Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஐஏஎஸ் அதிகாரிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் முதல் பிரசவம்; அழகான தேவதையை பெற்றெடுத்தார்!

தர்மலாஸ்ரீ

பொருளாதாரத்தின் மேல் அடுக்கில் உள்ளோரும், அரசின் உயர் மட்ட அதிகாரத்தில் இருப்போரும் அரசுப்பள்ளிகள், அரசு மருத்துவமனைகளின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் இருந்து எப்போதும் விலகியே இருக்கின்றனர். அதனால் வெகுசன மக்களும் அத்தகைய அரசு ஸ்தாபனங்களை நம்பாமல் தனியாருக்குச் செல்லும் போக்கு சமூகத்தில் மலிந்து கிடக்கிறது.

 

இந்நிலையில், தனது ஒரே ஒரு செயலால் ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.

 

சேலம் மாவட்டம் பேளூர் அருகே உள்ள கரடிப்பட்டியைச் சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ (29). கடந்த 2019ம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்ட உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.

 

இவருக்கு,
கடந்த ஓராண்டுக்கு முன்பு
சென்னையைச் சேர்ந்த
தாமரைக்கண்ணன் என்ற
மருத்துவருடன் திருமணம் நடந்தது.
இதையடுத்து, நிறைமாத
கர்ப்பிணியான தர்மலாஸ்ரீ,
தலைப்பிரசவத்திற்காக
சில நாள்களுக்கு முன்பு
தாய் வீட்டிற்கு வந்தார்.

கணவருடன்…

தலைப்பிரசவம் என்பது
மட்டுமின்றி, உயர் பொறுப்பில்
உள்ள அதிகாரி என்பதாலும்
உறவினர்கள் பலர்,
தனியார் மருத்துவமனையில்
பிரசவ சிகிச்சைக்குச் செல்லுமாறு
ஆலோசனை கூறியுள்ளனர்.
ஆனால், அரசு மருத்துவமனையில்தான்
தனக்கு பிரசவம் நடக்க வேண்டும்
என்பதில் உறுதியாக
இருந்துள்ளார் தர்மலாஸ்ரீ.

 

இதையடுத்து,
கடந்த திங்கள் கிழமை
பிரசவத்திற்காக சேலம்
அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்.
புதன்கிழமை (ஆக. 18) இரவு
அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
மகப்பேறு மருத்துவத்துறை
தலைவர் சுபா தலைமையில்
மருத்துவர்கள் பிரசவ
சிகிச்சை அளித்தனர்.
அன்று இரவு தர்மலாஸ்ரீக்கு
தேவதை போன்ற அழகான
பெண் குழந்தை பிறந்தது.

தாயும் சேயும் நலமுடன்
உள்ளதாக மருத்துவர்கள்
தெரிவித்தனர். சேலம்
அரசு மருத்துவமனையில்
சிறப்பான சிகிச்சை
அளிக்கப்பட்டதாக தர்மலாஸ்ரீ
மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்,
சேலம் அரசு மருத்துவமனையில்
குழந்தை பெற்றுக்கொண்ட நிகழ்வு
பலருக்கும் வியப்பை அளித்ததோடு,
பொதுமக்களிடையே அரசு மருத்துவமனை
மீதான நம்பகத்தன்மையை
மேலும் அதிகரித்துள்ளது.

 

தர்மலாஸ்ரீ போல, அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அரசுப்பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைச் சேர்ப்பதன் மூலமும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதன் மூலமும் வெகுசன மக்களும் அரசு ஸ்தாபனங்களை நோக்கி வர ஏதுவாக இருக்கும். மேலும், அரசு ஸ்தாபனங்களின் சேவையும் மேம்பட வழிவகுக்கும்.

 

– பேனாக்காரன்