னதாக கூறினார்.

மேலும், மனைவி கணவரை பிரிந்து தவிப்பதை சித்தரிக்கும் வகையில், ‘சின்ன கவுண்டர்’ படத்தில் இடம் பெறும், ”கூண்டுக்குள்ள என்னை வெச்சி கூடி நின்ன ஊரை விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே… மாமா…மாமா…. உன்னைத்தானே… நாளும் நாளும் எண்ணித் தவித்தேனே…” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, அவருடைய மனைவி கவலையுடன் இருப்பதுபோன்ற ஒரு வீடியோவை செல்போன் மூலம் போட்டுக்காட்டினார்.

 

இந்த செல்போன் வீடியோ காட்சியை போலீசாரின் பாதுகாப்பு வாகனத்தில் இருந்தபடியே, ஜன்னல் கம்பிகளின் வழியே, சதீஸ் பார்த்து, மனைவியின் நினைவில் மூழ்கினார். இதை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரும் பார்த்தனர். சில போலீசார், ‘சென்சிடிவான நேரத்திலும் இவர்களுக்கு கிளுகிளுப்பு கேட்குது, பாருங்க….’ என்று போலீசார் புலம்பினர்.