Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல்! நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சிய அதிமுக பிரமுகர்கள்!!

சேலத்தில்,
பட்டு நெசவாளர்கள் கைத்தறி
கூட்டுறவு சங்கத்தில் சரக்கு
விற்பனை இருப்பில் 1.10 கோடி
ரூபாய்க்கு மேல் போலி
முறைகேடு செய்திருப்பது
அம்பலமாகி உள்ளது. இந்த
நூதன மோசடி மூலம்
ஆளும் அதிமுக பிரமுகர்கள்
நெசவாளர்களின் ரத்தத்தையும்
உறிஞ்சி குடித்திருப்பதாக
குற்றச்சாட்டுகள்
கிளம்பியுள்ளன.

 

சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில், ‘சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட்’ என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனம் 1956ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கைத்தறியால் நெய்யப்பட்ட வெண்பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரத்திற்கு உலகளவில் பெயர் பெற்றது இந்நிறுவனம். இதில் தற்போது, 1558 நெசவாளர்கள் ‘ஏ’ வகுப்பு உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில், 1150 நெசவாளர்கள் தொடர்ந்து வெண்பட்டு உருப்படிகளை நெய்து வருகின்றனர்.

இந்நிறுவனத்தின் ஆண்டு விற்பனை சராசரியாக 12 கோடி ரூபாய். கடைசியாக 2017&18ம் ஆண்டுக்கான கணக்குத் தணிக்கை முடிக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு 4 சதவீதம் டிவைடண்ட் வழங்கப்பட்டு உள்ளது. அந்த ஆண்டில் 45 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியிருக்கிறது. வெண்பட்டு வேட்டிக்கு புவிசார் குறியீடு கிடைத்ததில் இச்சங்கத்தின் பங்கு அளப்பரியது என்ற நிலையில், கடந்த ஓராண்டாகவே ஊழல் புகாரில் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறது.

 

சேலம் பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக்குழு தலைவரான அதிமுக மாணவரணி நிர்வாகி சதீஸ்குமார், அதிமுக பிரமுகரும் துணைத்தலைவருமான தியாகராஜன் மற்றும் சங்க ஊழியர்கள் ஆகியோர் கூட்டணி அமைத்துக்கொண்டு 1.10 கோடி ரூபாய்க்கு மேல் சரக்கு இருப்பில் கோல்மால் செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த மோசடி புகார்கள் தொடர்பாக ஜவுளி விற்பனை பிரிவு ஊழியர்கள் சவுந்தரராஜன், சீனிவாசன், துளசிராமன் ஆகிய மூவரும் கடந்த ஜூன் மாதம் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். புகார்களில் உண்மை இருப்பது தெரிந்தும் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் கோபிநாத், ஊழல் ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கியதால் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநரான கருணாகரன் ஐஏஎஸ் நேரடியாக தலையிட்டு, மேற்கண்ட மூவரையும் பணியிடைநீக்கம் செய்துள்ளார்.

 

முறைகேடுகள் குறித்து மேலதிகாரிகளிடம் புகார் அளித்ததற்காக, இச்சங்கத்தில் 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வந்த காங்கிரஸ் கட்சி நெசவாளர் அணியின் சேலம் மாநகர தலைவர் தேவராஜனை சங்கத்தில் இருந்து நீக்கம் செய்துள்ளது, நிர்வாகக்குழு.

 

இது தொடர்பாக தேவராஜன் நம்மிடம் பேசினார்.

தேவராஜன்

”கைத்தறி பட்டு
நெசவாளர்களின் நலனுக்காக
தொடங்கப்பட்ட சேலம் பட்டு
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு
சங்கம், கடந்த சில
ஆண்டுகளாகவே நெசவாளர்களின்
நலன்களுக்கு எதிரான செயல்களில்
ஈடுபட்டு வருகிறது.
இச்சங்கத்தின் ஊழியர்களும்,
அதிமுகவைச் சேர்ந்த
நிர்வாகக்குழு தலைவர் சதீஸ்குமார்,
துணைத்தலைவர் தியாகராஜன்
ஆகியோர் கூட்டு சேர்ந்து,
பட்டு கைத்தறி வேட்டி,
சட்டைத்துணி, அங்கவஸ்திரங்களை
வெளிச்சந்தையில் விற்பனை
செய்துள்ளனர். ஆனால்,
விற்பனை ஆன சரக்குக்கு
உண்டான பணத்தை சங்கத்தில்
செலுத்தாமல் மோசடி
செய்துவிட்டனர். இதுவரை
1.10 கோடி ரூபாய்க்கு மேல்
இவ்வாறு மோசடி செய்துள்ளனர்.

 

இவர்களில் ஜவுளி விற்பனை ஊழியர்களான சவுந்தரராஜன் 12.43 லட்சம் ரூபாய், சீனிவாசன் 40 லட்சம் ரூபாய், துளசிராமன் 2.57 லட்சம் ரூபாய் என மொத்தம் 55 லட்சம் ரூபாய் வரை முறைகேடு செய்திருப்பது தணிக்கையில் தெரிய வந்துள்ளது. ஆனால் கையாடல் செய்த தொகையின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்பதுதான் உண்மை.

 

எல்லா மோசடிகளிலும் நிர்வாக இயக்குநர் கோபிநாத்துக்கும் பங்கு உண்டு. நான் முதன்முதலில் புகார் அளித்த பிறகே, மோசடி குறித்து விசாரணை நடத்த தொடங்கினார். தொடர்ந்து குடைச்சல் கொடுக்கிறேன் என்பதால், எனக்கு எதிராக திட்டமிட்டு தீர்மானம் நிறைவேற்றி சங்கத்தில் இருந்து என்னை நீக்கி விட்டனர். இந்த சங்கத்தில் நானும் ஒரு பங்குதாரர். என்னை டிஸ்மிஸ் செய்ய அவர்களுக்கு அதிகாரம் இல்லை. டிஸ்மிஸ் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கிறேன்.

 

சங்கத்தின் மேலாளர் ரவிச்சந்திரன், திருபுவனம் கிளை மேலாளர் ரவி ஆகியோர் இதே சங்கத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுகின்றனர். சங்கத்தில் நடக்கும் எல்லா முறைகேடுகளுக்கும் இவர்களும் மூளையாக இருந்துள்ளனர்.

 

துளசிராமன் என்ற ஊழியரிடம் இருந்து நிர்வாகக்குழு தலைவர் சதீஸ்குமார், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெண்பட்டு ஜவுளி ரகங்களை பெற்று, அவருக்குத் தெரிந்த வாடிக்கையாளர்களிடம் விற்றுவிட்டார். ஆனால் அதற்குரிய தொகையை அவர் செலுத்தவில்லை. சரக்கை பெற்றுக் கொண்டதற்கான இன்வாய்ஸிலும் கையெழுத்துப் போடாததால், துளசிராமன் மீது கையாடல் பழி விழுந்து, பணியிடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

சதீஸ்குமார்

அதிகாரிகள் சரக்கு இருப்பை ஆய்வு செய்ய வரும்போதெல்லாம் போலியான பட்டு வேட்டி, சட்டைத்துணி, அங்கவஸ்திரங்களை அடுக்கி வைத்து கணக்கு காட்டி விடுகின்றனர். ஏற்கனவே ஒரு நெசவாளர், ஒரு மாதத்தில் ஒரு பாவு தான் நெய்ய முடியும். தார் சுற்றுதல், அச்சு புனைதல், அல்லு பிடித்தல் ஆகிய பணிகளுக்கு நான்கு உப பணியாளர்களும் தேவை. ஒரு குடும்பமே சேர்ந்து உழைத்தால்தான் ஒரு பட்டு நெசவாளருக்கு மாதத்திற்கு 7500 ரூபாய் வருவாய் கிடைக்கும். கடந்த ஓராண்டில் மட்டும் நாலைந்து பாவு மட்டுமே நெசவாளர்களுக்கு இச்சங்கம் கொடுத்துள்ளது. நெசவாளர்களின் ரத்தத்தை உறிஞ்சு சுரண்டி தின்னவர்கள் நல்லாவே இருக்க மாட்டார்கள்,” என கொதித்தார் தேவராஜன்.

 

இது தொடர்பாக நாம் சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக்குழுத் தலைவர் சதீஸ்குமாரிடம் விசாரித்தோம்.

 

”இந்த சங்கத்தில் கடந்த 2011 முதல் 2016 வரை எங்க அப்பாதான் தலைவராக இருந்தார். அதன்பிறகு 2016 முதல் தற்போது வரை நான் தலைவராக இருக்கிறேன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து நிர்வாகப் பொறுப்புக்கு வந்ததை பிடிக்காமல் சிலர் இவ்வாறு சங்கத்துக்கு எதிராக புகார் சொல்கிறார்கள். சங்கத்துக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இங்கிருந்து வெண்பட்டு வேட்டி, சட்டைத்துணி, அங்கவஸ்திரம் எல்லாம் பெற்றுச்சென்று நானே நேரடியாக ஒரு தனியார் பல்கலை நிர்வாகத்திடம் விற்பனை செய்தேன். அதில் கொஞ்சம் பணம் வர வேண்டியள்ளது.

 

வியாபாரம் என்றால் பணம் வசூலிப்பதில் சில இடர்ப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். துளசிராமன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கு நான் காரணம் இல்லை. மேலும் என் பெயரில் தவணை தவறியதாகச் சொல்லப்படும் புகாரிலும் உண்மை இல்லை. அதுவும் இல்லாமல், சரக்கு இருப்பு குறைவு குற்றச்சாட்டுகள் முந்தைய திமுக ஆட்சியின் போதும்தான் இருந்தது,” என்றார்.

 

சங்கத்தின் துணைத்தலைவர் தியாகராஜன், ”உங்களிடம் புகார் சொன்ன நபர் யார் என்று எங்களுக்கும் தெரியும். அவர் காங்கிரஸ் கட்சிக்காரர். அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக எங்களுக்கு எதிரான ஊரில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டி வருகிறார். அவரை நாங்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டோம். அதனால் இப்படி புலம்பி வருகிறார்,” என்கிறார்.

தியாகராஜன்

ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணியில் இருக்கும் மேலாளர் ரவிச்சந்திரன் மற்றும் விற்பனைப்பிரிவு ஊழியர் ரவி ஆகியோர், ”சார்… எங்களின் நேரடி ஷோரூம் விற்பனையை மட்டுமே நாங்கள் நம்பியிருக்க முடியாது. அதனால் எங்களுக்கென்று உள்ள சொந்த செல்வாக்கில் பல வாடிக்கையாளர்களிடம் இங்குள்ள ஜவுளிகளை விற்பனை செய்து, சங்கத்துக்கு விற்பனையைப் பெருக்கித் தருகிறோம். அதனால் எங்களை யாரும் டிரான்ஸ்பர் செய்வதில்லை. அப்படி இருந்தும் எங்களையும் சில காலம் வேறு பிரிவுக்கு மாற்றி இருக்கிறார்கள்,” என தங்கள் தரப்பு மீதான புகாருக்கு பதில் அளித்தனர்.

 

நிர்வாகக்குழுத் தலைவர், துணைத்தலைவர், ஊழியர்கள் ஆகியோர் முறைகேடு நடக்காதது போலவும், பின்னர், இதெல்லாம் சகஜம்தானே என்பது போலவும் பூசி மெழுகினர். அதேநேரம், சங்கத்தில் நடந்த கையாடல் பெரும் விஸ்வரூபம் எடுக்கவே, கூட்டுறவு சங்க விதிகள் பிரிவு 81&ன் கீழ் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார், கைத்தறி துணிநூல் துறை இயக்குநர் கருணாகரன் ஐஏஎஸ். மதுரையைச் சேர்ந்த கைத்தறித்துறை உதவி இயக்குநர் ஜமால் முகமது இவ்விசாரணையை நடத்தி வருகிறார். பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் கையாடல் செய்த பணத்தை செலுத்தாவிட்டால், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளார்.

 

சேலம் மண்டல கைத்தறி
துணிநூல் துறை உதவி
இயக்குநர் சங்கரேஸ்வரி
தரப்பில் கேட்டபோது,
”முறைகேடு தொடர்பாக புகார்
வந்ததன்பேரில் நாங்களும்
விசாரணை நடத்தி இருக்கிறோம்.
நீங்கள் மேற்கொண்டு எதுவாக
இருந்தாலும் அச்சங்கத்தின்
நிர்வாக இயக்குநரிடம்
கேட்டுக்கொள்ளுங்கள்,” என்று
கூறிவிட்டு தொடர்பைத்
துண்டித்தார்.

 

இந்த கையாடல் புகார் குறித்து சங்கத்தின் நிர்வாக இயக்குநர் கோபிநாத்திடம் பேசினோம்.

கோபிநாத்

”நான் இந்த சங்கத்துக்கு
கடந்த 2019 செப்டம்பர் மாதம்தான்
நிர்வாக இயக்குநராக வந்தேன்.
அப்போதே சரக்கு இருப்பில்
நடந்த முறைகேடு தொடர்பாக
புகார்கள் வந்ததால், அந்தாண்டின்
டிசம்பர் மாதமே முழுமையாக
ஆய்வு செய்தேன். சரக்கு இருப்பு
குறைவு என்பதும், கையாடல்
செய்யப்பட்டு இருப்பதும்
தெரிய வந்தது. சரக்கு இருப்புக்கு
உரிய தொகையை செலுத்துவது
குறித்து, ‘ஸ்பெஷல் டிரைவ்’
மேற்கொள்ளப்பட்டதால் 2020
மார்ச் மாதம் வரை முதல்கட்டமாக
60 லட்சம் ரூபாய்
வசூலாகி உள்ளது.

 

முறைகேடு புகாரின்பேரில்
பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர்கள்
தரப்பில் இருந்து மட்டுமே
இன்னும் சுமார் 55 லட்சம் ரூபாய்
வர வேண்டியுள்ளது. பணியிடைநீக்கம்
செய்யப்பட்டவர்களுள் ஒருவரான
சீனிவாசன் என்பவர் தற்போது
வீடு கட்டி வருவதால் பணத்தை
செலுத்துவதில் சிரமம்
இருப்பதாகச் சொல்கிறார்.
அவர் மட்டுமே 40 லட்சம்
ரூபாய் வரை செலுத்த
வேண்டியுள்ளது.

 

எல்லா முறைகேட்டிலும்
நிர்வாகக்குழுத் தலைவர்,
துணைத்தலைவர் ஆகியோருக்கும்
தொடர்பு இருக்கிறது.
ஒரு அதிகாரியாக என்னால்
ஆன நடவடிக்கையை சரியாகத்தான்
எடுத்திருக்கிறேன்.
இதுகுறித்து எங்கள் துறை
இயக்குநருக்கு ரகசிய
அறிக்கையும் சமர்ப்பித்து
உள்ளேன். அதைப்பற்றி
இப்போது பேச முடியாது,”
என்றார் கோபிநாத்.

கருணாகரன்

இறுதியாக நாம் தமிழ்நாடு
கைத்தறி மற்றும் துணிநூல்
துறை இயக்குநர் கருணாகரன்
ஐஏஎஸ்ஸிடம் கேட்டபோது,
”சேலம் பட்டு கூட்டுறவு
சங்கத்தின் மீது முறைகேடு
புகார்கள் வந்ததன் பேரில்
சில பேரை சஸ்பெண்ட்
செய்திருக்கிறோம். இதுகுறித்து
துறை ரீதியாக 81வது
பிரிவின் கீழ் விசாரணையும்
நடந்து வருகிறது. தமிழ்நாடு
முழுவதும் 1300 சொசைட்டிகள்
இருப்பதால், நீங்கள் குறிப்பிடும்
சொஸைட்டியில் எவ்வளவு
முறைகேடு நடந்தது என்பதை
என்னால் உடனடியாகச் சொல்ல
முடியவில்லை. ஃபைல்களைப்
பார்த்துவிட்டு டீடெய்லாக
நானே உங்களிடம் பேசுகிறேன்,”
என சுருக்கமாக
முடித்துக்கொண்டார்.

 

வெண்பட்டு கைத்தறி ஜவுளிக்கென்று உலகளவில் பிரசித்தி பெற்ற சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் திவால் ஆவதற்கு முன்பாக ஊழல் கட்சிக்காரர்களிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதே இப்போதைக்கு முதன்மையான பணியாக இருக்க வேண்டும் என்கிறார்கள் ஏழை நெசவாளர்கள்.

 

– பேனாக்காரன்