Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தமிழக பட்ஜெட்: குடிசை இல்லா தமிழகம் உருவாக்க இலக்கு; சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முதன்முதலாக 2021-2022ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) வெள்ளிக்கிழமை (ஆக. 13), சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கையை தாக்கல் செய்து, உரையாற்றினார்.

வழக்கமாக பட்ஜெட் அறிக்கை,
காகிதங்களில் அச்சிட்டு
அனைத்து எம்எல்ஏக்களுக்கும்
வழங்கப்படும்.
காகிதங்களுக்காக மரங்கள்
வெட்டப்படுவதை தடுக்கும்
நோக்கில், முதன்முதலில்
காகிதமில்லா பட்ஜெட்
அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பட்ஜெட் அறிக்கையை அறிந்து
கொள்வதற்காக அனைத்து
எம்எல்ஏக்களின் இருக்கையிலும்
கணினித் திரை வைக்கப்பட்டது.

 

பட்ஜெட் 2021 சிறப்பு அம்சங்கள்:

 

இலவச வீடுகள்:

 

நடப்பு 2021 – 2022ம்
நிதியாண்டில் 8017 கோடி
ரூபாய் செலவில் சுமார்
2 லட்சம் இலவச வீடுகள்
கட்டிக்கொடுக்கப்படும்.

கிராமப்புற வீட்டுவசதித்
திட்டத்திற்காக 3545 கோடி
ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
கிராமங்களில் 8 லட்சத்து 3924
ஏழைகளுக்கு 5 ஆண்டுகளில்
வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
அடுத்த 10 ஆண்டுகளில்
தமிழகத்தை குடிசை இல்லா
மாநிலமாக மாற்றப்படும்.
இதற்காக குடிசை மாற்று
வாரியத்திற்கு 3954 கோடி
ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

தலைமைச் செயலகம் முதல்
அனைத்துத் துறைகளிலும்
தமிழை ஆட்சி மொழியாக
பயன்படுத்துவது
உறுதிப்படுத்தப்படும்.

 

பள்ளிக்கல்வித்துறை:

 

பள்ளிக் கல்வித்துறைக்கு
அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்
விதமாக 32599.54 கோடி ரூபாய்
ஒதுக்கப்படுகிறது. 865 உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில்
20.76 கோடி ரூபாய் செலவில்
ஸ்மார்ட் வகுப்பறைகள்
உருவாக்கப்படும்.

நடுநிலைப்பள்ளி மாணவர்களின்
கணினித்திறனை மேம்படுத்த
114.18 கோடி ரூபாய் செலவில்
கணினி வகுப்பறைகள்
ஏற்படுத்தப்படும்.

அடிப்படை கல்வி அறிவை
உறுதி செய்ய 66.70 கோடி
ரூபாயில் எண்ணும் எழுத்தும் இயக்கம்
தொடங்கப்படும்.

413 கல்வி ஒன்றியங்களுக்கு தலா 40 டேப்லெட்கள் வழங்க 13.22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தொடங்கப்படும்.

தமிழ் வளர்ச்சித்துறைக்கு 80 கோடி ரூபாய், தொல்லியல் துறைக்கு 29 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
மீண்டும் செம்மொழித் தமிழ் விருது:

கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கலைஞர் செம்மொழித் தமிழ் விருது மீண்டும் செயல்படுத்தப்படும். இனி, ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி, கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுடன் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

 

மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து:

 

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2756 கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். இக்குழுக்களுக்கு புதிதாக 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும்.

தமிழ்நாடு காவல்துறைக்கு 8930.29 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. தீயணைப்புத்துறைக்கு 405.13 கோடி ரூபாயும், சாலைப்பாதுகாப்புக்காக 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மதிய உணவுத்திட்டத்திற்காக 1725 கோடி ரூபாய் ஒதுக்கீடு. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகளுக்காக 2536 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

கருவூலங்கள் விரிவுபடுத்தப்பட்டு அரசு, உள்ளாட்சி அமைப்புகள் பணம் செலுத்தும் வங்கிகளாக மாற்றம் செய்யப்படும்.

பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு கலால் வரி வருவாய் ஆண்டுக்கு 1160 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. புதிய விலை அறிவிப்பு சனிக்கிழமை (ஆக. 14) முதல் நடைமுறைக்கு வருகிறது.

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 95 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

தமிழ்நாட்டை மின்மிகை மாநிலம் என்று கூறுவது தவறு. சுமார் 2500 மெகாவாட் மின்சாரத்தை, மின் சந்தைகளில் இருந்து வாங்கித்தான் அரசு சமாளிக்கிறது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கோடம்பாக்கம் & பூந்தமல்லி வரையிலான சேவைகள் 2025 ஜூன் மாதத்தில் தொடங்கும். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க திட்டமிடப்படும்.

தொழில்சார் பூங்காக்கள்:

தூத்துக்குடியில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா

மாநல்லூர், திருவள்ளூரில் மின் வணிகப் பூங்கா

ஒரகடம், கா-ஞ்சிபுரத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா

பனப்பாக்கம், ராணிப்பேட்டையில் தோல் பொருள்கள் உற்பத்திப் பூங்கா

மணப்பாறை, தேனி, திண்டிவனம் ஆகிய இடங்களில் உணவுப்பூங்கா கொண்டு வரப்படும்.

 

அறநிலையத்துறை:

 

இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 187.91 ஏக்கர் கோயில் நிலங்கள் 100 நாள்களுக்குள் மீட்கப்பட்டு உள்ளது. 626 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

100 கோயில்களில் 100 கோடி ரூபாயில் தேர், குளங்கள் சீரமைக்கப்படும்.

12955 கோயில்களில் ஒருகால பூஜை திட்டத்தை செயல்படுத்த 130 கோடி ரூபாய் நிதி நிலை உருவாக்கப்படும்.

மசூதிகள், தேவாலயங்களை புதுப்பிக்க 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

உயர்கல்வி:

தமிழ்நாட்டில் புதிதாக 10 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். அண்ணா பல்கலை எம்ஐடி வளாகத்தின் கீழ் தமிழ்நாடு ஆளில்லா விமானக் கழகம் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்ழகம் அமைக்கப்டும்.

சுத்தமான, பசுமையான சென்னையை உருவாக்கும் வகையில் சிங்கார சென்னை 2.ஓ திட்டம் தொடங்கப்படும்.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்படும்.

தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு 30 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்.

மேட்டூர், அமராவதி, வைகை அணை நீர்த்தேக்க அளவை பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை.

அடுத்த 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழ் பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

2021&2022ம் ஆண்டிற்குள் 200 குளங்களை தரம் உயர்த்த 111.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

காசிமேடு மீன்பிடி துறைமுகம் 150 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும். மீனவர் நலனுக்காக 1149 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பாசனத் திட்டங்களுக்காக 6607 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

விவசாயத்திற்கான இலவச மின்சாரம், மானியம், மின்துறை இழப்புகளுக்காக 19872 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

கலைஞர் நகர்ப்புற மேம்பாடு என்ற புதிய திட்டத்திற்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தகுதியான அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் நிதிநிலையை சரிசெய்ய மூன்று ஆண்டுகள் தேவைப்படும்.

கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு 490 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் அகில இந்திய அளவில் 27.1 ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 51.4 சதவீதமாக உள்ளது. 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தையும் கொண்டு நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் மூலம் இதுவரை 229216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில்
காலியாக உள்ள 14 ஆயிரம்
காவலர் பணியிடங்கள்
விரைவில் நிரப்பப்படும்.

மருத்துவம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத்துறைக்கு 18933
கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நந்தம்பாக்கம் மற்றும் காவனூரில்
165 கோடி ரூபாய் செலவில்
மதிநுட்ப நகரம் உருவாக்கப்படும்.
முதல்கட்டமாக நந்தம்பாக்கத்தில்
அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள
62 தொழில் பேட்டைகளில்
அமைந்துள்ள 9264 மனைகளுக்குப்
பட்டா வழங்கப்படும்.

குவாரிகளுக்கு பசுமை
சுங்க மேல்வரி விதிக்கப்பட்டு,
பசுமை நிதியம் உருவாக்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

 

– பேனாக்காரன்