Saturday, November 9மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜ் கொலை வழக்கு: கவுண்டர் பெண்களை தலித் ஆண்கள் காதலிக்க கூடாது என்று யுவராஜ் சொன்னாரா?#Gokulraj #Day13

 

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் புதன்கிழமையன்று (டிசம்பர் 12, 2018) நடந்த சாட்சிகள் விசாரணையின்போது, அரசுத்தரப்பு சாட்சிகள் அடுத்தடுத்து பிறழ் சாட்சியம் அளித்ததால் சிபிசிஐடி போலீசார் அதிருப்தி அடைந்தனர்.

கோகுல்ராஜ்

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ. முடித்திருந்தார். கடந்த 24.6.2015ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, முண்டம் வேறாக கோகுல்ராஜ் சடலம் கைப்பற்றப்பட்டது. போலீசார் விசாரணையில் அவர், ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

 

இது தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனத்தலைவர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, கார் ஓட்டுநர் அருண், சங்கர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

கைதானவர்களில் ஜோதிமணி என்ற பெண் குடும்பத் தகராறில் சுட்டுக்கொல்லப்பட்டார். அமுதரசு என்பவர், ஜாமினில் வெளியே சென்றிருந்தபோது தலைமறைவாகிவிட்டார்.

 

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை கடந்த 30.8.2018ம் தேதி முதல், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி கே.ஹெச்.இளவழகன் விசாரித்து வருகிறார். விசாரணையின்போது ஜோதிமணி, அமுதரசு தவிர யுவராஜ் உள்ளிட்ட 15 பேரும் தொடர்ந்து ஆஜராகி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமையன்று (டிசம்பர் 12, 2018) நடந்த சாட்சிகள் விசாரணைக்கு, இவ்வழக்கின் முதலாவது எதிரியான திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜ் அழைத்து வரப்படவில்லை.

 

அன்றைய தினம், திருச்சியில் தமிழக ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் இருந்ததால், ஒட்டுமொத்த போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனால் யுவராஜை எஸ்கார்ட் எடுத்து வர போதிய போலீசார் இல்லாததால், அவர் ஆஜர்படுத்தப்படவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

 

கடந்த 12ம் தேதி, மொத்தம் நான்கு அரசுத்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. பகல் 12:15 மணிக்கு விசாரணை தொடங்கியது. சாட்சிகள் விசாரணை விவரம் வருமாறு:

 

சாட்சி: ராஜன், முன்னாள் ரயில்வே கேங்மேன்.

 

அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி: நீங்கள் எங்கே பணியாற்றி வந்தீர்கள்?

ராஜன்: நான் ரயில்வே துறையில் பணியாற்றி வந்தேன்.

கருணாநிதி: இப்போது எங்கே பணியாற்றுகிறீர்கள்?

ராஜன்: நான் ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆகிறது.

கருணாநிதி: ரயில்வேயில் என்னவாக பணியாற்றி வந்தீர்கள்?

ராஜன்: கேங்மேன் ஆக பணியாற்றி வந்தேன்.

கருணாநிதி: கடந்த 2015ம் ஆண்டு எங்கே பணியாற்றி வந்தீர்கள்?

ராஜன்: 2015ம் ஆண்டு, காவேரி ஆர்எஸ் ரயில் நிலையத்தில் கேங்மேன் ஆக பணியாற்றினேன்.

கருணாநிதி: கோகுல்ராஜ் வழக்கு குறித்து தெரியுமா?

ராஜன்: கோகுல்ராஜ் இறந்த வழக்கு பற்றி கேள்விப்பட்டேன்.

கருணாநிதி: இந்த வழக்கை பற்றி உங்களுக்கு என்னென்ன தெரியும் என்று சொல்லுங்கள்…

ராஜன்: கடந்த 24.6.2015ம் தேதி, காலை 7 மணிக்கு 386 கி.மீ.-ல் இருந்து காவேரி ஆர்எஸ் பக்கம் நான் தனியாக இருசக்கர வாகனத்தில் சிறிது தூரம் சென்று, 389 கி.மீ.ல் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தேன்.

அப்போது குப்பை பொறுக்கும் நபர் ஒருவர், சிறிது தூரத்தில் ஒரு பிணம் கிடப்பதாக கூறினார். நான் சென்று பார்த்தபோது 11/13 என்ற இடத்தில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. அந்த உடலுக்கு சுமார் 30 வயது இருக்கும். இரண்டு தண்டவாளத்திற்கு நடுவில் உடலும், தண்டவாளத்திற்கு வெளியே தலையும் கிடந்தது.

கருணாநிதி: நீங்கள் பார்த்த அந்த பிணத்திற்கு பக்கத்தில் வேறு ஏதாவது பொருள்கள் கிடந்ததா?

ராஜன்: அந்த பிணத்திற்கு பக்கத்தில் வேறு எந்த பொருள்களும் இல்லை.

கருணாநிதி: பிணமாக கிடந்தவர் என்ன நிற உடைகள் அணிந்திருந்தார் என்பது தெரியுமா?

ராஜன்: பிணமாகக் கிடந்தவர் கத்திரிப்பூ நிறத்தில் சட்டையும், ஊதா நிறத்தில் ஜீன்ஸ் பேன்டும் அணிந்திருந்தார்.

கருணாநிதி: அதன்பிறகு என்ன செய்தீர்கள்?

ராஜன்: பிணம் கிடந்த இடத்தைக் குறித்து வைத்துக்கொண்டு காவேரி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தேன்.

கருணாநிதி: உங்களுக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரியுமா?

ராஜன்: தெரியாது.

(வழக்கறிஞர் கருணாநிதி, 24.6.2015ம் தேதியிட்ட ஒரு கடித ஆவணத்தில் உள்ள கையெழுத்தை ராஜனிடம் காண்பித்து, அது உங்களுடையதுதானா? என்று கேட்டார். அதற்கு அவர், அந்தக் கையெழுத்து தன்னுடையதுதான் என்று ஒப்புக்கொண்டார்).

கருணாநிதி: உங்களிடம் எந்தெந்த போலீசார் விசாரித்தனர்?

ராஜன்: ஈரோடு ரயில்வே போலீசார் என்னை விசாரித்தனர். பிறகு நாமக்கல் போலீசார் விசாரித்தனர். அதன்பிறகு சிபிசிஐடி போலீசாரும் விசாரித்தார்கள்.

இவ்வாறு ராஜன் தெரிவித்தார்.

 

இதையடுத்து அவரிடம், யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை நடத்தினார்.

 

வழக்கறிஞர் ஜி.கே.: உங்களிடம் போலீசார் எந்தெந்த தேதியில் விசாரித்தார்கள்?

ராஜன்: போலீசார் எந்தெந்த தேதியில் என்னிடம் விசாரித்தார்கள் என்று எனக்கு ஞாபகத்தில் இல்லை.

ஜிகே: முதலில் உங்களிடம் விசாரித்தது யார்?

ராஜன்: முதலில் ரயில்வே போலீசார் என்னிடம் விசாரித்தார்கள்.

ஜிகே: நீங்கள் சொன்ன தகவல்களை எல்லாம் அவர்கள் எழுதிக்கொண்டார்களா?

ராஜன்: ஆமாம். போலீசார் குறித்துக் கொண்டனர்.

ஜிகே: அவர்கள் குறித்துக் கொண்ட ஆவணத்தில் நீங்கள் ஏதாவது கையெழுத்துப் போட்டீர்களா?

ராஜன்: இல்லை.

ஜிகே: டிஎஸ்பி மேடம் (மறைந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா) உங்களிடம் விசாரித்தார்களா?

ராஜன்: ஆமாம்.

ஜிகே: நீங்கள் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை யார் எழுதியது?

ராஜன்: நான் சொல்லச்சொல்ல கேங்மேன் கார்த்திக் என்பவர் எழுதினார். அது சரியாக இருந்ததால் அதில் கையெழுத்து போட்டேன்.

ஜிகே: ரயில் பாதையில் 481 முதல் 483 வரை பாதையை டெஸ்ட் செய்துவிட்டு மீண்டும் அதே பாதையில் வருவதுதான் உங்கள் பணி?

ராஜன்: ஆமாம்

ஜிகே: வழக்கமாக அப்படித்தான் செய்வீர்கள்…

ராஜன்: ஆமாம்

ஜிகே: உங்களிடம் ரயில்வே போலீசார் விசாரித்தபோதும், டிஎஸ்பி மேடம் விசாரித்தபோதும் சடலத்தைப் பார்த்ததாக மேலே சொன்ன தகவல்களை அவர்களிடம் சொன்னீர்களா?

ராஜன்: ஆமாம், சொன்னேன்.

ஜிகே: போலீசார் உங்களிடம் எங்கு வைத்து விசாரித்தார்கள்?

ராஜன்: நான் தங்கியிருந்த குவார்ட்டர்ஸின் கீழ் வைத்து விசாரித்தார்கள்

ஜிகே: டிஎஸ்பி மேடம் உங்களிடம் எங்கு வைத்து விசாரித்தார்கள்?

ராஜன்: அவரும் என்னை குவார்ட்டர்ஸ் கீழே வைத்துதான் விசாரித்தார்.

ஜிகே: டிஎஸ்பி மேடம் விசாரித்தபோது பிரேதம் அணிந்திருந்த உடைகள், பிரேதம் கிடந்த இடம் குறித்து சொன்னீர்களா?

ராஜன்: சொன்னேன்

ஜிகே: டிஎஸ்பி மேடம் உங்களிடம் விசாரித்தபோது, ரயில் தண்டவாளம் 381/ 11-13 அப்லைனில் 24.6.2015ம் தேதியன்று காலை 8 மணிக்கு சென்றபோது பிரேதம் ஏதும் இல்லை என்றும், திரும்பவும் நீங்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது காலை 11.30 மணியளவில் ரயில் தண்டவாளத்தில் பிரேதம் கிடப்பதை பார்த்ததாகவும் சொன்னீர்களா?

ராஜன்: சொன்னேன்

ஜிகே: டிஎஸ்பி மேடம் உங்களை பிணம் கிடந்த இடத்தில் வைத்து விசாரித்தார்களா?

ராஜன்: இல்லை

ஜிகே: பிணத்தை பார்த்ததும் நீங்கள் யாரிடம் முதலில் தகவலைச் சொன்னீர்கள்?

ராஜன்: காவேரி ஆர்எஸ் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் சொன்னேன்

ஜிகே: பிணத்தை அன்று பார்த்தபிறகு வேறு எப்போதாவது பார்த்தீர்களா?

ராஜன்: இல்லை. இப்போதுதான் பார்க்கிறேன்.

ஜிகே: பள்ளிபாளையத்தில் ரயில் நிலையம் உள்ளதா?

ராஜன்: இருக்கிறது

ஜிகே: சிபிசிஐடி போலீசார் உங்களை நிர்ப்பந்தப்படுத்தி சொல்லிக்கொடுத்ததன் பேரில் நீங்கள் இருசக்கர வாகனத்தில் சென்றதாக இப்போது பொய்யாக சொல்கிறீர்கள்?

ராஜன்: இல்லை

ஜிகே: உங்களுடைய உயர் அதிகாரிகளும், சிபிசிஐடி போலீசாரும் உங்களை நிர்ப்பந்தப்படுத்தியதன் பேரில் நீங்கள் பொய் சாட்சியம் அளிக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன்…

ராஜன்: இல்லை

இவ்வாறு ரயில்வே கேங்மேன் ராஜனிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.

 

 

சாட்சி: சுஜீஸ் கோட்டாசேரி, ரயில்வே கேங்மேன்.

 

வழக்கறிஞர் கருணாநிதி: சம்பவம் நடந்த காலக்கட்டத்தில் நீங்கள் எங்கே வேலை செய்து வந்தீர்கள்?

சுஜீஸ்: நான் சங்ககிரி துர்கா ரயில் நிலையத்தில் 2013 முதல் 2016 வரை கேங்மேன் ஆக வேலை செய்து வந்தேன்.

கருணாநிதி: இந்த வழக்கை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

சுஜீஸ்: தெரியாது

கருணாநிதி: போலீசார் உங்களிடம் இந்த வழக்கு தொடர்பாக விசாரித்தார்களா?

சுஜீஸ்: போலீசார் யாரும் என்னிடம் விசாரிக்கவில்லை. எனக்கு கேட் டூட்டிதான் வழக்கமான பணி.

 

ஏற்கனவே போலீசாரிடம் சிஆர்பிசி பிரிவு 161ல் கூறிய வாக்குமூலத்தை மாற்றி, பிறழ் சாட்சியமாக சொன்னதால், அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி தொடர்ந்து அவரிடம் குறுக்கு விசாரணை செய்தார்.

 

மேலும் சுஜீஸ் தனக்கு மலையாளம் மட்டுமே தெரியும் என்று சொன்னதால், எதிர்தரப்புக்காக ஆஜராகி வரும் அஜூ என்ற வழக்கறிஞர், அரசுத்தரப்பு வழக்கறிஞர் கேட்கும் கேள்விகளை சுஜீஸூக்கு மலையாளத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார். நீதிபதி இளவழகன் அதற்கு அனுமதி அளித்தார். அதுகுறித்தும் நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

 

கருணாநிதி: கடந்த 23.6.2015ம் தேதியன்று மாலை 4 மணிக்கு நீங்கள் பணியில் இருந்தீர்களா?

சுஜீஸ்: இல்லை

கருணாநிதி: வேறு ஊழியர்கள் பணிக்கு வராதபோது நீங்கள் அந்த ஊழியருக்கு பதிலாக மாற்றுப்பணி பார்ப்பது உண்டா?

சுஜீஸ்: உண்டு

கருணாநிதி: 23.6.2015ம் தேதியன்று இரவு 9 மணிக்கு நீங்கள் எங்கே பணியில் இருந்தீர்கள்?

சுஜீஸ்: கிழக்கு தொட்டிப்பாளையம் கேட் எண். 121ஏ ரயில்வே கேட்டில் பணியில் இருந்தேன்.

கருணாநிதி: எதற்காக அங்கு கேட் டூட்டி பார்த்தீர்கள்?

சுஜீஸ்: அந்த ரயில்வே கேட்டில் பணியில் இருந்த வீர்சிங் என்பவர் விடுப்பில் சென்றதால், அவருக்கு பதிலாக நான் அவர் பணியினைச் செய்தேன்.

கருணாநிதி: 23.6.2015 அன்று இரவு 9 மணிக்கு நீங்கள் பணியில் இருந்தபோது எம்எம்-540 என்ற பதிவெண் கொண்ட மஹேந்திரா ஜீப் ஒன்று கேட்டை கடக்காமல் நேராக சென்றது…

சுஜீஸ்: அந்த வழியாக நிறைய வாகனங்கள் செல்வதால், நீங்கள் குறிப்பிட்ட எண் கொண்ட வாகனம் சென்றதா என்பது எனக்கு தெரியவில்லை

கருணாநிதி: 100 மீட்டர் தூரம் சென்ற பிறகு, எம்எம்-540 என்ற மஹேந்திரா ஜீப் மீண்டும் பின்னால் வந்து ரயில்வே கேட்டை கடந்து சென்றது…

சுஜீஸ்: அதை நான் பார்க்கவில்லை. பொதுவாக எம்எம்-540 பதிவெண் வாகனம் ரயில்வே கேட்டை கடந்து செல்லும்.

கருணாநிதி: நீங்கள் பார்த்தபோது அந்த வாகனத்தில் ஆள்கள் யார் யார் இருந்தார்கள்?

சுஜீஸ்: நீங்கள் குறிப்பிட்ட அந்த வாகனத்தை நான் பார்க்கவில்லை

கருணாநிதி: ஒரு பிணம் தலை வேறு உடல் வேறாக கிடப்பதாக சொன்னால்…

சுஜீஸ்: தவறு.

கருணாநிதி: யுவராஜ் உள்ளிட்ட எதிரிகள் கேட்டுக் கொண்டதாலும், அச்சுறுத்தல் காரணமாகவும் நீங்கள் பொய் சாட்சியம் அளிக்கிறீர்கள் என்று சொன்னால்…

சுஜீஸ்: தவறு.

 

இவ்வாறு குறுக்கு விசாரணை நடந்தது.

 

சாட்சி: அருண், மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர்.
அருண்

வழக்கறிஞர் கருணாநிதி: நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?

அருண்: நான் நாமக்கல் மாவட்டம் மாடகாசம்பட்டியில் வசித்து வருகிறேன்.

கருணாநிதி: என்ன வேலை செய்கிறீர்கள்?

அருண்: விவசாயம் செய்கிறேன்.

கருணாநிதி: இங்கே ஆஜர்படுத்தப்பட்டு உள்ள எதிரிகளில் யாரையாவது தெரியுமா?

அருண்: யாரையுமே தெரியாது

கருணாநிதி: இந்த வழக்கில் முதலாவது எதிரியான யுவராஜை தெரியுமா?

அருண்: ம்… போஸ்டரில் பார்த்திருக்கிறேன். ஆங்… ஒருமுறை நேரில் பார்த்திருக்கிறேன்

கருணாநிதி: யுவராஜை பார்த்தால் உங்களுக்கு அடையாளம் தெரியும்தானே?

அருண்: பார்த்தால் தெரியும்

கருணாநிதி: நீங்கள் என்ன சாதியைச் சேர்ந்தவர்?

அருண்: நான் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

கருணாநிதி: இந்த வழக்கை பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?

அருண்: தெரியாது

கருணாநிதி: உங்களிடம் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்தார்களா?

அருண்: ஆமாம்

கருணாநிதி: போலீசாரிடம் நீங்கள் ஏதாவது பொருளை கொடுத்தீர்களா?

அருண்: இல்லை

கருணாநிதி: போலீசார் உங்களிடம் விசாரித்தபோது அவர்களுடைய ஆவணத்தில் கையெழுத்திட்டீர்களா?

அருண்: ஆமாம். ஒரு கையெழுத்து போட்டேன்

கருணாநிதி: இந்த ஆவணத்தில் இருப்பது உங்களுடைய கையெழுத்தானே? (அப்போது வழக்கறிஞர் கருணாநிதி, அருணிடம் ஒரு கையெழுத்தைக் காட்டி அடையாளப்படுத்தச் சொன்னார்)

அருண்: அது என்னுடைய கையெழுத்து இல்லை. அருண் என்ற என்னுடைய கையெழுத்தில் கடைசி எழுத்தை மூன்று சுழி ‘ண்’ என்று குறிப்பிடுவேன். ஆனால் காட்டிய நீங்கள் இந்த கையெழுத்தில் இரண்டு சுழி ‘ன்’ போடப்பட்டுள்ளது. அதனால் அது என்னுடைய கையெழுத்துதானா என்பது சந்தேகமாக இருக்கிறது.

கருணாநிதி: ஆனால், நீங்கள் போலீசார் கேட்டதன்பேரில் கையெழுத்து போட்டீர்கள்தானே?

அருண்: போட்டேன். ஆனால் எதற்காக கையெழுத்து வாங்கினார்கள் என்று எனக்குத் தெரியாது.

கருணாநிதி: நீங்கள் கையெழுத்திடும்போது எத்தனை பேர் உடன் இருந்தார்கள்?

அருண்: என்னுடன் இரண்டு பேர் இருந்தனர்

 

சாட்சி அருணும் பிறழ்சாட்சியம் அளித்ததால், அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த நீதிபதி இளவழகன் அனுமதி அளித்தார். குறுக்கு விசாரணை விவரம் வருமாறு:

 

(அரசுத்தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணையை ஆரம்பிப்பதற்குமுன் அருணின் வாக்குமூலம் பற்றிய ஆவணத்தை கீழே குனிந்தபடி சில நொடிகள் ஏதேதோ பார்த்துக்கொண்டே இருந்தார். அப்போது நீதிபதியே குறுக்கு விசாரணைக்கான கேள்வியை ஆரம்பித்து வைத்தார்)

 

நீதிபதி: மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நோக்கங்கள் என்னவென்று தெரியுமா?

அருண்: தெரியாது.

நீதிபதி: 14.6.2015ம் தேதியன்று நாமக்கல்லில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை சார்பில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்திற்கு யுவராஜ் வந்திருந்தாரா?

அருண்: யுவராஜ் வந்திருந்தார்.

கருணாநிதி: அந்த கூட்டத்தில்தான் நீங்கள் யுவராஜை முதன்முதலில் பார்த்தீர்களா?

அருண்: ஆமாம்

கருணாநிதி: உங்களுக்கு பேஸ்புக் ஐடி இருக்கிறதா?

அருண்: கிடையாது

கருணாநிதி: எம்கேபிஅருண்68 அட் ஜிமெயில் டாட் காம் என்ற பேஸ்புக் அக்கவுண்ட் உங்களுடைய பெயரில் உள்ளது?

அருண்: இல்லை

கருணாநிதி: தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தை, 14.6.2015ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம் கேபிஆர் மண்டபத்தில் நடந்தது. அந்த கூட்டத்தை நீங்கள்தான் ஏற்பாடு செய்தீர்கள்?

அருண்: இல்லை

கருணாநிதி: அந்தக் கூட்டம் குறித்த நோட்டீஸை உங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தீர்கள்?

அருண்: இல்லை

கருணாநிதி: அந்த கூட்டத்தில், கவுண்டர் சாதி பெண்களை பட்டியல் சாதி மற்றும் பிற சாதியைச் சேர்ந்த ஆண்கள் காதலிக்கக் கூடாது என்றும், கவுண்டர் சமூகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம் என்றும் யுவராஜ் பேசினாரா?

அருண்: இல்லை

கருணாநிதி: அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை உங்கள் பேஸ்புக்கில் அப்லோடு செய்தீர்கள்?

அருண்: இல்லை

கருணாநிதி: 26.12.2015ம் தேதியன்று கோயம்பத்தூர் சிபிசிஐடி ஏடிஎஸ்பி, தன்னுடைய அலுவலகத்தில் வைத்து உங்களை சாட்சிகள் செந்தில்குமார் விஏஓ, கிராம உதவியாளர் சிவக்குமார் ஆகியோர் முன்பு விசாரித்தார். அப்போது, நீங்கள் நடந்த விவரங்களைச் சொல்லி, உங்களுடைய பேஸ்புக்கில் இருந்தும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை பேஸ்புக்கில் இருந்தும் அழைப்பிதழ் நோட்டீஸ் உள்ளிட்ட 14 புகைப்படங்களை அலுவலக கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்தீர்கள்.

 

அந்த புகைப்படங்களை மேலே சொன்ன சாட்சிகள் முன்னிலையில் ஒரு சி.டி.யில் பதிவு செய்து ஏடிஎஸ்பியிடம் கொடுத்தீர்கள். ஏடிஎஸ்பி அந்த சிடியை ஒரு கவரில் போட்டு ஒட்டினார். அந்த கவரில் நீங்களும் ஏடிஎஸ்பியும் கையெழுத்து போட்டீர்கள் என்று நான் சொல்கிறேன்.

அருண்: இல்லை

கருணாநிதி: கோகுல்ராஜ் கொலை வழக்கு பற்றி கோயம்பத்தூர் சிபிசிஐடி ஏடிஎஸ்பி தனது அலுவலகத்தில் உங்களிடம் விசாரித்தார்கள். எதிரிகள் உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், எதிரிகள் கேட்டுக்கொண்டதன் பேரிலும் அவர்களை காப்பாற்றுவதற்காக நீங்கள் இப்போது பொய் சாட்சியம் சொல்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன்…

அருண்: இல்லை

 

இவ்வாறு அருணிடம் குறுக்கு விசாரணை நடந்தது.

 

இந்த விசாரணை மதியம் 1:10 மணிக்கு முடிந்தது. உணவு இடைவேளை விடப்பட்டது.

 

இதையடுத்து, அருணை முதன்மை மாவட்ட நீதிமன்ற அரங்கின் மேல் தளத்தில் உள்ள வீடியோ கான்பரன்ஸ் அறைக்கு அழைத்துச் சென்றனர். அதேநேரம், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதலாவது எதிரி யுவராஜை வீடியோ கான்பரன்ஸ் கேமரா முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். வீடியோ கான்பரன்ஸ் மூலம் பார்த்த அருண், அவர் முதலாவது எதிரி யுவராஜ் போல் இருக்கிறார் என்று சாட்சியம் அளித்தார்.

 

உணவு இடைவேளை முடிந்து பிற்பகல் 3:00 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.

 

சாட்சி: மகேஸ்வரன், கரூர் மாவட்ட மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை செயலாளர்.
மகேஸ்வரன்

கருணாநிதி: நீங்கள் எந்த ஊர்?

மகேஸ்வரன்: நான் கரூர் மாவட்டம் பெரியகுளத்துப்பாளையத்தில் வசிக்கிறேன்.

கருணாநிதி: என்ன படித்திருக்கிறீர்கள்?

மகேஸ்வரன்: 12ம் வகுப்பு வரை படித்திருக்கிறேன்.

கருணாநிதி: என்ன தொழில் செய்கிறீர்கள்?

மகேஸ்வரன்: பைனான்ஸ் தொழில் செய்கிறேன்.

கருணாநிதி: இங்கே ஆஜர்படுத்தப்பட்டுள்ள எதிரிகளில் யாரையாவது தெரியுமா?

மகேஸ்வரன்: முதலாவது எதிரி யுவராஜை தெரியும். இங்கே இன்று ஆஜர்படுத்தப்பட்டு உள்ள அவருடைய தம்பி தங்கதுரையையும் தெரியும்.

கருணாநிதி: மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையில் ஏதாவது பொறுப்பில் இருக்கிறீர்களா?

மகேஸ்வரன்: கரூர் மாவட்ட செயலாளராக இருக்கிறேன்.

கருணாநிதி: இந்த வழக்கு பற்றி ஏதாவது தெரியுமா?

மகேஸ்வரன்: கோகுல்ராஜ் வழக்கில் யுவராஜை போலீசார் தேடுவதாக 25.6.2015ம் தேதியன்று வெளிவந்த பத்திரிகைகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

கருணாநிதி: இந்த வழக்கு தொடர்பாக போலீசார் என்ன தேதியில் உங்களிடம் விசாரித்தார்கள்?

மகேஸ்வரன்: 25.6.2015ம் தேதியன்று, போலீசார் என் வீட்டிற்கு வந்து, என்னை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

கருணாநிதி: கோகுல்ராஜ் கொலை சம்பவத்திற்கு முன்பாக, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை சார்பில் கரூரில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அது எப்போது நடந்தது?

மகேஸ்வரன்: கோகுல்ராஜ் கொலை சம்பவத்திற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு அந்த கூட்டம் நடந்தது.

கருணாநிதி: அந்த கூட்டம் கரூரில் எங்கே நடந்தது? அது எது தொடர்பான கூட்டம்?

மகேஸ்வரன்: கரூர் அரோமா ஹோட்டலில் உள்ள மினி ஹாலில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.

கருணாநிதி: அந்த கூட்டத்திற்கு நீங்கள்தான் தலைமை வகித்தீர்கள்?

மகேஸ்வரன்: ஆமாம்

கருணாநிதி: அந்த கூட்டத்திற்கு யுவராஜ் வந்திருந்தாரா?

மகேஸ்வரன்: வந்திருந்தார்

கருணாநிதி: இந்த பேரவையின் நோக்கம் என்ன?

மகேஸ்வரன்: கவுண்டர் சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த பேரவையின் நோக்கம்.

கருணாநிதி: சிறப்பு அஜண்டா ஏதும் உண்டா?

மகேஸ்வரன்: (லேசாக சிரித்தபடி) கவுண்டர் சமூக ஒற்றுமைதான்

கருணாநிதி: உங்களிடம் விசாரித்த போலீசார் கையெழுத்து பெற்றார்களா?

மகேஸ்வரன்: போலீசார் என்னிடம் இரண்டு, மூன்று கையெழுத்து பெற்றனர்.

கருணாநிதி: உங்களுடைய செல்போன் எண் என்ன?

மகேஸ்வரன்: என்னுடைய செல்போன் எண்.: 95666 66668.

கருணாநிதி: மேற்படி சம்பவம் நடந்தபோது நீங்கள் பயன்படுத்திய செல்போன் எண் என்ன?

மகேஸ்வரன்: எப்போதும் ஒரே செல்போன் நம்பர்தான் பயன்படுத்தி வருகிறேன்.

கருணாநிதி: போலீசார் உங்களை விசாரித்தபோது என்ன செல்போன் வைத்திருந்தீர்கள்?

மகேஸ்வரன்: நோக்கியா 1108 என்ற போனை வைத்திருந்தேன்.

கருணாநிதி: டிஎஸ்பி விஷ்ணுபிரியா உங்களிடம் விசாரித்தபோது, ஏதாவது பொருளை உங்களிடம் இருந்து பெற்றாரா?

மகேஸ்வரன்: என்னை விசாரித்து கையெழுத்து மட்டும் வாங்கினார்.

கருணாநிதி: யுவராஜ், தீரன் சின்னமலை பேரவை என்று ஒரு வாட்ஸ்அப் குரூப் நடத்தி வந்தாரா?

மகேஸ்வரன்: ஆமாம்

கருணாநிதி: அந்த வாட்ஸ்அப் குழுவில் நீங்களும் இருந்தீர்கள்?

மகேஸ்வரன்: ஆமாம்

கருணாநிதி: சிபிசிஐடி போலீசார் உங்களிடம் இருந்து எத்தனை போன்களை கைப்பற்றினர்?

மகேஸ்வரன்: சிபிசிஐடி போலீசார் விசாரித்தபோது என்னிடம் இருந்து நோக்கியா 1108 என்ற போனையும், சோனி செல்போனையும் கைப்பற்றினர்.

 

(இதையடுத்து, அவரும் வீடியோ கான்பரன்ஸ் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருச்சி சிறையில் உள்ள யுவராஜ் ஆஜரானார். அவரை பார்த்த மகேஸ்வரன், அவர்தான் யுவராஜ் என்று அடையாளம் காண்பித்தார்.)

 

அதைத் தொடர்ந்து அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி, மகேஸ்வரனிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். அதன் விவரம் வருமாறு:

 

கருணாநிதி: உங்கள் மீதும் யுவராஜ் மீதும் கரூர் நகர போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதா?

மகேஸ்வரன்: ஆமாம். ஆனால் அது பொய் வழக்கு.

கருணாநிதி: கடந்த 27.2.2015ம் தேதியன்று, கரூரை சேர்ந்த மேலை பழனியப்பன் என்பவர், கவுண்டர் சமூகத்தை இழிவுபடுத்தி எழுதப்பட்ட ‘நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்?’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் புலியூர் முருகேசன் என்பவரை ஆதரித்து பேசியதற்காக, அவருடைய வீட்டின் கூரையை சேதப்படுத்தியதாக உங்கள் மீதும், யுவராஜ் மீதும் கரூர் நகர போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதா?

மகேஸ்வரன்: சரி

கருணாநிதி: ஜூன் 2015ல் கரூர் அரோமா ஹோட்டலில் யுவராஜ் தலைமையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கவுண்டர் சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்றும், கவுண்டர் ஜாதி பெண்களை மற்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள் காதலித்து திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்?

மகேஸ்வரன்: இல்லை

கருணாநிதி: மாவீரன் தீரன் சின்னமலை வாட்ஸ்அப் குரூப்பில் நீங்களும் ஓர் அங்கத்தினரா?

மகேஸ்வரன்: இல்லை

கருணாநிதி: உங்களுக்கு மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை வாட்ஸ்அப் குரூப்பில் கோகுல்ராஜ் தற்கொலை செய்துகொள்ள போவதாக பேசுவதுபோல் ஒரு வீடியோ வந்தது. பின்னிட்டு, அந்த வீடியோவை உங்களிடம் கேட்டவர்களுக்கு நீங்கள் வாட்ஸ்அப் மூலம் அனுப்பினீர்கள். அந்த சமயத்தில் ஒரு சோனி மொபைல் போனை நீங்கள் பயன்படுத்தி வந்தீர்கள்…

மகேஸ்வரன்: இல்லை

கருணாநிதி: 7.12.2015ம் தேதியன்று, கோயம்பத்தூர் சிபிசிஐடி ஏடிஎஸ்பி, நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் உங்களை விசாரித்தபோது உங்களுடைய மூன்று செல்போன்களையும் ஒப்படைத்தீர்கள். எதிரிகள் உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரிலும், அவர்களின் மிரட்டலுக்கு பயந்தும், எதிரிகளை காப்பாற்ற வேண்டி நீங்கள் பொய் சாட்சியம் அளிக்கிறீர்கள் என்று நான் சொல்கிறேன்…

மகேஸ்வரன்: இல்லை

இவ்வாறு குறுக்கு விசாரணை நடந்தது.

 

பிற்பகல் 3.20 மணிக்கு அனைத்து விசாரணைகளும் முடிந்தது. இதையடுத்து, அடுத்தக்கட்ட சாட்சிகள் விசாரணை வரும் 20.12.2018ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

 

– பேனாக்காரன்.